‘கலகல வகுப்பறை’ என்ற தமது அமைப்பின் மூலம் வகுப்பை எப்படி
கலகலப்பாக நகர்த்தலாம் என்று ஆர்வமுள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்களை நடத்தி வரும் மதுரைக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியின்
ஆசிரியர்கள் சிவா, ரமணன், பாலமுருகன்,
முத்துக்குமார் மற்றும் இவர்களோடு இணைந்து செயல்பட்டு வரும் முதுகலை
ஆசிரியர் தோழர் சுரேஷ் காத்தான் ஆகியோருக்கு இரண்டு விஷயங்களுக்காக என் அன்பையும் நன்றியையும்
தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டிருக்கிறேன்.
1)
முதலில் ‘கலகல வகுப்பறை’ என்ற இந்த தலைப்பிற்காக.
2)
இரண்டாவதாக, வகுப்பறைகள் கலகலப்பாக இருக்க
வேண்டும் என்று நினைப்பதே அரிது. அடுத்த கட்டமாக தமது வகுப்பறைகளை
கலகலப்பாக கொண்டு செல்ல முயற்சிப்பது என்பது இன்னும் கொஞ்சம் கூடுதலான அரிய செயல்.
தமது வகுப்பறைகளையும் கடந்து ஆர்முள்ள ஆசிரியர்களை அடையாளம் கண்டு அவர்களது
வகுப்பறைகளையும் கலகலப்பாக மாற்றுவதற்காக அவர்களுக்கு பயிற்சி கொடுப்பது என்பது எழுந்து
நின்று வணங்குவதற்குரிய தகுதியைப் பெற்றது.
ஒரு
பள்ளியில் ஆகச் சிறந்த வகுப்பறையாக ஒரு வகுப்பறையைத் தேர்ந்தெடுத்து அதற்கு விருது
வழங்குவதற்காக ஒரு குழுவினரோடு அந்தப் பள்ளிக்கு செல்வதாக வைத்துக் கொள்வோம். எந்த வகுப்பிற்கு அந்த விருது
போய்ச் சேரும் எனில் அந்தப் பள்ளியிலேயே மிகவும் அமைதியான வகுப்பறைக்காகத்தான் அது
இருக்கும். இது குறித்து பேசும்போது அந்தக் குழுவைச் சார்ந்த
யாரோ ஒருவர் அந்த வகுப்பைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணங்களைப் பற்றிப் பேசும்போது தன்னையும்
அறியாமல் இப்படி சொல்லி விடவும் கூடும்,
‘இப்படி ஒரு அமைதியை நான் எங்கும் பார்த்ததில்லை. அமைதி என்றால் அப்படி ஒரு அமைதி’
உண்மையும்
அதுதான். எந்த
வகுப்பறை அமைதியாக இருக்கிறதோ அதுதான் மிக நல்ல வகுப்பறை என்றுதான் இன்றைய பொதுப் புத்தி
எடுத்துக் கொள்கிறது. அமைதிதான் சிறப்புக்கான அளவுகோல் என்று
கொள்வதெனில் இந்த வகுப்பறையை விடவும் இந்த ஊரின் மயானம் மிக அமைதியாக இருக்குமே.
அமைத்திக்குதான் விருது என வைத்துக் கொண்டால் அந்த விருதை மயானத்திற்கு
அல்லவா கொடுக்க வேண்டும்.
வகுப்பை
அமைதியாக வைத்திருக்கும் ஆசிரியரே சிறந்த ஆசிரியராகக் கொள்ளப் படுகிறார். ‘அவர் வகுப்பில் இருந்தால்
அந்த வகுப்பு அமைதியாக எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருக்கும்’ என்று அதை சிலர்
நியாயப் படுத்தவும் செய்வார்கள். மாணவர்களைப் பேசாமல் பார்த்துக்
கொள்வது ஆசிரியரிடம் எதிர்பார்க்கப்படும் ஒரு குணம் என்றால் மயானக் காவலர் இதைவிட பேரமைதியை
கட்டிக் காக்கிறாரே. ’எனில் ஆசிரியரைவிடவும் மயானக் காவலர் அமைதியைப்
பேணுவதில் சிறந்தவர்தானே’ என்று கேட்டால். ‘பிணங்கள் பேசாதே’ என்று பதிலுரைக்கக் கூடும்.
