Saturday, January 2, 2016

CPIM கொல்கத்தா ப்ளீனம் -- என்னை ஈர்த்த விஷயங்கள்

இதையெல்லாம் சொல்கிற அருகதை எனக்கிருக்கிறதா தெரியவில்லை. ஆனால் இவற்றை சொல்கிற தைரியத்தை எனக்கு கொடுத்ததில் பெரும் பங்கு இந்த இயக்கத்திற்குத்தான்
************************************************************************************************************************   
சமீபத்தில் கொல்கத்தாவில் நடைபெற்ற மார்சிஸ்ட் பொது உடைமைக் கட்சி ப்ளீனம் கவனத்தில் கொண்ட விஷயங்களுள் மூன்று விஷயங்கள் என்னை மிகவும் ஈர்த்தன.
1) கட்சியில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 15.5% இல் இருந்து 25% மாக உயர்த்துவது.
2) கட்சி ஊழியர்களுக்கு தத்துவார்த்த விஷயங்கள் குறித்து பயிற்சி கொடுப்பது.
3) முழுநேர ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது குறித்து பரிசீலிப்பது.
கட்சியின் அனைத்து மட்டங்களிலும் ஆண்களுக்கு சற்றும் குறையாத விதத்தில் பெண்களின் உழைப்பு இருக்கிறது என்பதை அந்தக் கட்சியோடு ஏறத்தாழ முப்பது வருடங்கள் அணுக்கமாக இருப்பவன் என்ற வகையில் நான் அறிவேன். ஆனாலும் பொதுப் பார்வையில் ஆண்களின் உழைப்பு மட்டுமே பளிச்சென பதிந்துள்ளது என்பதும் உண்மையே.
தொண்ணூறு ஆண்களும் பத்து பெண்களும் பூ அள்ளிக் குவிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். பொதுப் பார்வையில் மேலோட்டமாக இந்த விகிதாச்சார விவகாரம் தெரியாது. ஏதோ ஆண்களே ஆண்கள் மட்டுமே பூக்களைக் கொய்து குவித்ததாகத் தோன்றும். இதுவும் அப்படித்தான்.
பெண் உறுப்பினர்களை அதிகப் படுத்துவது என்கிற தீர்மானமும் ஒன்றும் புதிதல்லதான். கிளை மாநாடுகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு முறையும் பரிசீலிக்கப் படுகிற கருத்துதான் இது.
பெண்கள் உவந்து இயக்கத்திற்கு வருகிறமாதிரி வெகுஜன அமைப்புகளை மறுகட்டுருவாக்கம் செய்ய வேண்டியதன் அவசியத்தை பரிசீலிக்க வேண்டிய நேரம் இது. மாறாக பெண்களை பெருமளவில் சேர்க்கிறோம் என்கிற வகையில் இறங்கிட முனைதல் ஆபத்தானது.
உறுப்பினர் எண்ணிக்கை என்பது முக்கியம்தான். அதற்காக யாரையும் சேர்ப்பது என்கிற நிலைக்கு பாய்ந்துவிடக் கூடாது. ‘தயார்படுத்தி சேர்த்தல்’ முறைதான் என்னைப் போன்றோர் வியந்து பார்க்கும் விஷயமாக கட்சியில் உள்ளது.
ஸ்தல பிரச்சினைகளை கையிலெடுப்பது, எடுத்த பிரச்சினைகளை இயக்கப் படுத்துவது என்பது மிக முக்கியமான இன்றைய கட்சி அம்சமாக நடைமுறையில் உள்ளது. மக்கள் பிரச்சினைகளை கையில் எடுப்பது, மக்களுக்காக சுயநலமின்றி உழைப்பது, போராடுவது, சிறை செல்வது என்பது மிக உன்னதமான விஷயங்கள்தான். இந்த விஷயத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் உசரம் என்பது மற்றெந்தக் கட்சிகளையும் விடவும் கூடுதல்தான் என்பதும் யாருமறிந்ததுதான்.
இந்தச் சூழலில் இதுமாதிரி, மக்களுக்கு உழைக்கக் கூடிய ஊழியர்கள் கட்சியின் அந்தந்த மட்டங்களிலும் பொறுப்புக்கு வந்திருப்பது ஆரோக்கியமான விஷயம்தான்.
