” அண்ணே கொஞ்சம் ஓய்வா இருக்கீங்களா? உங்களோடு ஒரு விஷயம் பேசனும்” என்று சொன்னவர் மிகுந்த தயக்கத்தோடு ‘எப்பங்கண்ணே வீட்டுக்கு வருவீங்க” என்றார்.
பள்ளியில் கொஞ்சம் ஓய்வாகத்தான் இருந்தேன். மிகவும் உரிமையோடு எதையும் என்னிடம் கேட்பவர். ‘அண்ணே வர ஞாயிறு ஒரு கூட்டம், எதுவும் சொல்லாமல் வந்துடுங்க’ என்று கேட்பவர். முடியாது போனால் அடுத்த தேதியை சொல்லி கேட்பார். அதுவும் இயலாதநிலை என்றால் ‘எனக்குத் தெரியாது, அவசியம் வறீங்க’ என்று குழந்தை போல சொல்லிவிட்டு கிளம்பி விடுவார்.
அப்படிப் பட்டவர் ஏன் இப்படி குரல் நடுங்கி பேச வேண்டும்? கொஞ்சம் பயம் தொற்றிக் கொள்ளவே ’என்ன ஆச்சு தாஹீர், ஏதும் பிரச்சினையா? சொல்லுங்கள்’ என்கிறேன்.
“ இல்லண்ணே, செல்வகுமார் நூல் வெளியீடு, நீங்கள்தான் சிறப்புரை. அதற்குத்தான்”
இப்போது புரிந்தது. சில மாதங்களுக்கு முன்னால் பெரம்பலூரில் நான் கட்டமைத்த ஒரு அமைப்பின் சார்பாக என்னால் அந்த அமைப்பிற்கு கொண்டு வரப் பட்ட தோழர்கள் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்து அதில் நான் கலந்து கொள்ளாமல் அவமானப் படவேண்டும் என்று என்னவெல்லாம் செய்ய இயலுமோ அத்தனையும் செய்திருந்தார்கள். அவர்களோடே இருந்து அந்த நிகழ்விற்காக பணியாற்றியவர்களுள் தோழர் செல்வகுமார் அவர்களும் ஒருவர்.
அதுமட்டும் அல்ல அதன் பிறகு அந்தத் தோழர்களில் ஒருவரே ‘எல்லா ஏற்பாடுகளையும் செல்வகுமார்தான் தோழர் செய்தார்’ என்று என்னிடம் ஒரு பெரும் பொய்யை சொல்லியிருந்ததும் செல்வகுமாருக்கும் தெரியும், தாஹீருக்கும் தெரியும்.
அதுதான் அந்தத் தயக்கத்திற்கு காரணம்.
”அடடே, நூல் வந்தாச்சா . அவசியம் வரேன். தேதி சொல்லுங்க “ என்கிறேன்
“வருகிற 24”
நொந்தே போனேன். காரணம் 24 ஆம் தேதியன்று மதுரையில் ஒரு கூட்டத்திற்கு தோழர் மார்க்ஸ் பாண்டியனுக்கு தேதி கொடுத்திருந்தேன். விவரத்தை சொன்னாலும் விடுவதாயில்லை தாஹீர்.
”எப்ப வீடு வருவீங்க?”
“இரவு வகுப்பு முடிந்து வர 11 ஆகும்”
“வரேன்”
இரவு வந்தார்கள். பாண்டியனோடு பேசினேன். 24 மாலைதான் என்றார். இவர்களுக்கு மகிழ்ச்சி. காலையில் வைத்துக் கொள்வதாக சொன்னார்கள்.
நெசத்துக்குமே நல்ல நூல். நேட்டிவிட்டி என்றால் அப்படி ஒரு நேட்டிவிட்டி.
நானும் ஒரு பிரதியைப் பெற்றுக் கொண்டு ஏறத்தாழ ஒரு மணி நேரம் பேசிவிட்டு புறப்பட்டேன். பேசும் போது சொன்னேன்,
”நீங்களோ, ராமரோ என்னை எங்கு அடித்தாலும் வலிக்காது எனக்கு. ஆனால் கொஞ்சம் வருத்தமாய்த்தான் இருக்கும். காரணம் வயதில் சின்னவனாய் இருந்தாலும் இறக்கி வைத்தால் யாராவது தூக்கிக் கொண்டு போய் விடுவார்களோ என்று எங்கும் இறக்கி வைக்காமலே பெரம்பலூர் தெருக்களில் உங்களை சுமந்து திரிந்த தகப்பன் நான். பிள்ளைகள் அடித்து அப்பனுக்கு வலிக்காது.”
ஆமாம்,’ ஒரு மழை வந்து போக வேண்டும் ‘ நூல் ஒரு வகையில் என் மகன் போட்ட நூல். வாசியுங்கள் என்று உங்களை அன்போடு கேட்கிறேன்.
செல்வகுமார் காக்கைக்கு ஐந்து ஆண்டு சந்தா கொடுத்தார்.
மகிழ்ச்சி.
அவசியம் வாங்கி வாசிக்கிறேன் தோழர்
ReplyDeleteதம+1
மிக்க நன்றிங்க தோழர்
Delete