இந்த ஆண்டில் இதுவரை நான்கு மரணங்களைப் பார்த்தாயிற்று.
அதுபோக அம்மாவின் வயது 86, அம்மாயி வயது 103 என்பதால் இந்த இரண்டு இழப்புகளையும் கொஞ்சம் இயல்பாக எடுத்துக்கொள்ள முடிகிறது.
மற்ற இரண்டில் ஒன்று தற்கொலை, மற்றொன்று கொலை.
இருவரும் இப்போதுதான் முப்பதைக் கடந்திருக்கும் இளைய பிள்ளைகள்.
இந்த இரண்டு மரணங்களையும் ஜீரணிப்பதும் எளிதாக கடந்து செல்வதும் இயலாததாக இருக்கிறது.
எங்கள் கிழவிக்கான காரியத்திற்கான வேலைகளில் மூழ்கிக் கிடந்த நேரத்தில் தோழர் முத்தையாவிடம் இருந்து அழைப்பு.
துர்கா அச்சக உரிமையாளர் நண்பர் சரவணன் அவர்களின் மைத்துனர் சதீஷ் கள்ளக்குறிச்சியில் தற்கொலை செய்துகொண்ட தகவலைத் தருகிறார்.
சரவணனும் இறந்துபோன சதீஷின் சகோதரியும் கள்ளக்குறிச்சி வந்துகொண்டிருப்பதாகவும் கூறுகிறார்.
கள்ளக்குறிச்சி எங்கு இருக்கிறது என்பதையே அவர்கள் நிலவரைபடம் பார்த்துதான் வந்துகொண்டிருக்கிறார்கள் என்றும் அனைத்து நடைமுறைகளையும் முடித்துக்கொடுத்து உடலை விரைவாக வாங்கிக் கொடுத்து அனுப்பிவைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறார்.
உடனே கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் CPM செயலாளர் தோழர் ஜெய்சங்கரைத் தொடர்புகொண்டு விவரங்களை சொல்கிறேன்.
தான் வேறு ஒரு முக்கியமான வேலையில் இருப்பதாகவும் கள்ளக்குறிச்சி ஒன்றிய செயலாளர் தோழர் ஏழுமலையைத் தொடர்புகொள்ளுமாறும் அவர் சொல்கிறார்.
நான் ஏழுமலையைத் தொடர்புகொள்வதற்குள் ஜெய்சங்கரே அவரைத் தொடர்புகொண்டு விவரத்தை சொல்லி இருக்கிறார்.
”வரும் தோழர் சரவணனுக்கு கள்ளக்குறிச்சியில் யாரையும் தெரியாது தோழர்…” என்று முடிப்பதற்குள்
“என்ன தோழர், இப்படி சொல்றீங்க. எத்தனைபேர் இருக்கோம் இங்க. தோழர் வரட்டும். நாங்க பார்த்துக்கறோம். நீங்க பாட்டி காரியத்தைப் பாருங்க.” என்று இடைமறித்த ஏழுமலை சரவணனுடைய அலைபேசி எண்ணை வாங்கிக் கொள்கிறார்.
கள்ளக்குறிச்சி தோழர் சுதாவை அழைத்து விவரத்தை சொல்லி கூடவே இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அரைமணி நேரம் கழித்து சரவணனோடு பேசுகிறேன்.
தோழர் ஏழுமலையும் சுதாவும் பேசியதாகவும் கொஞ்சம் நம்பிக்கை வந்திருப்பதாகவும் சொல்கிறார். ஒரு ஆளாகமட்டும் அவர்கள்கூட இருந்தால் போதும் மற்றதை தோழர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று கூறுகிறேன்.
சரவணனை காத்திருந்து சந்தித்த தோழர்கள் காவல் நிலையத்தில் புகார்கொடுப்பதில் இருந்து, மருத்துவமனை டீனைப் பார்ப்பதில் இருந்து, ஆம்புலன்சிற்கு ஏற்பாடு செய்வதுவரைக்கும் அனைத்தையும் செய்கிறார்கள்.
