Tuesday, August 21, 2018

நீட்பயிற்சி முழுச்சோறு, பாடங்கள் ஊறுகாய்த் தொக்கு

தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் "PROCEEDIGS OF THE DMS" என்றொரு சுற்றறிக்கையினை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியிருக்கிறது.
”சிறப்புக் கட்டணம்” தவிர வேறு கட்டணம் எதேனும் வசூலிக்கப்பட்டால் அந்த மெட்ரிக் பள்ளிகளின் அங்கீகாரம் திரும்பப் பெறப்படுவதுடன் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த சுற்றறிக்கை மிகக் கடுமையாக எச்சரிக்கிறது.
வாங்குகிற கட்டணத்திற்கு முறையான ரசீதுகளை நிறைய பள்ளிகள் தருவதில்லை. பல பள்ளிகளில் கட்டணம் என்ற பெயரில் வாங்கப்படுகிற முழுப் பணத்திற்கும் ரசீது தருவதில்லை. அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மட்டும் ரசீது தருவார்கள்.
ஆனாலும் பெரும்பான்மை பெற்றோர்கள் இந்தக் கொள்ளைக்கு எதிராக சன்னமாகக்கூட தங்களது எதிர்ப்புகளைப் பொது வெளியில் வைப்பதில்லை.
இந்தக் கொள்ளைக்கு எதிராக பெற்றோர்களை களமேக விடாமல் தடுக்கும் சில காரணங்கள்,
1) பள்ளியில் இடம் கிடைத்தால் போதும் என்கிற மனநிலை
2) தாம் இதுகுறித்து ஏதேனும் கேட்கப் போய் கேட்டால் அது தம் குழந்தைக்கு பிரச்சினைகளைக் கொண்டு வந்து சேர்க்குமோ என்ற அச்சம்
3) தலையிட்டு நியாயம் கோரி போராடுவதற்கான காலம் தம் கைவசத்தில் இல்லாதது
4) சிலருக்கு பிப்ரவரி மாதம் வாக்கில் பள்ளிகளில் இருந்து பெறப்படும் ரசீது அவர்களது வருமான வரியைக் குறைக்க உதவுகிறது
ஆனால் இவை எல்லாம் வழமைதான். இதற்காகவெல்லாம் பள்ளிக் கல்வி இயக்குநரகம் இந்த சுற்றறிக்கையை அனுப்பியிருக்கும் என்று நாம் நம்பவில்லை. இது தெளிவாக ஏதோ ஒன்றின் பெயரால் மெட்ரிக் பள்ளிகள் வசூலிக்கும் கட்டணத்திற்கு எதிராக இருப்பதாகவே தோன்றுகிறது.
“schools should not collect any fee other than the tuition fee under the guise of conducting special coaching classes” என்று அந்த அறிக்கை தெளிவுபடக் கூறுகிறது.
’சிறப்பு பயிற்சி வகுப்புகள்’ என்பது நிச்சயமாக நீட் தேர்விற்கான சிறப்பு பயிற்சி வகுப்புகளையே குறிக்கும் என்பதில் நமக்கு சந்தேகம் இல்லை.’சிறப்பு பயிற்சி வகுப்பு’ என்ற முகமூடி அணிந்துகொண்டு வேறு எந்த வகையான கட்டணத்தையும் பள்ளிகள் வசூலிக்கக் கூடாது என்கிறது அந்த அறிக்கை. சிறப்பு பயிற்சி என்ற முகமூடியோடு வேறு வகுப்புகளை நடத்தக்கூடாது என்பது அந்தச் சுற்றறிக்கையின் அடுத்தப் பகுதியில் இருக்கிறது. எனில், இந்த முகமூடி பயிற்சியை விடவும் வசூலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை அரசு உணர்ந்துள்ளது என்பதோடு அது குறித்து பள்ளிகளை எச்சரிக்கவும் செய்கிறது.
“பள்ளி நேரங்களில் வேறு எந்த வகையான பயிற்சிகளையும் மேற்கொள்ளக் கூடாது” என்றும் அந்த அறிக்கை தெளிவு படுத்துகிறது.
எனில், பள்ளி நேரங்களில் பல பள்ளிகள் வேறு வகையான பயிற்சிகளை மேற்கொள்கின்றன என்பது தெளிவாகிறது. எனில்,
1) எந்த வகையான பள்ளிகள் வேறுவகையான பயிற்சிகளை குழந்தைகளுக்கு வழங்குகின்றன?
