Sunday, March 16, 2025

இந்தக் குட்டிப் பெண்ணை தாயென்று சொல்லாமல்

பாரதிதாசனுக்கு பெரியார் மணியம்மை திருமணத்தில் உடன்பாடில்லை.

விமர்சனம் செய்தபடியேயும், மணியம்மையாரைத் திட்டியபடியேயும்தான் இருந்தார் அவர்.
ஆனால் அவரே ஒருமுறை, “இந்தக் குட்டிப் பெண்ணை தாயென்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது” என்று கேட்டார்.
அவர் சொல்வது எவ்வளவு உண்மை என்பது கீழ்வருவதை படித்தால் புரியும்.
தந்தை பெரியாரின் பெயரில் திருச்சியில் உள்ள ”பெரியார் ஈ.வெ.ரா” கல்லூரி ஏராளமான சமூகப் போராளிகளை உருவாக்கிய கல்லூரி.
அந்தக் கல்லூரிக்கு இடமும் ஓரளவு பொருளும் கொடுத்தது தந்தை பெரியார் என்று தெரியும்.
அந்த இடம் அவரது பூர்வீக சொத்து என்றுதான் நான் நினைத்திருந்தேன்.
02.03.1974 அன்று அந்தக் கல்லூரியில் அன்னை மணியம்மையார் ஆற்றிய உரையின் சுருக்கத்தை பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் வெளியிட்டுள்ள ”அன்னை மணியம்மையாரின் சிந்தனை முத்துக்கள்” என்ற நூலில் வாசித்தபோது வேறு ஒரு உண்மை புரிந்தது.
அந்த இடம் தந்தை பெரியாரின் பூர்வீக சொத்தல்ல. அன்னையின் வற்புறுத்ததலால் பெரியாரால் வாங்கப்பட்ட இடம் அது.
அன்னையார்தான் அந்த இடத்தை வாங்குவதற்காக பெரியாரை அழைத்து வந்திருக்கிறார்கள்.
அது காட்டுப்பகுதியாக இருந்ததால் அதை வாங்கும் எண்ணம் பெரியாருக்கு இல்லை.
அன்னைதான் பிடிவாதமாக நிற்கிறார்கள்.
”இங்கு வீடு கட்டி குடியிருக்க ஆசைப்படுகிறாயா ?” என்று கேட்கிறார் பெரியார்
இல்லை
பிறகு எதற்கு? எனக் கேட்கிறார்
அம்மாவோ இன்னும் பிடிவாதமாக நிற்கிறார்.
வாங்குகிறார்கள்.
ஒரு நாள் அந்த இடத்தில் பெண்குழந்தைகளுக்கு ஒரு கல்லூரி கட்டினால் என்ன என்று கேட்கிறார் அம்மா.
சரி என்கிறார்.
உடனே இருவரும் ஈரோட்டில் உள்ள “சிக்கைய நாயக்கர்” கல்லூரிக்கு போகிறார்கள்
அங்குள்ள ஆய்வகங்கள், கருவிகள், தளவாடங்கள் அனைத்தையும் பார்த்த பெரியார்,
இவ்வளவும் வாங்க நம்மிடம் உள்ள காசு போதாதே என்கிறார். இருவரும் யோசிக்கிறார்கள். இடத்தையும் முடிந்த காசையும் அரசிடம் கொடுத்து கல்லூரி கட்ட சொல்லலாம் என்று முடிவெடுக்கிறார்கள்.
அன்றைய முதல்வர் பக்தவச்சலம் சம்மதிக்கிறார்.
இப்படியாகத்தான் திருச்சி ஈ.வெ.ரா கல்லூரி வருகிறது.
02.03.1974 அந்தக் கல்லூரி விழாவிற்கு வந்த அன்னை குழந்தைகள் தேவையில்லாததற்கெல்லாம் போராட்டங்களில் ஈடுபட்டு படிப்பை வீணாக்குகிறார்கள் என்ற செய்தி கேட்டு பெரியார் கவலையோடே இருந்ததாக சொல்கிறார்.
இதன் பொருள் சமூகக் காரணங்களுக்காக போராடக்கூடாது என்பதல்ல என்பதையும் சொல்கிறார்.
அந்தத் தாயார் மரணமடைந்த தினம் இது.
வணக்கம் தாயே

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...