Monday, September 12, 2016

முப்போகம் விளையும் 350 ஏக்கர் தரிசு

நாங்கெல்லாம் மூனுபோகம் விவசாயம் செஞ்ச மக்கதெரியுமா? ” என்று தங்கள் காலத்தில் மூன்றுபோகம் விவசாயம் நடந்ததை மிகுந்த பெருமையோடு பேசும் கடைசி தலைமுறை மக்கள் இன்னமும் இருக்கவே இருக்கிறார்கள். அவர்களது இந்தக் கூற்றில் இழையோடும் பெருமிதமானது ’எங்கள் காலத்தில் நாங்கெல்லாம் நல்லாதான் இருந்தோம். உங்க நிலைமையப் பார்த்தீங்களா?’ என்ற எகத்தாளம் அல்ல. மாறாக, மூன்றுபோகமும் விவசாயம் செய்து தற்சார்போடு வாழ்வதற்கு நமக்கிருந்த வாய்ப்பு நமது சந்ததிக்கு இல்லாமல் போயிற்றே என்ற சோகம் தோய்ந்த ஆதங்கம் அது.

ஒருபோகத்திற்கே வாய்ப்பற்று இருக்கும் இந்தத் தலைமுறைக்கு அஞ்சாறு போகம் விளைவித்தால்தான் உணவு உற்பத்தியில் நாம் தற்சார்பை அடையமுடியும் என்ற எதார்த்தம் எடுத்த எடுப்பில் புரிந்துவிடும் என்று தோன்றவில்லை.

விவசாய உற்பத்திக்கான மொத்த நிலப்பரப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதாக மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் மாண்பமை ராதா மோகன் சிங் சமீபத்தில் தெரிவித்துள்ள தகவலை 03.08.2016 அன்றைய தீக்கதிர் வெளியிட்டுள்ளது.

2013-2014 ஆம் ஆண்டில் 181.713 மில்லியன் ஹெக்டர் அளவிலான விவசாய நிலம் வேறு பணிகளுக்காக கைமாறிப் போயிருக்கிறது. இந்த ஆண்டு 182.209 மில்லியன் ஹெக்டர்  விவசாய விளைநிலம் கைமாறிப் போயிருக்கிறது. இப்படியாக ஒவ்வொரு ஆண்டும் 1.25 மில்லியன் ஹெக்டர் விவசாய விளைநிலம் விவசாயம் கடந்து நகர்கிறது என்கிற தகவலை மாண்பமை மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் கூறியிருக்கும் தகவலை அன்றைய தீக்கதிர் வெளியிட்டுள்ளது.

மற்ற விஷயங்களைப் பேசுவதற்கு முன்னால் பறிபோன விளைநிலங்களை ஏக்கர் அளவீட்டில் அறிந்துகொள்வது என்பது என்னொத்த பாமரர்களுக்கு உதவியாக இருக்கும். மில்லியன் என்றால் கோடி என்றே படுகிறது. அந்தப் புரிதலோடே நான் தொடர்கிறேன். பிழை என்றால் மாற்றிக் கொள்ளலாம். ஆக, மில்லியன் என்பதை கோடி என்று கொள்கிற பட்சத்தில் ஏதோ ஒரு வகையில் களவு போன 182.209 மில்லியன் ஹெக்டர் விளைநிலம் என்பதை தோராயமாக 182.25 கோடி ஹெக்டர் விளைநிலம் என்று கொள்ளலாம்.

ஒரு ஹெக்டேர் என்பது இரண்டரை ஏக்கர். 182.25 கோடி ஹெக்டர் என்பது 455.625 கோடி ஹெக்டர் என்றாகிறது. ஏறத்தாழ 456,62,50,000 ஏக்கர் விளை நிலம் இதுவரை வேறு பணிகளுக்காக மடை மாற்றப் பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் 1.25 மில்லியன் ஹெக்டர் விளைநிலம் களவாடப் படுகிறது என்றால் ஒவ்வொரு வருடமும் 3.125 கோடி ஏக்கர் (3,15,00,000 ஏக்கர்) நிலம் பறிபோய்க்கொண்டே இருக்கிறது.

இப்போது ஒரு பாமரத்தனமான கணக்கை பார்த்துவிடுவது இது எவ்வளவு ஆபத்தானது என்பதை யூகிக்க உதவும். ‘முப்பதுகோடி முகமுடையாள்’ என்று பாரதி பாடினான். ஆக அந்தக் காலகட்டத்தில், தோராயமாக அதைக்கூட 1920 என்று கொள்வோம் எனில் 1920 இல் நம் பூமியில் முப்பதுகோடி மக்கள் வாழ்ந்திருக்க வேண்டும்.  கொஞ்சம் கூடட்டும் குறையட்டும் அதுகுறித்து அக்கறை வேண்டாம்.

