பொதுவாகவே அலட்சியமான அதிகாரியையோ அல்லது ஆட்சியாளரையோ கடக்க நேரிடும் காலங்களில் அவர்களை நீரோவோடு பொருத்திப் பார்ப்பது வாடிக்கை
இன்றைய தேதியில் அப்படியான ஒரு தலைவரை இந்திய மக்கள் கடந்து கொண்டிருக்கிறார்கள்
கொரோனா மக்களை வாட்டி எடுத்துக் கொண்டிருக்கிற இந்தக் காலத்தில்
“கை தட்டுங்கள்”,
“விளக்கு ஏற்றுங்கள்”
என்று கூறும் தலைவர் ஒருவரை இந்திய மக்களாகிய நமக்கு காலம் கொடையளித்திருக்கிறது
அநேகமாக இந்திய மக்கள் அனைவரும் ஏதேனும் ஒரு புள்ளியில் அவரை நீரோவோடு பொருத்தி பகடி செய்திருக்கக் கூடும்
காரணம் இதுதான்,
ரோம் தீப்பற்றி எரிந்தபோது நீரோ பிடில் வாசித்துக் கொண்டிருந்தான் என்பதாக நமக்குள் விதைக்கப்பட்டிருக்கிறது
ஆனால் இது உண்மையல்ல
முழுக்க முழுக்க அந்தக் காலத்தின் முதலாளிகளும் செல்வந்தர்களும் செனட்டர்களை தங்கள் கைகளுக்குள் மடக்கிக் கொண்டு
தங்களுக்கு எதிரான நீரோவின்மீது பரப்பிய வதந்தி ஏறத்தாழ 1956 வருடங்களுக்கும் மேலாக உலகப் பொதுத் தளத்தில் உயிரோடு இருக்கிறது
18.07.0064,
வெளியூரில் இருந்த நீரோவிற்கு ரோம் எரியும் செய்தி போகிறது
உடனே வருகிறான்
அவன் பேரரசன்
மெய்க்காப்பாளர்கள்கூட அவனோடு இல்லை
தீ அணைக்க திரளோடு திரளாய் இணைகிறான்
இடிபாடுகளுக்கு இடையே சிக்கிகொண்டிருப்பவர்களை மீட்கிறான்
நிவாரணப் பணிகளுக்காக முதலாளிகளுக்கும் செல்வந்தர்களுக்கும் வரி விதிக்கிறான்
முதலாளிகளும் செல்வந்தர்களும் இணைகிறார்கள்
எதை செய்தோ
செனட்டர்களையும் தங்களோடு இணைத்துக் கொள்கிறார்கள்
கிறிஸ்தவ தலைவர்களும் வரலாற்று ஆசிரியர்களும் விலை போகிறார்கள்
ரோம் பற்றி எரிந்தபோது நீரோ பிடில் வாசித்துக் கொண்டிருந்ததாய் வதந்தியை பரப்புகிறார்கள்
செனட் நீரோவை ரோமின் எதிரி என்று பிரகடனப்படுத்துகிறது
அவரை கட்டாயத் தற்கொலை செய்துகொள்ளுமாறு உத்தரவிடுகிறது
கட்டாயத் தற்கொலை செய்து கொள்கிறார்
விதிவிலக்காக
அந்தக் காலத்து செனட்டரான திரு டாசிட்டஸ் உண்மையை உள்ளது உள்ளபடி பதிவு செய்து வைத்துள்ளார் என்ற தகவலை தோழர் அறிவுக்கடல் தனது “இன்னாள் இதற்கு முன்னால்” நூலில் குறிப்பிடுகிறார்
டாசிட்டஸ் ஒரு வரலாற்று ஆசிரியரும் கூட
ஆக,
தனது நகரம் தீப்பற்றி எரிந்தபோது,
ஓடோடி அங்கு வந்தவனை,
உதவியாளர்கள் இல்லாமலே நிவாரணப் பணிகளில் ஈடு பட்டவனை,
பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீர் துடைத்தவனை,
அவர்களுக்கு உணவளித்தவனை,
நிவாரணப் பணிகளுக்காக செல்வந்தர்களிடமும் முதலாளிகளிடமும் வரி விதித்தவனை
கஜா புயலின்போது எம் மக்களைப் பார்க்க மறுத்தவரோடு
ஓகி எம் மக்களை கிழித்துக் கூறு போட்டபோது அயல்நாட்டு விருந்தினரோடு விருந்து சாப்பிட்டவரோடு,..
ஏழைகளிடம் வரிபோட்டு முதலாளிகளுக்கு தாரை வார்ப்பவரோடு
என் அன்பிற்குரியவர்களே ஒருபோதும் ஒப்பிடாதீர்கள்
அது ஒரு நல்லவன் பிணத்தை 1950 ஆண்டுகளுக்குப் பிறகு தோண்டி எடுத்து மீண்டும் கொல்வதற்கு ஒப்பாகும்
ஒரு உண்மை ஓராயியரம் ஆண்டுகளுக்குப்பின்னும் புதைமணலுக்குள் இருந்து உயிர் பெற்றதென்றால் இப்போது தான் உண்மையின் மீது நம்பிக்கை வருகிறது ஐயா!!
ReplyDeleteமிக்க நன்றிங்க மைதிலி
Delete