Thursday, April 2, 2015

65/66, காக்கைச் சிறகினிலே ஏப்ரல் 2015

தொடங்கிய மறு மாதமே தலைப்பை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. காக்கையின் கடைசி இரு பக்கங்களில் தொடர்ந்து எழுதுவதென்று முடிவெடுத்து “63/64, காக்கைச் சிறகினிலேஎன்று தொடங்கவும் செய்தாயிற்று. ரொம்பவும் தன்னடக்கம் கூட தேவை இல்லைதான். கொஞ்சம் வரவேற்பும் கிடைக்கவே செய்தது. சில நண்பர்கள் இதுகுறித்து மகிழ்ச்சியோடு அலை பேசினார்கள். பாரிசிலிருந்து தோழர் அரவிந்தன் இறந்த சோகத்தில் குரலுடைந்து பேசிய முகுந்தன் அந்த சோகத்தினோடும் இந்த தலைப்பு நன்றாக இருப்பதாக சொன்னார். தபால் கட்டண சலுகை உரிமையை பெற்றிருக்கும் இதழ்கள் பக்க எண்களை தலைப்பட்டையிலிருந்தே தொடங்கவேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதால் 63 ஆம் பக்கம் 65 ஆம் பக்கமாக மாறிவிட்டது. ஆகவே பத்தியின் தலைப்பும் மாறிவிட்டது.
*************************************************************************************

அடுத்தநாள் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம் முதல் தாள் . எனது பிள்ளைகளுக்கு நடத்திக் கொண்டிருக்கிறேன். தோழர்
முத்தையாவிடமிருந்து அழைப்பு வருகிறது. மௌனப் படுத்திவிட்டு வகுப்பைத் தொடர்கிறேன். உடனே அழைக்கிறார் முத்தையா. இது  எனக்கு புதிது . ஒரு முறை அழைத்து நான் எடுக்கா விட்டால் நான் அழைப்பேன் என்பதறிந்து காத்திருக்கக் கூடியவர். மீண்டும் மௌனப் படுத்துகிறேன். மீண்டும் அழைக்கிறார். ஏதோ அவசரம் என்று படுகிறது. எடுக்கிறேன்.

அரவிந்தன் செத்துட்டாராம்

என்னங்க தோழர் என்ன சொல்றீங்க?”

நெசந்தான். இப்பதான் முகிலன் பேசிட்டு வைக்கிறார்.

ஏதும் பேசாமல் அலைபேசியை அணைக்கிறேன். எப்படியோ ஒரு வழியாய் வகுப்பை முடித்துவிட்டு மீண்டும் அவரை அழைக்கிறேன். ஐந்து நாட்களுக்கு முன்னால் மிகவும் முடியாத நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இறந்திருக்கிறார்.

ஐந்தாண்டுகளாகவே அவதிப் பட்டுக் கொண்டுதானிருந்தார். ஆனால் எந்தச் சூழலிலும் மனதைத் தளரவிடாதவராகவே இருந்தார். கடைசியாக தோழர் முத்தையாவிடம் பேசிய போதுகூட எதாச்சும் சந்தோசமான செய்தி சொல்லுங்க என்றுதான் ஆரம்பித்திருக்கிறார். சந்தோசமான செய்தி வேண்டுமா காக்கை நல்லா போகுது. பேசறாங்க என்று முத்தையா சொன்னதும் மகிழ்ந்து கொண்டாடியிருக்கிறார்.

பத்து நாட்களில் இடியைத் தூக்கி எங்கள் மீது எறிந்துவிட்டு போயிருக்கிறார்.

காக்கைச் சிறகினிலேஒவ்வொரு இதழ் கைக்கு போனதும் முத்தையாவிடமும் சந்திரசேகரிடமும் அலைபேசியிலும் என்னிடம் முகநூல் சேட்டிலும் வந்துவிடுவார்.

