Thursday, April 9, 2015

வீதிக்கொரு தமிழ்ப் பள்ளி

 பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் “தமிழ் ஓசைய்” தைன இதழில் எழுதியது.  ‘அந்தக் கேள்விக்கு வயது 98’ என்ற எனது நூலில் உள்ளது.
************************************************************************

 “ தமிழ்நாட்டில் வீதிதோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் மலிக என்று எழுது” என்று 1915 வாக்கில் நெல்லையப்பருக்கு எழுதுகிறார் பாரதி. பொதுவாகவே பாரதியின் கவிதைகள் கொண்டாடப் பட்ட அளவிற்கு, விமர்சிக்கப்பட்ட அளவிற்கு , கிழிபட்ட அளவிற்கு அவரது கட்டுரைகளோ கடிதங்களோ கண்டு கொள்ளப்படவில்லை. ஆனால் அவரது உரைநடையின் உயரம், அவரது கவிதையின் உயரத்திற்கு கொஞ்சமும் குறைந்ததல்ல. கொண்டாட்டத்திற்கு உரிய இந்தக் கடிதத்தின் மீது தமிழ் அறிவுத் தளம் தனது குறைந்தபட்சக் கவனத்தைக்கூட குவிக்கவில்லை என்பதுதான் சோகத்தின் உச்சம்.

“தமிழ்நாடு” கர்ருத்தாக்கமே தோன்றியிராத ஒரு காலத்தில் “ தமிழ்நாட்டில்” என்று எழுதுகிறார்.  ”தமிழ்நாடு” என்ற கருத்தாக்கத்தின் உருவாக்கத்தில் பாரதியின் பங்கு குறித்து போதுமான அளவிற்கு ஆய்வுகள் நடந்ததாகவும் தோன்றவில்லை. அதற்குள் நுழைவதும், விசாரிப்பதும் அவசியம்தான் எனினும் இந்தக் கட்டுரைக்கு அது அதிக பட்சம் என்பதால் விட்டு விடலாம்.

”தமிழ்நாட்டில் வீதி தோறும் தமிழ்ப் பள்ளிகள் மலிக” என்பதோடு நிறுத்தியிருந்தார் எனில் அது அவரது கனவின் பதிவு என்றுகூட விட்டு விடலாம். “ என்றெழுது” என்று சேர்த்து முடிப்பதன் மூலம் தனது கனவை, ஆசையை, இயக்கமாக கொண்டு செல்வதற்கான வேண்டுகோளாக  அல்லது கட்டளையாகவே இதனைக் கொள்ள வேண்டும். நெல்லையப்பரிடம் பாரதி கைமற்ரிக் கொடுத்த கனவு 94 ஆண்டுகளைக் கடந்தும் தனது தொடர் ஓட்ட எல்லையைத் தொடவில்லை. எல்லை வெகு தூரத்தில் தெரிகிறது என்றால்கூட நமது வேகத்தை விரைவுபடுத்தி தொட்டு விடலாம்.கைமாறி கைமாறி நம் கைகளில் அவரது கனவு வந்தபோதுதான் அது முற்றாய் முழுசாய் சிதைக்கப் பட்டிருப்பது தெரிகிறது.

கடந்த சில பத்தாண்டுகளில்  தேவையான அளவிற்கு தமிழ்ப் பள்ளிகளைப் புதிதாய் உருவாக்கத் தவறியிருக்கிறோம் என்பது ஒருபுறமிருக்க  இருக்கிற பள்ளிகளையும் வஞ்சனையோ, கூச்சமோ சிறிதுமின்றி இழுத்து மூடி வருகிறோம். கவலையாய் தமிழ்ப் பள்ளி தவிக்க அதைச் சுற்றி அழகழகாய், வண்ண வண்ணமாய் டசன் கணக்கில் ஆஙிலப் பள்ளிகள் செழித்து கூத்தடிக்கும் நிலை எப்படி சாத்தியப் பட்டது? அதுவும் மொழியைத் தங்களது அடையாளமாக பறைசாற்றும் மொழிப் பற்ராளர்களின் காலத்தில் ஆங்கில வழிக் கல்வியின் ஆதிக்கம் பெருகுவது எப்படி?

தமிழ் மண்ணில், தமிழ்க் குழந்தைகளுக்கான கல்வி தமிழ் வழிப்பட்டதாக அமைய வேண்டுமென்ற நமது கோரிக்கையில் கிறுக்கனுக்கும்கூட மாற்ருக் கருத்திருக்காது. ஆனால், “இதைக் கேட்பதற்கு நீங்கள் யார்? எந்த மொழியில் கற்க வேண்டும் என்பதை மாணவர்களும் பெற்ரோர்களும்தானே தீர்மானிக்க வேண்டும்,” என்று தமிழ் மண்ணின் எட்டுத் திக்கிலிரிந்தும் மெத்த்ப் படித்த ஒரு மேதாவிக் கூட்டத்திடமிருந்து வெறிக் கூச்சல் வெடிக்கிறது. கேட்கிறோம், நாங்கள் பெற்ரோர்கள் இல்லையா? எங்கள் பிள்ளைகள் மாணவர்கள் இல்லையா? என்றால் பயிற்ரு மொழியை தீர்மானிப்பது எந்த பெற்றோரும், எந்த மாணவர்களும்? இத்தனைக் கோளாறுகளுக்கும் என்னதான் காரணம்?