2) என்னென்ன பயிற்சிகளை அவை குழந்தைகளுக்கு வழங்குகின்றன?
நிச்சயமாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இத்தகைய பயிற்சிகளை பள்ளி வேலைநேரத்தில் வழங்குவதில்லை. வழங்குவதில்லை என்பதைவிட வழங்க இயலாது என்பதே உண்மை. சுயநிதிப் பள்ளிகளில்தான் இதுமாதிரியான அத்துமீறல்கள் நிகழ்வதற்கு வாய்ப்புண்டு.
கராத்தே, யோகா, இசை, நடனம், தப்பாட்டம் ஓவியம் உள்ளிட்டு எத்தனையோ வகையான பயிற்சிகளை பொதுவாக பள்ளிகள் தமது பிள்ளைகளுக்கு வழங்குகின்றன. இவை பெரும்பாலும் மாலை, காலை அல்லது விடுமுறை நாட்களில் நடைபெறும். இதற்காக தனியாக கட்டணம் வசூலிக்கப் படுவதும் உண்டு. தேறும் தொகையில் கற்றுத் தரும் பயிற்சியாளர்களுக்கு வழங்கியதுபோக பள்ளிகளுக்கும் ஒதுங்கும். பல நேரங்களில் ஒதுங்கும் தொகை மிகக் கணிசமாகவும் இருக்கும். பல பள்ளிகளில் பள்ளி நிர்வாகம் கைவிட்டு பயிற்சி கொடுப்பவர்களுக்கு தரவேண்டிய சூழலும் ஏற்படுவது உண்டு.
இந்த வட்டத்திற்குள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் வந்துவிடும். ஆனால் அரசின் சுற்றறிக்கை கூறும் பயிற்சிகள் இவை அல்ல என்பதை அறிக்கையை போகிற போக்கில் வாசித்தாலே புரியும்.
மேற்சொன்ன பயிற்சிகளுக்கு ஒரு குழந்தைக்கு ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக 200 ரூபாய்க்குமேல் வசூலிக்க முடியாது. இந்தத் தொகைக்காகவெல்லாம் மேற்சொன்ன சுற்றறிக்கையை இயக்குநரகம் அனுப்புவதற்கான வாய்ப்பில்லை. எனில், அந்த சுற்றறிக்கைக்கான தேவைதான் என்ன? அந்த சுற்றறிக்கையின் கீழ்வரும் பகுதி இந்த சுற்றறிக்கைக்கான தேவையை நமக்குப் புரிய வைக்கிறது.
“it is expected that the teaching should not promote one particular career option without realising the aptitude of the students”
’கற்பித்தல் என்பது மாணவர்களின் விருப்பம் இன்றி அவர்களது கவனத்தை ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தொழில் நோக்கி ஒருபோதும் திருப்பக்கூடாது’ என்கிறது அந்த சுற்றறிக்கை.
இந்த சுற்றறிக்கை மூன்று விஷயங்களை முன்வைக்கிறது
1) ‘சிறப்புக் கட்டணம்’ தவிர வேறு கட்டணமெதையும் வசூலிக்க்க் கூடாது
2) பள்ளி நேரத்தில் வேறு பயிற்சிகளைத் தரக்கூடாது
3) ஒரு குறிப்பிட்ட தொழில் நோக்கி மாணவனது கவனத்தை கல்வி திருப்பக் கூடாது
இந்த மூன்று காரியங்களையும் செய்து கொண்டிருப்பவை கார்பரேட் பள்ளிகள்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்திதான்.
’தரமான கல்வி, நல்ல மதிப்பெண்’ என்கிற அளவையெல்லாம் தாண்டி ‘நீட்டில் வெற்றி உறுதி’ எம் பள்ளியில் உங்கள் குழந்தைகளை சேருங்கள் பள்ளிகள் அழைக்கின்றன.
