Saturday, January 9, 2016

8 தாய்த் தமிழ்ப் பள்ளி

 ஒரு ஒதுக்குப் புறத்தில் இருக்கும் ஒரு தமிழ்வழித் துவக்கப் பள்ளியில் தன் குழந்தை படிக்க வேண்டும் என்பதற்காக கோயம்புத்தூர் போன்ற பெருநகரிலிருந்து திருப்பூரின் ஒரு முடுக்குப் பகுதிக்கு குடும்பத்தையே யாரேனும் மாற்றிக் கொண்டு வருவார்களா?

வந்திருக்கிறார்கள்.

பத்தொன்பது ஆண்டுகளாக பணியாற்றியபின் ஐந்தாயிரம்தான் ஊதியம் கிடைக்கிறது. இத்தனை ஆண்டுகளாய் ஊதிய உயர்வு பற்றிய எண்ணமே ஆசிரியர்களுக்கு எழாதிருக்குமா? இத்தனைக் குறைவான ஊதியத்திற்கும் யாரும் சொல்லாமல், நிர்ப்பந்திக்காமல் தன்விருப்பத்தில் வார இறுதி நாட்களிலும் பள்ளிக்கு வந்து அவர்கள் உழைப்பார்களா? இந்தப் பள்ளியில் பணியாற்றுவதற்காக கிடைத்த அரசுப் பள்ளி பணியையும் யாரேனும் நிராகரிப்பார்களா?

1)   எழவேயில்லை
2)   உழைக்கிறார்கள்
3)   நிராகரித்திருக்கிறார்கள்

சகல வசதிகளோடும் ஒரு பள்ளியை நடத்திக் கொண்டிருக்கும் தாளாளர் ஒருவர் தன்னிடம் பணிபுரியும் ஆசிரியர்களுக்குப் போலவே தனக்கும் ஐந்தாயிரம் ரூபாயை மட்டும் மாத ஊதியமாக எடுத்துக் கொண்டு அந்த ஊதியத்திற்குள்ளேயே பதினைந்துக்கு பதினைந்து அளவு கொண்ட இரண்டு அறைகளில் தனது பிள்ளைகளோடு குடும்பம் நடத்துவார் என்பது கல்வி பெருவணிகமாகிப் போன இந்தக் காலத்தில் சாத்தியமா?

அந்த ஊதியமும் இல்லாமல் அந்தத் தாளாளரின் மனைவி அந்தப் பள்ளியைக் கூட்டிப் பெருக்குவது, கழிவறைகளை சுத்தம் செய்வது, குழந்தைகளுக்கு ஆயாவாக பணியாற்றுவது என்பதெல்லாம் நடக்கக்கூடிய காரியமா?

1)   சாத்தியம்
2)   நடக்கக் கூடிய காரியம்

இதற்குள்ளேயே நமக்கு மயக்கம் வந்துவிடும். ஆனால் இத்தனை அதிசயங்களையும் நடைமுறையில் சாத்தியமாக்கியிருக்கிறது திருப்பூர் தாய்த் தமிழ்ப் பள்ளி.

இந்தப் பள்ளியின் ஆண்டுவிழாவில் உரையாற்ற அழைக்கப் பட்டபோது அந்தப் பள்ளியின் இத்தகைய விழுமியங்களில் ஒரு சின்னப் பகுதியும் தெரியாதவனாகத்தான் இருந்தேன்.

பள்ளி ஆண்டு விழாக்களில் உரையாற்றுவதென்பது அப்படி ஒன்றும் மனதுக்கு உகந்த காரியமெல்லாம் இல்லை. உகந்த காரியமா இல்லையா என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும், அது அவ்வளவு கடினமான காரியம். ஆண்டு விழாக்கள் என்றாலே அங்கு கூடியிருக்கும் கூட்டமே தங்களது குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்காகவும், அவர்கள் பரிசு பெறும் கண்கொள்ளாக் காட்சியைப் பார்ப்பதற்காகவும்தான். அதிலும் துவக்கப் பள்ளி என்றால் கேட்கவே வேண்டாம். அந்தக் குட்டிக் குழந்தைகளிடம் எதைப் பேசுவது?