பள்ளிகளில், கல்லூரிகளில் இருந்த கல்வியை பையப் பைய  சந்தைக்கு கொண்டுவந்து நிறுத்துவதில் ஏகாதிபத்தியங்கள் பெருமளவு வெற்றி பெற்றுள்ளன. இன்றைய தேதியில் கல்வி ஒரு கவர்ச்சிகரமான நுகர்பொருள். தெளிவு படுத்த வேண்டிய கல்வியை மயக்குகிற போதைப் பொருளாக மாற்றி வைத்துள்ளது சந்தை. இந்தக் கிறக்கத்திலிருந்து தமிழனை மீளவிடாமல் அவ்வப்போது எதையாவது செய்கிற வித்தையை ஏகாதிபத்தியம் கவனத்தோடும், சிரத்தையோடும் கூடிய செய்நேர்த்தியோடும் செய்கிறது. இதன் ஒரு பெருவிளைவுதான் கல்வி நிலையங்களுக்கான சந்தை விளம்பரங்கள்.

“ இரண்டு பிள்ளைகளை எங்கள் பள்ளியில் சேர்த்தால் மூன்றாவது பிள்ளைக்கு சேர்க்கை இலவசம்” என்றுகூட விளம்பரங்கள் இனி வரக் கூடும், ஏன், இந்நேரம் அப்படி ஒரு விளம்பரம் வந்தேகூட இருக்கலாம். இன்னொரு பள்ளி, “ தமிழ் வாசனை அறவே இல்லாத சுத்தமான பள்ளி எங்கள் பள்ளி. எங்கள் பள்ளியில் சேரும் குழந்தைகளிடம் கசடாகப் படிந்துள்ள கொஞ்ச நஞ்சத் தமிழையும் ஒரே ஆண்டில் அழித்து சுத்தப் படுத்தி , தமிழே அறியாத தூய குழந்தைகளாக மாற்றித் தருகிறோம்” என்றும் சொல்லக் கூடும்.

நுனி நாக்கு ஆங்கிலம் மட்டுமே வளமையான வேலை வாய்ப்பினைத் தரும் என்று மிகுந்த கவனத்தோடும், அதைவிட மிகுந்த தொழில் நுட்பத்தோடும்பரப்பப் படுகிறது. பன்னாட்டு தொழில் நிறுவனக்கள் கல்லூரி கல்லூரியாய்ப் போய் ‘வளாகத் தேர்வு’ நடத்தி மதிப்பெண்களையும் திறமையையும் சற்ரு பின்னுக்குத் தள்ளி ஆங்கிலம் நடனமாடும் நாக்குகளைத் தேடிப் பிடிப்பதன் மூலம் மேற்சொன்ன கருத்துகளுக்கு வலிவூட்ட முயல்கின்றன. இப்படி, ஒரு வழியாய், தகுதி, திறமை, இன்னும் என்னவோ எல்லாவற்றையும் ஆங்கிலம் ஊற்ரி மூடியது. தகுதி, திறமை, மதிப்பெண்கள் எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளி சகலத்தையும் கெடுத்துவிட்டதாய் கூச்சலிட்டவர்கள், ஒப்பாறி வைத்தவர்கள் எல்லாம் இது விஷயத்தில் வாய் பொத்தி நின்றார்கள்.

ஆங்கிலம் மட்டும் தெரிந்துவிட்டால் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும் என்கிறார்கள். சரி, எங்கள் குழந்தைகள் எல்லோருக்குமே பிழையற ஆங்கிலம் கற்ருத் தந்து விடுகிறோம். எல்லோருக்கும் வேலை தந்து விடுவீர்களா? ஏறத்தாழ எல்லா பன்னாட்டு நிறுவனங்களும் ஆட்குறைப்பு செய்யும் வேலையைத் தொடங்கி விட்டன என்கிற வெளிச்சத்தில் இது சாத்தியமே இல்லை என்பது புலனாகிறது.

புறநகர் பகுதியில் ஐம்பதாயிரம் ரூபாய் முதலீட்டில் ஒருவர் இரவு நேர உணவு விடுதி வைக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். மேசை துடைக்க, தண்ணீர் வைக்க, இலை வைக்க, சமைக்க, உணவு பரிமாற, தேநீர் போட, பில் போட, தண்ணீர் கொண்டுவர, கல்லாவை கவனித்துக் கொள்ள, ஒட்டு மொத்தமாக மேற்பார்வையிட என்று ஒரு பத்துப் பன்னிரண்டு பேருக்கு வேலை கிடைத்து விடுகிறது. ஆக, ஐம்பதாயிரம் ரூபாய் முதலீடு பத்துப் பன்னிரண்டு வீடுகளில் அடுப்புகளை இயக்குகிறது.

