Wednesday, January 6, 2016

65/66, காக்கைச் சிறகினிலே, ஜனவரி 2016

 காக்கையை படித்து முடித்ததும் என்னோடு அலைபேசிவழி உரையாடும் தோழர்களுள் மிக முக்கியமான ஒருவர் எட்டையபுரம் தோழர் சந்திரசேகர். அதிகம் பேசமாட்டார். பேச வேண்டியதை நச்,நச்சென்று பேசிவிட்டு அணைத்து விடுவார். நான்கு நாட்களுக்கு முன்னால் தொடர்பு கொண்டார்.

எட்வின், ஏரி கட்டுரை அருமை

நன்றிங்க தோழர்

பாரீஸ் பையன் குறித்து நிறையபேர் எழுதி படித்தென். ஆனால் கடைசி பக்கத்துல உங்களது பதிவு படித்த்தும் அழுதுட்டேன். கடைசி பக்கம் நல்லா வருது. மாத்திக்காதீங்க

நன்றிங்க தோழர்

ஒன்று கேட்கனும் உங்களை, செர்னோபில் விபத்துக்கு பிறகுதான் இந்தியாவிற்கு ரஷ்யா அணு உலையை வித்தாங்க. எனக்கென்ன சந்தேகம்னா அவங்க அந்த விபத்திற்கு பிறகு ஏதேனும் அணு உலைகளை நிர்மாணித்திருக்கிறார்களா? கொஞ்சம் பாருங்க.”

நன்றிகூட சொல்ல அனுமதிக்காமல் அலைபேசியை அணைத்து விட்டார். அதுதான் தோழர் சந்திரசேகர்.

விசாரித்ததில் செர்னோபில் விபத்திற்குப் பிறகு அவர்கள் அணு உலை எதையும் அவர்கள் நாட்டில் நிர்மாணிக்கவில்லை என்றே தெரிகிறது. நமக்குக் கிடைத்த இந்தத் தகவல் உண்மை எனில் அமெரிக்காவின் அயோக்கியத்தனமான ஆயுத வியாபாரத்தைவிட எந்த வித்த்திலும் குறைந்ததல்ல ரஷ்யாவின் இந்த வியாபார யுக்தி. இது உண்மையாய் இருந்து இது நமக்கே தெரிகிற பட்சத்தில் இது ஆட்சியாளர்களுக்கு தெரியாதிருக்க வாய்ப்பே இல்லை. அப்படித் தெரிந்திருந்தும் அணு உலையைக் கொண்டு வந்த அவர்களை எப்படி சபித்தாலும் தகும். இதுகுறித்து யோசித்துக் கொண்டே முகநூலை மேய்ந்து கொண்டிருந்த போது தோழர் உதயக்குமார் தனது நிலைத் தகவலில் ரஷ்யாவில் லெனின்கிராட் அருகில் உள்ள அணு உலையில் இருந்து கசிவு ஏற்ர்பட்டுள்ளதாக செய்தி வருவதாக எழுதியிருந்தார்.

அந்தப் பகுதியில் உள்ள எல்லா மருந்துக் கடைகளிலும் அயோடின் மாத்திரைகள் விற்றுத் தீர்ந்து விட்டதாம். மக்கள் வங்கிகளில் இருந்து எல்லாப் பணத்தையும் எடுத்துக் கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு புலம் பெயர தயாராக இருப்பதாகவும் தகவல்கள் கசிவதாக எழுதியுள்ளார்.

நமது பிரதமர் இப்போது ரஷ்யாவிதான் இருக்கிறார். அப்படி ஒரு அணுக்கசிவே இருப்பினும் ஒரு பாதுகாப்பான இடத்தில் அமர்ந்து அணு உலை ஒப்பந்தத்தில் நமது பிரதமர் கையெழுத்திடுவார். கூடங்குளத்தில் ஐந்தாவதும் ஆறாவதும்  வந்துதான் தீரும்.