ஆனாலும் அந்தப் பள்ளிக் குழந்தைகளின் பன்முக ஆற்றல் குறித்து முகநூலின் வழி பரிச்சையம் இருந்ததால் அழைப்பை ஏற்று பெரியவள் கிருத்திகாவோடு கிளம்பினேன். கடுமையான வெயிலும் புழுதிக் காற்றும் எங்களை ஒருவழி செய்திருக்கவே குளித்துவிட்டு போனால் தேவலாம் என்று தோன்றியது. எங்களை அழைத்துக் கொண்டுபோக ஆம்னி காரெடுத்து வந்திருந்த தம்பியிடம் இதை சொல்லி ஏதேனும் விடுதி அறை நோக்கி செலுத்துமாறு கூறியபோது அதை மறுத்த அந்தத் தம்பி தங்களது வீட்டில் குளித்துவிட்டு செல்லலாம் என்று கூறினார். அவரோடான உரையாடல் அவர் அந்தப் பள்ளியின் தாளாளர் திரு தங்கராஜ் அவர்களின் புதல்வர் என்று தெரிந்தது.

ஒரு தனியார் பள்ளியின் தாளாளர் வீடு எப்படியும் பிருமாண்டமாகத்தான் இருக்கும் என்ற என் எண்ணம் அப்படித்தான் இருக்கும் என்ற பொதுப் புத்தியிலிருந்து வந்ததல்ல. பொது நடைமுறை எனக்கு கற்பித்திருந்த பால பாடம். ஒருமுறை கிஷோரின் பள்ளித் தாளாளர் வீட்டைக் கடந்து போனபோது அவரது வீட்டைக் காட்டியவாறேஇங்க பாருப்பா பள்ளிக்கூடத்த கட்டுய்யான்னா வீட்ட எவ்வளவு பெருசா கட்டுறார்னுஎன்று சொன்னதெல்லாம் நினைவுக்கு வரவே அதுபோன்றதொரு பிருமாண்டத்திற்குள்தான்  நுழையப் போகிறோம் என்ற என் நினைப்பை சுக்கல் சுக்கலாக நொறுக்கிப் போட்டது எதார்த்தம்.

உண்மையை சொன்னால் அது ஒரு வகுப்பறையின் பாதி அளவிற்கும் கொஞ்சம் குறைச்சலான அறை. அதே அளவுள்ள இன்னொரு அறை. அவ்வளவுதான் அவர்களது வீடு. இரண்டு மாடிக் கட்டடங்களைக் கொண்ட ஒரு பள்ளியின் தாளாளரது வீடே இவ்வளவுதான் என்பதில் நானடைந்த அதிர்ச்சியைப் ஆகப் பெரிதென நினைத்திருந்த எனக்கு இதைவிடவும் பேரதிச்சிகள் ஓராயிரம் அங்கிருக்கிறது என்ற உண்மை அப்போது தெரிந்திருக்க வில்லை.

இரண்டு ஸ்டூல்களைப் போட்டு அமர வைத்தார்கள். சற்று நேரத்திற்கெல்லாம் உண்மையைவிடவும் ஏகத்துக்கும்  இளைத்துப் போன ஒரு அம்மா வணங்கிக் கொண்டே வந்தார்கள். இரண்டு தட்டுகளை எடுத்தவர்கள் சாப்பிடுமாறு எங்களை வற்புறுத்த ஆரம்பித்தார்கள். அன்போடு மறுத்து விட்டோம். அந்தப் பள்ளியின் ஆயா என்று தோன்றியது. ஆண்டு விழாவை ஒட்டி தாளாளரின்வீட்டு வேலைகளைச் செய்வதற்காக வந்திருக்கிறார்போல என்ற சந்தேகத்தோடு நானவரைப் பார்த்ததை உணர்ந்து கொண்டிருக்க வேண்டும் அவர். ‘அய்யாவோட மனைவிங்க அய்யா நான்என்று நல்ல தமிழில் கூறினார்.

நான் கேட்கப் போகும் இந்தக் கேள்விக்கான அவர்களது பதில் என்னை அழவைக்கப் போகிறது என்பதை அறிந்து வைத்திருக்குமளவிற்கு ஞானமெல்லாம் எனக்கில்லை. கேட்டேன், ‘என்னம்மா செய்றீங்க?’

