நீங்கள் வந்துதான் இதற்கு உயிர்கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதைத்தவிர வேறு வழியில்லை. அப்படி மன்னிப்புக் கேட்பதால் எங்களுக்கு ஒன்றும் நட்டமில்லை. பெரிய காரியம் கெட்டுப்போகுமே என்றுதான் கவலைப்படுகிறோம்” என்று பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப்பும் கேசவமேனனும் அனுப்பிய கடிதம் பெரியார் கைகளுக்கு 12.04.1924 அன்று வந்தபோது அவர் பண்ணைபுரத்தில் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அவர் வயிற்று வலியால் சிரமப்பட்டுக் கொண்டிருந்ததாக 12.12.2024 நாளிட்ட ”விடுதலை” தலையங்கம் சொல்கிறது. அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு ஈரோடு செல்கிறார். தனது வயிற்றுவலிக்கான சிகிச்சைக்காக சென்னை செல்வதாக நாகம்மையாரிடம் பொய் சொல்லிவிட்டு புறப்பட்டவர் அடுத்தநாளே அதாவது 13.04.1924 அன்று வைக்கம் வந்து சேர்கிறார்.
பன்னிரெண்டாம் தேதி செய்தி வருகிறது உடனே புறப்பட்டு 13 ஆம் தேதி வைக்கம் வருகிறார் என்று மேலோட்டமாகப் பார்த்தால் இது ஒரு சாதாரண செய்தி. அப்போது அவர் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர். பண்ணைபுரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் இருக்கிறார்.
நிகழ்ச்சிகளை ஒத்திவைக்க வேண்டும், அல்லது மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்
தன்னிடம் இருக்கும் கட்சியின் மாநிலப் பொறுப்பை தான் வரும் வரைக்கும் பார்த்துக் கொள்ளுமாறு பொறுப்பான இன்னொருவரிடம் மாற்றிக்கொடுக்க வேண்டும்
பண்ணைபுரத்தில் இருந்து ஈரோட்டிற்கு சென்று வீட்டில் சொல்லிவிட்டு தனக்கான துணிகளை, மருந்துகளை மற்ற பொருட்களை எடுத்துசெல்ல வேண்டும்
ஈரோட்டில் இருந்து வைக்கம் செல்ல வேண்டும்
இத்தனை காரியங்களும் 24 மணிநேரத்தில் நடந்தேறிவிட்டன. தீராத வயிற்று வலியோடு இருந்த ஒரு மனிதர் இவ்வளவு விரைவாக இத்தனை காரியங்களையும் செய்துமுடிக்கிறார் என்றால் அந்தக் காரியத்தின்மீது அந்த மனிதருக்கு எப்படியொரு அக்கறை இருந்திருக்கும் என்பதை நம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது.
இவ்வளவு விரைவாக, தான் வகித்துக்கொண்டிருந்த மாநிலத் தலைவர் பொறுப்பைக்கூட தற்காலிகமாக இன்னொருவரிடம் ஒப்படைத்துவிட்டு செல்லவேண்டிய அளவிற்கு வைக்கத்தில் இருந்த பிரச்சினைதான் என்ன?
அன்றைய தேதியில் கேரளாவில் சாதியக் கொடுமைகள் உச்சத்தில் இருந்தன. நம் மண்ணில்கூட உயர்ந்த சாதிக்காரனாக தன்னை நினைத்துக் கொண்டிருந்தவன் தன்னைவிட தாழ்ந்த சாதிக்காரன் என்று தான் கருதுகிற மனிதனைத் தொடமாட்டான். இது தீண்டாமை. ஆனால் கேரளாவில் கீழானதாகக் கருதப்படுபவன் மேலானவனாகக் கருதப்படுபவன் பார்வையில் படுவதே குற்றம்.
தீண்டுதல் ஒரு பாவம் என்று நம் மண்டையில் ஏற்றி வைத்திருந்தார்கள். அவர்களைத் தீண்டுவது ஒரு பாவச்செயல் என்று பயந்து அவர்களை நாம் தீண்டுவதை மட்டுமல்ல தவறுதலாக அவர்களது நிழலும் நம்மைத் தீண்டிவிடாமல் பார்த்துக் கொண்டோம். அவர்களைத் தீண்டுதல் பாவம் அல்லது குற்றம் என்று நமக்கு அவர்கள் கற்பித்ததற்கு எதிர்வினைதான் தீண்டாமை (Untouchability) ஒரு குற்றம் என்ற இன்றைய சட்டம்.
