Wednesday, March 12, 2025

இந்தியாகூட சாதிக்கலாம் ஆனால் …

 

ட்ரம்ப் தனது நண்பர் என்று மோடியும், மோடி தனது நல்ல நண்பர் என்று ட்ரம்ப்பும் அவ்வப்போது சொல்லிக்கொள்வது வாடிக்கைதான். ட்ரம்ப் போகிறபோக்கில் இதை சொல்லிவிட்டோ கேட்டுவிட்டோ கடந்து போய்விடுகிறார்.
 
ஆனால் மோடியைத் தனது நண்பரென்று எப்போதாவது ட்ரம்ப் சொல்லும்போதெல்லாம் அதைக் காசு செலவு செய்து விளம்பரப்படுத்தியாவது கொண்டாடித் தீர்த்துவிடுகிறார்கள் மோடியும் அவரது பரிவாரக் கூட்டமும்.
 
அவர் இவரையோ, இவர் அவரையோ நண்பா என விளித்துக்கொண்ட ஒவ்வொரு பொழுதிலும் அதற்கு விலையாக இந்தியா இழந்திருப்பது அதிகம்.
 
கொரோனா காலத்தில்கூட இப்படியொரு விளித்தலுக்குப் பிறகு தனது நண்பரை மிரட்டி கொரோனா தடுப்பூசிகளை இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொண்டார் ட்ரம்ப். இந்தக் காலகட்டத்தில் தமிழ்நாட்டிற்கு போதிய ஊசி மருந்துகளை வழங்க மறுத்தது மட்டுமல்ல நாங்களே ஊசி மருந்துகளை தயாரித்துக்கொள்கிறோம் என்று தமிழ்நாடு அரசு கேட்டபோது அதையும் மறுத்தவர் மோடி. மோடிக்கும் ட்ரம்ப்பிற்கும் இடையிலான நட்பின் அன்றைய விலை இது.
 
இந்தமுறை அதிபராக பொறுப்பேற்றுக்கொண்ட பிறகும் ஒருமுறை மோடியை இப்படியாக விளித்தார் ட்ரம்ப். அந்த விளித்தல் மோடியை வந்தடையும் முன்பாகவேஉலகிலேயே அதிகமாக வரி விதிக்கும் நாடு இந்தியாஎன்றும் கூறினார்.
 
பரவசமடைந்த மோடி அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் ஒரு வகை விஸ்கிக்கு ஐம்பது விழுக்காடு வரியைக் குறைத்தார்.
 
வெறிகொண்ட மதப் பழமைவாதத்திலும் வெறுப்பை விதைப்பதிலும் இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஒருபோதும் சளைத்தவர்கள் அல்ல. இவருக்கு அகண்ட பாரதம் என்றால் அவருக்கு காசாவை அழித்து அதை அமெரிக்காவின் கேளிக்கை நகரமாக்க வேண்டும்.
 
2014 இல் பிரதமரானதும்  தடாலடியாக மோடி அறிவித்தவற்றுள் ஒன்றுஇந்தியாவில் தயாரிப்போம்என்பது. “Make in India” என்பதை அவர்கள் ஏதோ யாருக்குமே யோசிக்க வாய்க்காத கருத்து என்பதுபோல் கொண்டாடித் தீர்த்தார்கள்.
 
நமது வரிப்பணத்தில் ஒரு பகுதியை இந்த மூன்று வார்த்தைகளே இந்தியாவின் வெற்றி என்பதுபோல் மக்களிடம் இதைக் கொண்டுபோய் சேர்க்க படாதபாடு பட்டார்கள்.
 
இந்த வார்த்தைகள் ட்ரம்ப்பை ஏதோ ஒரு வகையில் ஈர்த்திருக்க வேண்டும். இந்தமுறை பதவியேற்றதும்அமெரிக்காவில் தயாரிப்போம்என்று அவர் கூறினார். ஆனால் “Make in America” என்ற வார்த்தைகளின் கோரிக்கையை வெறுமனே மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்று மோடியைப்போல அவர் மெனக்கெடவில்லை. மாறாக, தொழிலதிபர்களின் மாநாட்டைக் கூட்டினார்.
 