“ஏம்பா… யாருப்பா இவங்க. ஏம்பா இப்படி யாருன்னே தெரியாத எனக்காக இவ்வளவு மெனக்கெடறாங்க. செத்தவனுக்காககூட அழல. இவங்களோட அக்கறை அழவைக்குதுப்பா…”
என்று அலைபேசியில் தழும்புகிறார் சரவணன்.
எமோஷனாகாதீங்க, கட்சித் தோழர்கள் அப்படித்தான் இருக்கனும் என்று சொல்கிறேன்.
அடுத்த நாள் மார்ச்சுவாரிக்குப் போகிறேன். ஏழுமலை, சுதா, இன்னும் சில தோழர்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள்.
ஆம்புலன்ஸ் தாயாராக நிற்கிறது.
ஓடிவந்து கட்டிப்பிடித்துக் கொள்கிறார் சரவணன்.
அங்கு நின்றுகொண்டிருந்த இறந்துபோன பிள்ளையின் சகோதரியிடம் “இவர்தான் எட்வின்” என்று அறிமுகப்படுத்துகிறார்கள்.
ஓடிவந்த அந்தக் குழந்தை “அப்பா” என்று கத்தியவாறு என் காலில் விழுந்து கதறுகிறாள்.
கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்பதால் தடுக்க யாராலும் இயலவில்லை. குனிந்து தூக்குகிறேன்.
“என்ன சாமி இது…” என்று நானும் விசும்புகிறேன்.
நீங்க செஞ்ச உதவிக்காக காலுல விழலப்பா. நீங்க கம்யூனிஸ்ட்தான. நீங்க இவன மாதிரி சின்னப் பசங்ககிட்ட போய் இவனமாதிரி ஆன்லைன் கேம்ப்ளிங் ஆடாதிங்கன்னு சொல்லுங்கப்பா…” என்று கதறுகிறாள்.
பார்க்கிறேன் , சரவணன், அவரது தம்பி, ஏழுமலை, சுதா என்று எல்லோருமே அழுதுகொண்டிருக்கிறார்கள்
எல்லோருக்குமாகப் போராடுவது மட்டுமல்ல யாருக்காவும் அழுவதும்கூட கம்யூனிஸ்டுகளின் லட்சணம்தான்.
அந்தக் குழந்தை எல்லோரிடமும் பேசச் சொன்னாள். அதை செய்ய வேண்டும்.
செத்துக் கிடக்கும் அவளது தம்பி பெயர் சதீஷ். வயது 31. கள்ளக்குறிச்சி இந்தியன் வங்கியில் துணை மேலாளர்.
கைநிறையசம்பளம். வங்கி நண்பர்களிடம் விசாரித்ததில் அற்புதமான ஊழியர். வங்கியின் மிகச்சிறந்த ஊழியர்களில் அவரும் ஒருவர்.
ஏதோ ஒருவகையில் இணையச் சூதாட்டத்தில் விழுந்திருக்கிறார். கடன் வருகிறது. தோழர் சரவணன் கடனில் இருந்து அவரை மீட்கிறார்.
மீண்டும் சூதில் சிக்குகிறார். மீண்டும் கடன்.
இந்த இளவயதில் விவாகரத்தாகிறது. உளைச்சல்…,
உளைச்சல் இறுதியாக தற்கொலையில் வந்து முடிந்திருக்கிறது.
இணையச் சூது கொடூரமானது.
“ப்ளீஸ்… சின்னப் பசங்ககிட்ட பேசுங்கப்பா.
சின்னப் பசங்க சூதாட்டத்தால செத்துடக்கூடாதுப்பா.
நீங்க கம்யூனிஸ்ட்தான பேசுங்கப்பா”
என்ற அந்தக் குழந்தையின் குரல் என்னைப் பிசைந்துகொண்டே இருக்கிறது.
பேசவேண்டும்.
உரத்துப் பேசவேண்டும்.
ஓய்வற்றுப் பேசவேண்டும்.
