Thursday, January 7, 2016

தேர்தல் அறிக்கைகளை ஏரிகள் நிரப்பும்.

ஆக சமீபத்தில் என்னைக் கவர்ந்த அரசு அதிகாரிகளில் மிக முக்கியமானவர் எனது சொந்த மாவட்டமான கரூர் மாவட்டத்தின் ஆட்சித் தலைவர் மரியாதைக்குரிய ஜெயந்தி அவர்கள்தான். அவரது செயல்பாடுகள் குறித்து முழுமையாக எதுவும் தெரியாது என்பதை இந்த அளவிலான தொடக்கப் புள்ளியிலேயே கூறி விடுகிறேன். குளங்களையும் குட்டைகளையும் அமைத்து இந்த மழை தந்த நீரை சேதாரமின்றி சேமித்து வைத்திருக்கிறார் என்ற ஒரே ஒரு காரணத்திற்காகத்தான் அவரை நான் இந்த அளவிற்கு மதிக்கிறேன்.

காவிரியும் அமராவதியும் எங்கள் மாவட்டத்திலும் பாய்வதென்னவோ உண்மைதான் என்றாலும் மாவட்டத்தின் தொண்ணூறு விழுக்காடு வெடித்துக் கிடக்கும் வறண்ட பகுதிதான்பெரும்பாலும் கிணற்றுப் பாசணம்தான். அதுவும் நிலத்தடிநீர் வறண்டுபோன நிலையில் விவசாயம் என்பது ஏறத்தாழ இல்லாமலே போனது. எங்கள் கிராமமான கடவூரில் நந்தவனம் என்ற ஒரு இடமே இருந்தது. பெயருக்கேற்றபடியே மரங்களால் நிறைந்திருந்த இடம் அது. நாங்கள் சிறு பிள்ளைகளாக இருந்த போது அங்கு கூடி விளையாடுவது வழக்கம்.
இப்போது அது ஒரு பொட்டல் காடு. இப்படி வறண்டு கிடக்கும் எங்கள் மாவட்டத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை மிகச் சரியாகப் பயன் படுத்தி குளங்களையும் குட்டைகளையும் உருவாக்கி அவற்றை நீரால் நிரப்பி அழகு பார்க்கிறார்.

தேசிய ஊரக வேலைத் திட்டத்தின்கீழ் இருக்கிற குளங்களையும் குட்டைகளையும் செப்பனிட்டதோடு புதிதாகவும் உருவாக்கியிருக்கிறார். இப்படியாக உருவாக்கப் பட்டுள்ள நீர்நிலைகளின் மொத்தக் கொள்ளளவு 16,320 கனஅடி என்கிறார்.

இந்த ஆண்டு கரூர் மாவட்டத்தில் சொல்லிக் கொள்கிறமாதிரி மழை இல்லை. ஆனால் கிடைத்த சிறு மழையை வீணாக்காமல் சேமித்ததில் 4,160 கனஅடி நீர் சேகரிக்கப் பட்டுள்ளதாக கூறுகிறார். இந்த நீரைக் கொண்டு 1,000 ஏக்கர் தரிசு நிலத்தை விவசாய நிலமாக மாற்ற முயற்சி எடுக்க இருப்பதாக அவர் கூறியுள்ளதை மற்ற ஆட்சியர்களுக்கு சுற்றுக்கு விட்டால் தேவலாம்.

சேமிக்கப்பட்ட 4,160 கனஅடி தண்ணீரைக் கொண்டு ஏறத்தாழ 10,000 ஏக்கர் தரிசு நிலத்தை விவசாய நிலமாக மாற்றலாம் என்ற அவரது நம்பிக்கையே நமகான பேசுபொருள். 4,160 கனஅடி என்பது அதிகமான அளவல்ல. ஜெயந்தி குறைவாக கூறிவிட்டாரோ என்ற அய்யமும் ஒருபுறம் இருக்கிறது.