1920 இல் முப்பது கோடி மக்கள் வாழ்ந்தார்கள். மூன்று போகம் விளைந்தது. மக்களுக்கு போதுமான உணவு கிடைத்தது. இப்போது ஏறத்தாழ 130 கோடி மக்கள் வாழ்கிறார்கள். எனில் 1920 இல் இருந்ததைப் போல நான்கு மடங்கு விளைநிலம் கூடியிருக்க வேண்டுமல்லவா?

1920 இல் மூன்றுபோகம் விளைந்தது. இப்போது ஒரு போகம்தான் விளைகிறது (இது ஆகப் பெரிய பெருந்தன்மை). எனில் போகவாரியான மதிப்பீட்டில் மக்களுக்கான உணவு உற்பத்தியை ஈடு செய்ய மூன்று பங்கு நிலம் வேண்டும்.

ஆக, நான்கு மடங்காக மக்கள் தொகை உயர்ந்தும் போகம் என்பது மூன்றிலிருந்து ஒன்றென்று சுருங்கிப்போன நிலையில் 1920 இல் இருந்ததைப் போன்று 7 மடங்கு விளை நிலம் இருந்தால்தான் 130 கோடி மக்களுக்கான உணவு உற்பத்தியை ஈடு செய்ய இயலும்.   

தேவை இப்படி இருக்க, இருக்கிற விளைநிலத்திலிருந்தும் வருடா வருடம் மூன்றேகால் கோடி ஏக்கர் விளைநிலம் குறைந்தபடி வருகிறது என்றால் சில விஷயங்களைப் பரிசீலிக்க வேண்டியிருக்கிறது.

1)   இந்த விளைநிலங்கள் எதற்காக களவாடப் படுகின்றன?
2)   இதை எப்படி எதிர்கொள்வது?

நகர் விரிவாக்கம் என்ற பெயரில் பெருமளவு விளைநிலங்கள் கையகப் படுத்தப் பட்டிருக்கின்றன. ஒருபக்கம் பார்த்தால் இது நியாயமாகக்கூட படும். முப்பது கோடியிலிருந்து நூற்றி முப்பது கோடிக்கு மக்கள் தொகை தாவும்போது அதற்கேற்றார்போல வசிப்பிடமும் பெருகத்தான் வேண்டும். கடந்த நூறு ஆண்டுகளில் மக்கள் தொகை நான்கு மடங்கிற்கும் மேல் பெருகி உள்ளபோது வசிப்பிடமும் நான்கு மடங்கிற்கும் அதிகமாக பெருகத்தானே வேண்டும்.

நான்கு மடங்கிற்கும் அதிகமாக ஜனத்தொகை பெருகியிருக்கும்போது பொருள் உற்பத்தியும் வேலை வாய்ப்பும் அதற்கேற்றார்போல் தொழிற்சாலைகளும் பிறவகையான உற்பத்தி நிலையங்களும் உருவாக வேண்டும்தான். எனில், அதற்கான கட்டுமானங்களும், குறிப்பாக கட்டட கட்டுமானக்களும் விரிவடையத்தான் வேண்டும். இப்படியாக தொழிற்சாலைகள் அமைவதற்கு இடம் வேண்டும்தான். உற்பத்திப் பொருட்களை சந்தைப் படுத்துவதற்கு வணிக வளாகங்கள் அவசியம்.

இப்படிப் மக்கள் திரள் நாளும் நாளும் பலுகிப் பெருகும் போது பெருகும் குழந்தைகளின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் பள்ளிகளும்  கல்லூரிகளும் உருவாக்கப்படத்தான் வேண்டும்.

விளையாட்டு மைதானங்களும், கேளிக்கை நிலையங்களும், பேருந்து மற்றும் ரயில் நிலையங்களும் ஜனத்தொகைக்கேற்ப கட்டமைக்கப்பட வேண்டும். அவர்களின் மத உரிமையும் மத ஜனநாயகமும் மதிக்கபடும் முகத்தான் சகல மதத்தினரும் தங்களுக்கான வழிபாட்டுத் தளங்களை அமைத்துக் கொள்வதற்கு உரிமை கொண்டவர்கள் என்கிற வகையில் சகல மதத்தினரும் தங்களுக்கான ஆலயங்களை ஏற்படுத்திக் கொள்ள அனுமதிக்கத்தான் வேண்டும்.

மக்கள் தொகை பெருகும் போது மருத்துவமனைகளும் பெருகத்தான் செய்யும்.

நிலக்கரி, இரும்பு, தங்கம், சுண்ணாம்பு உள்ளிட்ட கனிம வளங்கள் இடங்கள் தவிர்க்கவே முடியாதபடிக்கு விவசாயத்திலிருந்து கையகப் படுத்தப்பட்டன.