எவ்வளவு வேண்டுமானாலும் வரிச்சலுகைகளை தருவதாகவும் முதலீடுகளை அமெரிக்காவில் செய்யவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். அதே நேரம் இதில் எந்த நிர்ப்பந்தமும் இல்லை என்றும் கூறிக்கொண்டார். ‘அப்பாடாஎன்று முதலீட்டாளர்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்குக்கூட அவர் அவகாசம் தரவில்லை.
 
நீங்கள் சீனா உள்ளிட்டு எங்கு வேண்டுமானாலும் முதலீடு செய்துகொள்ளலாம். ஆனால் அங்கு தயாரிக்கப்பட்டு அமெரிக்காவிற்குள் இறக்குமதியாகும் பொருட்களுக்கு எத்தனை மடங்கு வரி இருக்கும் என்று தன்னால் உறுதியாகக் கூறமுடியாது என்றார்.
 
இந்த விஷயத்தில் மோடிக்கும் ட்ரம்ப்பிற்கும் இடையேயுள்ள வேறுபாடு ட்ரம்ப்பின் இந்த மிரட்டல்தான். முதலீட்டாளர்கள் என்றால் இந்த மிரட்டல் இருக்காது மோடியிடம், அப்படியே விழுந்துவிடுவார்.
 
மோடி ‘Make in India’ முழக்கத்தை வைத்து பதினோரு ஆண்டுகளாகின்றன. இந்த முழக்கம் இந்தியாவில் சாத்தியப்படவில்லை. இன்னும் பத்து ஆண்டுகள் கடந்தாலும் வாய்ப்பில்லை என்றே படுகிறது. அமெரிக்காவிலும் இதற்கான வாய்ப்புகள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்
 
முதலீடு கடந்து தொழில் உற்பத்திக்கு மிக அவசியமானது தொழில் செய்வதற்கான மனித வளம். இது இந்தியாவில் கணக்கற்றுக் கிடக்கிறது. பொதுவாக பதினெட்டிற்கும் அறுபத்தி நான்கிற்கும் (18-64) இடைப்பட்ட காலமே உழைக்கும் திறன்கொண்ட வயது என்று 04.01.2025 அன்றைய தனது தமிழ் இந்து கட்டுரையில் கூறுகிறார் திரு மு.ராமனாதன்.
 
இரண்டாயிரத்திற்கும் இரண்டாயிரத்தி இருபத்தி ஐந்திற்கும் இடையேயான இருபத்தி நான்கு ஆண்டு காலத்தில் இந்த வயது கொண்டோரின் எண்ணிக்கை விகிதாச்சாரம் சீனாவில் கணிசமாகக் குறைந்துள்ள நிலையில் இந்தியாவில் இந்த வயதினரின் விகிதாச்சாரம் குறிப்பிட்டுச் சொல்லுமளவிற்கு வளர்ந்திருப்பதாகவும் அவர் அந்தக் கட்டுரையில் கூறுகிறார். .
 
பதினெட்டிற்கும் அறுபத்தி நான்கிற்கும் இடைப்பட்ட இன்றைய உழைக்கும் இந்தியர்களின் விகிதாச்சாரம் அறுபத்தி நான்கு என்கிறார். நூறு பேரில் அறுபதுபேர் உழைக்கத் தயாராக இருக்கிற மக்களைக் கொண்ட நாடு இந்தியா என்பது எத்தகைய வரம்.
 
இதைவிடவும் இன்னுமொரு பெரிய வரம் இந்தியாவில் முதலீடு செய்பவர்களுக்கு உண்டு. உலகிலேயே மிகக் குறைவான கூலிக்கு தயாரக இருக்கக்கூடிய உழைப்பாளர்களைக் கொண்ட நாடு இந்தியா.
 
இன்னுமொரு கொசுறான வரமும் இந்தியாவில் உண்டு. அது அத்தனையையும் முதலீட்டாளர்கள் சுரண்டிக்கொண்டு போவதையும் புன்னகையோடு வேடிக்கைப் பார்க்கும் அரசு இந்தியாவில்.
 
