Monday, August 27, 2018

26.08.2018

அலைபேசியின் அழைப்பொலி கேட்டு எடுத்துப் பார்த்தால் மெசஞ்சரில் நா. விச்வநாதன் அழைத்துக் கொண்டிருந்தார். ஒருவிதமான குற்ற உணர்வு அப்பிக்கொண்டது. எடுப்பதா? அல்லது கொஞ்சம் பேசுவதற்குரிய தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பிறகு நாமே அழைத்து பேசிவிடலாமா என்று குழம்பிப் போனேன்.
காரணம் மூன்று நாட்களுக்கு முன்னமே அவர் மெசஞ்சரில்
“எட்வின், உங்களோடு பேச வேண்டும். என்னிடம் உங்கள் எண் இல்லை. நிச்சயமாக உங்களிடமும் என்னுடைய எண் இருக்காது. என்னுடைய எண் தந்திருக்கிறேன். அவசியம் பேசுங்கள்” என்றிருந்தார்.
மூன்று நாட்களாய் முடியாமல் போனது. அந்தக் குற்ற உணர்வு ஒருபுறம் தடுத்தாலும் எனக்குள்ளிருந்த நாவியின் குரலுக்கான தாகம் அலைபேசியை காதுக்கு இழுத்துப் போனது.
வாரம் இரண்டு முறையேனும் மணிக்கணக்கில் கேட்ட குரல். மாதம் ஒன்று அல்லது இரண்டு கூட்டங்கள் தஞ்சையில் இருக்கும் எனக்கு அப்போதெல்லாம்.
கேட்டபோதெல்லாம் Kaakkai Cirakinile கு எழுதிக் கொடுத்தார்.
‘எட்வின்’ என்றதுமே கண்கள் கசிய ஆரம்பித்துவிட்டன. “தோழர், எப்படி இருக்கீங்க?” என்று கேட்கிறேன்.
அதை பிறகு சொல்வதாகவும், பேச வந்ததை முதலில் பேசிவிடுவதாகவும் கூறுகிறார். விஷயம் ரொம்ப எளிமையானது.
தஞ்சையில் ‘வாசகர் வட்டம்’ ஆரம்பித்திருக்கிறார்கள். அடுத்த கூட்டத்தில் “கறிசோறு” நாவல் குறித்து உரையாற்ற யாரை அழைப்பது என்று பேசிக்கொண்டிருந்தபோது யாரோ ஒரு தம்பி “கறிசோறு” குறித்து எட்வின் பேசிக் கேட்டால் நல்லா இருக்கும் என்று சொல்லியிருக்கிறான். லைனில் வந்துவிட்டார்.
”எட்வின், எனக்குத் தோணல, அந்தப் பையன் சொன்னதும் உங்களத் தேடினேன்” என்று அவர் சொல்ல சொல்ல “நம்ம யாருமே கண்டுக்கறதில்லயே என்கிற வழமையான நமது ஆதங்கம் காற்றிலே கறைந்து போனது. ”நாமளும் ஆளுதாண்டா” என்கிற திமிர் மீண்டும் ஒட்டிக் கொண்டது.
பொதுவாவே தஞ்சையில் பேசுவதென்றால் அலாதியான சுகம். ஒத்துக் கொண்டிருக்கிறேன். அநேகமாக செப்டம்பர் ஒன்பது அன்று தஞ்சையில் உரையாற்றுகிறேன்.
இனிதான் முக்கியமே.
இப்ப சொல்லுங்க தோழர், “எப்படி இருக்கீங்க? ஊர் எப்படி இருக்கு?”
”நானும் நல்லா இருக்கேன். ஊரும் நல்லா இருக்கு.என்ன ஊரும் நானும் ஒட்டாம இருக்கோம். கிட்டத் தட்ட ஊர்விலக்கம்தான்”
அவர் விரும்பாத ஒரு விஷயத்தை, இத்தனை காலம் பொதுவெளியில் அவர் குறித்து சொல்லாத ஒரு விஷயத்தை இப்போது வைக்கிறேன். அவர் பிறப்பால் ஒரு பார்ப்பணர். எப்போதும் அக்ரஹாரத்திற்கு எதிராகவே நிற்பவர். சனாதனம் மிதிப்பவர். இடைசாதி அரசியலையும் மூர்க்கமாய் எதிர்ப்பவர். ஏறத்தாழ எனக்குத் தெரிய எந்தக் காலத்திலும் ஊர் அவரை ஏற்றதே இல்லை. எனவே சிரித்துக் கொண்டே என்ன விஷயம்? என்கிறேன்
ஒன்றும் இல்லை. 150 தலித்துகளை அழைத்துக் கொண்டு கோவிலுக்குப் போயிருக்கிறார்.. ஜீவாவும் (Jeeva Kumar) இன்னொரு பையனும் இறுதிவரை கூட நின்றதாகக் கூறினார். ஜீவகுமார் இறுதிவரை கூட நின்றார் என்பதைக் கேட்டதும் ஒருவிதமான திமிர் ஒட்டிக் கொண்டது.
இதை செய்தால் ஊர் விலக்கி வைக்காமல் கொண்டு கொடுக்கவா செய்யும்.
சிரித்தேன்.
”புரயோஜனம் உண்டா?”
“இல்லாம, வெள்ளி வெள்ளி எழுபது எண்பது பேர் நம்ம பெண்கள் கோயிலுக்குள்ள போய் சாமி கும்பிட்டுட்டு வராங்க”
அவர் நம்ம பெண்கள் என்று சொன்னது தலித் பெண்களை. அவர் நாத்திகர்.
செப்டம்பர் ஒன்பது கலகக்காரர் நாவியைப் பார்க்க ஷாலோடு தஞ்சைக்கு போகிறேன்
#சாமங்கவிய ஒரு மணி ஐந்து நிமிடங்கள்
26.08.2018

2 comments:

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...