Friday, April 10, 2015

ஒன்று என்பது இரண்டு

சோகங்கள் எதனினும் கொடிய சோகம் புத்திர சோகம். அதனினும் கொடிய சோகம் மண்ணை இழந்து, புலம் பெயர்வது. புலம்பெயர்வு தரும் வலியின் முழுமையை, உக்கிரத்தை  வாசித்து உணர்ந்துவிட முடியாது. எனினும் புலம் பெயர்ந்த படைப்பாளிகளின் படைப்புகளுள் கவனமாகப் பயணித்தால் அவற்றை பெருமளவு உணர முடிகிறது. 

பொதுவாக புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் சார்ந்த படைப்புகளில் புலம் பெயர்ந்த  ஈழத் தமிழ் மக்களின் "வலி" கிடைக்கும். விதிவிலக்காக எஸ்.ஏ உதயனின் "லோமியா " இந்தியாவிலிருந்து இலங்கைக்குப் புலம் பெயர்ந்த சில தமிழ்க் குடும்பங்களின் காயங்களை, வலியைப்  பதிவு  செய்கிறது. 

ஆனாலும் அது குறித்து நாம் இங்கு பேசப் போவதில்லை. அது தேவையுமில்லை. தேவையான அளவுக்கு இன்னும் உணரப்படாதகிறிஸ்தவத்திற்குள் படிந்து கிடக்கும் சாதியப் படிநிலைகளின் நுட்பத்தை அதனினும் நுட்பமாக "லோமியா"வில் பதிந்திருக்கிறார் உதயன். கவனமாக நுணுகினால் பேசாலையில் மட்டுமல்ல தமிழக கிறிஸ்தவத்திலும் இதற்கு கொஞ்சமும் குறையாத சாதியப் படிநிலைகளைக் காண முடிகிறது. எனவே "லோமியா" வெளிச்சத்தில் ஜாதி படிமங்களை அதனினும் குறிப்பாக கிறிஸ்தவத்திற்குள் , இன்னும் அப்பட்டமாய் வெளியே தெரியாத நிலையில் புதைந்து கிடக்கும் ஜாதிப் படிமங்களை அலசலாம் என்று தோன்றுகிறது. 

'ஜாதியா', 'மதமா', எது மூத்தது? , வீரியமிக்கது ?, அதிகம் கொடியது ஜாதியா? மதமா?. இத்தனைக் கேள்விகளுக்கும் விடை ஒன்றுதான் 'ஜாதி'. இத்தோடு முதலாயும், முற்றாயும்  ஒழிக்கப் படவேண்டியது எது என்ற கேள்விக்கும் 'ஜாதி' என்பதுதான் சரியான பதிலாகும்.

விரும்பிய எவனும் , நினைத்த மாத்திரத்தில் எந்த மதத்திற்கும் மாறிவிடலாம். அதற்கு தடையேதும் இல்லை என்பதோடு வரவேற்பும் அதிகம் உண்டு. போன மதத்தோடு ஏதேனும் ஒரு புள்ளியில் முரண்பட்டால் அதே நொடியில் இன்னொரு மதத்திற்கு மாறிவிடலாம். மீண்டும்  மீண்டும் மாறி மீண்டு மீண்டும் முரண்பட்டால் மீண்டும் தாய் மதத்திற்கும் மீளலாம். அப்போதும் கூட தாய்மதம் மனம் திருந்திய மைந்தனாய் ஏற்று, வாரி அனைத்து ஆனந்தித்து களிகூரும். மாறிய அந்த நொடியிலேயே எந்த மதத்திற்கு மாறினானோ அந்த மதத்தவனாகவே அறியவும் அங்கீகரிக்கவும்  படுகிறான்.

ஆனால் , நெருப்பில் எரிந்தாலும், நீரில் கரைந்தாலும் ஜாதி மாற்றம் என்பது சாத்தியமே படாத ஒன்று. மதம் முகவரியாகவும் , ஜாதி மூச்சாகவும் இங்கு மாறிப் போனது. இந்து வெள்ளாளர் கிறிஸ்தவராக மாறுகிறபோது கிறிஸ்தவ வெள்ளாளர் ஆகிறார். கிறிஸ்தவ வன்னியர் இந்துவாக மாறுகிறபோது இந்து வன்னியராகிறார். மதத்தால் பிரிந்து கிடப்பவர்கள் ஜாதியால் இணைந்து பின்னிக் கிடப்பதை அறிய முடிகிறது. ஆனால் மதம் கடந்த ஜாதிப் பிணைப்பு உயர் சாதிகளிடத்திலே இருக்குமளவுக்கு தலித்துகளிடத்திலே இல்லை என்பதுதான் சோகத்திற்குரிய விஷயம். 