பிணங்கள்தான் பேசாதே என்றால் அதே குணத்தை மாணவர்களிடமும் எதிர்பார்ப்பது
தவறல்லவா?
இன்னும்
சரியாகச் சொல்வதெனில் மாணவர்களைப் பேச விடாமல் ஒரு ஆசிரியர் பார்த்துக் கொள்கிறார்
என்றால் அவர் இருக்கும் வரை அந்த வகுப்பு மாணவர்களை பிணங்களைப் போல பாதுகாக்கிறது என்றுதானே
பொருள். அது
குற்றமல்லவா?
தனது
வகுப்புகளை அமைதியாகப் பராமரிக்கும் ஆசிரியர்களைப் பெற்றோர்களே மிகச் சிறந்த ஆசிரியர்களாகப்
பார்க்கிறார்கள்தான். தங்களது பிள்ளைகளை நாற்பத்தி ஐந்து நிமிடம் பிணங்கள் மாதிரி வைத்திருக்கும்
ஒரு நபரைக் குற்றவாளியாகப் பார்க்காமல் ஆகச் சிறந்த ஆசிரியராக பார்ப்பதற்கான காரணம்
எளிதானது. தம் பிள்ளையைப் பிணம் மாதிரி நடத்துகிறார் என்கிற உண்மையை
அவர்கள் உணராதிருக்கிறார்கள். தமது வகுப்பை அமைதியாகப் பராமரிப்பது
அவசியம் என்பதை உணர்ந்திருக்கிற ஆசிரியரும் தமது வகுப்பில் பிள்ளைகளை பாடம் கவனிக்கும்
பிணங்களாக வைத்திருக்கிறோம் என்கிற உண்மையை முழுமையாக உணராதிருப்பதே அவர் அப்படி நடந்து
கொள்வதற்குரிய காரணமாக இருக்கிறது.
இவ்வாறு
விவாதத்தைத் தொடங்கும் போது எடுத்த எடுப்பிலேயே ஒரு அய்யம் கிளம்பும். வகுப்பிலே மாணவர்களை பேச
அனுமதித்தால் அது கற்றலை சேதப் படுத்தாதா?
இல்லை, அப்படியெல்லாம் ஒருபோதும்
நிகழ்ந்துவிடாது. எவ்வளவுதான் அறிவைப் புகட்டி அனுப்பினாலும்
பிணத்தின் குணத்தோடு மாணவனை வெளியே அனுப்பினால் அவன் அறிவுள்ள ஒரு பிணமாகத்தானே இருப்பான்.
தான் சார்ந்த துறையில் அவன் பெற்றிருக்கும் அறிவானது அந்தத் துறையில்
அவனை மிக உசரத்திற்கு கொண்டு போகவே செய்யும். தன் துறை சார்ந்த
பிரச்சினைகளை, சிக்கள்களை மிகச் சுளுவாக அவனால் கையாள இயலும். ஆனால் சமூகம் சார்ந்த, மண் சார்ந்த எந்த ஒரு சிக்கலைத் தீர்ப்பதிலும் அவனது தலையீடோ பங்களிப்போ இருக்காது.
இது
மாதிரியான மாணவர்களைத்தான் இங்கிலாந்து தனது காலனி நாடுகளிலிருந்து குறிப்பாக இந்தியாவிலிருந்து
எதிர் பார்த்தது. இப்படி ஒரு கல்வித் திட்டத்தைத்தான் இந்தியாவில் வடிவமைக்க வேண்டும் என்று
மெக்காலேவும் இங்கிலாந்து அரசாங்கத்திற்கு
பரிந்துரைத்தார். அதை அச்சுப் பிசகாமல் அப்படியே இங்கிலாந்தும்
வடிவமைத்துத் தந்தது. எது நடந்தாலும் கேள்வி கேட்காத,
சுதந்திரம் பற்றிய சொரணையுணர்ச்சி துளியுமற்ற சகலமும் மரத்துப் போன இந்திய
ஊழியர்களை இங்கிலாந்திற்கு ஏராளமாய் இந்தக் கல்விமுறை அள்ளி வழங்கியது.