ஒரு கனஅடி என்பது நீளம் x அகலம் x உயரம் என்பதாகும். ஒரு அடி நீளம் x ஒரு அடி அகலம் x ஒரு அடி உயரம் என்பது ஒரு கனஅடியாகும். ஒரு வகுப்பறை என்பது 20 அடி நீளம் 20 அடி அகலம் 9 அடி உயரம் அளவு கொண்டதாகும். அதாவது ஒரு வகுப்பறை என்பது 3,600 கனஅடி கொள்ளளவு கொண்டதாகும். எனில், 4,160 கனஅடி தண்ணீர் என்பது ஏறத்தாழ ஒன்றேகால் வகுப்பறை கொள்ளளவு ஒத்தது. இந்த அளவு தண்ணீர் 10,000 ஏக்கர் தரிசு நிலத்தை விவசாய நிலமாக மாற்றுவதற்கு போதுமானதா என்ற அய்யம் நியாயமானதுதான். ஒருக்கால் அவர்கள் சொல்வது சரி எனும் பட்சத்தில் 4,160 கனஅடி தண்ணீரைக் கொண்டு 10,000 ஏக்கரை விளை நிலமாக மாற்ற முடியும்.

வீராணம் ஏரியிலிருந்து நொடிக்கு 4,000 கனஅடி தண்ணீர் திறந்துவிடப் பட்டதாகவும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நொடிக்கு 40,000 கனஅடி தண்ணீர் திறந்துவிடப் பட்டதாகவும் செய்திகளில் பார்த்தோம். நொடிக்கு 40,000 கனஅடி எனில் நிமிடத்திற்கு 24,00,000 கனஅடி தண்ணீராகிறது. ஒரு நாளுக்கு 5,76,00,000 கனஅடியாகிறது. ஆக, இந்த மழைக்காலத்தில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து ஏறத்தாழ ஐந்து கோடியே எழுபத்தியாறு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப் பட்டிருக்கிறது.

4,160 கனஅடி தண்ணீரைக் கொண்டு 10,000 ஏக்கர் தரிசு நிலத்தை விளை நிலமாக மாற்ற முடியும் என்றால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து ஒரு நாளில் திறந்துவிடப் பட்ட 5,76,00,000 கனஅடி தண்ணீர் என்பது ஏறத்தாழ  13,84,60,000 ஏக்கர் தரிசு நிலத்தை விளை நிலமாக்கும் வல்லமை கொண்ட்து அல்லவா? ஒரு நாள் திறந்துவிடப் பட்ட தண்ணீரைக் கொண்டே ஏறத்தாழ பதிமூன்று கோடி ஏக்கர் தரிசு நிலத்தைப் பண்படுத்த முடியும் என்றால் திறந்துவிடப் பட்ட மொத்த தண்ணீரைக் கொண்டு எத்தனை ஏக்கர் தரிசு நிலத்தை பண்படுத்தி இருக்கலாம்.

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்துவிடப் பட்ட தண்ணீரே இவ்வளவு வல்லமை கொண்டது எனில் தமிழகத்தின் ஏரிகளில் இருந்து வீணாக திறந்துவிடப் பட்ட மொத்த தண்ணீரைக் கொண்டு என்னவெல்லாம் செய்திருக்கலாம்.

விவசாயத்தைப் பெருக்கியிருக்கலாம் என்பதோடு குடிநீருக்கான தன்னிறைவையும் எட்டியிருக்கலாமே.
இதன் மூலம் தண்ணீர் மட்டுமா விரயமானது. எத்தனை உயிர்ச் சேதம்? எவ்வளவு பொருட்சேதம்?

ஒரு ஏரியிலிருந்து நள்ளிரவு நேரத்தில் எந்தவித முன்னறிவிப்புமின்றி 40,000 கனஅடி தண்ணீரைத் திறந்து விட்டால் என்னவெல்லாம் நிகழும் என்பதற்கு செம்பரம்பாக்கம் ஏரித் திறப்பும், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களின் பேரழிவுமே சாட்சியாகும்.

இரண்டு விதங்களில் இதை தவிர்த்திருக்க முடியும்.

1)   இருக்கிற நீர்நிலைகளை ஒழுங்காக தூர்வாரி, நீர்வரத்தில் இருக்கிற ஆக்கிரமைப்படைப்புகளை அப்புறப் படுத்துதல். எல்லாம் கடந்தும் தேறும் உபரி தண்ணீரை துணை நீர்நிலைகளை ஏற்படுத்தி சேமிப்பது.
2)   வேறு வழியே இல்லை, தண்ணீரை திறந்துவிட்டே ஆக வேண்டும் என்கிற நிலையில் உரிய நேரத்தில் சரியான முன்னறிவிப்போடு தண்ணீரைத் திறந்துவிடுவது.

17.12.15 அன்றைய தினமணியில் எஸ்.முத்துக்குமார் வண்டல் மண் எடுப்பதற்கு விவசாயிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறார்.