சுருக்கமாக புரிகிறமாதிரி சொல்வதெனில் இந்து வெள்ளாளரும் கிறிஸ்தவ வெள்ளாளரும் தங்களை வெள்ளாளர் என்றே அடையாள படுத்திக் கொள்கின்றனர். பிற உயர் சாதிக்காரர்களுக்குள்ளும் இதே நிலைதான் காணப்படுகின்றது. ஒரு கிறிஸ்தவ வெள்ளாளரோ அல்லது நாடாரோ ஒரு கிறிஸ்தவ தலித்தால் பாதிக்கப் பட்டால் இந்து வெள்ளாளர் அல்லது நாடாரின் சதை தானாகவே ஆடுகிறது. இவர்களது உறவை , அடையாளத்தை தீர்மானிப்பது மதமல்ல, ஜாதி. ஆனால் இந்து தலித்தும் கிறிஸ்தவ தலித்தும் தங்களைத் தலித்துகளாக மட்டும் பொருத்திப் பார்க்க முடியவில்லை. இந்து தலித்தும் கிறிஸ்தவ தலித்தும் தங்களை தலித்துகளாக அடையாளப் கொண்டுவிடக் கூடாது என்கிற நுட்பத்தோடும் கவனத்தோடும் இதனைக் கட்டமைத்திருக்கிறது உயர் சாதியம்.  இதனால்தான் பிரச்சினை என்று வருகிறபோது உயர் சாதி இந்துவும் கிறிஸ்தவனும் மதம் கடந்து ஜாதியால் ஒன்றிணையும்போது தலித்துகள் மட்டும் கிழிந்தே நின்று பாதிப்பை சுமக்கவேண்டிய அவலம் இருக்கிறது. 

அதுமட்டுமல்ல, அனைத்து ஜாதிச் சங்கங்களிலும் இரண்டு மதத்தினரும் இணைந்தே சங்கமிப்பதும் செயல்படுவதும் சாத்தியப் படுகிறது. அனால் இந்து தலித்தும் கிறிஸ்தவ தலித்தும் ஒருங்கிணைந்து சங்கம் கட்டக் கூட இயலாத ஒரு சூழலை மிக நுட்பமாக உருவாக்கிப் பாதுகாத்து வருகிறது உயர் சாதியம். 

இஸ்லாத்திற்குச் செல்லும் போது இந்த அளவிற்கு இல்லை என்றாலும் அதற்குள்ளும் ஜாதிப் படிநிலைகள் இருக்கவே செய்கின்றன. இஸ்லாமிய நாவிதனும் , சலவைத் தொழிலாளியும் அடையும் அவமானங்களையும் காயங்களையும் ஹமீம் முஸ்தபா தனது "ஊர் நேச்சை" கவிதை நூலில் நெகிழ்ச்சியோடு பதிந்திருக்கிறார். 

இந்து மதத்தின் சாதியப் படிநிலைகளை கொஞ்சமும் சேதாரப் படாமல் கிறிஸ்தவ மதத்திலும் காண முடியும். 

எஸ். ஏ. உதயன் ஏற்றிப் பிடிக்கும் "லோமியா" வெளிச்சத்தில் பேசாலை கிராமத்தின் கடற்கரையில் விரவிக் கிடக்கும் சாதியச் சுவடுகளைக் காண முடிகிறது. பேசாலை இலங்கை கிறிஸ்தவக் கடற்கரைக் கிராமம். அதற்கென்று ஒரு கட்டுக்கோப்பான கட்டமைப்பு உண்டு. அந்த ஊரின் தேவாலயமே அந்த ஊரின் சகலத்தையும் தீர்மானிக்கும் மையப் புள்ளி. 'சாமி' என்றழைக்கப் படுகிற பாதிரிதான் சகலத்தையும் தீர்மானிக்கிற சக்தி. 

கட்டளைக்காரர், மூப்பர், சிறாப்பர், மோருதம், பெரிசந்தி, அடப்பனார், காந்தார் என்கிற எழுவரும் ஊதியம் வாங்காத ஊர் நிர்வாகிகள். எந்தப் பிரச்சினைக் குறித்தும் இங்கு எவரிடமும் அறியலாம். ஆனால் யாவரும் கட்டளைக் காரர் சொல்கிற எதற்கும், அது தண்டனையே ஆயினும் யாவரும் கட்டுப் பட வேண்டும். அல்லது பேசாளையைவிட்டுக் கடத்தப் படுவார்கள். 

"சாமியப் பகச்சாலும் சாதியப் பகச்சுக்கக் கூடாது" என்பதைக் கட்டிக் காப்பதே கட்டளைக் காரரின் பிரதானப் பணி. 

சடையன் எனும் பேதுருதான் இந்த நாவலின் மையப் புள்ளி. இவனுக்கும் இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்த நாவிதர் இனத்தைச் சேர்ந்த செல்விக்கும் காதல் மலர்கிறது. கிறிஸ்தவ மீனவருக்கும் கிறிஸ்தவ நாவிதப் பெண்ணுக்கும் இடையே அரும்பிய காதல் படும் அவஸ்தையை மிக நேர்த்தியாக எடுத்துச் சொல்லும் நாவல் "லோமியா". 

