Sunday, March 8, 2015

படிக்காமல் ஏன் போனார்?




நாளை பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம் முதல் தாள். எனது பிள்ளைகளுக்கு நடத்திக் கொண்டிருக்கிறேன். தோழர் முத்தையாவிடமிருந்து அழைப்பு வருகிறது. மௌனப் படுத்திவிட்டு வகுப்பைத் தொடர்கிறேன். உடனே அழைக்கிறார் முத்தையா. இது எனக்கு புதிது. ஒரு முறை அழைத்து நான் எடுக்கா விட்டால் நான் அழைப்பேன் என்பதறிந்து காத்திருக்கக் கூடியவர். மீண்டும் மௌனப் படுத்துகிறேன். மீண்டும் அழைக்கிறார். ஏதோ அவசரம் என்று படுகிறது. எடுக்கிறேன்.

“அரவிந்தன் செத்துட்டாராம்”

“ என்னங்க தோழர் என்ன சொல்றீங்க?”

“ நெசந்தான். இப்பதான் முகிலன் பேசிட்டு வைக்கிறார். “

ஏதும் பேசாமல் அலைபேசியை அணைக்கிறேன். எப்படியோ ஒரு வழியாய் வகுப்பை முடித்துவிட்டு மீண்டும் அவரை அழைக்கிறேன். ஐந்து நாட்களுக்கு முன்னால் மிகவும் முடியாத நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இறந்திருக்கிறார்.
ஐந்தாண்டுகளாகவே அவதிப் பட்டுக் கொண்டுதானிருந்தார். ஆனால் எந்தச் சூழலிலும் மனதைத் தளரவிடாதவராகவே இருந்தார்.

கடைசியாக தோழர் முத்தையாவிடம் பேசியபோதுகூட எதாச்சும் சந்தோசமான செய்தி சொல்லுங்க என்றுதான் ஆரம்பித்திருக்கிறார்.சந்தோசமான செய்தி வேண்டுமா காக்கை நல்லா போகுது. பேசறாங்க என்று முத்தையா சொன்னதும் மகிழ்ந்து கொண்டாடியிருக்கிறார்.

பத்து நாட்களில் இடியைத் தூக்கி எங்கள் மீது எறிந்துவிட்டு போயிருக்கிறார்.

”காக்கைச் சிறகினிலே” ஒவ்வொரு இதழ் கைக்கு போனதும் முத்தையாவிடமும் சந்திரசேகரிடமும் அலைபேசியிலும் என்னிடம் முகநூல் சேட்டிலும் வந்துவிடுவார்.

நானோ, முத்தையாவோ, சந்திர சேகரோ அவர் சொல்லி எதையும் தட்டியதே இல்லை. அவரது நெறிப்படுத்துதலை அவ்வளவு மரியாதையோடு நாங்கள் மூவரும் அணுகியிருக்கிறோம். காக்கையின் மீது எங்களுக்கிருந்த அக்கறையில் கொஞ்சமும் குறைந்ததல்ல அவருக்கு காக்கை மீதிருந்த அக்கறை.

வழக்கமாக அவரது வேண்டுகோள்களை உத்தரவாகவே மகிழ்வோடு கருதி செய்து முடிப்பவர்களாகவே மூவரும் இருந்தோம்.ஒருமுறை அவர் காக்கையின் நலம் பயக்கும் என்று கருதி எங்களிடம் அழுத்தமாகவும் மீண்டும் மீண்டும் வைத்த ஒரு கோரிக்கையை நாங்கள் மிகுந்த மரியாதையோடும் அன்போடும் மறுக்கிற நிலையில் இருந்தோம்.

ஒரு கட்டத்தில் அவரை இழந்துவிடுவோமோ என்றுகூட நான் அச்சப் பட்டேன். முத்தையாவும் சந்திர சேகரும் அப்படியெல்லாம் நடக்காது. காக்கையை விட்டு அவரால் அங்குலம்கூட நகர முடியாது என்றார்கள்.

அதுதான் நடந்தது. எங்களின் பக்கம் இருந்த நியாயத்தை உணர்வதற்கு அவருக்கு அதிக காலம் பிடிக்கவில்லை. மட்டுமல்ல, நீங்கள் மூவரும் யார் சொல்லியும் கேட்காமல் பிடிவாதமாக இருந்ததால்தான் காக்கை தொடர்ந்து வருகிறது என்று என்னுடனான ஒரு உரையாடலில் சொன்ன பெருந்தன்மையாளர்.

ஐரோப்பிய நாடுகளில் காக்கைச் சிறகினிலே போய் சேர்ந்ததற்கு தோழரின் பங்கு மிகப் பெரிது. பாரிசில் காக்கையின் பெயரால் தொடர்ந்து விழாக்களை தோழர் முகிலனோடு இணைந்து முன்னெடுத்ததை காக்கை நன்றியோடு நினைத்துப் பார்க்கும் எப்போதும்.

ஐரோப்பிய நாடுகளுக்கு நான் வரவேண்டும், கூட்டங்களில் உரையாற்ற வேண்டும் என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தவர். கூச்சத்தோடு நழுவியபோது உங்களின் பலத்தை நீங்கள் உணர மறுப்பதுதான் உங்களது பெரிய பலவீனம் என்று சொன்னவர்.

இரண்டு இதழ்களில் எனது கட்டுரை வராமல் போகவே என்னை கடிந்து கொண்டவர். உங்கள் எழுத்துக்களுக்கு இங்கு ஒரு கூட்டம் இருக்கிறது என்று என் மீது கொண்ட அன்பால் கூசாமல் பொய் சொல்லி உற்சாகப் படுத்தியவர்.

இந்த இதழில் கட்டுரை ஒன்றும் தொடர் ஒன்றுமாய் எழுதியிருக்கிறேன். வாசிக்காமல் ஏன் போனார்?

அவரது குடும்பத்தையோ தோழர் முகிலனையோ நாங்கள் வேறாக பார்க்காத காரணத்தால் நானும், சந்திரசேகர்ம், முத்தையாவும் அவர்கள் கையைப் பிடித்துக் கொண்டு அவர்களோடு சேர்ந்தழுகிறோம்.

4 comments:

  1. வருந்துவதைத்தவிற வேறென்ன நாம் செய்ய இயலும் :(

    ReplyDelete
    Replies
    1. நமக்குடன்பாடான அவரது லட்சியங்களையும் கையெடுத்துச் செல்வோம் தோழர்

      Delete
  2. இயற்கையோடு இரண்டறக் கலந்த தோழருக்கு
    என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்

    ReplyDelete
    Replies
    1. பெரிய இழப்பு தோழர்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...