காலைல நாலு மணிக்கெல்லாம் எழுந்து பள்ளிக்கூடத்துக்கு போயிடுவேங்க அய்யா. போயி வகுப்புங்கள எல்லாம் கூட்டிப் பெறுக்கிட்டு, கழிவறைங்கள எல்லாம் சுத்தம் செஞ்சுட்டு, தண்ணியப் புடிச்சு வேனெல்லாம் கழுவிட்டு வீட்டுக்கு வருவேங்க அய்யா. அப்புறம் சமைச்சு வச்சுட்டு வேனுல போயி புள்ளைங்கள அழச்சுட்டு வருவேன். அப்புறம் பள்ளிக்கூடத்துல ஏதாவு குழந்தைங்க ஆயி இருந்துடுச்சுன்னா கழுவி சுத்தம் செய்யனும், அப்புறம் அய்யா மத்த டீச்சருங்க எதனாச்சும் வேலை சொன்னாங்கன்னா அத செய்வேங்க அய்யா. அப்புறமா வேனுல போயி குழந்தைகள வீட்டுல விட்டுட்டு வந்தா வீட்டுக்கு வந்து சமைக்கத்தாங்க அய்யா நேரம் சரியா இருக்கும்

இவ்வளவு வேலையையும் ஒரே ஆள் செய்கிறாரா? அதுவும் அந்தப் பள்ளியின் தாளாளரின் மனைவி, சரியாகச் சொல்லப் போனால் அந்தப் பள்ளியின் உரிமையாளரா கழிவறைகளை சுத்தம் செய்வது உள்ளிட்டு இத்தனை வேலைகளை செய்கிறார்.

எங்களோடு ஆண்டு விழாவிற்கு வந்தவுடன் தாள்களைப் பொறுக்குவது, நாற்காலிகளைப் போடுவது போன்ற வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

என் உரையை இப்படித்தான் ஆரம்பித்தேன்,

நான் எப்பேர்பட்ட கொம்பனின் காலிலும் எதன் பொருட்டும் விழுபவனில்லை. ஆனால் வாழ்நாளில் ஒரே ஒரு மனிதனின் காலில் விழ வேண்டும் என்றால் அது இந்தப் பள்ளியின் தாளாளரின் இணையர் சகோதரி விஜயலட்சுமி அவர்களின் காலில்தான் விழுவேன்என்று அழுதுகொண்டே சொன்னபோது மேடையில் இருந்தவர்களும் எதிரே அமர்ந்திருந்தவர்களும் எழுந்து நின்று கலங்கியவாறே கை தட்டினார்கள். பார்க்கிறேன் ஒரு மூலையிலிருந்து அந்தத் தாய் கண்கள் கலங்கியவராய் கைகூப்பி நன்றி சொல்லிக் கொண்டிருந்தார்.

அவர்களது வீட்டுக் குளியலறையில் குளிக்கப் போன போது ஐந்து ரூபாய்க்கான சேம்பிள் சோப்பு ஒன்று மட்டுமே மிகவும் கறைந்த நிலையில் இருந்தது. வெளியே வந்தபோது நானெதுவும் கேட்காமலே அவரது மகன் சொன்னார், ‘மாசக் கடைசி இல்லீங்களா அய்யா. அதான் சோப்பு வாங்க முடியல

இவ்வளவையும் பார்க்கும்போது ஏதோ பிள்ளைகள் அதிகம் படிக்காத ஒரு சுமாரான பள்ளி என்றெல்லாம் கொண்டுவிடக் கூடாது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை ஏறத்தாழ 340 குழந்தைகள் படிக்கிறார்கள். இந்த ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை இன்னும் சற்று அதிகரித்திருக்கக் கூடும். பொதுப் பள்ளி ஊழியனாய் முப்பது ஆண்டுகள் பணியாற்றும் என்னால் இதெவ்வளவு பெரிய எண்ணிக்கை என்பதை உணர முடிகிறது.

