கோகோ கோலோ நிறுவனத்திற்கு 27 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு அரசு தாரை வார்த்திருக்கிறது என்கிற செய்தி அதிகாரப் பூர்வமாகியிருக்கிறது.
பொதுவாகவே இதுமாதிரி நிறுவனங்களுக்கு உரிமை கொடுக்கும்போது அந்தப் பகுதியின் நிலத்தடி நீர் வளம் அதலப் பாதாளத்திற்கு போகும். எப்படியும் நிர்ணயிக்கப் பட்ட அளவிற்கு மேலான நீரை இவர்கள் உறிஞ்சுவார்கள். எனவே ஒரு கட்டத்தில் சுத்தமாய் வறண்டு போகும்.
போக இவர்கள் நீரை சுத்தப் படுத்தும்போது ஒரு லிட்டர் நல்ல நீர் எடுப்பதற்கு குறைந்த பட்சம் 6 லிட்டர் நீரை கழிவாக்க வேண்டி வரும். இது அந்தப் பகுதியை மாசு படுத்தும். குறிப்பாக அந்தப் பகுதியின் நீர் வளத்தை மாசுப் படுத்தும்.
ஒரு பாமரத்தனமான கேள்வி,
“ ஏன் அவர்கள் நாட்டில் நிலத்திற்கு கீழே நீரே இல்லையா?”
இது குறித்து அவையில் மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினர் தோழர் பாலகிருஷ்ணன் அவர்கள் விடாது கேட்கவே அமைச்சர் மாண்பமை தங்கமணி அவர்கள் அதற்கு மேலும் நழுவ முடியாது என்கிற நிலையில் 27 ஏக்கர் நிலம் ஒதுக்கியது உண்மைதான். ஆனால் அது குறித்த அரசின் நிலைப்பாட்டை இப்போது கூற முடியாது என்றும் அந்த நிறுவனம் சுற்ருச் சூழல் சான்று பெற விண்ணப்பிக்கும்போது அரசு தனது நிலைபாட்டை தெளிவு படுத்தும் என்று கூறியுள்ளார் என்கிற செய்தியை இன்றைய தீக்கதிர் சொல்கிறது.
பெண் கொடுத்துவிட்டோம், வீடு பார்த்து தனி குடித்தனமும் வைத்து விட்டோம் ஆனால் அவர்கள் குடும்பம் நடத்தலாமா வேண்டாமா என்பதில் எங்கள் நிலை பாட்டை இப்போது சொல்ல முடியாது. அதற்கு 10 நாட்கள் ஆகும் என்பது போல் அல்லவா இது இருக்கிறது.
இதுகூட பரவாயில்லை. 27 ஏக்கர் நிலத்தை கொடுத்தது உண்மைதான் என்று அமைச்சர் சொன்னதுமே பதறிப் போனவராய் மாண்பமை அவைத் தலைவர் இனி இதுகுறித்து யாரும் பேசக் கூடாது என்று உத்தரவு போட்டதோடு மீறி பேசினால் அது அவைக் குறிப்பில் ஏறாது என்று சொல்லியிருக்கிறார்.
மக்கள் சக்தியை ஒன்றிணைத்து போராட்டத்தை நடத்த வேண்டிய பொறுப்பு சமூகத்திற்கு இருக்கிறது.
இடதுசாரிகள் முன்கை எடுக்க வேண்டும் என்பது என் ஆசை.
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்