இந்தக்
கல்வித் திட்டத்தின் மூலம் இரண்டு லாபங்களை இங்கிலாந்து அனுபவித்தது
1)
இங்கிலாந்திலிருந்து
அலுவலகப் பணியாளர்களை இந்தியாவிற்கு கொண்டு வந்தால் அவர்களுக்கு நிறைய ஊதியம் தர வேண்டும். அந்த வேலையை செய்யக் கூடிய
ஊழியர்களை இந்தியாவிலிருந்தே தயாரித்ததன் மூலம் குறைந்த ஊதியத்திற்கு அவர்களுக்கு ஊழியர்கள்
கிடைத்தார்கள். இதன் மூலம் அவர்களுக்கு செலவு மிச்சமானது.
பச்சையாய் சொல்லப் போனால் அவர்களது லாபம் அதிகரித்தது.
2)
குறைந்த
ஊதியத்தில் வேலை செய்கிறோமென்ற உணர்வு மட்டுமல்ல சுதந்திரத்தைப் பற்றியும்கூட நினைத்துவிடாத
ஒரு மரத்துப் போன ஊழியர்களையும் இந்தக் கல்வித் திட்டம் இங்கிலாந்திற்குத் தந்தது.
காமன்வெல்த்
போட்டிகள் நடந்தபொழுது காமன் வெல்த்திலிருந்து இலங்கையை அகற்ற வேண்டும் என்று ஒரு கோரிக்கை
எழுந்தது. காமன்
வெல்த் என்பது இங்கிலாந்து அடிமைப் படுத்தி வைத்திருந்த நாடுகளின் கூட்டமைப்பு.
அதுவே ஒரு அடிமைத்தனத்தை பளிச்செனக் காட்டக் கூடிய ஒரு அமைப்பு.
சரியான, நாட்டுப் பற்றை அடித்தளமாகக்
கொண்டிருக்கக் கூடிய கல்விக் கட்டமைப்பு இருந்திருக்குமானால் காமன்வெல்த் என்ற அமைப்பையே
இந்த நாடுகள் நிராகரித்திருக்கும்.
நாட்டுப்
பற்றை உறுதிமொழி எடுப்பதன்மூலம் மட்டும் கொண்டு வந்துவிட முடியாது. அதற்கேற்ற கல்விக் கட்டமைப்பை
நாம் கட்டியாக வேண்டும். அதற்கு இருக்கிற கட்டமைப்பை நாம் தகர்த்தெறிந்தாக
வேண்டும். அதற்கு முன்னோட்டமாக இருக்கிற அமைப்பை விமர்சனத்திற்கு
கொண்டு போக வேண்டும்.
விமர்சனத்தையும்
உடைசலையும் செய்யும் அதே வேளையில் சரியான மாற்றையும் ஒருசேர நாம் கொண்டு செல்ல வேண்டும்.
இதை
முற்றாய் முழுசாய் மேற்சொன்ன தோழர்கள் கையெடுத்திருக்கிறார்கள் என்று சொல்ல வரவில்லை. ஆனால் இத்தகைய காரியத்திற்கான
கருவிகளுள் ஒன்றாகச் நான் இவர்களைப் பார்க்கிறேன்.
பெற்றோர்களிடம்
இந்தக் கல்விக் கட்டமைப்பு அடிமைகளையே பெரும்பாலும் உருவாக்குகிறது என்பதைக் கொண்டு
போக வேண்டும். இந்தக் கட்டமைப்பிடம் ஊதியம் பெற்ருக் கொண்டு பணி புரிய வேண்டிய ஊழியர்கள்தான் ஆசிரியர்கள்.
இவர்களால் தனியாக இந்தக் கட்டமைப்பைச் செய்துவிட முடியாது. அது பெற்றோர்களும் பொதும் மக்களும் முன்கை எடுக்க ஆசிரியர்கள் கை இணைய வேண்டிய
விஷயம்.