இலவசக் கல்வியும் இல்லை. ஒவ்வொரு குழந்தைக்கும் 3500 ரூபாய் பக்கம் கட்டணாம் வசூலிக்கிறார்கள். கட்டணம் வாங்கிக் கொண்டுதானே கல்வியைத் தருகிறார்கள். இவ்வளவு நீட்டி இழுத்து இதில் எழுதுவதற்கு என்ன இருக்கிறது என்றுகூட தோன்றக் கூடும். இதில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன,

1)   இந்தக் கல்விக் கட்டணம் என்பது பராமரிப்புச் செலவு, ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கான ஊதியம், மின்சாரக் கட்டணம், போன்றவற்றிற்கே போதாத அளவில் பொதுமக்களின் உதவியோடுதான் கொண்டு செல்கிறார்கள்.
2)   இந்தப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளைல் பலர் இந்தக் கட்டணத்தைக் கட்ட இயலாதவர்கள். இந்தக் குழந்தைகளின் கல்விக் கட்டணத்தை பொது மக்களே செலுத்தி விடுகிறார்கள்.

ஆச்சரியமாக இருக்கிறது, இப்படியெல்லாம்கூட சாத்தியமா. இதைக் கேட்டபோது தோழர் சீமா செந்தில் இந்தப் பள்ளியைப் பற்றியும் அதன் தாளாளர் திரு தங்கராசு, மற்றும் அவரது குடும்பத்தினரின் தியாகம் குறித்து பகிர்ந்து கொண்டவற்றை ஒன்றன்கீழ் ஒன்றாக பட்டியலிட்டாலே ஒரு நான்கு பாரம் தாண்டும்.

வீட்டிலிருந்து பள்ளிக்குப் போனால் வீட்டிலிருந்து ஆயிரம் விழுக்காடு வேறுபட்டு வளமையோடு இருக்கிறது தாய்த் தமிழ்ப் பள்ளி. குடும்பத்தைப் பட்டினி போட்டு பள்ளியை கொழுக்க வைத்திருக்கிறார் மனிதர்.

முப்பது ஆண்டுகளாக மேடைகளில் உரையாற்றிக் கொண்டிருக்கிற உரையாளன் என்கிற வகையில் நான் பங்கேற்ற ஆகச் சிறந்த பத்து மேடைகளில் அதுவும் ஒன்று.

ஏறத்தாழ 500 நாற்காலிகள் போடப் பட்டிருந்தன. அவை கடந்து  ஒரு எழுநூறு பேர் சுற்றிலும் நின்று கொண்டிருந்தார்கள்.

தேர்ந்த நுணுக்கத்தோடு அந்தப் பிஞ்சுக் குழந்தைகள் ஆடிய தப்பாட்டம் இருக்கிறதே, அப்பப்பா எழுதி மாளாது. தப்படிப்பது என்பது அப்படி ஒன்றும் எளிதான விஷயம் அல்ல. உடல் வலிமையும் பயிற்சியும் பேரதிகமாய் தேவைப் படும் விஷயம். அந்தச் சின்னப் பிஞ்சுகள் அதை அவ்வளவு நேர்த்தியாக செய்தது என்னை விளிம்பு தாண்டிய ஒரு ஆச்சரிய நிலைக்கு கொண்டு சென்றது.

ஆக்காட்டிபாடலை தோழர் கே..குணசேகரனும் அண்ணன் முகில் அவர்களும் பாடக் கேட்டு அழுதிருக்கிறேன். அந்தப் பாடலுக்கான நடனத்தை தாய்த் தமிழ்ப் பள்ளிக் குழந்தைகள் நிகழ்த்தியபோது மெய் சிலிர்த்தது. KAG யும் முகிலும் தந்திருக்காத உச்சம் அது என்று நானெழுதுவதை அவர்கள் சரியாய் புரிந்து கொள்வார்கள் என்பது எனக்குத் தெரியும்.

அய்யா சரியாய் இருபது நிமிடங்கள் மட்டும் பேசுங்கள் என்றென்னை அழைத்தபோது தூறத் தொடங்கியிருந்தது. ஏன் தாய்மொழிவழிக் கல்வி அவசியம் என்று கொஞ்சம் இறுக்கத்தோடு நான் பேசியதையும் அமைதியாகக் கேட்டு கொண்டாடியது திரள். தேர்ந்த தமிழ் ஆர்வர்களிடம் பேசிய திருப்தி கிடைத்தது.

