Tuesday, January 12, 2016

9. மழை விடுமுறைகளுக்குப் பின்னால்…

இதுமாதிரி ஒரு மழை நாளில் ஒரு நூறு ஒன்றாம் வகுப்பு குழந்தைகளிடம் அத்தைக்குப் பிறந்திருக்கிற தம்பிப் பாப்பாவிற்கு என்ன பெயர் வைக்கலாம்?’ என்று கேட்டொமெனில் அதில் எண்பது குழந்தைகளேனும் சட்டென ரமணன்என்று சொல்வார்கள்.
கல்வி அமைச்சரின் பெயரையோ, பள்ளிக் கல்வித்துறை இயக்குனரின் பெயரையோ அறிந்து வைத்திருக்காத மாணவர்களுக்கு சென்னை வானிலை நிலைய இயக்குனர் பெயர் ரமணன் என்பது நன்கு தெரியும்.
குழந்தைகளைப் பொறுத்த வரையிலும் மழைக்காலத்து தொலைக்காட்சி கடவுளாகவே ரமணன் இருக்கிறார்.
அவர்களைப் பொறுத்தவரை ரமணன் வந்தால் மழை வரும். மழை வந்தால் விடுமுறை கிடைக்கும். குழந்தைகளைப் பொறுத்தவரை ரமணன்  மழை  விடுமுறைஎன்பது அடித்தல் திருத்தல் இல்லாத எளிய சமன்பாடு.
ரமணனுக்காகத் தவமிருந்து அவர் தோன்றியதும் கரங்களைக் கூப்பியபடியும் கண்களை மூடியபடியும் மழை வேண்டும்’, ‘மழை வேண்டும்என்று அவரைக் கடவுளாய் பாவித்து வேண்டி இறைஞ்சும் குழந்தைகளை நான் பார்த்திருக்கிறேன். என் பிள்ளைகள் கிஷோரும், கீர்த்தனாவும்கூட இப்படி செய்தவர்கள்தான்.
குழந்தைகளைப் பொறுத்தவரை விடுமுறை என்பது குதித்து, ஆர்ப்பரித்துக் கொண்டாடக்கூடிய ஒரு விஷயம்தான். ‘Rain Rain go away’ என்று குழந்தைகள் பள்ளியில் பாடுவதற்கும் அதையே வீட்டில் பாடுவதற்கும் நேரெதிர் பொருளைக் கொள்ளத் தெரியாதவன் குழந்தைகளின் உளவியலை அறியாதவன். குழந்தைகள் அப்படி ஏன் விடுமுறைக்காகத் தவமிருக்கின்றனர்?
வீடு வெள்ளத்தில்
மிதந்தாலும்
எல்லா வயது மாணவர்களும்
விரும்புவது விடுமுறையைத்தான்
மழையை விட
கனமாக இருப்பது
கல்விதானாம்
என்று இனிய தோழர் ஜீவகுமார் தனது முகநூல் நிலைத் தகவலில் எழுதுகிறார். இன்றைய நீர்த்துப் போன கல்விக் கட்டுமானத்தின்மீது அவருக்கு இருக்கும் கோபத்தின் விளைவாகவே நாம் இந்தக் கவிதை நறுக்கை கொள்ள இயலும், கொள்ள வேண்டும். வீடு வெள்ளத்தில் மிதப்பது குறித்துக் கூட கவலைப்பட விடாமல் பள்ளிக்குப் போக வேண்டாம் என்பதில் இருக்கிற மகிழ்ச்சி குழந்தைகளைக் கொண்டாட வைக்கிறதே இந்தப் பாழாய்ப் போன கல்வித் திட்டம் என்கிற அவரது கோபத்தின் நீண்டகால ரசிகன் நான். கால் நூற்றாண்டிற்கும் மேலாக பள்ளி ஊழியத்தில் இருக்கும் எனக்கு அவரது கோபம் நியாயமற்றது என்று நிராகரித்துவிட முடியாது. மாணவனுக்கும், வாழ்க்கைக்கும், இந்தச் சமூகத்திற்கும் சற்றும் தொடர்பற்ற  ஒரு கல்வியைத்தான் குழந்தைகளுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இவற்றை ஒன்றோடு ஒன்றாய் இணைத்துப் பிணைப்பதற்கான ஒரு கல்விக்காக களத்தில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கும் ஒரு களப் போராளியின் கோபமாகவே ஜீவகுமாரின் கவிதையை என்னால் உள்வாங்க முடிகிறது. 
குழந்தைகள் குதூகலத்தோடு கொண்டாடும் ரமணன்  மழை  விடுமுறைஎன்கிற இந்த சமன்பாட்டிற்குள் நீண்ட முடை நாற்றம் வீசக்கூடிய ஒரு சுரண்டல் அரசியல் இருக்கிறது.