மருத்துவக் கல்லூரிக்கு மதிப்பெண் தேவை இல்லை, நீட் தான் தேவை என்றானதும் கார்பரேட் பள்ளிகள் தங்களது வழமையான பாணியை மாற்றிக் கொண்டுள்ளன. இப்போது பல பள்ளிகளில் குழந்தைகள் 35 அல்லது 40 மதிப்பெண் எடுத்தால் போதும் என்கிற அளவில் கற்பித்தலை சுறுக்கிக் கொண்டு நீட் தேர்விற்கான பயிற்சியை முழுநேரமும் தரத் தொடங்கிவிட்டன. நீட் முழுச்சோறாகவும் பாடங்கள் ஊறுகாய்த் தொக்காகவும் மாறிப்போயின.
இதற்காக லட்சக் கணக்கில் பணத்தைக் கறக்கத் தொடங்கி விட்டன. ஏதோ பள்ளிக் கல்வியே மருத்து கல்லூரிகளுக்கு மாணவர்களை வார்த்தெடுத்து தரும் பட்டறைகள்தான் என்பதான ஒரு மாய பிம்பத்தைக் கட்டமைத்து விட்டன இந்தப் பள்ளிகள்.
ஏறத்தாழ பத்து லட்சம் குழந்தைகள் மேல்நிலை பொதுத் தேர்வினை எழுதுகிறார்கள். இவர்களில் அயல்நாடு சென்று மருத்துவம் படிப்பவர்களையும் சேர்த்தால்கூட பதினையாயிரம் குழந்தைகள் தேற மாட்டார்கள். மிச்சம் ஒன்பது லட்சத்து எண்பத்தி ஐயாயிரம் குழந்தைகளில் ஒன்றரை லட்சம் குழந்தைகள் பொறியியல் படிக்கிறார்கள். மீதமிருக்கிற எட்டு லட்சத்தி சொச்சம் குழந்தைகளுள் டிப்ளமா, சான்றிதழ் படிப்புகளை நோக்கி ஒரு லட்சம் குழந்தைகள் சென்றுவிட்டாலும் மீதம் இருக்கிற ஏழு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் கலை அறிவியல் கல்லூரிகளுக்குத்தான் செல்ல வேண்டும்.
ஆக பத்து லட்சம் மாணவர்களில் வெறும் பதினையாயிரம் மாணவர்களை மட்டுமே முன்னிலைப் படுத்துகிற பள்ளிகளை நோக்கித்தான் இந்தச் சுற்றறிக்கை விடப்பட்டிருக்கிறது என்பது தெளிவாகிறது.
ஒரு பெரிய கார்பரேட் பள்ளியில் 2000 மாணவர்கள் மேல்நிலக் கல்வியில் படிப்பதாக வைத்துக் கொள்வோம். எவ்வளவுதான் அதிகமாக வைத்துக் கொண்டாலும் 50 பேருக்குமேல் மருத்துவத்திற்கு தேர்ச்சிபெறப் போவதில்லை.
இந்த 50 குழந்தைகளுக்காக எஞ்சி இருக்கிற 1950 குழந்தைகளிடமும் காசைக் கறந்து அவர்களைக் கசக்கிப் பிழிவது எவ்வளவு வன்முறை.
ஆக இந்த அளவில் இந்தச் சுற்றறிக்கை மிக அவசியமான ஒன்றாகும்.
காசைக் கறப்பது, பள்ளி நேரத்தை நீட் பயிற்சிக்காக ஒதுக்குவது, மாணவர்களது கவனத்தை அவர்களது விருப்பத்திற்கு மாறாக ஒரு துறை நோக்கி திருப்புவது ஆகிய செயல்களை ஏராளமான பள்ளிகள் செய்கின்றன என்பதால்தான் இந்த சுற்றறிக்கையை இயக்குநரகம் வெளியிட்டிருக்க வேண்டும்.
கஞ்சத்தனமே இல்லாமல் இந்தச் சுற்றறிக்கையைப் பாராட்டி வரவேற்கிறோம்.
இந்த சுற்றறிக்கையை பள்ளிகளுக்கு அனுப்பி ஒருமாதத்திற்கும் மேல் ஆகிறது. நமக்கு இரண்டு கேள்விகள் இருக்கின்றன
1) விதிகளின்படி நடந்துகொள்ளாத எத்தனைப் பள்ளிகளின்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது? அல்லது,
2) அனைத்து மெட்ரிக் பள்ளிகளும் ‘நீட் பயிற்சி’யை நிறுத்திக் கொண்டனவா?
தீக்கதிர் 12.08.2018

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...