தீண்டாமையே ஒரு குற்றம் என்றால் அவர்கள் பார்வையில் படுவதே குற்றம் என்று கேரளத்தில் அன்றைக்கு இருந்த நடைமுறையை என்னவென்று சொல்வது.
1924 வரைக்கும் வைக்கத்தில் உள்ள சில தெருக்களில் ஆதிக்க சாதியினரால் தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லப்பட்டவர்களான ஈழவர்கள், தீயர்கள், புலையர்கள் நடப்பது தடை செய்யப்பட்டிருந்தது. இருபது அடி சாலையைக் கடந்து போனால் இவர்கள் பொருட்கள் வாங்க வேண்டிய கடைகள் இருக்கும். ஆனால் இவர்கள் அந்த சாலையைக் கடக்க முடியாது. இருபது அடி தூரத்தில் இருக்கும் கடைகளுக்குப் போக இவர்கள் இரண்டு கிலோமீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு போக வேண்டும். கிட்டத்தட்ட கேரளம் முழுக்க இதுதான் நிலை.
இந்த நிலையில் மார்ச் 1925 இல் மன்னருடைய பிறந்த நாள் வருகிறது. எனவே அரண்மனையில் ஒரு பிரமாண்டமான விழா ஏற்பாடாகிறது. அரண்மனைதான் நீதிமன்றமும் என்பதால் ஒரு வழக்கிற்காக அரண்மனைக்கு சென்றுகொண்டிருந்த மாதவன் என்ற ஈழவ வழக்கறிஞரை அரண்மனை தீட்டுப்பட்டுவிடும் என்று தடுத்து நிறுத்துகிறார்கள்.
டி.கே மாதவன், கே.பி கேசவ மேனன், கிருஷ்ணசாமி அய்யர், ஏ.கே.பிள்ளை, பத்மநாப்பிள்ளை, கேளப்பன் போன்றோரால் 30.03.1924 அன்று போராட்டம் தொடங்குகிறது. தினம் ஓரிரு தலைவர்களாக கைது செய்யப்படுகிறார்கள். இப்படியாக 19 தலைவர்கள் கைது செய்யப்பட்டு போராட்டத்தைக் கொண்டு செல்வதற்கு ஆட்கள் இல்லை என்ற நிலை வந்துபோதுதான் பெரியாருக்கு கடிதம் வருகிறது.
கட்சியின் தலைமை பொறுப்பை தான் திரும்ப வரும் வரைக்கும் பார்த்துக் கொள்ளுமாறு ராஜாஜிக்கு எழுதி வைத்துவிட்டு கிளம்புகிறார் பெரியார்.
காந்தி போராட்டத்தின் வழியாக இதற்கு தீர்வு காண முடியாது என்றும் மனமாற்றத்திற்கான வேலையை முன்னெடுக்க வேண்டும் என்கிறார். ராஜாஜியோ அடுத்த நாட்டில் உனக்கென்ன வேலை உடனே நாடு திரும்பு என்று பெரியாருக்கு கடிதம் எழுதுகிறார். இவை எதையும் சட்டை செய்யாதவராக பெரியார் 13..4.1924 அன்று வைக்கம் வந்துவிட்டார்.
மன்னர் டில்லி போகும்போதெல்லாம் வழியில் பெரியார் வீட்டில் தங்கி செல்லும் வழக்கம் கொண்டவர். எனவே வைக்கத்தில் இறங்கியதும் மன்னரால் பெரியாருக்கு மரியாதையன வரவேற்பு அளிக்கப்பட்டு விருந்தினர் மாளிகை ஒன்றில் அவர் தங்க வைக்கப்படுகிறார்.
