Monday, January 4, 2016

அதைத்தான் அவர்களும் ரசித்தார்கள்.
இன்றைய தேதியில் தமிழ் மேடைகளில் அல்லது சமூக வலைதளங்களில் இனோவா என்று உச்சரித்தாலே போதும் சிரிப்பும் கைதட்டல்களும் நிறைந்து கசியும். காரணம் இனோவா என்றாலே திரு நாஞ்சில் சம்பத் அவர்களின் நினைவு வந்து விடும்.

இனோவா முதலாளியைவிடவும் அதனோடு சேர்த்துப் பேசப் பட்டவர் திரு நாஞ்சில் சம்பத் அவர்கள். மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் அவர் மாண்பமை தமிழக முதல்வர் அவர்கள் முன்னிலையில் தன்னை அஇதிமுக வில் இணைத்துக் கொண்டார். மாண்பமை முதல்வர் அவர்கள் இனோவா காரை அன்பளித்து அவரை வரவேற்றார்.

அதுமுதல் திரு நாஞ்சில் சம்பத் அவர்களை தமிழ் கூறும் நல்லுலகம் இனோவாவோடு சம்பந்தப் படுத்தி வறுத்து எடுத்து விட்டது. ஏதோ நாஞ்சில் சம்பத் அவர்கள் ஒரு இனோவாவிற்காக அஇதிமுக போனதாக ஒரு பிம்பம் கட்டமைக்கப் பட்டது.

நாஞ்சில் சம்பத் அவர்கள் அரசியல் மேடைகளில் உணர்ச்சிவசப் படும்பொழுது எப்போதாவது வரம்பு கடந்து உரையாற்றக் கூடிய மனிதர்தான். ஆனால் அவர் சார்ந்திருக்கிற அமைப்பின் ஊழியர்களை கன்வின்ஸ் செய்து உற்சாகப் படுத்தக் கூடியவர்நிரம்பப் படிப்பவர். படித்த விஷயங்களை கேட்கிற மாதிரி பேசக் கூடியவர்.

ஒருமுறை சென்னை புத்தகத் திருவிழாவில் அவரது உரையைக் கேட்டு மிரண்டு போனேன். அப்படி ஒரு உரை. அவர் இறங்கி வரும்வரை காத்திருந்து கை கொடுத்து வந்தவன் நான். இது என்னிடம் வழமையாக இல்லாதது. இரண்டு மூன்று இலக்கியக் கூட்டங்களில் அவரது பேச்சின் ஆழத்தில் கறைந்து போயிருக்கிறேன்.

இந்த மனிதர் ஏன் இப்படி தரமிழந்து பேச வேண்டும்? என்ற கேள்விதான் எப்போதும் குடைந்து கொண்டே இருக்கிறது.

என்னதான் கோவமென்றாலும் தரம் தாழ வேண்டாமே. இதைவிடக் கோவப்படக் கூடியவர் திரு வைகோ அவர்கள்.இவரைப் போலவே, சமயங்களில் இவரைவிடவுக் கூட உணர்ச்சிவசப்படக் கூடியவராயிற்றே அவர்.  ஆனால் எந்த நிலையிலும் தரத்தைக் குறித்து அவரது எதிரிகளே விமர்சித்ததில்லையே. பிறகு ஏன் இவர் மட்டும் இப்படி என்று வருத்தத்தோடு அணுகிய நாட்களுண்டு.

மரியாதைக்குரிய வைகோ அவர்கள் மாதிரியே பேசக் கூடியவர். அவர் மதிமுக வில் இருந்தபோது வைகோ அவர்களுக்கு வருகிற கூட்டமளவிற்கு நெருக்கமான அளவில் கூட்டம் இவருக்கும் வந்தது. அந்த அளவிற்கு மதிமுக தோழர்கள் இவர் மீது அன்பும் மரியாதையும் வைத்திருந்தனர். இன்னும் சொல்லப் போனால் மாற்ருக் கட்சிக்காரர்களும் தேடி வந்து கேட்ட பேச்சாளர்தான். இவருக்கு மதிமுக சார்பில் வீடே தரப் பட்டதாகவும் அறிய முடிகிறது.

வைகோ இவர்மீது வைத்திருந்த அன்பின் அளவு பேரதிகம் என்கிறார்கள் இருவரையும் நன்கறிந்த தோழர்கள்.

ஏன் வைகோ அவர்கள் பேச்சில் தரம் தாழ வேண்டாம் என்று இவருக்கு அறிவுறுத்தி நெறிப்படுத்தவில்லை? அல்லது அவர் சொல்லியும் இவர் கேட்கவில்லையா?

இவர் மாண்பமை முதல்வர் அவர்கள் குறித்து பேசியது பல நேரங்களில் ரசிக்கிற மாதிரியான வகையில் இருந்தது இல்லை. என்ன விஷேசம் என்றால் இப்போது மாண்பமை முதல்வர் அவர்கள் குறித்து இவர் பேசுவதும் ரசிக்கிற மாதிரியான தரத்தில் இல்லை.

சரி, ஒரு இனோவா காருக்காத்தான் திரு நாஞ்சில் சம்பத் அவர்கள் அஇஅதிமுக போனாரா? அவரால் வாங்க முடியாதா?

ஒரு இனோவா என்ன விலை பெறும்? ஏறத்தாழ 15 லட்சம் ஆகும் என்கிறார்கள். இதற்காகவா அவர் அங்கு போக வேண்டும். தொடர்ந்து பட்டிமன்றங்கள் போயிருந்தாலே ஒரு வருடத்தில் அவருக்கு சாத்தியமானதுதானே. மதிமுக அதற்கான ஏற்பாடுகளை செய்திருக்குமே. மதிமுக தோழர்களே அதை வாங்கித் தந்திருப்பார்களே. கடனில் வாங்கியிருந்தாலும் EMI தொகையினை ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மாவட்டம் கட்டியிருப்பார்களே.

பிறகேன் அஇஅதிமுக போனார்?

அந்த நேரத்தில் அவர் மீதான அவதூறு வழக்குகளின் எண்ணிக்கை பேரதிகம். கோர்ட்டுகளுக்கு அலைவதற்கே சிரமமாய் போயிற்று. அந்த நேரத்தில் வைகோ அவர்களோடும் விரிசல். வெளியேறினால் எங்கு போவது என்ற ஊசலாட்டத்தில் தோட்டம் வெல்கிறது.

வருகிறவர்களுக்கு பொறுப்பு கொடுப்பது என்பது தமிழக அரசியலில் சகஜம்தான். ஆனால் எதற்கும் அடி பணியாமல் திமிறிக் கொண்டே இருந்த ஒரு எதிரியின் சரணாகதியை பொறுப்போடு கூடுதலாக காரும் கொடுத்துக் கொண்டாடினார் முதல்வர்.

அதன்பிறகு பொருளாதாரத்தில் அவர் வளர்ந்தார இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால் அவரது ஆளுமை வெகுவாய் சரிந்தது. ஒரு கட்டத்தில் அவரது மரியாதையும் ரணங்களைக் கண்டது. தன்னை மேடைகளில் படாதபாடு படுத்திய திரு நாஞ்சில் சம்பத் அவர்களின் ஆளுமை இப்படி நார் நாராய் கிழிந்ததை அவருக்கான தண்டனையாகக் கூட முதல்வர் அவர்கள் ரசித்திருக்கக் கூடும்.

நாம்தான் இனோவாவை முன் நிறுத்தி இத்தனையையும் மறந்துபோனோம்.

அதைத்தான் அவர்களும் ரசித்தார்கள்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...