நானோ, முத்தையாவோ, சந்திர சேகரோ அவர் சொல்லி எதையும் தட்டியதே இல்லை. அவரது நெறிப்படுத்துதலை அவ்வளவு மரியாதையோடு நாங்கள் மூவரும் அணுகியிருக்கிறோம். காக்கையின் மீது எங்களுக்கிருந்த அக்கறையில் கொஞ்சமும் குறைந்ததல்ல அவருக்கு காக்கை மீதிருந்த அக்கறை.

வழக்கமாக அவரது வேண்டுகோள்களை உத்தரவாகவே மகிழ்வோடு கருதி செய்து முடிப்பவர்களாகவே மூவரும் இருந்தோம். ஒருமுறை அவர் காக்கைக்கு நலம் பயக்கும் என்று கருதி எங்களிடம் அழுத்தமாகவும் மீண்டும் மீண்டும் வைத்த ஒரு கோரிக்கையை நாங்கள் மிகுந்த மரியாதையோடும் அன்போடும் மறுக்கிற நிலையில் இருந்தோம்.

ஒரு கட்டத்தில் அவரை இழந்துவிடுவோமோ என்றுகூட நான் அச்சப் பட்டேன். முத்தையாவும் சந்திர சேகரும் அப்படியெல்லாம் நடக்காது. காக்கையை விட்டு
அவரால் அங்குலம்கூட நகர முடியாது என்றார்கள்.

அதுதான் நடந்தது. எங்களின் பக்கம் இருந்த நியாயத்தை உணர்வதற்கு அவருக்கு அதிக காலம் பிடிக்கவில்லை. மட்டுமல்ல, நீங்கள் மூவரும் யார் சொல்லியும் கேட்காமல் பிடிவாதமாக இருந்ததால்தான் காக்கை தொடர்ந்து வருகிறது என்று என்னுடனான ஒரு உரையாடலில் சொன்ன பெருந்தன்மையாளர்.

ஐரோப்பிய நாடுகளில் காக்கைச் சிறகினிலே போய் சேர்ந்ததற்கு தோழரின் பங்கு மிகப் பெரிது. பாரிசில் காக்கையின் பெயரால் தொடர்ந்து விழாக்களை தோழர் முகிலனோடு இணைந்து முன்னெடுத்ததை காக்கை நன்றியோடு நினைத்துப் பார்க்கும் எப்போதும்.

ஐரோப்பிய நாடுகளுக்கு நான் வரவேண்டும், கூட்டங்களில் உரையாற்ற வேண்டும் என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தவர். கூச்சத்தோடு நழுவியபோது உங்களின் பலத்தை நீங்கள் உணர மறுப்பதுதான் உங்களது பெரிய பலவீனம் என்று சொன்னவர்.

இரண்டு இதழ்களில் எனது கட்டுரை வராமல் போகவே என்னை கடிந்து கொண்டவர். உங்கள் எழுத்துக்களுக்கு இங்கு ஒரு கூட்டம் இருக்கிறது என்று என் மீது கொண்ட அன்பால் கூசாமல் பொய் சொல்லி உற்சாகப் படுத்தியவர்.

மார்ச் இதழில் கட்டுரை ஒன்றும் தொடர் ஒன்றுமாய் எழுதினேன். வாசிக்காமல் ஏன் போனார்?

அவரது குடும்பத்தையோ தோழர் முகிலனையோ நாங்கள் வேறாக பார்க்காத காரணத்தால் நானும், சந்திரசேகரும், முத்தையாவும் அவர்கள் கைகளைப் பிடித்துக் கொண்டு அவர்களோடு சேர்ந்தழுகிறோம்.
********************************************

நான் பாலியல் வன்புணர்வினால் பாதிக்கப் பட்ட பெண். என்னை ஐந்துபேர் ஒரு காரில் வைத்து வன்புணர்ந்தார்கள்என்று பெண்களுக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்டு உரத்தக் குரலெடுத்து முழங்கிய சூசெட் இன்று இல்லை. அந்த கூட்டு வன்புணர்வினால் ஏற்பட்ட உடல் நலிவும், மன உளைச்சலும் அதோடு கூட மூளைக் காய்ச்சலுமாய் சேர்ந்து கடந்த பதிமூன்றாம் தேதியன்று மகளைக் கொண்டுபோயின.

