Saturday, April 25, 2015

யார் வாயெனினும் கேட்க


கிழவனது ஏதோ ஒரு குறள் எதோ ஒரு இடத்தில் கச்சிதமாய் வந்து பொருந்தவே செய்கிறது. அப்படியாக இன்றைக்கு இந்தப் புள்ளியில் மிகச் சரியாய் வந்து பொருந்தி அமர்ந்ததுஎப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்

ஏனிந்தக் கிழவன் யார் என்பதை இரண்டுமுறை பயன்படுத்தினான்? வெறும் சந்த நயத்திற்காகவா? என்றெல்லாம்கூட யோசிப்பது உண்டுதான். 23.04.15 அன்றைய பாராளுமன்ற மேலவை நிகழ்ச்சிகள்தான் அந்தக் குறளுக்கான உண்மையான பொழிப்புரையைத் தந்தன.

யார் யார்எனில் மரியாதைக்குரிய நவநீதக் கிருஷ்ணன், மரியாதைக்குரிய வெங்கைய நாயுடு, மரியாதைக்குரிய திருச்சி.சிவா, மற்றும் மரியாதைக்குரிய ஜேட்லி என்பதாக அன்றைய அவை நிகழ்ச்சிகள் சொல்லின.



எப்பொருள்என்பதற்கு மார்க்சிஸ்ட் பொதுவுடைமைக் கட்சியின் மேலவை உறுப்பினர் தோழர் ராஜீவ் அவர்களின் பணி குறித்தும், அவரது அறிவு, திறமை, உழைப்பு மற்றும் நுட்பம் குறித்தும் அவரது பணி நிறைவு அவைக்குள் ஏற்படுத்தப் போகும் வெற்றிடம் குறித்தும், தோழர் யெச்சூரி கட்சியின் பொதுச் செயளாளராக தேர்வானதால் மாநிலங்களவைக்கு ஏற்பட்டுள்ள பெருமை.

23.04.15 அன்று மாநிலங்களவை கூடியதும் மாண்பமை அமைச்சர்கள் உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று தோழர் சீத்தாராம் யெச்சூரியை வாழ்த்தியிருக்கிறார்கள். பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் அமைச்சருமான மாண்பமை வெங்கையா அவர்கள்இந்தியாவின் மிக முக்கியமான கட்சிகளுள் ஒன்றான இந்திய பொது உடமைக் கட்சியின் பொதுச் செயலாளராக இந்த அவையின் உறுப்பினரும் நமது சகாவுமான திரு யெச்சூரி அவர்கள் தேர்வு செய்யப் பட்டிருப்பது நமக்கெல்லாம் பெருமையானதொரு விஷயம்என்று வாழ்த்தியிருக்கிறார்.

மரியாதைக்குரிய திருச்சி சிவா அவர்கள் ராஜீவ் அவர்களைப் பற்றிப் பேசும் போது அவர் இந்த அவையின்ட்ரெண்ட் செட்டராகவிளங்கியதாக புகழ்ந்திருக்கிறார்.

அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநிலங்களவைக் குழுத் தலைவர் மாண்புமிக நவநீதக்கிருஷ்ணன் அவர்கள் தான் மிகவும் தன்னடக்கமானவன் என்று இதுவரை நினைத்துக் கொண்டிருந்ததாகவும் திரு ராஜீவ் அவர்களைப் பார்த்த பின்புதான் தன்னடக்கத்தையும் இன்னும் சில விஷயங்களையும் அவரிடமிருந்து கற்றுக் கொள்ளத் தேவை இருப்பதை உணர்ந்ததாகவும் தெரிவிக்கிறார்.

மாண்பமை அருண் ஜேட்லியும் மரியாதைக்குரிய குலாம்நபி ஆசாத் அவர்களும் தோழர் ராஜீவ் அவர்களை மீண்டும் அவைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தோழர் யெச்சூரியிடம் வேண்டுகோள் வைத்தனர்.

