Friday, May 22, 2015

தமிழிலும் கொஞ்சம்....

அது இசைக் கச்சேரிகளில் தமிழிலும் பாடவேண்டும் என்று கல்கி, ராஜாஜி, அண்ணாமலைச் செட்டியார் போன்றவர்கள் போராடிக் கொண்டிருந்த நேரம்.

இதற்காக ஒரு இயக்கமே கட்டி இந்த நியாயமான கோரிக்கைக்காக ஊர் ஊராய் மாநாடுகளை நடத்திக் கொண்டிருந்திருக்கிறார்கள். இதற்கு கடுமையான எதிர்ப்பு இருந்திருக்கிறது. அதுவும் அப்படி ஒன்றும் இவர்கள் கச்சேரி முழுவதையும் தமிழில் கொடுங்கள் என்றும் கேட்கவில்லை. கச்சேரிகளில் கொஞ்சம் தமிழையும் பாடுங்கள் என்ற அளவில்தான் இவர்களது இறைஞ்சல் இருந்திருக்கிறது. 

கேட்டவர்களைப் பார்த்து அவர்கள் புத்திசாலித்தனமாய் கேட்டிருக்கிறார்கள்,

“ சங்கீதத்திற்கு ஏது பாஷை? பாஷையே தேவைப் படாத சங்கீதத்தை தமிழில் பாடவேண்டும் என்று ஏன் அழிச்சாட்டியம் செய்கிறீர்கள்?”

கல்கி கேட்டிருக்கிறார்,

“ பாஷையே இல்லாத சங்கீதத்தை தமிழில் பாடக்கூடாது என்பதிலும் தெலுங்கில்தான் பாடவேண்டும் என்றும் ஏன் சொல்கிறீர்கள்?”

ஒரு கட்டத்தில் தமிழில் இசை கோரும் இயக்கத்தை “ அநியாய இயக்கம்” என்று துப்பியிருக்கிறார்கள். தமிழிலும் இசை வேண்டும் என்று கேட்டவர்களைப் பார்த்து தெலுங்கு தூவேஷிகள் என்றிருக்கிறார்கள்.

தமிழ் மண்ணில் தமிழிலும் பாடுங்கள் என்று மாநாடு போட்டு கேட்கவேண்டிய அவலம் இருந்திருக்கிறது.

“ ஏன் தமிழில் கேட்கிறீர்கள்?”

“ தெலுங்கு புரியவில்லை?”

“ ஏன்?”

“ தெலுங்கு எங்களுக்கு தெரியாது”

“ ஏன் உங்களுக்கு தெலுங்கின் மீது வெறுப்பு?”

 கேட்டவரை கல்கி கேட்கிறார்,

“ உங்களுக்கு லத்தீன் தெரியுமா?”

“ தெரியாது”

கல்கி திருப்புகிறார்,

“ ஏன் உங்களுக்கு லத்தீன் மீது இவ்வளவு வெறுப்பு?”

சங்கீதத்திற்கு பாஷையே இல்லை என்று வம்படிக்கும் ஒரு நண்பரோடு ஒரு கிரஹப் பிரவேஷத்திற்கு செல்ல வேண்டிய சந்தர்ப்பம் கல்கிக்கு கிடைக்கிறது. பெரிய இடம் என்பதால் கச்சேரி நடக்கிறது. வித்வான் இந்துஸ்தானியில் பாடுகிறார்,

“ இஸ் கர்கே ஆக் லக் கயி”

நண்பர் லயித்து கைதட்டியிருக்கிறார். கல்கி அவரை பார்க்கவே அவர் சொன்னாராம்,

” எவ்வளவு அபூர்வமான பிர்காக்கள்”

“ அர்த்தம் தெரியுமா?”

“ தெரியாதே”

கல்கி சொல்கிறார்,

“ இஸ் கர்கே ஆக் லக் கயி” நா “ இந்த வீட்டிலே தீப் பிடித்து கொண்டது”

இப்படியான நகர்தலின் ஒருகட்டத்தில் தமிழிசைக்கான எதிர்ப்பியக்கம் கூட்டங்களையும் மாநாடுகளையும் ஏற்பாடு செய்கிறது. இதை அறிந்த கல்கி சொன்னாராம்,

“ ரஷ்யாவின் மீது ஜெர்மன் படை எடுத்ததும் பெர்நாட்ஷா ‘ இனி இங்கிலாந்து நிம்மதியாகத் தூங்கலாம். நாஸி ஜெர்மனியை இனி ஸ்டாலின் பார்த்துக் கொள்வார்’ என்று சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது”

“ அதற்கென்ன?”

“ எப்ப தமிழிசைக்கு எதிரா கூட்டங்களை போட ஆரம்பித்துவிட்டார்களோ இனி அவர்களே தமிழிசையைக் கொண்டுவந்துவிடுவார்கள். நாம் நிம்மதியாகத் தூங்கலாம்”

நாம் தமிழ்ப் பாடல்களைக் கேட்பதற்காக நிறையவே போராடியிருக்கிறார்கள்.

6 comments:

  1. எத்தனை விதமான போராட்டங்கள்...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தோழர். மிக்க நன்றி

      Delete
  2. இதுபோன்ற போராட்டங்கள் இன்னும் தேவை போலுள்ளது. பெர்னாட்ஷாவின் மேற்கோள் அருமை.

    ReplyDelete
    Replies
    1. இதற்கான தேவை இப்போதும் இருப்பது சோகத்தினும் சோகம் தோழர்

      Delete
  3. தமிழ் நாட்டில் தமிழ் பாடல்களைப் பாட வைக்க போராட்டமே நடத்த வேண்டி இருந்திருக்கிறது
    விந்தையான வேதனைதான் தோழர்
    தம +1

    ReplyDelete
    Replies
    1. நாம் நினைத்துப் பார்க்காத ஆட்கள் எல்லாம் இதற்காக போராடியிருக்கிறார்கள் தோழர்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...