இந்தக் கோரிக்கையை ஏதோ வண்டல் மண் சம்பந்தப் பட்ட விஷயமாக மட்டும் பார்க்கக் கூடாது. இது விவசாயத்தின் வாழ்வாதாரப் பிரச்சினை ஆகும்.

ஏரிக்கு வரும் தண்ணீர் சுத்தமான தண்ணீர் கிடையாது. சேறு கலந்த நீராகவே அது இருக்கும்.அதனால்தான் நிரம்பிய பொழுது ஏரி கலங்கலாகவும் பிறகு தெளிந்தும் காணப்படும். நீர்த் தெள்ளியத் தெளிய சேறானது ஏரியின் அடிதங்கும். இது விவசாயத்திற்கு உரிய வண்டல் மண் ஆகும்.

முன்பெல்லாம் கோடை காலத்தில் இந்த வண்டல் மண்ணை விவசாயிகள் எடுத்துக் கொண்டு போய் தங்களது வயலில் போடுவார்கள். இந்த மண் விவசாயத்திற்கான இயற்கையின் கொடை. இந்த ஏரிமண் இருந்தால் செயற்கை உரம் தேவைப் படாது. பயிர்கள் வளமாய் செழித்து வளரும். இப்படி வண்டல் மண்ணை விவசாயி எடுத்துப் போவதால் ஏரியும் தூர் வாரப் பட்டு இருக்கும். ஆக, இது இரட்டைப் பயனுள்ளதாய் அமையும்.

முன்பெல்லாம் ஏரி மண் எடுப்பதற்கான அனுமதியை அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களே வழங்கலாம் என்றிருந்தது. அவர்களும் கேட்டவுடன் வழங்கினார்கள். இப்படிச் செய்வதால் அவர்களுக்கு தூர் வாருவதற்கு ஆகும் செலவு குறையும். விவசாயிகளும் மகிழ்ச்சியோடு இதனை செய்தார்கள். காரணம் செயற்கை உரத்திற்கான செலவும் இல்லை, பூமியும் மலடாகமல் பாதுகாப்பாய் இருக்கும்.

ஏதோ ஒரு புள்ளியில் மாவட்ட ஆட்சித் தலவர்களிடம் இருந்த இந்த அதிகாரம் பசுமைத் தீர்ப்பாயத்தின் கைகளுக்குப் போனது. மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் இருந்து எளிதாக அனுமதியைப் பெற்று வந்த விவசாயிகளுக்கு பசுமைத் தீர்ப்பாயத்திடமிருந்து பெறுவது கடினமாயிற்று. மட்டுமல்லாது, இதற்காக அவர்கள் லட்சக் கணக்கில் செலவு செய்ய வேண்டி வந்தது. எனவே விவசாயிகள் வேறு வழியே இன்றி இதைத் தவிர்த்துவிட்டு செயற்கை உரம் நோக்கி நகர்ந்தார்கள்.

இதன் விளைவாக விளைபூமி மலடானது, ஏரிகள் தூர் வாராமல் நாசமாகின. ஆகவே இந்தப் புள்ளியிலாவது அரசு விழித்துக் கொண்டு ஏரி மண்ணெடுக்க அனுமதி வழங்கும் அதிகாரத்தை மீண்டும் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் வழங்க வேண்டும். லட்சக் கணக்கான விவசாயிகள் இது குறித்து கோரிக்கைக் கடிதங்களை அரசுக்கு அனுப்பியிருப்பதாக முத்துக்குமார் கூறுகிறார். அதை அரசு உடனடியாக பரிசீலிக்க வேண்டும்.

இருக்கிற ஏரிகளைப் பாதுகாத்தால் அது அரசு. இருக்கிற ஏரிகளுக்கான துணை ஏரிகளை அமைத்து அவற்றையும் பராமரித்தால்தான் அது மக்களரசு. இருக்கிற ஏரிகளையே பாதுகாக்கத் தவறுகிற அமைப்பை மக்கள் மக்கள் விரோத அரசுகளாகத்தான் பார்ப்பார்கள்.

ஏரிகளை ஒழுங்காகப் பராமரிக்காத குற்றத்தைவிடப் பெருங்குற்றமாக சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி மக்கள் பார்ப்பது முன்னறிவிப்பின்றி அளவுக்கு அதிகமான தண்ணீரை மக்கள் தூங்கிக் கொண்டிருந்த நள்ளிரவில் திறந்து விட்டதைத்தான்.

