நமது மண்ணின் கல்வி அடையாளங்களுள் மிக முக்கியமான ஒன்று “அண்ணா பல்கலைக் கழகம்” அண்ணாப் பல்கலைக் கழகத்து “பொறியியல் பட்டம்” என்பது உலக அளவில் ஓரளவிற்கு மதிப்புமிக்கது. அதுவும் அண்ணா பல்கலைக் கழத்து வளாத்திற்குள்ளேயே படிக்கிற வாய்ப்பு கிடைத்தவர்கள் பேறுபெற்றவர்களாகவே கருதப்பட்டு வந்தனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மறு மதிப்பீடு மற்றும் மறுகூட்டலில் ஏகத்திற்கும் ஊழல் நிகழ்ந்திருப்பதாக கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. இரண்டு நாட்களாக எங்கு திரும்பினாலும் இதுபற்றிய செய்திகளாகவே கிடைக்கின்றன. ஒரு இரண்டு ஆண்டு காலத்திற்குள் அல்லது கொஞ்சம் பெருந்தன்மையோடு அணுகினால் மூன்று ஆண்டு காலத்திற்குள் ஏறத்தாழ 2 லட்சம் மாணவர்கள் பணம் கொடுத்து ஒன்று தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள் அல்லது தங்களது மதிப்பெண்ணை உயர்த்தி கொண்டிருக்கிறார்கள்.
இந்த வகையில் பேராசிரியை உமா அவர்களுக்கு ஏறத்தாழ 200 கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருக்கிறது. அவருக்கு உடந்தையாக இருந்த திண்டிவனம் அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரி முதல்வரான பேராசிரியர் சிவகுமார் அவர்களும் ஏகத்திற்கும் சம்பாதித்து இருப்பதாய் செய்திகள் சொல்கின்றன.
தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் பேராசிரியையாக பணியாற்றி வரும் பேராசிரியை திருமதி உமா அவர்கள் பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு துறை அதிகாரியாக வேலை பார்த்த பொழுது ஏறத்தாழ 10 பேராசிரியர்களின் துணையோடு லஞ்சப் பணத்தை வாரிச் சுருட்டி இருக்கிறார் என்ற தகவல்கள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது
அண்ணா பல்கலைக்கழகம் என்பது இந்த நாட்டின் கல்விக்கான அடையாளங்களுள் ஒன்றாக விளங்குகிறது. இந்த பல்கலைக்கழகத்திலேயே இவ்வளவு பெரிய ஊழல் நடந்திருப்பது ஆச்சரியத்தை தருகிறது
மாணவர்கள் மட்டுமல்லாது பொறியியல் கல்லூரிகளின் நிர்வாகங்களும் தங்களது கல்லூரியின் தேர்ச்சி விழுக்காட்டை அதிகப்படுத்தி தருவதற்காக நிறைய லஞ்சம் கொடுத்து இருக்கிற தகவல்களும் தெரியவருகிறது
ஏறத்தாழ இந்த குறிப்பிட்ட காலத்திற்குள் சுமார் 2 லட்சம் மாணவர்கள் லஞ்சம் கொடுத்து தங்களை தகுதிப்படுத்திக் கொண்டிருப்பது உலக மட்டத்தில் நமது கல்வியின் தரத்தை அதிலும் குறிப்பாக தொழில் நுட்பத்தின் தரத்தை கேவலப்படுத்தும் ஒரு காரியமாகும்.
இதில் அனைவரும் கவனிக்கத் தவறுகிற ஒரு விஷயம் இருக்கிறது.
பள்ளிக் கல்வி என்றாலே அது CBSE மட்டும்தான். பொறியியல், தொழில் நுட்பம் எனில் NIIT மற்றும் IIT தான் என்பதாக மேட்டுக்குடி வர்க்கம் நிறுவ முயற்சித்துக் கொண்டிருக்கும் வேளையில் அண்ணா பல்கலைக் கழகத்தின் மதிப்பைக் கெடுக்கும் வேலையை செய்வதற்கு அவர்கள் இது போன்ற காரியங்களை திட்டமிட்டு தங்களது வலையில் விழுந்த ஆட்களைக் கொண்டு செய்திருப்பார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
இதை நேர்மையாக விசாரித்தால் பல கார்பரேட் கல்லூரிகளின் முகத்திரைக் கிழியக்கூடும். ஏன் என்று கேட்டால் சென்ற பாராவில் நமக்கு ஏற்பட்டிருக்கும் அய்யம் உண்மை எனில் அவர்களது வலையில் கார்பரேட் கல்லூரிகளே விழுவதற்கான வாய்ப்பு அதிகம்.
இது ஒரு புறம் இப்படி சுழன்று கொண்டிருக்க ஏதோ ஒரு பத்திரிக்கையில் ஒரு மூலையில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை ஒரு இயக்குனராக பணியாற்றிவந்த திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் தனது பணி ஓய்வு நாளான 31 7 2018 அன்று அவரது பணிக்காலத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி பணியிடை பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்
நமக்கு சில கேள்விகள் இருக்கின்றன
நமக்கு சில கேள்விகள் இருக்கின்றன
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில் இயக்குனராக பணிபுரிந்த ஒருவர் தனது பணி காலத்தில் முறைகேடாக நடந்து கொண்டார் என்பது அரசுக்கு அல்லது துறைக்கு அவரது பணி ஓய்வு நாளின் போது தான் தெரிய வந்ததா?
அதற்கு முன்னரே அவரது முறைகேடுகள் பற்றி தெரிய வந்திருப்பின் அவரது பணி ஓய்வு நாள் வரைக்குமான அரசின் நடவடிக்கை என்ன? ஒழுங்கான ஒரு செட்டில்மெண்ட் குறித்த எதிர்பார்ப்பு அரசுக்கோ துறைக்கோ இருந்ததா?
தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள திருமதி உமா அவர்களும் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களும் செல்வாக்கு மிக்கவர்கள். இந்த நிலையில் அவர்கள் வெளியில் இருந்தால் அவர்களுக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி விசாரணையை ஊனப்படுத்தி விட மாட்டார்களா?
எதற்கு சுற்றி வளைத்துக் கொண்டு,
அவர்கள் இருவரும் ஏன் கைது செய்யப்படவில்லை?
#சாமங்கவிந்து 29 நிமிடங்கழித்து
06.08.2018
06.08.2018
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்