அதற்கான
பிரச்சாரங்களை பொது மக்களிடம் முன்னெடுக்க வேண்டும்.
அதே
வேளை வகுப்பறையை நல்ல மனிதர்களை உருவாக்கும் பட்டறையாக மாற்றிதர வேண்டிய அவசியம் ஆசிரியர்களுக்கிறது.
இதை
செய்ய ஆசிரியர்களால் முடியும்.
எப்படி இதை செய்வது என்பதைத்தான் மேற்சொன்ன தோழர்கள் ‘கல கல வகுப்பறை’ என்ற தங்கள் அமைப்பின் மூலம் களமெடுத்து
நகர்கிறார்கள். கரம் குவித்து வாழ்த்துகிறோம்.
எல்லாம்
சரி சத்தமான வகுப்பறைகள் கற்றலைக் கெடுத்துவிடாதா? ஒழுங்கீனத்தை கொண்டு வராதா? என்று சிலர் கேட்கக் கூடும். அவர்களுக்கு நமது பதில்
இரண்டு.
1)
வகுப்பறைகள்
சத்தமாகத்தான் இருக்க வேண்டும் என்பதுதான் நல்ல வகுப்பறைக்கான நிபந்தனை என்று நாம்
ஒரு போதும் சொல்ல வில்லை. அதே நேரம் அமைதியை நிபந்தனையாக்க வேண்டாம் என்ற கோரிக்கையைத்தான் முன் வைக்கிறோம்.
2)
ஒருபோதும்
ஒழுங்கையோ, கற்றலையோ
இது ஒருபோதும் பாதிக்காது என்பதற்கு கீழ் வரும் சம்பவத்தை உதாரணமாகத் தருகிறோம்.
தோழர்
பொன்னீலன் அவர்கள் முதன்மைக் கல்வி அலுவலராக இருந்தபோது ஆண்டாய்விற்காக ஒரு பள்ளிக்குப்
போகிறார். அந்தப்
பள்ளியின் தலைமை ஆசிரியரும் இவரும் நல்ல தோழர்கள். அனைத்து வகுப்புகளையும்
முதன்மைக் கல்வி அலுவர்கள் ஆய்வு செய்வதில்லை. மாவட்டக் கல்வி
அலுவலர் சில வகுப்புகளையும் உடன் வந்திருக்கும் ஆசிரியர்கள் வேறு வகுப்பகளையும் ஆய்வு
செய்வார்கள். பொதுவாக பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளைத்தான்
முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்வார்கள்.
ஆனால்
தலைமை ஆசிரியரோடு இணைந்து பள்ளியை முற்றாகப் பார்வையிடுவார்கள். அதைத்தான் தோழர் பொன்னீலன்
அவர்களும் செய்கிறார். அனைத்து வகுப்புகளையும் சுற்ரிக் காட்டிய
தலைமை ஆசிரியர் ஒரு வகுப்பை மட்டும் அவருக்கு காட்டவில்லை.
தோழர்
பொன்னீலன் அவர்கள் அந்த வகுப்பை பார்த்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருக்க அதை
தட்டிக் கழிப்பதில் தலைமை ஆசிரியர் குறியாக இருந்திருக்கிறார். அவரது விடாப் பிடியான கோரிக்கைக்கும்
இவரது நழுவும் முயற்சிக்கும் இருவருக்கும் அவரவருக்கான நியாயங்கள் இருக்கவே செய்தன.
அப்படி
ஒரு வகுப்பே இல்லை போலும்.
இல்லாத வகுப்பை கணக்குக் காட்டி ஒரு ஆசிரியரைக் கூடுதலாக வைத்திருக்கிறார்
போல. எனில், ஒரு ஆசிரியருக்கான சம்பளம்
அரசுக்கு இழப்புதானே. இது நிரவலுக்கான விஷயமாச்சே என்ற அதிகாரியின்
சிந்தனை தோழருக்கும் இருந்திருக்க்க் கூடும். அந்த வகுப்பு ஒரு
உடந்த கட்டிட்த்திற்குள் நடக்கிறது அதைப் போய் அதிகாரியிடம் காட்டுவதா என்ற தயக்கம்
தலைமை ஆசிரியருக்கு.