அவர்கள் தத்துவ சமாச்சாரங்களையும் கட்சியின் ஸ்தாபன நெறி முறைகளையும் கற்றுக் கொள்வது அவர்களுக்கும் இயக்கத்திற்கும் நல்லதாக முடியும்.
தான் ஐம்பதுக்கும் மேற்பட்ட முறை ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’ யை வாசித்திருப்பதாகவும், ஒவ்வொரு முறையும் புதிதாக எதையோ அதிலிருந்து கற்றுக் கொண்டதாகவும் மறைந்த இயக்குனர் மணிவண்ணன் அவர்கள் ஒருமுறை சொன்னார். உங்க கட்சி (அவர் என்னை அப்படித்தான் பார்த்தார்) மாவட்டச் செயலாளர்களுக்காச்சும் குறைந்த பட்சம் அது குறித்த வகுப்பெடுக்கச் சொல்லுங்கப்பா என்று சொன்னபோது அதில் எள்ளலோ நக்கலோ இல்லை. மாறாக அதில் ஒரு அக்கறை இழையோடியது.
முன்பெல்லாம் அவ்வப்போது கட்சி வகுப்புகளெடுக்கும், தெளிவு படுத்தும். இப்போது விரலிடுக்குகளில் கசியும் மணல் மாதிரி நல்ல விஷயங்களை நாம் இழந்து விட்டோம் என்று ஒரு முறை தோழர் தமிழ்ச்செல்வன் எழுதியதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எதுவும் சரியான நேரம்தான் என்கிற அளவில் இந்துவும் சரியான நேரமே. இந்த சரியான நேரத்தில் கட்சியின் ப்ளீனம் இதை கவனத்தில் கொண்டுள்ள செய்தி கட்சியின் மீது அன்போடிருக்கும் என் போன்ற அனுதாபிகளுக்கு இனிப்பான செய்தி.
அரசியல் வகுப்புகளில் கட்சி அக்கறை கொள்வதும், வெகுஜன அமைப்புகளில் உள்ள ஊழியர்களை அரசியல் படுத்தி கட்சிக்கு கொண்டு வருவதுமான பழைய நடைமுறையை மீண்டும் அமல்படுத்தப் படுவது இயக்கத்தை செழிக்க வைக்கும்.
மிக முக்கியமானதாக நான் பார்ப்பது முழுநேர ஊழியர்களின் ஓய்வு குறித்த கவனம்தான்.
மூப்பென்பதை ஒருபோதும் கட்சியின் பாரமாக கட்சி நினைத்து விடாது. ஆனால் முதுமையிலும் தொடர்ந்து கட்சியை சுமப்பது ஊழியருக்கு பெரும் சுமையாகத்தான் அமையும். அந்த வகையில் இது குறித்த யோசனை வரவேற்கத் தக்கது. அரசு மற்றும் அரசு சாரா ஊழியர்களின் ஓய்வு காலம் குறித்து அக்கறை கொள்கிற கட்சி இது. தனது ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகும் பிழைப்பூதியம் ஏதேனும் வழங்க ஏற்பாடுகள் செய்தல் அவசியம்
இந்த நேரத்தில் நகரத்தில், தொழிற்சாலைகள் உள்ள மத்தியதர மக்களும் அரசு ஊழியர்களும் நிறைந்த பகுதியில் வேலைபார்க்கும் முழுநேர ஊழியர்களுக்கும் கிராமப் பகுதியில் வேலை பார்க்கும் முழுநேர ஊழியர்களுக்கும் நிறைய வேறுபாடு இருப்பதை உணர வேண்டும்.
மேற்சொன்னப் பகுதிகளில் வாழும் கட்சி உறுப்பினர்கள் முழுநேர ஊழியர்களின் மருத்துவம் மற்றும் அவர்களது குழந்தைகளின் படிப்பு செலவு ஆகியவற்றில் ஏதோ கொஞ்சம் ஒத்தாசை செய்ய முடிகிறது. கிராமத்தில் பணியாற்றும் முழுநேர ஊழியர்களின் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது என்பதையும் நேரடியாகப் பார்க்க முடிகிறது.
அவர்களை இன்னும் பேரதிகமாய் கவனிக்க வேண்டும்தான்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...