தோழர் அரவிந்தன் அவர்களுக்கான இரங்கல் கூட்டம் சென்னையில் நேற்று நடந்திருக்கிறது. பன்னிரண்டாம் வகுப்பு குழந்தைகளுக்கு நேற்றும் இன்றும் எனது பாடத்தில் பொதுத் தேர்வு இருந்ததால் என்னால் பங்கேற்க முடியவில்லை. காக்கையின் சார்பாக தோழர்கள் சந்திரசேகரும், முத்தையாவும் கலந்து கொண்டிருக்கிறார்கள். தோழர் மகேந்திரன், ஓவியத் தோழர்கள் மருது மற்றும் வீர சந்தானம் இவர்களோடு இன்னும் சிலரும் கலந்து கொண்டிருக்கிறார்கள். தோழர் அரவிந்தனது உடல் அடக்கம் செய்யப் படுவதற்கு முன்னமே அஞ்சலிக் கூட்டத்தை தோழர்கள் நடத்தி முடித்திருக்கிறார்கள். ஏறத்தாழ ஏற்பாடு செய்தவர்கள் மட்டுமே கலந்து கொண்ட கூட்டம் அது. கால அவகாசம் அப்படி.
தோழர் இறந்த செய்தி அறிந்ததும் இறுதி நிகழ்ச்சிக்கு போக முடியவில்லை. தோழர்கள் இங்கேயே திரண்டு அவருக்கு வீரவணக்கத்தைத் தெரிவித்திருக்கிறார்கள். தோழர் CMahendran Mahendran தான் முன்கை எடுத்திருக்கிறார். மிக விரிவான கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வதென்று முடிவெடுத்திருக்கிறார்கள். பெருங்கனவுக்காரரும் அதைச் செயல்படுத்தும் முயற்சியில் தனது மரணம் வரை உழைத்தவருமான அரவிந்தன் அவர்களது கனவை கையெடுத்து செயல்படுத்த அந்தக் கூட்டம் உந்தித் தள்ளட்டும்.
வரும் 14 ஆம் தேதி மதுரையில் ஒரு வீரவணக்கக் கூட்டத்திற்கு ஏற்பாடாகிறது. நானும், முத்தையாவும், சந்திரசேகரும் கலந்து கொள்வதாக உள்ளோம்.
உயிர்விடும் தருணத்தில் தோழர் ஆனந்தன், முகிலன் உள்ளிட்ட தோழர்கள் உடனிருந்திருக்கிறார்கள். “ புலம் பெயர்ந்த தோழர்கள் எந்தத் தருணத்திலும் ’காக்கைச் சிறகினிலே’ வை விட்டு விடாதீர்கள். நமக்கான வாளும் கேடையமும் அது” என்று சொல்லியிருக்கிறார்.
அவரது கடைசிப் பேச்சு அதுதான். நெஞ்சு அடைக்கிறது தோழர். என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஒன்று நிச்சயம், உங்களது நம்பிக்கையை காக்கை தன் மூச்சாகக் கொள்ளும். நானோ, முத்தையாவோ, சந்திரசேகரோ எங்களில் இறுதி நபர் உயிரோடு இருக்கும் வரைக்கும் உங்களது நம்பிக்கையை கொண்டு சேர்க்கிற வேலையை காக்கை செய்யும்.
தோழர் அரவிந்தன்அவர்களின் கடைசிப் பேச்சினை, இறுதி வரை காப்போம் என்னும் தங்களது உறுதி பாராட்டுக்கு உரியது தோழர்
ReplyDeleteதம 2
கேட்டதும் நெகிழ்ந்தே போனோம் தோழர்
Deleteதோழர் அரவிந்தன் இழப்பு அதிர்ச்சியானதுதான்.
ReplyDeleteஎத்தனையோ கிழம், இருந்து கழுத்தறுக்கும் இவ்வுலகில் இவர் போலும் தோழர்கள் இடையிலேயே செல்வது நகைமுரண்தான். பகிர்வு நெஞ்சைத் தொட்டது எட்வின். அவரது பணிகளையும் நாம் சுமக்கவே காலம் நம்மை வைத்திருக்கிறது போலும்.
ஆமாங்க அண்ணா. அவர் இறுதியாக பேசியது காக்கை குறித்து என்பது நெகிழ வைத்தது
Delete