இதற்கெல்லாம் உச்சமாக “ இதுபோன்ற அறிவார்ந்த உறுப்பினர்கள் தங்கள் கட்சியில் இல்லாமல் இந்தியம் மார்க்சிஸ்ட் பொது உடைமைக் கட்சியில் இருப்பதற்காக  அந்தக் கட்சியைப் பார்த்து பொறாமைப் படுவதாக” மாண்பமை வெங்கையா அவர்கள் கூறியுள்ளார்.

“வரைந்து விடாதீர்கள் என்னை
யாரும்
என்னைவிட அழகாய்”

என்று ஒருமுறை எழுதினேன். என்னளவில் அதில் கறாராகவே இருக்க விரும்புகிறேன். நம் உண்மையான உசரத்திற்கு அதிகமாய் கட்டமைக்கப் படும் எந்த பிம்பமும் அசிங்கமானதே.

உயரமாக கட்டமைக்கபடும்போது கட்டமைக்கப் பட்டவனும், குள்ளமாக கட்டமைக்கும்போது கட்டமைப்பவனும் அசிங்கப் படுவார்கள்.

புகழ்ந்தவர்கள் எல்லார் மீதும் நமக்கு ஏகத்துக்கும் விமர்சனம் உண்டு. அவர்கள் அனைவருமே பொது உடைமைக் கட்சியின் எதிரிகள். இந்தக் கட்சியைச் சார்ந்த உறுப்பினர்கள் எதிலாவது சிக்க மாட்டார்களா? என்று தேடிக் கொண்டிருப்பவர்கள்.

அவர்கள் இப்படிப் புகழ்கிறார்கள் என்றால் அது வேறு வழியே இல்லாமல் என்பது புரிகிறது. என்றாலும் இதையும் அவர்கள் சொல்லாமல் போயிருந்தாலும் அவர்களை யாரும் கேள்வியெல்லாம் கேட்க முடியாது. இன்னொரு பக்கம் இப்படி சொல்வதால் அவர்களுக்கு பெரிய லாபம் எல்லாம் இருக்கப் போவதில்லை, மாறாக கொஞ்சம் எதிர்மறை விளைவுகளை அவர்களுக்கு கொண்டு வந்தும் தரலாம். இருந்தும் இதை அவர்கள் செய்திருக்கிறார்கள் என்றால் அவர்களிடமிருக்கும் பெருந்தன்மையை அங்கீகரிக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.

இந்தியாவின் மிக முக்கியமான கட்சி என்று பெருந்தன்மையோடு கூறியுள்ள மாண்பமை வெங்கையா அவர்களிடம் நம் கோரிக்கை ஒன்றுண்டு. நீங்களே சொல்வது போல் அறிவார்ந்த, தியாக உணர்வோடு கூடிய, உறுப்பினர்களைக் கொண்ட இந்த தேசத்தின் மிக முக்கியமான கட்சிகளுள் ஒன்று இந்த தேசத்திற்கெதிராக ஒரு போதும் சிந்திக்காது என்பதை உணர்ந்ததால்தானே உங்களால் அப்படி சொல்ல முடிந்தது. ஒருக்கால் சும்மா சொன்னது என்றால் நீங்கள் போலி. உண்மையென உணர்ந்ததைத்தான் நீங்கள் சொன்னீர்கள் எனில் நமது கோரிக்கை இதுதான்,

அந்தக் கட்சி சொல்வதை கொஞ்சம் காது கொடுத்துதான் கேளுங்களேன்.

இன்னொன்றையும் நான் ஒப்புக் கொண்டுதான் ஆகவேண்டும். வெங்கையா அவர்களும் நவநீதக் கிருஷ்ணன் அவர்களும் சொல்லித்தான் எனக்கு ராஜீவை பற்றியே தெரிய வருகிறது.

”யார் யார் வாயும் கேட்க” சொன்ன வள்ளுவனுக்கு நன்றி



No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...