Sunday, April 26, 2015

26.04.2014 நிலைத் தகவல்

இப்போதும் தித்திக்கும் சென்ற ஆண்டு நடந்த தேர்தல் அனுபவம்
***************************************************************************************
1989 இல் இருந்து தேர்தல் பணிகளை செய்து வருகிறேன். பாராளுமன்றத் தேர்தல், சட்டமன்ற தேர்தல், இடைத் தேர்தல், கூட்டுறவு தேர்தல், நகராட்சி, மாநகராட்சி, பஞ்சாயத்து தேர்தல் என போன இடங்களை அசைபோட்டுப் பார்த்தால் 32 இடங்கள் நினைவுக்கு வருகின்றன. ஒன்றிரண்டு கூடுதலாகவும் இருக்கக் கூடும்.
ஆனால் இந்தமுறை கிடைத்த அனுபவம் மிக மிக வித்தியாசமானது.
வாக்குச் சாவடிக்குள் நுழைந்தால் ஆறு சப் இன்ஸ்பெக்டர்கள் அமர்ந்திருந்தார்கள். ஆச்சரியமாயிருந்தது. வழக்கமாக ஒரு ஓய்வுபெற்ற காவலரோ அல்லது வயதான, ஓய்வு பெற்ற ராணுவ வீரரோதான் பணிக்கமர்த்தப் படுவார்கள். ஆறு துணைக் கண்காணிப்பாளர்கள், 20 கும் அதிக எண்ணிக்கையில் காவலர்கள்.
உறைத்தது.
ஒரு காவலரிடம் கேட்டேன்,
“ ஏன் சார், சென்சிடிவ் ஆக இருக்குமோ?”
“ சே சே அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. பயப்படாதீங்க சார். கொஞ்சம் அப்படி இப்படி இருக்கும். நாங்க இருக்கோம். கொஞ்சம் கைமீறினால் கர்நாடகா ஃபோர்ஸ் வந்துவிடுவார்கள். போனமுறை அவர்கள் வந்ததும்தான் கட்டுக்குள் வந்ததாம்.”
இன்னொரு எஸ்.ஐ யிடம் கேட்டபோது அது தமிழ் நாட்டில் உள்ள பதட்டமான வாக்குச் சாவடிகளுள் ஒன்று என்ற உண்மை வெளி வந்தது.
மாதிரி வாக்கெடுப்பின் முன்னால் ஒரு அதிகாரி பார்த்து கவனமாக நடத்துமாறும் இங்குதான் போனமுறை பிரச்சினை ஆரம்பமானது என்றும் கூறினார்.
11 வாக்குச் சாவடி முகவர்கள்.
கை எடுத்து கும்பிட்டேன். சிலர் திருப்பி வணங்கினார்கள். அவர்கள் திருப்தி படும் வரை மாக் போல் செய்யலாம் என்றும் அதற்குமுன் ரெண்டு நிமிடம் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து கொள்ளலாம் என்றும் கூறினேன்.
”நான் எட்வின். ஒரு மேல்நிலைப் பள்ளி உதவித் தலைமை ஆசிரியர். ஒரு பையன், ஒரு பொண்னு. அப்படியே என் சக பணியாளர்களை அறிமுகம் செய்தபின் அவர்களைப் பற்றி கேட்டேன்”
சொன்னார்கள்.
“என்ன சப்ஜெக்ட் சார்?”
ஒரு பையன் கேட்டான்.
“ஆங்கிலம்”
உதட்டைப் பிதுக்கினான்.
”ஏம்பா?”
”எனக்கு போனா அது உங்க சப்ஜெக்ட் தான்.”
”போச்சுன்னா வா. இன்ஸ்டண்ட்ல தேத்திக்கலாம்.”
சிரித்தான்.
மாதிரி வாக்கெடுப்பு தொடங்கினேன். உள்ளூர உதறல்தான். வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
கருவிகள் இணைப்பது தொடங்கி உதவினார்கள். 50 வாக்குகளாவது போட வேண்டும் என்று விதி. தேவை இல்லை என்று சொன்னார்கள்.தயங்கிய போது பயப்பட வேண்டாம் என்றும், 50 வாக்குகள் மாதிரி வாக்கெடுப்பில் போடப் பட்டதாக படிவத்தில் கையொப்பம் இடுவதாகவும் சொன்னதோடு இருந்த படிவத்தில் ஒவ்வொருவராக கையொப்பமிட்டார்கள்.
வாக்கெடுப்பின்போது விடாமல் பேசிக் கொண்டே இருந்தார்கள். அவர்களது குழந்தைகளின் படிப்பு பற்றி பேசினார்கள். அது பற்றி, இது பற்றி எது எது பற்றியோ பேசினார்கள்.
இடை இடையே ஓட்டுப் போட வந்தவர்கள் கொதிக்கத்தான் செய்தார்கள். ஒட்டடை அடிக்கவில்லை என்பதற்காகக் கூட ஒரு தம்பி சத்தம் போட்டார்.
மிகவும் பதட்டமான சாவடி என்று அறியப் பட்டிருந்ததால் சாப்பாடு தேநீர் எதுவும் வருவதில் சிக்கல். எங்களோடு முகவர்களும் பட்டினிதான்.
மூட்டை கட்டுவதில் உதவினார்கள்.
ஒருவர் கேட்டார், “ நீங்க கம்யூனிஸ்டா சார்?”
“ இல்ல , ஆனா அவங்களப் பிடிக்கும். ஏன் கேக்குறீங்க?”
“கேட்டேன் சார்”
தி.மு.க, அ.தி. மு.க, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த முகவர்கள் வீட்டிலிருந்து ஏதேனும் கொண்டு வருவதாக சொன்னார்கள்.
முதலில் சொன்ன பையன் ஓடிப் போய் ஒரு தைல பாட்டிலோடு வந்தான். நான் அடிக்கடி தலையைப் பிடித்துக் கொண்டு சிரமப் பட்டதைப் பார்த்திருக்கிறான்.
வாக்குச் சாவடியில் சத்தமில்லால், சண்டை இல்லாமல் வாக்கெடுப்பு நடந்தது இதுதான் முதல் முறை என்று கூறியவாறே காவல்துறை ஏசி கை கொடுத்தார்.
சிரித்தார்கள்.
எல்லாம் அவர்களது அன்பும் பெருந்தன்மையும்தான் காரணம்.
பேருந்து ஏற்றிவிட வரும்போது அந்தக் குழந்தை கேட்டான்,
“ சார், பேப்பரெல்லாம் லூசாத்தானே திருத்துனீங்க?”
“ பயப்படாதே” தட்டிக் கொடுத்தேன்.
கை எடுத்து கும்பிட்டு கை கொடுத்து விடை பெற்றேன்.
“ உங்க அன்பும், நடவடிக்கைகளும் எங்களக் கட்டி போட்டிருந்துச்சு சார்” என்றார் ஒருவர். நல்லது கெட்டதுகளுக்கு பரஸ்பரம் சொல்லிக் கொள்ள வேண்டும் என்றார் ஒரு முகவர்.
அவர்களது பெருந்தன்மைக்கு நன்றி சொல்லி கிளம்பினேன்.
எல்லாவற்றையும் கேட்ட கீர்த்தி சொன்னாள்,
”சும்மா ரீல் விடாதப்பா, அய்யோ பாவம்னு ஆளப் பார்த்து விட்டுருப்பாங்க.”

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...