”மருத்துவ சிகிச்சைக்கு அமெரிக்கர்கள் இந்தியா செல்வதை அனுமதிக்க முடியாது. உள்ளூரிலேயே அதே சிகிச்சையை குறைவான செலவில் தருவோம்:” என்பது மாதிரி ஒபாமா அறிக்கை விட்டிருக்கிறார்.
கண்புரை நோய்க்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ள இயலாத அமெரிக்கர்கள் ஏராளம். வாரா வாரமோ தினம் தினமோ தெரியவில்லை, கியூபா இத்தகைய ஏழை, உழைக்கும், அடித்தட்டு மக்களை இலவசமாக ஹெலிகாப்டரில் அழைத்துப் போய் அறுவை செய்து குணமாக்கி மீண்டும் கொண்டு வந்து இலவசமாகவே விடுகிறார்கள் என்று படித்திருக்கிறேன். இதனால்தான் அமெரிக்க உழைக்கும் மக்கள் கியூபாவைத் தங்கள் தோழனாகப் பார்க்கிறார்கள். ஏழை, உழைக்கும் அடித்தட்டு மக்களுக்கும் கியூபாவிற்கும் இடையே உள்ள இந்த வர்க்க ரீதியான உறவுதான் புஷ், கிளிண்டன், ஓபாமா இன்னபிற எந்தக் கொம்பனாலும் கியூபாவை ஒன்றும் செய்ய இயலாமல் செய்து போட்டிருக்கிறது.
மீண்டும் ஒபாமாவின் அறிக்கைக்கு வருவோம். அவரது அறிக்கை ஒன்றைத் தெளிவு படுத்தியிருக்கிறது. அமெரிக்காவை விட இந்தியாவில் மருத்துவ சிகிச்சைக்கான செலவு குறைச்சல். ஏழை, உழைக்கும் ,அடித் தட்டு அமெரிக்க மக்கள் தங்களது சிகிச்சைக்காக அமெரிக்காவைவிட இந்தியாவையே அதிகம் சார்ந்து இருக்கிறார்கள்.அதிக அளவு உழைப்பாளி அமெரிக்கர்கள் இந்தியாவில் வந்து வைத்தியம் பார்த்து குணமடைந்து சென்றிருக்கிறார்கள்.
ஆக, அமெரிக்காவிலும் இந்தியாவிலும் உழைப்பவன் நிலைமை ஒன்றாக ஒத்தே இருக்கிறது. இவர்களது பிரச்சினைகளும் ஒன்றாகவே கிடக்கின்றன. கொஞ்சம் மேலே போனால் இவர்களது பிரச்சினைகளுக்கான தீர்வுக்கான வழியும் ஒன்றாய் ஒத்தே இருக்கிறது. இவர்களது வாழ்வு, சிக்கல், தீர்வு , போராட்டம் ஆகியவை இவர்களை ஒருவரை ஒருவர் சார்ந்தே இருக்கும் நிலையும் உள்ளது.
மட்டுமல்ல உலகம் முழுவதிலும் உழைக்கும் மக்களின் சகலமும் ஒருவரை ஒருவர் சார்ந்தேதான் இருக்கிறது. எனவேதான் சரியாய் சொல்கிறோம்” உழைக்கும் தொழிலாளிகளே ஒன்று படுங்கள் “ என்று. சொன்னால் சில பேருக்குப் பொத்துக் கொண்டு வருகிறது. இந்த உயிர்ப்பான முழக்கத்தை எவன் சந்தேகித்தாலும், எவன் கேலி செய்தாலும், எதிர்மறையாய் எவன் பேசினாலும் அவன் உழைக்கும் திரளின் எதிரியே.
சரி, ஒபாமா இந்தியாவைக் கேவலப் படுத்தவில்லையா? என்றால் இல்லை என்பதே எனெது பதில். தன் நாட்டு மக்கள் இன்னொரு நாட்டை சார்ந்து வாழ்வதை அவர் விரும்ப வில்லை என்பதை சரியானதொரு பார்வையாகவே நான் பார்க்கிறேன். அங்குள்ள அடித்தட்டு மக்களுக்கு அங்கேயே இலவசமாகவோ அல்லது குறைந்த செலவிலோ வைத்தியத்திற்கான ஏற்பாடுகளை அவர் செய்தால் சத்தியமாய் அவரை நான் பாராட்டவே செய்வேன். நம்மைப் பொறுத்தவரை எந்த நாட்டு உழைப்பாளியாக இருந்தாலும் எங்கள் உறவே.
நமக்கான நியாயமான கேள்வி இதுதான். இந்தியாவை சார்ந்து அமெரிக்க மக்கள் இருக்கக் கூடாது என்று நியாயமாக நினைக்கும் போது ஒட்டு மொத்த இந்தியாவையும் அமெரிக்காவை சார்ந்தும் எதிர் பார்த்தும் இருக்கிற நிலைக்கு ”ஒன், டூ, த்ரீ” என்று தள்ளிய கனவான்களை என்ன செய்யப் போகிறோம்?
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்