பேசி முடித்ததும் அந்தப் பள்ளியின் காவலருக்கு என்னை குத்து விளக்கு கொடுத்து கௌரவிக்கச் செய்தார்கள். அவருக்கு வயது எண்பது. சில மாதங்களுக்கு முன்னால் வயதானதால் வேலை பார்க்க இயலவில்லை என்று சொல்லிவிட்டு ஓய்வு பெற்று விட்டாராம். தன்னால் பள்ளியை விட்டுவிட்டு இருக்க முடியவில்லை என்றும் சாகும் வரைக்கும் பள்ளியிலேயே இருந்து விடுவதாகவும் முடிந்ததும் காரியத்தை செய்து விடுங்கள் என்றும் சொன்னவாறு ஒரே வாரத்தில் பள்ளிக்கு திரும்பி விட்டாராம்.

பேசியவர்களில் ஒரு சகோதரி ஒரு லட்சம் ரூபாய்க்கு பெஞ்சு டெஸ்குகளை வாங்கித் தருவதாக உறுதி சொன்னார். இது போல நிறையபேர் நிறைய செய்வதாய் வாக்களித்தார்கள்.

அடித்தல் திருத்தலின்றி பேசியவர்களில் பெரும்பான்மையோர் சொன்னது இதுதான், ‘பள்ளியிலிருந்து ஒரு துறும்பையும் அவர் வீட்டிற்கு எடுத்து செல்வதில்லை.’
கூட்டத்தோடு கூட்டமாய் தோழர் சீமாவோடு நின்று கொண்டிருந்த போதுதான் இந்தப் பள்ளியில் தன் பிள்ளை படிக்க வேண்டும் என்பதற்காக குடும்பத்தை கோயம்புத்தூரிலிருந்து திருப்பூருக்கு கொண்டு வந்துவிட்டு திருப்பூரிலிருந்து தினமும் கோயம்புத்தூருக்கு வேலைக்குப் போய் வருவதாகவும் சொன்னார்.

ஒரு தமிழ்ப் பள்ளிக்கு இவ்வளவு ஈர்ப்பா என்றபோது தான் மட்டுமல்ல இந்தப் பள்ளிக்காக திருப்பூருக்கு புலம் பெயர்ந்த குடும்பங்கள் ஏராளம் என்றார்.

பள்ளிக்காகக் குடும்பங்கள் புலம் பெயர்கின்றன. அதிகப் படியான ஊதியம் கிடைத்தபோதும் அரசுப் பணியே கிடைத்த போதும் அவற்றை நிராகரித்துவிட்டு இதே பள்ளியில் ஆசிரியைகள் பணியாற்றுகின்றனர். அப்படி என்னதான் இருக்கிறது இந்தப் பள்ளியில்?

குழந்தைகள் பட்டம் செய்கிறார்கள், பறக்க விடுகிறார்கள். ஆசிரிய அக்காக்கள் உதவுகிறார்கள். பனை ஓலையில் காற்றாடி செய்கிறார்கள்,, காற்றாடிகள் சுற்றுகின்றனவா என்று மைதானத்தில் வட்டமடிக்கிறார்கள். இதற்கும் ஆசிரிய அக்காக்கள் உதவுகிறார்கள். படம் வரைகிறார்கள், பொம்மை செய்கிறார்கள், தொப்பி செய்கிறார்கள் ஆடுகிறார்கள், பாடுகிறார்கள். அத்தனையையும் தாளாளர் படம் பிடித்து முகநூலில் வைத்து பாருங்கள் என் குழந்தைகளின் திறனை என்று வியந்து கொண்டாடுகிறார்.

எனில், படிப்பு அவ்வளவுதானா? என்றால் இவற்றில் பெறுகிற தேர்ச்சியைக் காட்டிலும் கல்வியில் இவர்கள் தேர்ச்சியானது யாரும் பொறாமைப் படும்படியாகவே உள்ளது.

விருதுகளையும் பரிசுகளையும் அந்தக் குழந்தைகள் அள்ளிக் குவிக்கிறார்கள்.

மொழி உணர்வும் நாட்டுப் பற்றும் மிக்கவர்களாகவும் சுய ஒழுக்கத்தில் மிளிர்பவர்களாகவும் வார்த்தெடுக்கப் படுகிறார்கள்.