ஆனால், அங்கு நிகழ்ந்தது நீராவிக் கசிவுதானென்றும், அணுக்கசிவு இல்லை என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் ரஷ்யா சொல்லியுள்ளதாகவும் தோழர் உதயக்குமார் கூறியுள்ளார். அவர்கள் முதலில் அப்படித்தான் சொல்வார்களென்பது தெரியும்தான்.

என்றாலும் அது வதந்தியாகவே இருக்கட்டும் உண்மையாக இருந்துவிடக் கூடாது என்றுதான் மனது கிடந்து தவிக்கிறது. என்னதான் உலைகளை நம் தலையில் கட்டிய நாடு என்றாலும் அங்கிருப்பது நம் மக்கள் அல்லவா?

*************************************************************************************************************************** 

கல்புர்கி, தபோல்கர், கோவிந்த் பன்சாரே ஆகிய மூவரும் MM 7.65 ரக துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது கண்டறியப் பட்டுள்ளதாக CBI அறிவித்துள்ளது.
துப்பாக்கி மட்டுமல்ல அவர்களை கொன்றழித்த சித்தாந்தமும் கூடாரமும் ஒன்றுதான்.

********************************************************************************************************  

சென்னை வந்து போனதும் மத்திய நிதியமைச்சர் மாண்பமை அருண் ஜேட்லி அவர்கள் தில்லி யூனியன் பிரதேச முதல்வர் மாண்பமை கேஜ்ரிவால் அவர்கள்மீது மான நஷ்ட வழக்குப் போட்டிருக்கிறார். சரி, சென்னை வந்து போனதற்கு இதுகூட செய்யவில்லை என்றால் எப்படி? என்று நினைத்தோம்.

ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய கீர்த்தி ஆசாத் தான்தானே இந்த ஊழலை முதன் முதலில் அம்பலப் படுத்தியதாகவும், தன்மீது வழக்குப் போடாமல் கெஜ்ரிவால் மீது போட்டிருப்பது தமக்கு பெருத்த ஆச்சரியமாக இருக்கிறது என்றும் கூறினார்.

என்ன நடந்ததோ தெரியவில்லை அமித்ஷா கீர்த்தி ஆசாத்தை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கி விட்டார்.

அந்த ஊழலில் ஒரு பகுதி மிகவும் சுவாரஷ்யமானது. ஒன்றும் இல்லை, மடிக்கணினியை நாளொன்றுக்கு 16,000 ரூபாய் வாடகைக்கும், பிரிண்டரை நாளொன்றுக்கு 3,000 ருபாய் வாடகைக்கும் எடுத்துள்ளதாக ஜேட்லி அவர்கள் கணக்குக் காட்டியிருப்பதாகத் தெரிகிறது. 25,000 விலையுள்ள மடிக்கணினியை 16,000 ரூபாய் நாள் வாடகைக்கும், 5,000 ரூபாய் மதிப்புள்ள பிரிண்டரை 3,000 ரூபாய் நாள் வாடகைக்கும் எடுத்திருந்தால் எடுத்தவனை லூசு என்போம். செய்தவர் ஜேட்லி. என்ன செய்வது?

இதை ஜேட்லி அவர்கள் எதிர்கொண்ட விதம்தான் இதைவிட பெரிய சுவாரஷ்யமானது. ’நானென்ன காங்கிரசைவிடவா செலவு செய்துவிட்டேன்என்கிறார்.
*********************************************************************************************  

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிறிஸ்துமஸ் குடில்களும் வண்ண வண்ண அலங்கார விளக்குகளும் ஏகத்துக்கும் நிறைந்து கிடக்கும் காட்சிகளை தனது முகநூல் பக்கத்தில் தோழர் வெற்றி வேந்தன் கண்டனத்தோடு பதிந்திருக்கிறார். அலுவலகத்தை ஆலயமாக்கிவிட வேண்டாம் என்றும் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த மாவட்ட ஆட்சித்தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோருகிறோம்