இயர்ற்கைப் பேரிடர்களும் அவ்வப்போது ஏற்படும் நிலச்சரிவுகளும் பெருமளவு விவசாய நிலத்தைக் கொள்ளை கொண்டன.

விவசாயத்திற்குப் போதுமான நீர் கிடைக்காமல் போனது. விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காது விவசாயி பெருமளவு நட்டப் பட்டான். நல்ல கூலி கிடைக்காது போனதாலும் தொழிற்சாலைகளில் விவசாயத் தொழிலைக் காட்டிலும் கூலியும் கொஞ்சம் மரியாதையும் கிடைத்ததாலும் விவசாயக் கூலித் தொழிலாளி தனது தொழிலை மாற்றிக் கொண்டான். இந்த வகையில் தொழிலாளர்களுக்கான பஞ்சமே ஏற்பட்டது. போக, விவசாயம் செய்வதால் கிடைக்கும் லாபத்தைவிடவும் விளை நிலங்களை விற்பதால் கிடைத்த பெருந்தொகை விவசாயியை கொஞ்சம் மாற்றி யோசிக்க வைத்தது. வருடா வருடம் விவசாயம் பார்த்து, போராடி கிடைக்கும் தொகையை விட நிலத்தை விற்று கிடைக்கிற பெருந்தொகையை ஏதேனும் ஒரு வங்கியில் போட்டு வைத்தால்கூட கிடைக்கும் வட்டியானது விவசாயம் செய்து கிடைக்கும் லாபத்தைவிடவும் அடிகமாக இருப்பது அவனை ஈர்த்தது.

விவசாயக் கூலித்தொழிலாளி ஆலைத் தொழிலாளியாக மாறுவது அவனையும் மாற்றுச் சிந்தனைக்கு இழுத்தது. இவனும் ஆலை முதலாளியானான்.

மேற்சொன்ன காரணங்களை எல்லாம் மேலோட்டமாகப் பார்த்தாலும் இல்லை கூடுதாலான கவனத்தோடு கொஞ்சம் ஆழமாகவே பரிசீலித்தாலும் இவற்றில் எதையும் யாராலும் நிராகரிக்கவே முடியாது. அப்படி மேற்சொன்ன பன்முகக் கட்டுமானம் தவிர்க்க முடியாததாக உள்ளபோது அதற்கான நிலத் தேவையும் தவிர்க்க முடியாததுதான். ஆனால் இவை எல்லாம் மொத்தமாகச் சேர்ந்தாலும் இவை மனிதச் சமூகத்திற்கான முப்பது விழுக்காடு தேவைகளே. உணவு உற்பத்தி என்பது மனித சமூகத்தின் ஐம்பது விழுக்காடு தேவை. வனம் என்பது அவனுக்கான இருபது விழுக்காட்டுத் தேவை.

அந்த முப்பது விழுக்காட்டுத் தேவையை நிவர்த்தி செயதால் மிச்சமுள்ள எழுபது விழுக்காட்டுத் தேவையை நிவர்த்தி செய்வதன்மூலம் கிடைக்கும் லாபத்தைவிட பலநூறு மடங்கு லாபம் ஈட்ட முடியும் என்கிற விஷயம் பணக்காரர்களை யோசிக்க வைத்தது.

பிரச்சினை என்னவெனில் அரசு இதில் மக்கள்நலன் சார்ந்து சாய்வதற்கு பதில் முதலாளிகளின் லாப வேட்டையை சார்ந்து நின்றது.

தரிசாக இருந்த புறவாழிடப் பகுதிகளை இந்தப் பணிகளுக்காக திட்டமிட்டு ஒதுக்கிக் கொடுத்திருக்கலாம். நிறையப் புறந்கர்ப் பகுதிகளை உருவாக்கை சகலவிதமான வசதிகளையும் அங்கு ஏற்படுத்தி மக்களை அங்கு குடியமர்த்தி இருக்கலாம். இதை எல்லாம் செய்ததோடு இருக்கிற தரிசு நிலங்களை பண்படுத்தி விளைநிலமாக மாற்றி இருக்கலாம். இப்படியாக யோசித்து அரசாங்கம் செயல்பட்டிருக்குமானால் தொழிற்சாலைகளும், கல்வி நிலையங்களும் வணிக வளாகங்களும், மருத்துவ மனைகளும், இன்னபிற வாய்ப்புகளும் விளைநிலத்தைக் கைவைக்காமலேயே நிறைவேற்றியிருக்க முடியும் என்பதோடு விளைநிலங்களையும் கனிசமாக பெருக்கியிருக்க முடியும்.