படித்த குழந்தைகள் நல்ல நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் பள்ளியை மறக்காமல் இருக்கிறார்கள்

ஆங்கில வழிக் கல்வியிலிருந்து மக்களை தாய்மொழி வழிக் கல்விக்குத் திருப்புவது கடினம் என்கிறார்கள். இல்லை, சரியாய் முயன்று அர்ப்பணிப்போடு உழைத்தால் திருப்பலாம் என்பதை நிரூபித்தபடியிருக்கிறது திருப்பூர் தாய்த் தமிழ்ப் பள்ளி.



    









18 comments:

  1. திரு தங்கராசு குடும்பத்தினர் இருக்கும் திசை நோக்கி வணங்குகிறேன்

    ReplyDelete
  2. பதிவுலகில் என்னை அழவைத்த முதல் மனிதர் நீங்கள்,,,
    தமிழும் தமிழ்வழிக் கல்வியும்
    திசையெங்கும் பரவும்,,,

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தோழர்.
      திசையெங்கும் பரவ வேண்டும்

      Delete
  3. இந்தக் காலத்தில் இப்படி ஒரு மனிதரா? நிஜமாக எனக்கும் கண்கள் கலங்கி விட்டன. பகிர்வுக்கு நன்றி. (அடுத்த வார) பாஸிட்டிவ் பகுதிக்கு உங்கள் அனுமதியோடு பகிர எடுத்துக் கொள்கிறேன். அந்தப் பள்ளியின் புகைப்படமோ, அந்த எளிய தெய்வங்களின் புகைப்படங்களோ இல்லாதது ஒரு குறை.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க தோழர்

      Delete
    2. தோழர் ஸ்ரீராம், உங்களது தொடர்பெண் கொடுங்கள்.

      Delete
  4. கோழிப்பண்ணை பள்ளிகளை விட
    இந்த மாதிரி கல்விக்கூடங்களை ஊக்குவிக்கலாம்..

    விழிப்புணர்வு தரும் ஆக்கப்பூர்வமான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க தோழர்.

      Delete
  5. நான் போட்ட பின்னூட்டம் எங்கே?!!

    ReplyDelete
    Replies
    1. வைத்திருக்கிறேன் பாருங்கள் தோழர்

      Delete
    2. தோழர் ஸ்ரீராம், உங்களது தொடர்பெண் கொடுங்கள். உங்களது எங்கள் biog ஐ என் வலை முகப்பில் வைத்திருக்கிறேன் பாருங்கள்

      Delete
    3. நன்றி ஸார். முதலில் பார்த்தபோது என் பின்னூட்டம் காணப்படவில்லையே என்று பார்த்தேன். எனது மின்னஞ்சல் முகவரி :

      sri.esi89@gmail.com

      Delete
  6. "உண்மையைவிடவும் ஏகத்துக்கும் இளைத்துப் போன ஒரு அம்மா" ---- இதுதான் எட்வின்!

    ReplyDelete
    Replies
    1. இப்படி பாராட்ட யாருக்கு மனசு வரும்? இதுதான் சித்தன்

      Delete
  7. உண்மையில் மனதை என்னவோ செய்கிறது இந்த பதிவை படித்தவுடன் இப்படி ஒரு தாளாளர்,பள்ளி தமிழ்நாட்டில் இருப்பது ஆச்சரியம் தான் .அவர்களின் படங்களை இடாதது வருத்தம் தருகிறது .அவர்களுக்கு இறைவன் நல்ல அருளையும் செல்வத்தையும் ஆரோக்கியத்தையும் கொடுக்கவேண்டும் என்று வேண்டுகிறேன் . நேற்றுதான் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அ,ஆ தெரியவில்லை எனும் செய்தி பார்த்து வெதும்பி நின்ற எனக்கு உங்களின் இந்த செய்தி மன நிறைவை தருகிறது .
    நன்றிகள் எட்வின்

    ReplyDelete
  8. கண்கள் கலங்கித்தான் படிக்க வேண்டி இருந்தது.ஒவ்வொரு வரிகளையும் படிக்கும்போதும் நம் மீதான குற்ற உணர்வும் ஏற்படுவதை தவிர்க்க இயலவில்லை. மிக சிறந்த கல்வியாளரை அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி ஐயா!

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...