நாவிதர்கள் கிறிஸ்தவ வண்ணார்களின் வீட்டில் பச்சத் தண்ணிக் கூடக் குடிக்கக் கூடாது என்பது கட்டளைக்காரர்களின் எத்தனையோ கட்டளைகளில் ஒன்று. ஆக மேல் சாதிக்கும் கீழ் சாதிக்கும் இடையே உள்ள பாகுபாடு போதாதென்று தலித்துகளையும் ஒன்றிணைய விடாமல் செய்யும் சாணக்கியத் தனம் கிறிஸ்தவக் கட்டமைப்பிலும் உள்ளது என்பது விளங்குகிறது. 

இது ஏதோ இலங்கையில் மட்டுமல்ல, தமிழகத்திலும் கிறிஸ்தவ தலித்துகள் நுழைய முடியாத தேவாலயங்கள் நிறைய உண்டு. 

தலித்துகளுக்கும் உயர் சாதிக் காரர்களுக்கும் தனித் தனியே தேவாலயங்கள் உள்ள தமிழக கிராமங்கள் ஏராளம். திருச்சி போன்ற பெருநகரங்களின் மையப் பகுதியிலேகூட தலித்துகள் கல்லறைகளுக்கும் உயர்சாதியினர் கல்லறைகளுக்குமிடையே தடுப்புச் சுவரும் தனித் தனி நுழைவு வாயில்களும் உள்ள கல்லறைத் தோட்டம் இன்றைக்கும் உண்டு. 

தொண்டமாந்துறை  என்றொரு கிராமம் பெரம்பலூர் மாவட்டத்திலே உள்ளது. அழகான தேவாலயம், அழகான தேர். ஆனால் அந்தத் தேரோ குடியானத் தெருவுக்குள் மட்டுமே சுற்றி அடங்கும். சேரிக்கும் தேர் வரவேண்டும் என்று உரிமை கோரினார்கள்.சேரிக்குள் தேர் நுழைந்தால் சாமி தீட்டுப் பட்டுவிடும் என்றார்கள். தங்கள் தெருவுக்குள்ளும் தேரோட்டம் வேண்டும் என்று எண்ணிய தலித்துகள் தாங்களே ஒரு தேரை செய்து மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு. அதை குடியானத் தெருவிற்குள்ளும்  கொண்டுபோக வேண்டும் என்கிற பெருந்தன்மை சேரி கிறிஸ்தவர்களுக்கு இருந்தது. அதைத் தடுத்த குடியானத் தெருக் கிறிஸ்தவர்கள் சொன்னார்கள்  " சேரிச் சாமி எங்க தெருவுக்கு வரக் கூடாது" 

"ஏன்?"

"உங்க சாமி எங்க தெருவுக்குள்ள வந்தா எங்க தெரு தீட்டுப் பட்டுடும், " கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் பதில் வந்தது. 

குடியானத் தெரு மாதா சேரிக்குப் போனால் சாமி தீட்டுப் பட்டுவிடுமாம். சேரி சாமி குடியானத் தெருவிற்குள் வந்தால் தெரு தீட்டுப் பட்டு விடுமாம் . என்றால் சேரி மாதாவும் தலித்துதானா என்ற கேள்வி எழும். 

(இப்படியும் கொள்ளலாம். எந்த சாமி சேரிக்குள்  வந்தாலும் சேரி தீட்டுப் படாது. காரணம் அழுக்காய்  இருந்தாலும் சேரி தூய்மையானது. எந்தத் தெருவிற்குள் போனாலும் சேரிச் சாமி தீட்டுப் படாது.  காரணம் சேரி மக்களைப் போலவே சேரிச் சாமியும் நெருப்பு)

ஆக "லோமியா" வெளிச்சத்தில் பார்க்கும் போது இலங்கை மற்றும் தமிழகத்தில் கிறிஸ்தவ மதத்திற்குள் உள்ள சாதியப் படிநிலைகள் விளங்குகின்றன. 

இந்தப் படிநிலைகள் அப்படியே அச்சு அசல் இந்து மதத்திலும் உள்ளவையே.  "லோமியா" வெளிச்சத்தில் நாம் கற்பதற்கு இரண்டு உள்ளன. 

மதம் வேண்டுமா வேண்டாமா என்பதை இரண்டாவதாகப் பார்க்கலாம் என்பது ஒன்று.

மதத்தினும் கொடிய ஜாதியை வேரறுப்பதே நமது பணி எண் ஒன்று என்பது இரண்டு.            

(இந்தக் கட்டுரை எனது முதல் நூலான  "அந்தக் கேள்விக்கு வயது 98 " என்ற நூலில் இருந்து எடுத்து வைக்கப் பட்டுள்ளது )   


No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...