Friday, February 14, 2014

15 யெஸ் பாலபாரதி


ஒரு சின்னக் குழந்தை தனது பெற்றோரிடம் தனக்கு ஜுரம் அடிக்கிறது என்று சொன்னது அவனது பெற்றோர்களுக்கு தங்கள் வாழ்நாளில் அதுவரை கண்டிராத மகிழ்ச்சியைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது என்று சொன்னால் நம்ப முடியுமா? ஆனால் அப்படி நடந்திருக்கிறது.

கிருஷ்ணா எழுதிய “ why me?” என்கிற நூல் வெளியீட்டு விழாவில் தான் சந்தித்த 12 வயது சிறுவனின் தந்தை இதைக் கூறியதாக இதைக் கூறுகிறார் யெஸ் பாலபாரதி. தங்களது பிள்ளை தனக்கு ஜுரம் அடிக்கிறது என்று சொன்ன அந்தப் புள்ளியில்தான் தனக்கும் தன் மனைவிக்கும் தங்களது எஞ்சிய கால வாழ்க்கையின் மீது நம்பிக்கை வந்ததாக அவர் சொல்லியிருக்கிறார்.

பொதுவாக ஒரு குழந்தை தனக்கு ஜுரம் என்று சொன்னால் பதறத்தானே செய்வோம். விடுப்பெடுத்துக் கொண்டு குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டுபோகத்தானே முயற்சிப்போம். ஆனால் ஒரு குழந்தை தனக்கு ஜுரம் என்று சொன்னதும் ஒரு பெற்றோர் மகிழ்ந்திருக்கிறார்களே. அவ்வளவு வித்தியாசமான பெற்றோரா அவர்கள்? அவர்கள் அல்ல அந்தக் குழந்தை அவ்வளவு வித்தியாசமானக் குழந்தை.

ஆம், ஆட்டிசம் பாதித்தக் குழந்தை அவன். தனக்கு என்ன செய்கிறது என்பதை மற்றக் குழந்தைகளைப் போல் வெளிப்படுத இயலாது அவனுக்கு. எனவேதான் தனது குழந்தை தனக்கு ஜுரம் அடிக்கிறது என்று முதன் முதலில் சொன்னதை மகிழ்ந்து கொண்டாடுகிறார்கள்.

சரி ஆட்டிசம் என்றால் என்ன?

”மன இறுக்கம்” மற்றும் “ மதியிறுக்கம்” என்று பொதுவாக ஆட்டிசம் புரிந்து கொள்ளப் படுகிறது. சரி, மன இறுக்கம் அல்லது மதி இறுக்கம் என்றால் என்ன? என்ன என்பதை வரையறுக்க இயலாவிட்டாலும் மனைறுக்கத்தில் உள்ள குழந்தை எப்படி இருக்கும்? அல்லது அந்தக் குழந்தை மற்றக் குழந்தைகளிடமிருந்து எந்த வகையில் வேறுபடும்?

அது குறித்தும் இந்த வலை புரிகிற மொழியில் பேசுகிறது.

பொதுவாக ஒரு குழந்தைப் பார்த்து நாம் சிரித்தால் அதுவும் சிரிக்கும். அல்லது என்னைப் போன்றவர்கள் சிரித்தால் மிரண்டுபோய் அந்தக் குழந்தை அழத் தொடங்கும். நாம் ஒற்றை விரலைக் காட்டி கொன்னுடுவேன் என்று சொன்னால் அதுவும் அப்படியே சொல்லும் , அல்லது மிரளும், அல்லது சிரிக்கும். ஆக நம்முடைய வினைக்கு ஏதோ ஒரு வகையிலான எதிர்வினை கிடைக்கும். ஆட்டிசம் பாதித்த குழந்தையிடமிருந்து இப்படிப்பட்ட எந்த ஒரு மறுவினையும் கிடைக்காது.

நம்மை புற உலகிடமிருந்து பிரிக்கும் ஒரு சுவர்தான் என்று ஆட்டிசம் குறித்து சொல்கிறார் பாலா. எனில், புற உலகத்தில் என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளவே இவர்களால் முடியாதா? முடியும் என்கிறார் பாலா. தாங்கள் புரிந்து கொண்டதையோ அதன்மீதான மதிப்பீடுகளையோ அவர்களால் மறு உணர்த்த இயலாது.சரியாகச் சொல்வதெனில் அவர்களது மறு உணர்த்தலை நம்மால் புரிந்து கொள்கிற அளவில் செய்ய இயலாது. இன்னும் சரியாக சொல்லப் போனால் அவர்களது மறு உணர்த்தலை நம்மால் புரிந்து கொள்ள இயலவில்லை.

ஆக, குறைபாடு என்பது இருபுறத்தும் இந்தச் சமூகம் உணரத் தொடங்க வேண்டும். இதைக் கொஞ்சமும் மெனக்கெடாமல் புரிய வைக்கிறார் பாலா. இதைப் பற்றிக் குறிப்பிடும் போது வட்டங்களின் கண்கொண்டு சதுரத்தைப் பார்த்தால் சதுரம் குறைபாடுள்ளதே. வட்டம் போல் இல்லாமல் நான்கு மூலைகளைக் கொண்ட ஒரு குறைபாடுள்ள வடிவமாகத்தான் வட்டத்தின் பார்வையில் சதுரம் தெரியும். சதுரத்தின் கண்டு வட்டத்தைப் பார்த்தாலும் மூலைகளற்ற குறைபாடுள்ள ஒரு வடிவமாகமே வட்டம் தெரியும். வட்டமும் சதுரமும் ஒவ்வொரு வடிவங்கள் என்கிறார்.