மழையினால் கிடைக்கும் விடுமுறைக்காக எல்லா வர்க்கத்துக் குழந்தைகளுமே மழைக்காகத் தவமிருக்கிறார்களா? எல்லாக் குழந்தைகளுமே ரமணனை கதாநாயகனாக பாவிக்கிறார்களா? என்றால் ரமணன் என்றால் யாரென்றே தெரியாத குழந்தைகளும் இருக்கவே செய்கிறார்கள்.
கமர்கட்
காட்பரீஸ்
இனிப்பிலும் இருக்கிறது
வர்க்க பேதம்
என்பார் வல்லம் தாஜுபால். கமர்கட்டும் இனிப்புதான், காட்பரீசும் இனிப்புதான். ஆனால் இரண்டும் வெவ்வேறு வர்க்கத்து குழந்தைகளுக்கானவை. பணக்காரக் குழந்தையால் கமர்கட்டும் சாப்பிட முடியும், காட்பரீசும் சாப்பிட முடியும். ஆனால் நள்ளிரவிற்குப் பிந்திய ஏதோ ஒரு பொழுதில் வரும் கனவில்கூட உழைக்கும் வர்க்கத்துக் குழந்தையால் காட்பரீசை சுவைக்க முடியாது.
இனிப்பை போலவே மழையும் அப்படி ஒன்றும் எல்லோருக்குமானது அல்ல. சிலருக்கு வெக்கையைத் தணித்து மகிழ்விக்கிற மழை சாக்கே கதவாய்த் தொங்கும் சிலரது குடிசைகளை அழித்து அவர்களை நடுத் தெருவிலே நிறுத்துகிறது.
இன்வெர்ட்டரும், ஜெனரேட்டரும், நான்கைந்து நாட்களுக்குத் தேவையான காய்கறிகளும், இழுத்துப் போர்த்திக் கொள்ள கம்பளியும் இருக்கிற மேல்தட்டு மற்றும் மத்தியதர மக்களால் மட்டுமே மழையை ரசிக்க முடிகிறது என்பது மாதிரி (அவர் எழுதியதன் சாரம் மட்டுமே இது) முகநூல் பதிவர் கமலி பன்னீர்செல்வம் தனது நிலைத் தகவல் ஒன்றில் எழுதுகிறார். இது எவ்வளவு உண்மையானது என்பதை யாரும் யாருக்கும் சொல்லிப் புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை.
சாக்கடையில் இறங்கி பணியாற்றிய மக்களை மூக்கை பிடித்தபடியே கடந்து போனவர்களின் வீட்டிற்குள் சாக்கடையை கொண்டுவந்து சேர்த்தது மழைஎன்று முகநூலில் முகத்தில் அறைவது மாதிரி எழுதுகிறான் தம்பி ஸ்டாலின் தி.
இன்றைய பெருமழையை இயற்கைப் பேரிடர் என்ற வகையில் கொள்ள வேண்டும். அப்படித்தான் இது புரிந்து கொள்ளவும் படுகிறது. எனது வாழ்நாளில் இப்படியான ஒரு மழைப் பேரிடரை இரண்டாவது முறையாக இப்போது பார்க்கிறேன். 1977 நவம்பரில் ஒருமுறை இதுமாதிரி பேய்த்தனமாக கொட்டித் தீர்த்தது.
ஆக, மழையினால் மேல்தட்டுத் திரளும் மத்தியத்தரத் திரளும் இந்த அளவிற்கு பாதிக்கப்படுவது என் வாழ்நாளில் இது இரண்டாவது முறையாகும்.
வழக்கமாக பாதிப்புகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டும் விமர்சித்துக் கொண்டும் தங்களால் முடிந்த உதவிகளை பாதிக்கப் பட்டவர்களுக்கு வழங்கிக் கொண்டும் இருந்த மழையின் ரசிகர்கள் இப்போது மழையினால் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
தம்பி ஸ்டாலின் சொல்கிற மாதிரி வழக்கமாக சாக்கடை அள்ளக் கூடிய மக்களைப் பார்த்தாலே ஒரு விதமான அசூசையோடு மூக்குகளைப் பொத்தியவாறே கடந்துபோகிற ஜனத்திரள் இவர்கள். இந்தமுறை அள்ளிக் கொட்டக்கூட முடியாதாடி ஒரு வாரமாக இவர்கள் வீட்டு பூஜை அறை வரைக்கும் சாக்கடைத் தண்ணீர் புகுந்து முழங்கால் அளவு நிற்கிறது.