அழுத்தம்
அதிகமாகவே வேறு வழியின்றி அந்த வகுப்பிற்கு அழைத்துப் போகிறார். போனால் கே என்று சத்தம்
வகுப்பில். தலைமை ஆசிரியர் வகுப்பை நெறிப் படுத்த வேண்டும் என்ற
உந்துதலில் வேகம் கூட்டினார். தோழர் பொன்னீலனோ தலைமை ஆசிரியரை
வரவேண்டாமென்று தடுத்துவிட்டு தான் மட்டும் சென்று வகுப்பில் என்ன நடக்கிறது என்று
ஜன்னல் வழியாக யாரும் அறியாமல் கண்காணிக்கிறார். தலைமை ஆசிரியர்
தலையிலடித்துக் கொண்டும் தன் நேரத்தை நொந்த படியேயும் அங்கேயே நிற்கிறார்.
உள்ளே
ஒடிசலான மிக இளைய ஆசிரியை வரைபடம் நடத்திக் கொண்டிருக்கிறார். அதுதான் இவ்வளவு சத்தம்.
சுவறில்
இந்திய வரைபடம் தொங்குகிறது.
ஆசிரியர் ஒரு மாணவனை பெயர் சொல்லி விளிக்கிறார். அவனிடம் ‘நீ மும்பை போக வேண்டும். எதில் போகிறாய். ரயிலா? விமானமா?’
என்கிறார். ரயில் என்கிறான். அவனிடம் ஒரு குச்சி தரப் படுகிறது. ‘ சரி, மும்பைக்கு போ’ என்கிறார். அந்தக்
குழந்தை ‘கூ…. ஜிக்கு புக்கு ஜிக்கு புக்கு’
என்றபடியே ரயிலில் பயணித்து மும்பையைத் தொடுகிறான். ஓ என்று சத்தமிட்டுக் கொண்டாடுகிறது வகுப்பு.
அடுத்த
பையன் விமானத்தில் காஷ்மீர் போனான்.
இன்னுமொருவன் காரில் கொல்கொத்தா போனான். இப்படியே
ஒவ்வொரு மாணவனும் ஒவ்வொரு ஊராகப் போனார்கள்.
இப்போது
அந்த வரைபடம் கழற்றப் படுகிறது.
ஊர் பெயர்கள் இல்லாத வெற்று வரைபடம் ஒன்று அங்கு மாட்டப் படுகிறது.
ஆசிரியை
மும்பை போன மாணவனை இந்தமுறை பைக்கில் மும்பைக்கு போகப் பணிக்கிறார். அவரும் பைக்கை கிளப்பிக்
கொண்டு போகிறார். ஆனால் மும்பைக்கு பதில் காஷ்மீர் போகிறார்.
சிரிப்பால் அதிர்கிறது வகுப்பு. ‘ டீச்சர் ரமேசு
காஷ்மீர் போயிட்டான் டீச்சர்’ என்று வகுப்பே இரண்டு படுகிறது.
’அவன் போன பைக் சரியில்ல. ஏண்டா ரமேசு’ என்றவாறே சரியான இடத்தை அவனுக்கு கற்பிக்கிறார் ஆசிரியை. இப்படியே நகர்கிறது ஆய்வு பற்றிய எந்தக் கவனமும் இல்லாமலே அந்த வகுப்பு.
அதற்கு மேல் நிற்க முடியாதவராக திரும்புகிறார் பொன்னீலன். அலுவலகம் வரும் வரைக்கும் ஏதும் பேச வில்லை. அந்த வகுப்பில்
ஏதோ தவறு நடந்திருப்பதாக தலைமை ஆசிரியருக்குப் படுகிறது.
ஆசிரியர்
கூட்டம் தொடங்கியதும், குறைகளை புன்னகையோடும் ஒரு தந்தைக்கே உரிய பாங்கோடும் அடுக்குகிறார்.
அதை எப்படி சரி செய்வது என்றும் ஆலோசனைகளை தருகிறார்.