சராசரி மனிதர்கள் இந்த உலகம் தங்களுடையது என்றும் வித்தியாசமானவர்கள் தப்பிப் பிறந்தவர்கள் என்றும் கொள்ளத் தொடங்கிவிட்டோம். அதன் விளைவு, வித்தியாசமானவர்களை கூடுதலான சுமையாகப் பார்க்கத் தொடங்கிவிட்டோம். எல்லோரும் சேர்ந்த ஒரு கூட்டுக் குடும்பம்தான் இந்த உலகம். இந்த உலகம் உய்ய அவர்கள் செய்வதற்கும் வேலைகள் உண்டு. அவற்றை அவர்கள் செய்ய அனுமதிக்க வேண்டும். இல்லை எனில் அவர்களது வேலையையும் நாமேதான் செய்ய வேண்டி வரும். அப்போது அவர்கள நமக்கு சுமையானவர்களாகத்தான் தெரிவார்கள்.

அவர்களாலும் முடியும் என்கிறார் பாலா. கிருஷ்ணாவால் ஒரு நூலே எழுத முடிகிறது என்றால் எதைச் செய்ய இயலாது என்று சரியாய்க் கேட்கிறார்.

ஆட்டிசத்தால் பாதிக்கப் பட்ட குழந்தைகளுக்கு மிகக் கூடுதலான அளவில் ஏதோ ஒரு கலை ஞானமோ, திறமையோ இருக்கும். அதைக் கண்டுணர்ந்து வளர்த்தெடுப்ப்தே அவசியம் என்பதை இந்தவலையை வாசிப்பவர்கள் உணரத் தொடங்குவார்கள். சராசரி மக்குளுக்குப் புரியாத மிகக் கடினமான குறுக்கெழுத்துப் புதிர்களை போகிற போக்கில் ஊதித் தள்ளிவிடும் ஆட்டிசம் பாதித்தக் குழந்தைகள் இருக்கிரார்கள் என்பதயும் இந்த வலையில் பார்க்க முடிகிறது.

ஆட்டிசத்திலிருந்து யாரும் முற்றாய் விடுபடமுடியாது. காரணம் அது ஒரு நோயல்ல. குறைபாடு. எனவே நோயைக் குணப்படுத்துவது போல் இதை முற்ரிலுமாக குணப் படுத்த இயலாது.

ஆனால் முற்றிலும் விடுபட்டு சராசரி மனிதர்களாய் வாழ்ந்து கொண்டிருக்கும் இருவரைப் பற்றிய விவரங்கள் இந்த வலையில் இருக்கின்றன. அதி பிரவீண் என்பவர் சொந்தமாக அனிமேஷன் ஸ்டுடியோ வைத்து பிரபலமாக இருக்கிறார். இன்னொருவர் பதினோராம் வகுப்பு படித்து கொண்டிருக்கிறார். இருவரது பெற்ரோரும் இதை வெளியிடத் தயங்கும் வேலையில் பிரவீண் மட்டும் எழுதுங்கள் என்னைப் பற்ரி உதவுமெனில் என்று சொன்னதையும் பாலா பதிகிறார்.

இந்த வலையில் இருக்கும் ஆட்டிசம் தாண்டிய எதனையும் நான் கணக்கில் கொள்ள வில்லை.

ஆட்டிசம் குறித்த இவரது பதிவுகள் ஆட்டிசம் மீது நமக்குள்ள மிகையான கருத்துக்களை அழித்துப் போடும்.

ஆட்டிசம் பாதித்த்க் குழந்தைகளையும் குழந்தைகளாகப் பார்க்கும் பக்குவத்தை இந்த வலை தரும்.

அவசியம் பாருங்கள்,

    

8 comments:

  1. அவரின் ஒவ்வொரு பதிவையும் பலருக்கும் தெரிவித்து உள்ளேன் ஐயா... இன்றைக்கு பெற்றோர்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தனபாலன். மிக மிகப் பயனுள்ள வலை.

      Delete
  2. உண்மையான வரிகள்.பூமி எல்லாருக்கும் பொதுவான ஒன்று.ஆமா மிரளும் குழந்தை யார்...?

    ReplyDelete
  3. மிகவும் பயனுள்ள பதிவு தோழரே. எனது நண்பரின் குழந்தை ஆட்டிசம் குறைபாடுள்ளது. அவருக்கு தங்கள் வலையினை பற்றிய செய்தி தெரிவித்து, பார்க்கச் சொல்லுகின்றேன். பயன்படுத்திக் கொள்ளச் சொல்லகின்றேன்.
    நன்றி தோழரே

    ReplyDelete
    Replies
    1. எழுத்துக்கான ஊதியம் கிடைத்துவிட்டதாகவே உணர்கிறேன் தோழர். மிக்க நன்றி

      Delete
  4. பெற்றோர்களுக்கு பயனுள்ள வலைப்பக்கம்..பகிர்தலுக்கு நன்றி.

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...