2012 இல் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததும் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று மம்தா சொன்னார். திரிணாமுல் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இது சூசெட்டுக்கும் அவரது வாடிக்கையாளர்க்கும் இடையேயான பிரச்சினை என்று மனித நிலையிலிருந்து வெகுவாக கீழிறங்கி கூசாது பொய் சொன்னார். அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் தெருவிறங்கி போராடியபோது தானும் அதில் கலந்துகொண்டார் சூசெட். அத்தோடு மட்டுமல்லாது பெண்கள் சம்பந்தமாக இந்த அமைப்புகள் நட்த்திய அத்தனை போராட்டங்களிலும் அது தனது கடமை என்ற எண்ணத்தோடு கலந்து கொண்டு போராட்டங்களுக்கு ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தினார். அப்போதுதான் மேற்கண்டவாறு முழங்கினார்.

இப்படி வெளிப்படையாகப் பேசுவதற்கு வெட்கமாக இல்லையா என்று சிலர் கேட்டபோதுநான் ஏன் வெட்கப் பட வேண்டும். என்னை வன்புணர்ந்த குற்றவாளிகள்தான் வெட்கத்தில் முகங்களை துண்டெடுத்து மூடிக் கொள்ள வேண்டும்என்று சொன்னார்.

போய்வா மகளே. உன் சிதையின் நெருப்புச் சூட்டில் எங்கள் இதயங்களை காப்பேற்றிக் கொள்கிறோம்.
*********************************************   
  
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கருவானூர் இருக்கிறது. அந்த ஊரைச் சேர்ந்த அரவிந்தன் என்ற குறவர் இனத்தை சார்ந்த இளைஞன் பெங்கலூரில் வெல்டராக பணியாற்றுகிறார்.அவரது ஊரில் உள்ள பெருமாள் கோவிலில் திருவிழா வரவே அதைக் காண அங்கு வருகிறார்.
திருவிழாவில் நடந்த தெருக் கூத்தைப் பார்க்கச் சென்றிருக்கிறார். தாழ்த்தப் பட்ட ஒருவர் தங்களுக்கு சமமாக நின்று தெருக்கூத்தைப் பார்ப்பது ஆதிக்க சாதி இளைஞர்கள் சிலருக்கு எரிச்சலைத் தருகிறது. அவரைக் கொடூரமாகத் தாக்கியிருக்கிறார்கள். மயங்கி விழும் நிலையிலிருந்த அரவிந்தன் குடிக்கத் தண்ணீர் கேட்டிருக்கிறார். குற சாதிப் பய திருவிழாவிற்கு வருவதுமில்லாமல் தண்ணீர் வேற கேட்பீங்களோ என்றவாறு அவரது வாயில் சிறுநீரைக் கழித்திருக்கிறார்கள்.
தீக்கதிரில் இந்தச் செய்தியை வாசித்ததும் தாங்க முடியாமல் நண்பர்களிடம் அரற்றத் தொடங்கினேன்.
எப்ப பார்த்தாலும் பீயத் திங்க வைச்சான், மூத்தரத்தக் குடிக்க வச்சான்னே பேசிக்கிட்டு. கேட்கவே அறுவெறுப்பாக இருக்கு என்றார்கள்.
கேக்கவே அறுவெறுப்பா இருக்கே. அத அனுபவவிச்சவங்களுக்கு எப்படி இருக்கும் என்றவுடன் அத நீ பேசி என்னவாகப் போகுது என்கிறார்கள்.
என்ன ஆகும் என்று மட்டுமல்ல என்ன செய்வது என்றும் சட்டென புரியவில்லைதான். ஆனால் ஆகவே ஆகும். அதற்காக நானும் எதையேனும் செய்யவே செய்வேன்.
அதுவரைக்கும் இதை பேசவே பேசுவேன் , கூடுதல் குரலெடுத்து ஒவ்வொரு முறையும்.
****************************************************** 


  

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...