இறுதியாக
அந்த குறிப்பிட்ட வகுப்பைப் பற்றி பேசுகிறார். ஆசிரியை எழுந்து நிற்கிறார். ’ மேப் ட்ராயிங்க இப்படி நட்த்தலாம்னு எனக்குத் தெரியாது மகளே. இப்படியே நடத்து. இப்படித்தான் கற்றல் கல கலப்பாக இருக்க
வேண்டும்’ என்று பாராட்டினார்.
கற்றலை
சேதப் படுத்தாமல் மேம்படுத்தக் கூடிய கலகல வகுப்புகளே இந்த நொடியின் தேவை.
அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் தோழரே, நானும் நமது கல்வி முறையை எண்ணி மிகவும் வருந்தியிருக்கிறேன். வெள்ளையர்கள் வெளியேறி 70 ஆண்டுகள் ஆனபின்னும் இன்னும் நாம் அவர்களை ரிப்பன் பிரபு, மவுண்ட்பேட்டன் பிரபு என்றுதான் அழைக்கிறோம். அடிமைகள்தான் ஆள்பவர்களை பிரபு என்று அழைப்பார்கள். இதைக்கூட மாற்ற முடியாமல்தான் நமது அரசு இருக்கிறது.
ReplyDeleteவாழ்க்கைக்கு தேவைப்படும் கல்வியை கொடுக்க வேண்டும். நமது உண்மையான வரலாற்றை குழந்தைகளுக்கு சொல்லித்தரவேண்டும். வெள்ளையர்கள் புகழ் பாடும் இந்த வரலாறை மாற்ற வேண்டும். முதலில் ஆசிரியர்களுக்கு அந்த ஞானம் வேண்டும். கொஞ்ச நேரம் கிடைத்தால் கூட நமது உண்மையான வரலாறை மாணவர்களுக்கு தகவலாக சொல்லிவிட வேண்டும்.
'நீர்வழிச் சாலை' என்ற ஒரு தொடரை நான் எழுதியபோது 'நாம் இப்படிஎல்லாம இருந்தோம் என்று நிறைய பேர் கேட்கிறார்கள். நமக்கு இவ்வளவு அறிவிருந்ததா? என்று கேட்கிறார்கள். நமக்கு அறிவே கிடையாது ஆங்கிலேயர்கள் வந்துதான் எல்லாமே கற்றுத் தந்தார்கள் என்றுதான் இன்றைய இளைஞர்கள் நினைக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய முரண்.
ஆசிரியர்கள் செய்யத் தவறிய இந்த செயலை ஓரளவுக்கு சமூக வலைதளங்கள் செய்கின்றன என்பது ஆறுதலான விஷயம்.
த ம 3
வணக்கம் தோழர். நமக்கான வேலை நிறைய இருப்பதாகவே படுகிறது.
Deleteஅந்த ஆசிரியைக்கு தலை வணங்குகிறேன்! பாராட்டுகிறேன்! எட்டு வருடங்கள் முன்பு தனியார் பள்ளியொன்றில் பணியாற்றிய போது எல் கே.ஜி வகுப்பு பாடம் எடுக்கிறேன்! நானே எழுதிய சிறுவர் பாடலொன்றை போர்டில் எழுதி குழந்தைகளோடு பாடிக் கொண்டிருந்த போது தலைமை ஆசிரியை வந்தார். ஏன் இந்த காட்டு இறைச்சல்! வகுப்பை கண்ட்ரோலா வச்சுக்க மாட்டேங்கிறீங்க? என்று கத்தினார். மறுநாள் நான் அந்த பள்ளியை விட்டு விலகிவிட்டேன்! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
ReplyDeletemy salute to you comrade
Delete2016 தைப்பொங்கல் நாளில்
ReplyDeleteகோடி நன்மைகள் தேடி வர
என்றும் நல்லதையே செய்யும்
தங்களுக்கும்
தங்கள் குடும்பத்தினருக்கும்
உங்கள் யாழ்பாவாணனின்
இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!
மிக்க நன்றிங்க தோழர்
Delete