செம்பரம்பாக்கம் ஏரியை நவம்பர் 19 ஆம் தேதி வாக்கிலேயே திறந்து விட்டிருக்க வேண்டும். திறப்பதைத் தவிர வேறு வழியே இல்லை என்பதை அதிகாரிகள் அந்தக் காலக் கட்டத்திலேயே உணர்ந்து விட்டதாகவும் மட்டுமல்ல அப்படி செய்வதற்கான யாருடைய உத்திரவுக்காவோ விண்ணப்பித்து காத்திருந்ததாகவும் கிடைக்கிற செய்திகள் வழி நம்மால் அறிய முடிகிறது. ஏறத்தாழ பன்னிரண்டு நாட்களுக்குப் பிறகே அவர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கிடந்த இடத்திலிருந்து சிக்னல் கிடைத்திருக்கிறது. ஒருக்கால் அப்போதும் கிடைக்காது இருந்திருக்குமானால் ஏரி உடைந்து பெரும்பகுதி சென்னை முற்றாய் அழிந்திருக்கும்.

நவம்பர் 19 ஆம் தேதி முதலே தண்ணீரைத் திறந்து விட்டிருந்தால் 1,500 அல்லது 2,000 கனஅடி திறந்து விட்டிருந்தாலே போதும். அப்படி செய்திருந்தால் இப்போது திறந்துவிடப் பட்ட தண்ணீரின் அளவைப் பார்க்கிலும் சற்றேரக் குறைய இருபது மடங்கு குறைவு. தகுந்த முன்னறிவிப்போடு அதை செய்திருக்கும் பட்சத்தில் இப்போதைய சேதத்தில் 90 விழுக்காடு குறைந்திருக்கும், உயிர்ச்சேதம் முற்றிலுமாக இல்லாது போயிருக்கும்.    

இந்தப் பெரும் சேத்த்திலும் நமக்கான சில நல்லதுகளும் கிடைத்தன. ஒரு தோழர் தனது  கவிதையில் எழுதினார்,

குப்பைகளை போட்டுச் சென்றாலும்
இந்த வெள்ளம்
சாதிகளையும் மதங்களையும்
அடித்துக் கொண்டு போனதில்
மகிழ்ச்சிதான்

இது கவிதையா என்று கேட்பவர்களுக்கு இது கவிதை, இதுதான் எங்கள் கவிதை என்று சொல்வேன்.

இந்த மழை ஓரளவிற்கு ஜாதி மதத்தை கொண்டுபோனது என்பது ஒரு புறம் மகிழ்ச்சியான செய்தி. பார்க்கும் இடமெல்லாம் மானுடம் பூத்துக் குலுங்கியது. நமது இளைய திரள் எவ்வளவு துடிப்பானது என்பது மட்டுமல்ல, எவ்வளவு தியாக உணர்வும் அர்ப்பணிப்பும் மிக்கது என்பதையும் உணர்த்தியது.

பார்த்தசாரதி கோயிலில் இருந்து இந்து சகோதரர்களுக்கு இஸ்லாமிய சகோதரர்கள் உணவு பரிமாறிய காட்சிதான் நான் சமீபத்தில் பார்த்த உன்னதமான காட்சி.
மேத்தா ஒருமுறை எழுதினார்,

தூண்டிகள் எரிவதில்லை
திரிகள்தான்
எரிந்து
நாசமாகின்றன
என்று.

எந்தத் தூண்டியாலும் இந்த ஒற்ருமைத் திரியை எரித்துவிட முடியாது.

பொதுத்துறையை நக்கலித்து பேசும் பொது ஜனங்களுக்கும் இந்த வெள்ளம் பாடம் நடத்தியது. இந்த வெள்ளத்திலும் தனியார் பேருந்துகள் காசு கறப்பதைத்தான் செய்தன. பொதுத்துறைப் போக்குவரத்துதான் இலவச சேவையை செய்தன. இவ்வளவு மோசமான பேருந்துகளை இவ்வளவு மோசாமான தண்ணீரில் இயக்க ஓட்டுனருக்கு நெஞ்சிலே ஈரம் இருக்க வேண்டும். அது ஏராளம் இருந்ததை நாம் இப்போது பார்க்க முடிந்தது.

ஒன்று சொல்லி முடிக்கிறேன்,

தேர்தல் அறிக்கைகளை ஏரிகள் நிரப்பும்.

         

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...