லேபில்கள்

Monday, April 20, 2020

முரண்களை சுமந்து அலைய வேண்டாம்

நேற்று (09.04.2020)
பிற்பகல் 01.25
விக்டோரியாவின் அலைபேசிக்கு ஷியாமளாவிடம் இருந்து அழைப்பு
SHYAM CALLING
என்பதைப் பார்த்ததுமே கீர்த்தனா அழத் தொடங்கி விட்டாள்
விசும்பிக்கொண்டே விக்டோரியா அலைபேசியை வாங்கி
“அழாத பாப்பா, அழாத பாப்பா” என்றவாறே சத்தமாக அழத் தொடங்கி விட்டது
எனக்கும் கண்கள் உடைப்பெடுத்துக் கொண்டது
ஒருமணி நேரத்திற்கு முன்பு பேசிய ஷியாமளா முடிந்ததும் சொல்வதாக சொல்லியிருந்தாள்
முடிந்துவிட்டது
விக்டோரியாவின் அக்காவினுடைய கணவர் இறந்துவிட்டார்
ஒருமணி நேரத்திற்குள் எரித்துவிட வேண்டும் என்று நெறுக்குவதாகக் கூறினாள்
அதற்குள் கலெக்டரிடம் அனுமதி பெற்று போவது கடினம்
எனவே போவதில்லை என்று முடிவெடுத்தோம்
வீடியோ பார்த்துக் கொள்வது என்று முடிவு செய்தோம்
02.15 வாக்கில் மீண்டும் அழைத்தாள்
இதற்கிடையே தூய உடல் ஏற்றிச் செல்லும் வண்டிக்கு இன்னொரு உடலை எடுத்துச் செல்ல புக் ஆனதால் வண்டி வர 04.30 ஆகும் என்றாள்
ஆகா, அதற்குள் அனுமதி வாங்கி போய்விடலாம் என்று தோன்றவே மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் விரைகிறேன்
அங்கு சென்று பார்மாலிட்டிகளைத் துவங்குவதற்குள் வண்டி வந்துவிட்டதாக பிள்ளை சொல்லவே திரும்பிவிட்டேன்
திருமணம் ஆனதில் இருந்து நானும் அவருமாகவே எதற்கானாலும் சேர்ந்தே திரிவோம்
எனக்கு திருமணமாகுப் பொழுது ஷியாமளா மூன்றாம் வகுப்பு படிக்கிறாள்
அதற்கப்புறம் அவள் அவள் எனது பிள்ளையாகவே ஆகிறாள்
அவளது திருமணத்தின் ஊடாக அவருக்கும் எனக்கும் சிறு ஊடல்
நானும் அவரும் ஒருவருக்கொருவர் பேசுவதில்லை என்றாகிவிட்டது
கோவத்தில் அவளோடும் பேசுவதைத் தவிர்த்து விட்டேன்
மற்றபடி குடும்பத்தில் யாருக்கும் யாரோடும் முரணெதுவும் இல்லை
ரெண்டரை வருடங்களுக்குப் பிறகு ஒரு வாய்ஸ் மெசேஜ் வருகிறது
எடுத்துக் கேட்கிறேன்
“எபீன் தாத்தா”
ஒரு ஆண் பிஞ்சின் மழலை
யார் என யோசிப்பதற்குள்
“புவா சாப்டியா?”
அய்யோ, தவமே செய்யாமல் வரமா?
“பெரம்பலூர் வரேன்
ஒன்ன தூக்கறேன்
கரட்டாம்பட்டி வரேன்”
யாரெனப் புரிந்துவிட்டது.
பேரன்
அம்மா சொல்லி கொடுத்து ரிகர்சல் எடுத்து வந்த குரல்
இளகிப் போனேன்
இன்னும் கொஞ்ச நாள் கழித்து மகள் மருமகன் பேரன் பேத்தி எல்லோரும் வருகிறார்கள்
வாங்க சொல்கிறேன் எப்போதும்போல
பிறகு உம்
அவர்களுக்கு நான் உம் என்று இருப்பது எந்த விதத்திலும் பாதிக்கவில்லை
என்னைத் தவிர எல்லோரும் ஒன்றுதான்
திடீரென்று பேத்தி வருகிறாள்
சத்தமாக,
“டேய்”
திரும்புகிறேன்
“ன்னா”
சிரிப்பு தொண்டைக்குழிவரை வந்துவிட்டது
“;ஊக்கு” என்று கைகளை நீட்டுகிறாள்
அம்மா சொன்னதை செய்கிறாள்
தூக்கிவிட்டேன்
மகள்களுக்கு அப்பன்களை சுளுவாக வளைக்கத் தெரிகிறது
சகோதரன்களுக்கு இந்தக் கலை வாய்க்க மறுக்கிறது
மகளோடு ராசியாகிவிட்டது
அவருக்கும் உடல் சரியில்லாமல் போகிறது
இப்பவும்கூட என் நியாயம் சரி என்றே எனக்குப் படுகிறது
என் நியாயம் எனக்கு சரியென்றால் அவர் நியாயம் அவருக்கு சரிதானே
போய் பார்த்து
பழசெல்லாம் மறந்துடுவோம் என்று சொல்ல வேண்டும் என்று முடிவெடுக்கிறேன்
போகவே முடியவில்லை
ஒருக்கால் அதே மாதிரி அவருக்கும் தோன்றியிருக்கலாம்
உடம்பு நன்றாக இருந்தபோது அவரது வந்திருக்கலாம்
நானாவது போயிருக்கலாம்
இது நடந்திருந்தால் இன்னும் இரண்டு ஆண்டுகள் கூடுதலாக அவர் வாழ்ந்திருக்கலாம்
இனி அவரும் வர இயலாது
நானும் போக முடியாது
என் அன்பிற்குரியவர்களே,
முரண்களை சுமந்து அலைய வேண்டாம்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

Labels