மன்னரது விருந்தினர் மாளிகையில் இருந்துகொண்டே ஆர்ப்பாட்டதிற்கு ஊர் ஊராக சென்று சென்று மக்களை சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு திரட்டுகிறார் பெரியார். போராட்டத்திற்கு ஆதரவு பெருகுகிறது. வேறு வழியின்றி மன்னர் பெரியாருக்கு ஒருமாதம் வெருங்காவல் சிறைத் தண்டனை விதிக்கிறார். வெளியே வந்ததும் மீண்டும் போராட்டத்தை ஆரம்பிக்கிறார். மீண்டும் ஆறுமாத காலத்திற்கு கடுங்காவல் தண்டனை விதித்து சிறையில் அடைக்கிறார் மன்னர். இந்தமுறை கால்கள் கட்டப்பட்ட நிலையில், கைதிகளுக்கான உடையில் கழுத்தில் கைதியின் பெயர் குறிக்கப்பட்ட அட்டையோடு கொலைக் குற்றவாளிகளோடு ஒருவராக சிறையில் பெரியாரை வேலை வாங்கியதாக 11.12.2024 விடுதலை தலையங்கம் கூறுகிறது.
பெரியார் சிறைக்கு சென்றதும் அவரது இணையரும் சகோதரியும் போராட்டத்தைத் தொடர வைக்கம் வந்துவிடுகிறார்கள்.
பெரியார் சாகட்டும் என்று வேள்வி ஒன்றினை மன்னர் எடுக்கிறார். ஆனால் வெகு விரைவில் மன்னரே இறந்து போகிறார். மன்னர் இறந்ததும் ராணியார் இந்தப் பிரச்சினையை முடித்துவைக்கும் முகத்தான் பெரியாரை விடுதலை செய்கிறார்.
போரடுபவர்களோடு உரையாட விரும்புகிறார் ராணி. எல்லோரும் பெரியாரோடு ராணியார் உரையாடலை ஆரம்பிப்பார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் ராஜாஜி ஒரு சூழ்ச்சி செய்கிறார். இந்தப் பெருமை பெரியாருக்கு போய்விடக் கூடாது என்று நினைத்த ராஜாஜி,
இந்தப் போராட்டமே கூடாது என்று இந்தப் போராட்டத்தை நிறுத்திவிட முயன்ற காந்தியை
மற்ற மதத்துக்காரர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என்று உத்தரவிட்டதன் மூலம் சீக்கியர்களிடமிருந்து வந்துகொண்டிருந்த பண உதவி நின்றுபோகக் காரணமாக இருந்த காந்தியை
ராணியோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அழைத்து வருகிறார். தெருக்களை அனைவருக்கும் திறந்துவிடுவதாகக் கூறுகிறார் ராணி. ஆனால் இதை வைத்துக்கொண்டு கோவிலை அனைவருக்கும் திறந்துவிடக் கோரக்கூடாது என்கிறார்.
காந்தி பெரியாரிடம் வருகிறார். இப்போதைக்கு வேண்டுமானால் அந்தக் கோரிக்கையை தான் வைக்கவில்லை என்றும் ஆனால் எதிர்காலத்தில் அப்படி ஒன்று நடக்காது என்று தான் உறுதி கூற முடியாது என்றும் பெரியார் மிகக் கறாராகக் கூறிவிட்டார்.
ஒரு வழியாக வைக்கம் போராட்டம் நிறைவிற்கு வருகிறது.
இதற்காக பெரியார் சிறையில் 74 நாட்கள் இருந்திருக்கிறார்.
இப்போது இதை வைத்து இரண்டுவிதமாக அரசியல் நடந்துகொண்டே இருக்கிறது. வைக்கம் போராட்டத்திற்கு பெரியார் மட்டுமே காரணமல்ல என்பது ஒன்று. காந்தி இந்தப் போராட்டத்தை முற்றாக முடக்கிவிட முயன்றார் என்பது இரண்டு.
பெரியார் தலைமை ஏற்றபிறகுதான் போராட்டம் உச்சத்திற்கு வந்தது. அவர்தான் முழுமுதற் காரணம் என்பது வரலாறு.
காந்தி எப்போதும் தனக்கு எது சரி என்று படுகிறதோ அதை சொல்வது வழக்கம். சில நேரங்களில் அவருக்கு சரி எனப் படுவது தவறாக இருக்கும். இதுவும் அவைகளில் ஒன்று.
காந்திக்கும் பெரியாருக்கும் உள்ள மிகப் பெரிய வேறுபாடே இதுதான். தனக்கு சரியெனப் படுவதை அனைவரும் சரியென ஏற்க வேண்டும் என்ற பிடிவாதம் கொண்டவர் காந்தி. “எனக்கு சரின்னு படுது, சரியான்னு யோசிச்சு பாரு” என்பார் பெரியார்.
புதிய ஆசிரியன்
ஜனவரி 2025
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்