Sunday, July 10, 2016

உரத்து எதிர்ப்போம்.

“முன்னெல்லாம் காதலிக்கிறேன்னு சொல்லிட்டு வவுத்த ரொப்பிப்புட்டு கட்டிக்கமாட்டேன்னு சொனாதாம்பா கொல செய்வாய்ங்க. இப்பல்லாம் என்னடான்னா கல்யாணமே ஆயிருந்தாலும் பரவாயில்ல வவுத்துல புள்ள இருந்தாலும் பரவாயில்ல புள்ளைய வுட்டுடுங்கறாய்ங்க. இல்லாட்டி கொல்ராய்ங்கப்பா. இவிங்களும் இவிங்க சாதிநாட்டாமையும் நாசமாப் போகட்டும்” என்று பேருந்தில் ஒரு பெரியவர் அறற்றி புலம்பி தன் எதிர்வினையை பதிந்துகொண்டிருந்தார்.

ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்படும் முன்னரே கொலைகள் நடந்து கொண்டுதான் இருந்தன. குவியல் குவியலாய் கொலைகள் செய்யப்பட்டால் அதற்கு போர் என்று பெயர். வரலாறு, இதிகாசம், புராணங்கள், வேதப் புத்தகங்கள், இலக்கியம் என்று எல்லா இடங்களிலும் கொலைகள் குறித்த பதிவுகள் விரவியே கிடக்கின்றன. ஆக கொலைகள் நமக்கு பழக்கமானவைதான். கொலைகளுக்கான காரணமும், செய்யப்படும் விதமும், கொலைக்குப் பிறகான கொலையாளிகளின் திமிர்த்தனமான அளப்பறைகளும் நாம் வாழும் சமூகம் குறித்தான கவலையையும் அச்சத்தையும் நமக்களிக்கின்றன.

முன்பெல்லாம் கொலைகுறித்த திட்டமிடலின்போது ஆள்நடமாட்டம் இல்லாத இடமாகத்தான் தேர்வு செய்தார்கள். காரணம் ஆள்நடமாட்டம் உள்ள பகுதியென்றால் கொலையை யாரேனும் பார்த்துவிடக் கூடும். பார்த்தவர் சாட்சியமளித்தால் தனக்கு தண்டனை கிடைக்கக் கூடும். கொலைகாரனுக்கும் போலீஸ் குறித்தும் சிறை குறித்தும் ஒருவிதமான பயம் இருந்தது. சாட்சிகள் வந்துவிடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பயம் இருந்தது.

கொலை நடந்துவிட்டால் ஒன்று அதற்கு எதிராகத்தான் எல்லோரும் பேசுவார்கள் அல்லது பேச பயந்துகொண்டு பேசாமல் இருப்பார்கள்.

ஆனால் சமீபத்தில் உடுமலைபேட்டையில் நடந்த இளைஞன் சங்கரின் கொலை அது நடத்தப்பட்ட முறையால் அனைத்து கொலைகளிலிருந்தும் வேறுபட்டு நிற்கிறது.

கொலை நடந்த இடம் நட்டநடு சாலை. சுள்ளென கொளுத்தும் வெயில் பொழுது. ஏறத்தாழ நூறுபேர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சற்றேரக்குறைய இருநூறுக் கண்களை சாட்சியாக வைத்து கொலை நடந்திருக்கிறது. கொலையை செய்த யாரும் தங்களது அடையாளங்களை மறைத்துக் கொள்ளவில்லை. சுவைக்க சுவைக்க ஊதி ஊதி தேநீர் குடிப்பது மாதிரி ரசித்து ரசித்து வெட்டிச் சாய்த்திருக்கிறார்கள் பிள்ளையை.

எந்த அசைவும் பார்வையாளிடம் இல்லை. ஒரு சத்தம், ஒரு கல்லெறிதல் என்று எந்தவிதமான எதிர்ப்பும் அந்தக் கொலைக்கு இல்லை. இந்தவிதமான சமூகக் கட்டமைப்புதான் நமக்கு எரிச்சல் கலந்த கவலையைத் தருகிறது. திரண்டுநின்ற அந்தக் கூட்டம் சிலிர்த்திருந்தால் அந்தக் கொலையைத் தடுத்திருக்க முடியும்.

சாதி மனிதர்களைத் தின்றுகொண்டே இருக்கிறது.

மகள் வெட்டப் படுவதை ஒரு காரினுள் இருந்து அவளது தந்தை பார்த்துக் கொண்டிருந்தார் என்ற செய்தி சகலவிதமான நம்பிக்கைகளையும் தகர்த்துப் போட்டு நம்மை உறைய வைக்கிறது.

இதுகுறித்து கேட்கப்பட்டபோது மரியாதைக்குரிய எச்.ராஜா அவர்கள் ‘அவனவனும் அவனவன் ஜாதியில் கல்யாணம் செய்துகொண்டால் ஏன் பிரச்சினை வருகிறது?’ என்று கேட்கிறார்.

சமூக வலைதளங்களில் இளைஞர்கள் அருவாளோடு ’எங்கசாதிப் பொண்ண வேறசாதிக்காரன் கல்யாணாம் செய்தால் வெட்டுவோம்டா’ என்று கூறுகிறார்கள். இந்த இரண்டிற்கும் நமக்கு பெரிதாய் வேறுபாடு தெரியவில்லை.  

நாட்டில் உள்ள பெரிய கட்சிகள் மௌனம் காக்கின்றன.

நாம் நம் மௌனம் கலைத்து உரத்து எதிர்ப்போம்.

நன்றி: காக்கை ஏப்ரல் 2016
  


2 comments:

  1. கொஞ்சம் கொஞ்சமாக மனிதம் செத்துக்கொண்டிருக்கிறது ஐயா.

    ReplyDelete
    Replies
    1. நமக்கு கொஞ்சம் அதிகமாக வேலை இருக்கிறது தோழர்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...