நாம் சரியாக இல்லை என்பதைத் தவிர இதில் ஆச்சரியப் படுவதற்கு எதுவுமில்லை எனக்கு
05.08.2019 அன்று செய்வார்கள் என்பது தெரியாது
ஆனால் அவர்கள் செய்வார்கள் என்பது அனைவரும் அறிந்ததுதான்
காரணம், அவர்கள் இதைத் தொடர்ந்து சொல்லிக்கொண்டேதான் இருந்தார்கள்
ஆட்சிக்கு வந்தால் 370 ஐ ஒழிப்போம் என்று சொல்லித்தான் வாக்கு கேட்டார்கள்
அதை இப்படி கொஞ்சம் மாற்றியும் சொல்லலாம்,
370 ஐ ஒழிக்க எங்களுக்கு வாக்களியுங்கள் என்று கேட்டார்கள்
இன்னும் சொல்லப்போனால் இதை சென்ற முறையே அவர்கள் கொண்டு வந்திருப்பார்கள்
மாநிலங்களவையில் அவர்களுக்கு சாதகமான சூழல் அப்போது இல்லை
அதனால்தான் தவிர்த்தார்கள்
இப்போது மாநிலங்களவையிலும் கொஞ்சம் கட்சிகளை அவர்கள் வசப்படுத்தி இருக்கிறார்கள்
காஷ்மீரத்து மக்கள் பாஜகவின்மீது மட்டுமல்ல எதிர்க்கட்சிகளின் மீதும் நம்பிக்கை இழந்தே இருந்தார்கள்
இன்னும் சொல்லப்போனால் இந்திய ஜனநாயகம் அவர்களை ஏமாற்றிய அளவு வேறு யாரையும் ஏமாற்றவில்லை
அதனால் அவர்கள் விரக்தியின் விளிம்பிற்கு சென்றார்கள்
அதன் விளைவுதான் கடந்த தேர்தலில் பெரும்பான்மை காஷ்மீரிகள் வாக்குச்சாவடிகளைப் புறக்கனித்தார்கள்
பாஜக அவர்களது பிரதான எதிரி என்பது அவர்களுக்குத் தெரியும்
இது அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் தெரியும்
பாஜக மீண்டும் வந்தால் 370 திரும்பப் பெறப்படும் என்ற புரிதலும் அவர்களுக்கு இருந்தது
எனில், இயல்பாகவே தங்களைத் தற்காத்துக் கொள்ள எதிர்க்கட்சிகளுக்குத்தான் அவர்கள் வாக்களித்திருக்க வேண்டும்
ஏன் அனைத்து எதிர்க்கட்சிகளும் அவர்களுக்காக ஒன்றிணைந்து அந்த எளிய மக்களுக்கான நம்பிக்கைப் பட்டாளமாக மாறவில்லை
80 அல்லது 90 விழுக்காடு மக்கள் பாஜகவிற்கு எதிராக வாக்களித்திருந்தால் பாஜக இவ்வளவு அவசரமாக இப்படி நகர்ந்திருக்க முடியாது
காங்கிரஸ் மட்டும் இந்தப் பிரச்சினையை நேர்மையாக கையாண்டிருந்தால் காஷ்மீரின் நிலையே வேறு
இப்போதுகூட இதற்கு எதிராகக்கூட பாஜகவை எதிர்க்கும் கட்சிகளைக்கூட நம்மால் ஒன்றிணைக்க முடியவில்லை
இப்போதும் இதுகுறித்து தவறான புரிதல்கள் உள்ளன
கார்ப்பரேட்டுகளுக்கு வாசல் திறக்கப்பிருக்கிறது என்பதும் இதில் ஒன்று
கே.டி ராகவன் ஒரு செண்ட் நிலமாவது காஷ்மீரில் வாங்க வேண்டும் என்று கூறுவதற்குப் பின்னால் எள்ளல் மட்டுமல்ல, பெரும் அரசியலே உண்டு
இவருக்கே ஒரு செண்ட் என்றால் அம்பானிக்கு எவ்வளவு, அதானிக்கு எவ்வளவு ....?
ஆனால் கார்ப்பரேட்டுகள் ஏற்கனவே காஷ்மீரில் உள்ளார்கள்
இதன் நோக்கம் அவை அல்ல
காஷ்மீரை இரண்டாக்கி,
மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக்கி,
அவற்றில் ஒன்றிற்கு சட்டசபை,
மற்றொன்றிற்கு சட்டசபையும் இல்லை என்பதெல்லாம்
இந்தியாவை அதிபர் ஆட்சிமுறைக்கு நகர்த்துகிற முயற்சி இது
மாநிலங்களைத் துண்டாடி, பலவீனப்படுத்தி மாநகராட்சி அளவிற்கு அதிகாரங்களைக் குறைத்து
ஒரே தேசிய இனமாக கட்டமைக்கிற முயற்சியின் தொடக்கம்
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது என்பது இந்த நேரத்து அவசியம்
இல்லாது போனால்
இந்தியா ஒரே தேசம்,
இந்தியன் என்பது நூற்று முப்பது கோடி மக்களின் தேசிய இனம்
இந்தி தேசிய மொழி
பன்முகத்தன்மை என்பது காலாவதியான பழம்பொருள்
என்றெல்லாம் சொல்வார்கள்
கட்சித் தலைவர்களுக்கு ஒன்று சொல்வேன்,
இதை சரியாகப் புரிந்துகொள்ளாது போனால் உங்களது அதிகப்பட்ச உசரம் மாநகராட்சி மேயர் மட்டுமே
#சாமங்கவிய ஒரு மணி நாற்பத்தியெட்டு நிமிடம்
05.08.2019
05.08.2019
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்