Sunday, September 11, 2016

பிள்ளைகள் பாடம் நடத்தியிருக்கிறார்கள்

கல்லூரிகளின் மாணவர் பேரவைத் தேர்தல்களே கவனிப்புக்குரியவைதான். காரணம் அவற்றில் வென்றவர்களும் தோற்றவர்களும் பிற்காலத்தில் அரசியலில் ஏதோ ஒரு புள்ளியில் களமாடுபவர்களாக மாறுகிறார்கள். மக்களுக்கான அரசியலில் ஈடுபடுபவர்கள் அவர்களில் குறைவு என்றபோதிலும் அந்த அளவிற்காகவேனும் மாணவர் சங்கங்கள் பாராட்டுக்களுக்கும் வாழ்த்துதலுக்கும் உரியவையே.
அதிலும் தில்லி ஜவஹர்லால் பல்கலைக் கழகத்து மாணவர் பேரவைத் தேர்தலை உலகமே உற்று கவனிக்கும். காரணம் தோழர் Jothimani Sennimalai சரியாக சொன்னதுபோல் அந்தத்தேர்தல் என்பது அகில இந்திய அரசியல் தேர்தலைப் போன்றதாகும். பல்வேறு மொழி பேசும் பல்வேறு இனக்குழுக்களிலிருந்து வந்திருக்கும் பிள்ளைகள் அவர்கள்.
அவர்களது கருத்தும் செயலும் அந்த அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் மாண்பமை இந்திரா அவர்கள் எமர்ஜென்சியைக் கொண்டுவந்த நேரத்தில் அந்தப் பேரவையின் தலைவராக இருந்தவர் இன்றைய மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரான தோழர் யெச்சூரி அவர்கள்.
அந்தக் காலகட்டத்தில் இந்திரா அவர்களின் வீட்டு வாசலில் ஆர்ப்பாட்டத்தை நடத்தி அவரை வெளியே அழைத்து அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை மனுவாக அவர் கையிலேயே கொடுத்தவர்.
அதற்கடுத்த நாள் இந்திரா அவர்கள் பதவி விலகியது தற்செயலானது என்றும் அதற்கும் யெச்சூரியின் ஆர்ப்பாட்டத்திற்கும் ஒன்றும் தொடர்பில்லையென்றும் சொல்பவர்கள்மீது நமக்கு ஒன்றும் எதிர்கருத்தெல்லாம் இல்லை.
அப்படிபட்ட சூழலில் அங்கு இடதுசாரி அமைப்புகளைச் சார்ந்தவர்கள் பொறுப்புக்கு வந்துவிடக்கூடாது என்பதில் அமெரிக்கா உள்ளிட்ட வலதுசாரி நாடுகள் நிச்சயமாக கவனம் செலுத்தும். வரும் காலங்களில் அதற்காக காசை வாரி இறைக்கவும் அவை தயங்காது.
போக, சமீபத்தில் அங்கு ஒடுக்கப்பட்ட பிரிவிலிருந்து வந்திருந்த பிள்ளைகள்மீது தேசத்துரோகம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள்.
அகில பாரதிய வித்யார்த்த பரிசித்தினை (ஏபிவிபி) எப்படியும் அங்கு கட்டமைப்பது அதன்மூலம் இந்தியக் கல்விக் கட்டமைப்பை தேசம் முழுக்க கொண்டு செல்வது என்ற பாரதிய ஜனதாக் கட்சியின் செயல்திட்டத்தையும் வலது சாரி மற்றும் காவித் தத்துவத்தின் கையெடுப்புச் சான்றோர்களின் கனவுகளையும் சமீபத்தில் நடந்த மாணவர் பேரவைத் தேர்தல் சுக்கு நூறாக உடைத்து எறிந்திருக்கிறது.
ஒற்றைக் கலாச்சாரம், சமஸ்கிருதமெனும் ஒற்றை மொழி, விஞ்ஞானத்தை கடவுளின் கொடையாகப் பறைசாற்ருதல், ஆங்கிலம், கணிதம், மற்றும் அறிவியலை மேட்டுக் குடியினருக்கானதாக மாற்றும் புதியக் கல்விக் கொள்கையை அரசு கை எடுத்திருக்கும் நேரத்தில் இடதுசாரிப் பிள்ளைகளின் இந்த வெற்றி கொண்டாடத் தக்கதும் கவனத்தோடு பரிசீலிக்கத் தக்கதும் தகுந்த முறையில் கொண்டுசெல்லப்பட வேண்டியதும் ஆகும்.
பெரியவர்களுக்குப் பிள்ளைகள் பாடம் நடத்தியிருக்கிறார்கள். கற்றுக் கொள்வோம்.

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...