அடுத்தது
17.01.2025 அன்று காலை கைகளத்தூரில் நடந்த கொலை. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செயலாளார் தோழர் சாமுவேல்ராஜோடு போகிறோம்.
முதல் நாளே எங்கள் மாவட்டச் செயலாளர் தோழர் ரமேசும் மாவட்டக்குழுத் தோழர் சக்திவேலும் அங்கு சென்றுவிட்டனர்.
அகப்படுகிறவர்களிடமெல்லாம் விசாரிக்கிறோம். அந்தக் கொலைக்கான காரணம் என்னவென்று முழுவதுமாகத் தெரியவில்லை.
செத்துப்போன மணிகண்டனும் அவனைக் கொலை செய்த தேவேந்திரனும் ஒரே முதலாளியிடம் வேலைபார்க்கும் ஓட்டுநர்கள்.
இருவருக்கும் தொழில் ரீதியாக அவ்வப்போது சண்டை வந்து மறையும் என்று சொல்கிறார்கள்.
சம்பவம் நடந்த அன்று காலை ஒரு தேநீர்க் கடையில் நின்று தேநீர் குடித்துக் கொண்டிருக்கிறார்கள் தேவேந்திரனும் மணிகண்டனும்.
அப்போது அந்தப் பக்கமாக வந்துகொண்டிருந்த பூமாலையை
”பூமாலண்ணே டீ சாப்பிடலாமா?” என்று கேட்டிருக்கிறான் மணிகண்டன்.
அப்போதுதான் தேநீர் குடித்ததாகக் கூறி கடந்து போகிறார் பூமாலை.
அவர்கள் இருவரும் அவனும் வேலைபார்க்கும் இடத்தில்தான் பூமாலையும் வேலை பார்க்கிறார்.
ஏற்கனவே அவர்களுக்குள் இருக்கும் பிரச்சினைகளை மனதிற்குள் ஓடவிட்ட தேவேந்திரன்,
“ஏண்டா எவ்வளவு தைரியம் இருந்தா குடியான மனுஷன நீ பேர்சொல்லிக் கூப்பிடுவ?” என்று சண்டைக்குப் போயிருக்கிறான்.
கூப்பிடத்தான பேரு என்று அவனும் மல்லுக்கு நிற்க கொஞ்சம் தள்ளுமுள்ளு நிகழ்ந்திருக்கிறது.
அதன்பிறகு காவலர் ஸ்ரீதரோடு வண்டியில் வந்துகொண்டிருந்த மணிகண்டன் வழியில் அமர்ந்திருந்த தனது முதலாளியைப் பார்த்ததும் இறங்கியபோது தேவேந்திரன் கழுத்தை அறுத்துக் கொன்றதாக தகவல் வருகிறது.
காலையில் டீக்கடையில் அவர்களுக்கிடையே நடந்த தள்ளுமுள்ளு உண்மை என்றே எல்லோரும் சொல்கிறார்கள்.
மணிகண்டனை தேவேந்திரன் கொன்றதையும் அப்போது அந்தக் காவலர் உடன் இருந்ததையும் எல்லோரும் சொல்கிறார்கள்.
அந்த இடத்தில் எப்படி அந்த காவலர் வந்தார் என்பதற்கான காரணம் தெளிவாக இல்லை.
1) அன்று காலை சாதியின் பெயரால் இருவருக்கும் தள்ளுமுள்ளு நடந்திருக்கிறது
2) வழக்கமாக கஞ்சா போதையிலேயே இருக்கும் தேவேந்திரன் அப்போதும் கஞ்சா போதையில்தான் இருந்திருக்கிறான்
சாதியும் கஞ்சாவும் விரவிக் கிடக்கிறது என்பது உண்மை.
இதை மறுத்து முட்டுக் கொடுக்காமல் இரண்டிற்கெதிராகவும் நடவடிக்கை எடுப்பதுதான் திராவிடத்தின் கூறு என்பதை மாநில அரசு இப்போதாவது உணர்ந்து கொள்ளவேண்டும்.
காக்கை
பிப்ரவரி 2025
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்