முதலீடுகளுக்கான இத்தனை சாதகமான சூழல் இந்தியாவில் இருக்கும்போதுஇந்தியாவில் தயாரிப்போம்வெற்றிபெறாது என்று சொல்வது பைத்தியக்காரத்தனமானது அல்லவா என்று ஒரு கேள்விக்கான வாய்ப்பு இருக்கிறது. இதற்கான காரணங்கள் சிலவற்றையும் அதே கட்டுரையில் வைத்திருக்கிறார் மு.ராமனாதன்,
 
1)   சாலைகள் தரமாக இல்லை
2)   கல்வி தரமாக இல்லை
3)   பாலங்கள் தரமாக இல்லை
4)   ரயில்கள் தரமாக இல்லை
5)   துறைமுகங்கள் தரமாக இல்லை
6)   தரமான தண்ணீர் இல்லை
 
இந்தப் பட்டியலில் சிலவற்றோடு நமக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம். ஆனாலும் இந்தப் பட்டியலோடு ஊழியர்களின் நலன் மற்றும் திடம் ஆகியவற்றில்  நமது அதிகப்படியான கவனத்தை  செலுத்த வேண்டும்
 
இதைவிட மிக முக்கியமான இந்தியாவில் உள்ள பெரிய சிக்கல் ஒன்றிய அரசும் மதவாதிகளும் தொடர்ந்து ஏற்பாடு செய்துகொண்டிருக்கக் கூடிய மத மற்றும் ஜாதி மோதல்கள்.
 
மேற்சொன்ன பட்டியலை சரிசெய்வது ஒன்றும் கடினமான காரியம் இல்லை. அதற்கான ஒரு அரசை மக்கள் தேர்ந்தெடுத்து விட்டால் இவற்றை சரி செய்துவிடலாம். அப்படி ஒரு அரசை அமைப்பதற்கான இயக்கம் கட்டமைக்கப்பட்டால்இந்தியாவில் தயாரிப்போம்சாத்தியமானதுதான்.
 
மேற்சொன்ன பட்டியலில் காணும் குறைகளில் பெரும்பகுதி அமெரிக்காவில் இல்லை என்பது உண்மைதான். ஆனாலும்அமெரிக்காவில் தயாரிப்போம்சாத்தியமில்லைதான்.
 
அங்கு போதுமான உழைக்கும் மனித வளம் இல்லை. அமெரிக்காவிற்குள் எப்படியேனும் நுழைந்துவிட்டால் போதும் பிழைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையோடு அமெரிக்காவில் நுழைந்துவிட்ட ஒரு பெருந்திரள் இருக்கிறது. இவர்கள் சட்டத்திற்கு புறம்பாக எந்தவிதமான உரிய ஆவணங்களும் இன்றி அமெரிக்காவிற்குள் நுழைந்தவர்கள்.
 
ஆனால் இவர்கள் அமெரிக்க இனத்தவரைப்போல் இல்லாமல் உழைப்பதற்கான உடல் தகுதியோடும் உழைப்பதற்கு தயாராகவும் இருப்பவர்கள்.
 
அமெரிக்கா இவர்களுக்கு உரிய விசாவை வழங்கி பயிற்சியைக் கொடுத்து பயன்படுத்தி இருந்தால் அமெரிக்காவிலும் தயாரித்திருக்க முடியும்.
 
அந்த உழைக்கும் திறன் கொண்ட இளைய சக்தியை கைகளில் விலங்கிட்டு கால்களை சங்கிலியால் பிணைத்து விலங்குகளை லாரிகளில் ஏற்றுவதுபோல விமானங்களில் ஏற்றி அந்தந்த நாடுகளில் கொண்டுவந்து கொட்டிவிட்டு போயிருக்கிறது.
 
இனி இப்படி ஒரு உழைக்கும் திரளை அமெரிக்காவிற்குள் கொண்டு வருவதற்கு அமெரிக்கா படாதபாடு படவேண்டும். போகவும் உக்ரைன், சீனா உள்ளிட்ட ட்ரம்ப்பின் செயல் திட்டங்களைக் காணும்போது இதற்கெல்லாம் அவருக்கு நேரம் இருக்கும் என்றே தோன்றவில்லை
 
n  புதிய ஆசிரியன்
மார்ச் 2025
 


No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...