Thursday, March 26, 2015

ஒரு சோறு பதம்...


கிரிக்கெட்டும் வீடியோ கேம்களும், தொடர்களும் மென்று தின்று , செரித்து ஏப்பம் விட்ட நமது கலாச்சார சமாச்சரங்களில் சொப்புவும் ஒன்று. மரக்கடைகளில் பாத்திரங்கள், தட்டு, திருகை, உரல், உலக்கை என்று வித விதமான வண்ணங்களில் மிளிறும் விளையாட்டி சாமான்கள் சொப்பு. தமிழ்க் குழந்தைகளின் ரத்தத்தோடும் கலாச்சாரத்தோடும் இரண்டறக் கலந்துவிட்ட விளையாட்டு சொப்பு விளையாட்டு.
விஞானம் வளர்ந்துவிட்ட சூழ்நிலையில் விளையாட்டின் முகமும் மாறிக் கிடக்கிறது.இன்றைய விளையாட்டுக்கள் அறிவோடு, வெற்றியோடு சம்பந்தப் பட்டிருக்கின்றன. சொப்பு விளையாட்டில் வெற்ரியுமில்லை தோல்வியுமில்லை. அதில் அறிவுக்கு வேலையுமில்லை. ஆனால் அது குடும்பத்தோடும், இதயம் மற்றும் கலாச்சாரத்தோடும் நேரடித் தொடர்பு கொண்டது.
“சொப்பு” என்கிற தலைப்பே நம்மை அய்யனார் கோயில் மரத்தடியில் நாம் சொப்பு வைத்து விளையாடிய நமது குழந்தை நாட்களுக்கு நம்மை அழைத்துப் போகிறது.
தனது குழந்தைப் பருவத்து குசும்புகளை, விளையாட்டை, மழைக்கு இன்றைக்கும் அழும் தனது கூரைவீட்டுத் திண்ணையை, கதைகளால் இதயம் வருடிய டபேதார் தாத்தாவை, வறுமையை, வாழ்க்கையை, தனது கிராமத்து சேரியின் கலாச்சாரத்தை உள்ளது உள்ளவாறு பதிந்திருக்கிறார் அம்மணி. காரமும் உப்பும் அம்மக்களின் வாழ்வோடும் கலாச்சாரத்தோடும் கலந்திருப்பதன் விளைவில் கதைகள் வீச்சோடும் கலாநேர்த்தியோடும் மிளிர்கின்றன.
சொப்பு, இந்தக் கதையை வாசிக்கத் தொடங்கியதும் நாம் மூப்பனார் கோயிலுக்கே போய் விடுகிறோம். நல்லரிக்கி, சூரன், பாவாடை, மற்ரும் மூக்கன் ஆகிய நான்கு குழந்தைகளும் அங்கு அம்மா அப்பா விளையாட்டு விளையாடுவதை அங்குள்ள பலகைக் கல்லில் அமர்ந்து பார்ப்பது மாதிரி இருக்கிரது படிக்கிறபோது. அவ்வளவு அற்புதமாக காட்சிப் படுத்தப் பட்டிருக்கிறது.
நால்வரில் நல்லரிக்கி மட்டும்தான் பெண்.எப்போது அம்மா அப்பா விளையாட்டு விளையாடினாலும் அவள்தான் அம்மா. யார் அப்பா என்பதில்தான் எப்போதும் பிரச்சினையே. இதில் அப்பா ஸ்தானம் எப்போதும் சூரனுக்கே வருவதில் ஏகத்துக்கும் எரிச்சல் பாவாடைக்கு.
இதில் பாவாடைக்கு உள்ள மன உளைச்சலை பதிந்திருக்கும் விதம் இருக்கிறது பாருங்கள், அப்பப்பா... கொஞ்சம் பிசகியிருந்தாலும் பிஞ்சிலே வெம்பிய கதையாகி இருக்கும். கம்பியில் நடந்திருக்கிறார் அம்மணி.
நல்லரிக்கி, புருஷன் சூரனுக்கும் பிள்ளைகளுக்கும்சோறு பரிமாறுகிறாள்.கதையானாலும் விளையாட்டானாலும் கதையிலே வரும் விளையாட்டானாலும் அம்மாதான் சமைக்கனும் அம்மாதான் பறிமாற வேண்டும்.
“என்னடி கொளம்பில உப்பே இல்லை. ஒறப்பு ஒழுங்காயில்லை.” சூரன் நல்லரிக்கியை அதட்டினான். பிறகென்ன புருஷன்னா பொண்டாட்டிய விரட்டனும்ல.
வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட பாவாடை “ ஆமாம்ப்பா... அம்மாவுக்கு கொளம்பு வைக்கவே தெரியல. பேசாம நாளைக்கு வெளையாட்டுக்கு வேற அம்மாவ வச்சுக்கலாம்.” இந்த இடம் இருக்கிரது பாருங்கள். இந்த நேர்த்திக்கு சரியான ஆளால் மட்டுமே இப்படி காட்சிப் படுத்த முடியும். நமது குழந்தைகள் எத்தனை குசும்பை, குதூகலத்தை இழந்திருக்கிறார்கள் என்ற ஏக்கத்தி விதைப்பதில் இந்தக் கதையின் வெற்ரி தெரிகிறது.
“ கோணமூஞ்சி” என்றொரு கதை, பன்றிக்கு கோணமூஞ்சி என்றொரு பெயர் இருப்பது இந்தக் கதையை படித்த பின்புதான் தெரிகிறது.
தீபாவளிக்கு தீபாவளி இட்லி சுடும் குடும்பங்கள் ஏராளம் இந்த நாட்டில். இந்தக் கதையில் வரும் ஒளறியின் குடும்பமும் இந்த ரகம்தான்.
அடுத்தநாள் கறிக் கொளம்பிற்கு ஒளறி முதல் நாளே மனரீதியாய் தயாராகிறான். அவன் மட்டும் அல்ல, தன் மனைவியையும் தயார் படுத்துகிறான்.
“ ஏ, செர்லூரு ... நாளைக்கு சொடல வீட்டு கோணமூஞ்சியத்தான் அறுக்கிறோம். காத்தாலேயே கொலம்பு செலவெல்லாம் ரெடி பண்ணி வச்சிடு.நல்ல எளங்குட்டி.பள்ளிக் கூடத்துல கயனித் தண்ணி குடிச்சி நல்லா திமு திமுன்னு வளர்ந்து கிடக்கு.கறி நல்லா மணலு மணலா இருக்கும்” என்று தன் மனைவியை தயார் படுத்துகிறான். இதை ஒட்டுக் கேட்ட ஒளறியின் மகன் சின்னான் ராத்திரி பூராம் தூங்காமலடுத்த நாள் கறிக் கனவில் மிதக்கிறான்.
அடுத்த நாள் ஒரு வழியாய் எல்லாம் ஆச்சு. கறி வெந்து கொதி வந்து இறக்கி வச்சாச்சு.ஒளறி வந்ததும் சாப்பிட்ட்ட வேண்டியதுதான். காத்திருக்கிறான் சின்னான்.அப்போது ஒளறி வெட்டப்பட்ட சேதி வருகிறது. வெட்டப் பட்ட அப்பா, ஆக்கி வைக்கப் பட்ட கோணமூஞ்சி கறி,அதற்கிடையில் ஊசலாடும் சின்னான் என்ற குழந்தையின் மனநிலையை இரண்டே வரிகளில் சொல்லிவிடுகிறார் அம்மணி.
“ மாத்துப் புள்ள” முத்தாய்ப்பான கதை. வழக்கமாக குழந்தைகளுக்கு கதை சொல்லும் போது ராஜா ராணி கதையோ அல்லது ஏதாவது பற்ரியோதான் கதை சொல்வார்கள். டபேதார் தாத்தா பற்ரி டபேதார் தாத்தாவே கதை சொல்லும் அழகு இருக்கிறதே... அடடா ஒடுக்கப்பட்ட உழைக்கும் குடும்பங்களில் உலகு பூராவுக்கும் பந்தி வைக்க ஏராளமான கதைகள் குவிந்து கிடக்கின்றன.டபேதார் யாரென்ற உண்மை உடைகிற சூழலில் கதைசொல்லியின் கேமரா குழந்தைகளின் கண்களை அழகாக படம் பிடிக்கிறது.
மூன்று கதைகள் மட்டுமே இங்கு பேசப் பட்டுள்ளன.ஒரு சோறுப் பதம் கணக்குத்தான். கிராமத்து சேட்ரியின் சந்தோசங்களை, குசும்புகளை, கோபத்தை, சோகத்தை, உயிர்ப்பை, இயலாமையை,உள்ளது உள்ளபடி பதிவு செய்திருக்கிறார் அம்மணி.
அற்புதமான தலித் சிறுகதைகள்.
பொன்னி பதிப்பக வெளியீடு இது.
*************
பின் குறிப்பு
.....................
12 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப் பட்ட விமர்சனம். நம் பழைய எழுத்தை நாமே வாசிக்கிறபோது ஒரு புன்னகை வருகிறது. அது ஒரு புறம். இதை வாசித்துவிட்டு அம்மணி மீண்டும் எழுதினால் மகிழ்வேன்.

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...