****************************************************************************************************** 

அது படு வக்கிரமான பாடல், பெண்களைக் கேவலப்படுத்தும் பாடல் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை என்பதால் அதன்மீதான நாகரீகத்திற்குட்பட்டு வெளிப்படும் அனைத்து எதிர்வினைகளோடும் என்னுடையதையும் இணைத்துக் கொள்கிறேன்.
ஆனால் அதில் பயன்படுத்தப் பட்டுள்ள ஒரு வார்த்தைதான் இந்த வக்கிரத்திற்கான காரணமென்ற கருத்தோடு கொஞ்சம் பேச வேண்டி இருக்கிறது.
முதலில் அது கெட்ட வார்த்தைதானா நண்பர்களே. உயிர் விளைச்சலுக்கான ஒரு உறுப்பின் பெயரை கெட்ட வார்த்தையாக்கியது யார் தோழா?
அந்த சொல்லை மிக ஈனத்தனமாக பெண்களை இழிவுபடுத்தும் வக்கிர நோக்கோடு பயன்படுத்தி இருப்பதை கண்டிப்போம், நியாயம் கேட்போம்
அதே சமயம் உன்னதமாய் கொள்ளப்படும் வாசனை வார்த்தைகளாலும் பெண்கள் கொச்சைப் படுத்தப்பட்டு கொண்டாடப்படும் பாடல்களும் உள்ளன என்பதையும் அருள்கூர்ந்து கணக்கில் கொள்வோம்
"உன் சமையலறையில் நான் உப்பா சர்க்கரையா?"
என ஆண் கேட்க பெண் பதிலளிக்கிறாள்
"நீ படிக்கும் அறையில் நான் கண்களா புத்தகமா ?"
போன்ற பாடல்களையும் நாம் இயல்பாய் ரசித்து செரித்துவிடக் கூடாது என்பதே என் கோரிக்கை

*********************************************************************************************************************************  

இந்த மழையின்போது வெளிப்பட்ட மனிதாபிமானம் மிக அளப்பரியது. அதில் என் மனதைத் தஓட்டவற்றுள் இதுவும் ஒன்று. இந்தப் பேரிடர் காலத்தில் சென்னையிலிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று தங்கள் ஊருக்கு செல்வபவர்களும், நிவாரணாப் பொருட்களோடு சென்னை மற்றும் கடலூர் செல்வபவர்களும் பட்டினியோடு செல்வதற்கே வாய்ப்புகள் அதிகமிருந்தது.

பெரம்பலூரிலிருந்து வீரமணி மற்றும் அவரது தோழர்கள் இணைந்து ஒரு காரியத்தை செய்தார்கள். பெரம்பலூர் வழியாக செல்பவர்கள் பெரம்பலூர் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னால் தங்களிடம் விவரம் சொன்னால் அவர்கள் பெரம்பலூர் வரும்போது அவர்களுக்கு சாப்பாடு தயாராக இருக்கும் என்று.

அவரது எண்ணோடு முகநூலில் இதைப் பதிவிட்டிருந்தார். நானும்கூட பகிர்ந்திருந்தேன்.

பெரம்பலூரைக் கடந்து யாரும் பட்டினியோடு செல்லக் கூடாது என்று செயல்பட்ட அந்தப் பிளைகளுக்கு என் அன்பும் முத்தமும்.

*******************************************************************************************************  
என்னதான் கவிதைமாதிரியெல்லாம் எதுவும் எழுதிவிடக் கூடாது என்று தீர்மானித்தாலும் சில பிரச்சினைகள் நம்மை தவறிழைக்க வைக்கின்றன. அர்ச்சகர் பிரச்சினையில் நீதிமன்றத் தீர்ப்பு வந்ததும் சும்மா இருக்க முடியாமல் எழுதியது,

முழுவதும் வெந்து விடாமலும் 
இன்னமும் வெந்துகொண்டும்தானிருந்தது 
"
என்ன சொல்றாங்க" 
எனக் கேட்ட நந்தனின் உடல்
****************************************************** 










2 comments:

  1. பகிர்வுக்கு நன்றி தோழர்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க தோழர்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...