ஆனால், ஏகப்பட்ட அரசு சலுகைகளோடும், விளம்பரங்களோடும், மூவாயிரம் கோடி ரூபாய் முதலீடோடும்தொடங்கப் படும் பன்னாட்டு நிறுவனக்களில் மூவாயிரம் பேருக்கும் குறைவாகத்தான் வேலை வாய்ப்பு என்பதுதான் எதார்த்தம். இதிலும் நிர்வாக அளவில் ஒரு ஆயிரம் பேரேனும் அவர்கள் நாட்டிலிருந்து வந்தது போக அதிக பட்சமாக ஒரு இரண்டாயிரம் பேருக்கு மட்டுமே வேலை என்பது சாத்தியம்.

வெறும் ஐம்பதாயிரம் ரூபாய் முதலீடு 12 பேருக்கு வேலை தரும்போது மூவாயிரம் கோடி ரூபாய் முதலீடு 60 லட்சம் பேருக்கேனும் வேலை தர வேண்டும் என்பதுதான் நியாயம். வேண்டாம் விடுங்கள், ஒரு லட்சம் பேருக்கேனும் வேலை தர வேண்டாமா? அதிலும், இப்படி பலகோடி ரூபாய் அள்வில் வரி மற்ரும் இதர சலுகைகளுடன் ஆரம்பிக்கப் பட்ட பன்னாட்டு நிறுவனக்கள் அதிக அளவில் ஆட்குறைப்பு செய்யும் அபாயம் வேறு.

இவர்களுக்கு சலுகையாய் வழங்கும் தொகையில் நாமே தொழிற்சாலைகள் தொடங்கினால் எத்தனை பேருக்கு நாமே வேலை வாய்ப்பைத் தர முடியும். எத்தனை குடும்பங்களில் அடுப்பெரியும்?

மண்சார்ந்த, பண்பாடு சார்ந்த, கல்வியும் தொழில் வளர்ச்சியுமே நிலைத்த, நிறைந்த வேலை வாய்ப்புகளை நமக்குத் தரும் என்பது எப்போது நமக்கு உறைக்கும்? தாய்மொழி வழிக் கல்வி மட்டுமே இத்தகைய புரிதலை மாணவனுக்குத் தரும்.ஆனால் தாய் மொழியில் [படிப்பதை, படிக்க வைப்பதைக் கேவலத்தின் உச்சமென எண்ணும் நிலையிலிருந்து இந்தச் சமூகம் எப்போது மாறும்? நமது பிள்ளைகளைத் தமிழ் வழியில் படிக்க வைக்கிறோம் என்பதைக் கேட்ட மாத்திரத்திலேயே நம்மை பரிதாபத்தோடும் பல நேரங்களில் நக்கலோடும் பார்க்குமிந்தச் சமூகத்தில் தமிழ் வழிக் கல்வி சாத்தியம்தானா? சாத்தியம் என்றே படுகிறது.

ஏறத்தாழ எல்லோரும் ஆங்கிலவழிக் கல்விக்கு பிள்ளைகளை மடை மாற்றம் செய்த பின்னும் ஏதோ நாம் மட்டுமே, நம் பிள்ளைகளை மட்டுமே வீணடித்து விட்டோமோ என்றிருந்த நிலையை ஒரு சம்பவம் புரட்டிப் போட்டு நம்பிக்கை வார்த்தது.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் இணை இயக்குனராக பணியாற்றும் திரு கார்மேகம் அவர்க:ள் தனது இரண்டு பிள்ளைகளையும் ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியில்தான் படிக்க வைக்கிறார் என்கிற செய்தி ஏகத்துக்கும் நம்பிக்கை தருகிறது. இன்னும் ஒரு இருபது ஆண்டுகளுக்காவது கல்வித்துறையில் இவரத்ய் ஆளுமை இருக்கும் என்பது அந்த நம்பிக்கையை  மேலும் வலுப்படுத்துகிறது. அபூர்வமாய், வரமாய், வந்து வாய்க்கும் இத்தகைய அதிகாரிகளின் காலத்தில் சாத்தியப் பட்டால் ஒழிய வேறு வழியைல்லை.

நெ.து. சுந்தரவடிவேலுவை பெருந்தலைவர் பயன்படுத்திக் கொண்டது போல கார்மேகம் அவர்களையும் அவரைப் போன்ற அதிகாரிகளையும்  சரியாகப் பயன்படுத்திக் கொண்டால்  தமிழ்நாட்டில் வீதிகள்தோறும் தமிழ்ப் பள்ளிகள் மலிவது சாத்தியமே.   

2 comments:

  1. கார்மேகம் போன்றோரால் சமுதாயம் மாறும் என நம்புவோம்.

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...