வழக்கமாக சாக்கடையிலும் சாக்கடை ஓரத்திலுமாக தங்களது வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிற உழைக்கிற ஜனத் திரள் ஒன்று இருக்கிறது. இவர்களின் பெரும்பான்மை வீடுகளுக்கு கதவே இருக்காது. ஒரு சாக்கை கதவு மாதிரி தொங்க விட்டுருப்பார்கள். மண் சுவர்கூட எல்லா வீடுகளிலும் இருக்காது. கீற்று அல்லது ஏதோ ஒரு தடுப்பையோ சுவர் மாதி நிறுத்தி வைத்திருப்பார்கள். இவர்களைப் பொறுத்தவரை எல்லாமே ஏதோ போலகளால்தான் நிரம்பியிருக்கும்.
உணவு போல ஏதோ ஒன்றை சாப்பிடுவார்கள். உடை போல ஏதோ ஒன்றை உடுத்துவார்கள். செருப்பு மாதிரி ஏதோ ஒன்றை அணிந்து கொள்வார்கள். சிலருக்கு இந்த போலக்கள் கூட இருக்காது. அவர்கள் ஏதுமற்று நடைபாதைகளில் கிடப்பார்கள். இவர்கள் மீது யார் வேண்டுமானாலும் வாகனமேற்றிக் கொல்லலாம். எந்த விதமான கேள்வி கேப்பாடும் இருக்காது. அப்படி ஏதேனும் நிகழும் பட்சத்தில் அது குறித்த கோப்புகள் காவல் நிலையங்களிலிருந்து ஒன்று காணாமல் போய்விடும். அல்லது தமக்குத் தாமேபற்ற வைத்துக் கொண்டு எரிந்து போகும்.
இவர்கள் வாழ்க்கையை நாசமாக்கி கசக்கிப் போட இப்படி மூன்று மாதங்களில் கொட்டித் தீர்க்க வேண்டிய மழை மூன்றே நாளில் பெய்ய வேண்டிய அவசியம்கூட இல்லை. ஒரு சன்னமான இரண்டு மணிநேர மழையே போதும் இவர்களது வாழ்க்கையைப் புறட்டிப்போட.
ஒரு இரண்டு அல்லது மூன்று மணிநேர சன்னமான மழையே இவர்களை ஏதுமற்றவர்களாக்கி விடும். சுவர்களும் சுவர் போன்றவைகளும் காணாமல் போய்விடும். சட்டி முட்டி சாமான்களும் உடைகளும் அடித்துக் கொண்டு போய்விடும். ஒதுங்க இடமற்று உண்ண உணவற்று அனாதரவாக நிற்கும் இந்த ஜனங்களின் பிள்ளைகளா விடுமுறைக்காக ரமணனையும் மழையையும் எதிர்பார்க்க முடியும்.
மழை தனது பாதிப்பை எல்லோருக்கும் ஒரே மாதிரி வழங்குவதில்லை. சிலருக்கு மழைக் காலமும் பனிக்காலமும் சுகமானவை. அவற்றை எதிர்கொள்ளக் கூடிய நல்ல வீடுகளும், பயணிப்பதற்கான கார்களும் அவர்களிடம் இருக்கும். மழைக்குப் பயன்படுத்தவென்று பிரத்தியேகமான உடைகளும் காலணிகளும் அவர்களிடம் இருக்கும். அவர்களால் மழையை, பனியைக் கொண்டாட முடியும். இந்த அடித் தட்டு மக்களால் மழையையோ பனியையோ மட்டுமல்ல விடுமுறையைக் கூட ரசித்துக் கொண்டாட இயலாது.
ஒவ்வொரு மழையும் இந்தத் திரளின் எத்தனைக் குழந்தைகளின் அம்மாக்களை, அப்பாக்களை, உறவினர்களைக் காவு வாங்கியிருக்கிறது. எத்தனைக் குழந்தைகளை இந்த மழை யாருமற்ற அனாதைகளாக்கி பள்ளிக்கூடங்களில் இருந்து அப்புறப்படுத்தியிருக்கிறது. இந்த ஜனங்களின் எத்தனைப் பள்ளிக் குழந்தைகளை மழை கொன்று போட்டிருக்கிறது.
இந்த மக்களைத்தான் இந்த மழையும் பெருமளவு காவு கொண்டிருக்கிறது.