எந்த ஒரு தொழிலும் லாபமும் நட்டமும் முதலாளியைச் சாரும். ஆனால் விவசாயத்தில் நட்டம் விவசாயியினுடையதாகவும் லாபம் வணிகனுடையதாகவும் இருக்கிறது.

திடீரென தக்காளி ஒரு கிலோ எண்பது ரூபாய்க்கு விற்கிறது. அனைவரும் விவசாயியை சபிக்கிறோம். திடீரென அதே தக்காளி கிலோ ஒரு ரூபாய்க்கு வந்துவிடுகிறது. அப்போது யாரும் விவசாயியை வாழ்த்துவதில்லை. உண்மை என்னவெனில் தக்காளி ஒரு ரூபாய்க்கு விற்கும் போது ஏற்படும் நட்டம் விவசாயியினுடையது. நூறு ரூபாய்க்கு விற்கும்போது கிடைக்கும் அதிக லாபம் கார்ப்பரேட்டு வணிகனுடையது.

நெல் விலை விவசாயி கேட்குமளவு கிடைப்பதில்லை. ஆனால் அரிசி விலை தாறுமாறாக ஏறிக் கொண்டே போகிறது. கரும்புக்கு நியாயமான விலைகேட்டு விவசாயி போராடிக் கொண்டே இருக்கிறான். ஆனால் எந்த முதலாளியும் ஒரு ஆர்ப்பாட்டம்கூட செய்யாமலேயே சர்க்கரைவிலை ஏறுகிறது.

இந்த முரணை அரசு கலைந்தாலே விவசாயத் தொழிலைக் காப்பாற்றி விடலாம். இருக்கிற விளைநிலங்களையும் காப்பாற்றலாம். இருக்கிற தரிசு நிலங்களையும் விவசாய நிலங்களையும் அதிகப் படுத்தலாம்.

விவசாயத்தைப் பற்ரி இப்படி மலை மலையாய் கவலைகள் குவிந்து கிடக்க தருமபுரி மாவட்டம் துரிஞ்சிப்பட்டியில் சாமானிய விவசாயிகள் 42 பேர் சேர்ந்து தங்கள் பகுதியில் நீரின்றி வறண்டு கிடந்த 350 ஏக்கர் நிலத்தை முப்போகம் சாகுபடி செய்யக்கூடிய விளைநிலமாக மாற்றி எடுத்திருக்கிறார்கள் என்கிற விவரத்தை 16.08.2016 தி இந்து சொல்கிறது.

சேர்வராயன் மலையிலிருந்து சரியும் நீர் முதலில் அஜ்ஜம்பட்டி ஏரிக்கு வரும். அதன் மிகை நீர் அடுத்தடுத்து உள்ள இரண்டு சிறிய ஏரிகளை நிரப்பியபின் கிருஷ்ணாரெட்டி ஏரிக்கு வரும். ஆக அந்தப் பகுதியில் பெய்யும் மழையானது நான்கு ஏரிகளை நிரப்பி கிருஷ்ணாரெட்டி ஏரிநீர் மட்டும் 350 ஏக்கர் விவசாய நிலத்தில் முப்போக விவசாயத்திற்கு உதவி வந்தது.

மலை அடிவாரத்திலிருந்து அஜ்ஜம்பட்டி ஏரிக்கு நீர் வரும் பாதையை ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமிக்கவே அஜ்ஜம்பட்டி ஏரிக்கு வரும் நீர் தடைபட்டது. நான்கு ஏரிகளும் வறண்டு போயின. அந்தப் பகுதியில் முப்போகம் விளைந்த 350 ஏக்கர் விளை நிலமும் தரிசாக மாறின.

ஆக்கிரமிப்பை அகற்ரக் கோரிய மக்கள் போராட்டங்கள் வழக்கம்போலவே உதாசீனப் படுத்தப் பட்டன. தமிழ்வாணன் உளிட்ட 42 விவசாயிகள் கொஞ்சம் மாறிச் சிந்தித்தனர். ஏரிக்கு வராமல் வீணாகும் நீரை அரசின் அனுமதியோடு மோட்டார் பம்ப் மூலம் கிருஷ்ணாரெட்டி ஏரிக்கு கொண்டு வந்தனர். இதற்கு ஏறத்தாழ 90 லட்சம் ரூபாய் செலவானது. நண்பர்கள் பகிர்ந்தும் வங்கிகளில் கடன் வாங்கியும் இதை சாத்தியப் படுத்தினர். இப்போது அந்தப் பகுதியில் 350 ஏக்கர் தரிசு முப்போகம் விளைகிறது.

42 சாமானியர்கள் யோசித்து செயல்பட்டாலே 350 ஏக்கர் தரிசு முப்போகம் விளையுமென்றால் சர்வ வல்லமி கொண்ட அரசு யோசித்து செயல்படுமானால்…?

காக்கை செப்டம்பர் 2015




No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...