மழை விடுமுறையிலும் பேதங்கள் இருக்கவே செய்கின்றன. நச நசக்கும் மழையில் நனைந்து பள்ளிக்குப் போய் உடம்பைக் கெடுத்துக் கொண்டோ, தொற்றினை வாங்கிக் கொண்டோ தங்கள் குழந்தைகள் அவஸ்தைப் படக் கூடாது என்பதற்காக விடுமுறையை எதிர்பார்க்கும் பெற்றோர் ஒரு புறம். பள்ளிக் கூடம் இருந்தாலாவது தமது குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பார்களே என்று நினைக்கும் பெற்றோர் மறுபுறம்.
ஆக, மழை விடுமுறைக்கான ஆவல் என்பது பொது ஆவல் அல்ல.
மழை விடுமுறை என்பது மழை பெய்தால் மட்டுமே என்பதாக கொள்ளப் படுகிறது. விடுமுறை விட்டாங்க மழை நின்று விட்டது, பேசாமல் பள்ளிகளை வைத்திருக்கலாம்என்று  மக்கள் பேசுவதையும் அவ்வப்போது கேட்க முடிகிறது. சிலருக்கு படிப்பு வீணாகாதா இப்படி விடுமுறைகளை விட்டால் என்று கேட்கிறார்கள்.
அப்படியெல்லாம் எதுவும் நடந்து விடாது. எத்தனைநாள் விடுமுறை விட்டாலும் அத்தனை நாட்களும் ஏதோ ஒரு வகையில் ஈடு செய்யப்பட்டு விடும். சனிக்கிழமைகளில் பள்ளியை நடத்துவதன் மூலமாகவோ அல்லது வேறு விடுமுறை நாட்களைக் குறைத்துக் கொள்வதன் மூலமாகவோ இப்படி மழைக்காக விடப்பட்ட விடுமுறை நாட்கள் ஈடு செய்யப்படும்.
மழை நாட்களில் பள்ளி வைத்தாலும் பெரும்பாலான இடங்களில் கற்றல் கற்பித்தல் நடக்க வாய்ப்பில்லை. எனவே அன்று விடுமுறை விட்டு அதை பிரிதொரு மழையற்ற நாளில் ஈடு செய்வதென்பது கற்றலையும் கற்பித்தலையும் உறுதி செய்யும்.
எல்லாக் குழந்தைகளுக்கும் பள்ளிக்கு வருவதற்கான வாகன ஏற்பாடு இருக்கிறது என்று சொல்வதற்கில்லை. வரப்புகளின் வழியாகவும், காட்டாறுகளின் வழியாகவும் தரைப் பாலங்களைக் கடந்தும் வரக் கூடிய குழந்தைகள் ஏராளம் இருக்கிறார்கள்.
மழைக் காலங்களில் வயல் வரப்புகளின் வழியாகவும், காட்டாறுகளைக் கடந்தும் வரக் கூடிய குழந்தைகள் பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் கடித்தோ, அல்லது திடீரென வரக் கூடிய காட்டாற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டோ இறந்து போவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மழைக்காலங்களில் தரைப் பாலங்கள் வழுக்கிவிடும். இது மிகவும் ஆபத்தானது.
இந்தப் பெருமழையில் கடலூர் மாவட்டம் போல எந்த மாவட்டமும் பாதிக்கப் படவில்லை. பள்ளிக்கே குழந்தைகளால் வர இயலாது என்ற சூழ்நிலையிலும் அந்த மாவட்டத்தின் ஆட்சித் தலைவர் விடுமுறை அளிப்பதில் ஆரம்பக் கட்டத்தில் வெகுவாக சுணக்கம் காட்டியிருக்கிறார். பிறகு அவர் விடுமுறை விடுவதற்குள் குழந்தைகள் புறப்பட்டு வந்து விட்டனர். விடுமுறை என்று கேள்வி பட்டு வீடு திரும்பியிருக்கின்றனர். சென்ற ஆண்டு தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இது மாதிரி சிரமங்கள் தொடர்ச்சியாக நடந்ததையும் அவற்றிற்கு எதிராக பெற்றோர்கள் ஊடகங்களில் கொந்தளித்ததையும் பார்த்தோம். எனவே இது விஷயங்களில் மாவட்ட ஆட்சியர்கள் இன்னும் அதிகமாக கவனம் செலுத்த வேண்டுமாய் பணிவுடன் கோருவோம்.
மழைக்குப் பின்னாலும் அது தரும் விடுமுறைக்குப் பின்னாலும் கவனிப்பதற்கும் கவனம் குவிப்பதற்கும் களமாடுவதற்கும் ஏராளம் இருக்கின்றன என்பதையும் அருள் கூர்ந்து புரிந்து கொள்வோம்.

4 comments:

  1. சரியாக, முறையாக சுட்டிக்காட்டியுள்ளீர்கள். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க அய்யா

      Delete
  2. புரிந்துகொண்டேன் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க தோழர்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...