நெகிழ்வுகளும் ஒரு கோரிக்கையும்
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய
திரு ஸ்டாலின் அவர்களுக்கு வணக்கம்.
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய
திரு ஸ்டாலின் அவர்களுக்கு வணக்கம்.
முதலில் கலைஞர் விரைந்து குணமடைய வேண்டும் என்ற எனது விருப்பத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்
உங்கள்மீது எத்தனையோ விமர்சனங்கள் இருப்பினும் தற்போதைய தமிழகச் சூழலை உங்களை நிராகரித்துவிட்டு எதிர்கொள்வது எவ்வளவு தவறான முடிவுகளைத் தரும் என்பதை உணர்ந்தவனாகவே இருக்கிறேன்
அதேபோல் இடதுசாரிகள், விசிக மற்றுமுள்ள ஜனநாயக அமைப்புகளை நிராகரித்துவிட்டு தற்போதைய தமிழக சூழலை நீங்கள் எதிர்கொள்வதும் மோசமான விளைவுகளையே தரும் என்பதை உணர்ந்தவராகவே நீங்களும் இருக்கிறீர்கள் என்பது எமது நம்பிக்கையை பலப்படுத்துகிறது
இந்த விஷயத்தில் கழகத் தோழர்கள் சிலரது எதிர்மறையான குறுக்கீடுகள் ஒற்றுமையை சிதைத்துவிடாமல் நீங்கள் கவனம் கொள்வீர்கள் என்பதையே தங்களது சமீபகால நடவடிக்கைகள் உணர்த்துகின்றன.
ஆனால் அதற்கல்ல இந்தக் கடிதம்.
முதலில் ஒரு பாராட்டு
கலைஞர் அவர்கள் மருத்துவமனையில் மரணம் வெல்ல போராடிக் கொண்டிருக்கிறார். ஒரு புள்ளியில் விடைபெற்றுக் கொண்டார் என்று நம்புகிறமாதிரி செய்தி கசிகிறது. என்னையறியாமல் கண்ணீர் கசிகிறது. காரணம் ரொம்ப எளிதானது, "இன்றைய என்னில் அவரும் இருக்கிறார்" என்பதுதான் அது
இந்தப் புள்ளியில் ஏதோ ஒரு பிரியாணிக்கடையில் திமுக தோழர் ஒருவர் தனது நண்பர்களோடு புகுந்து இலவசமாக பிரியாணி கேட்டு அடிதடியில் இறங்குகிறார். கடை ஊழியர்கள் சிலர் இதனால் காயம் படுகிறார்கள்
கேள்விப்பட்டதும் அந்தக் கடைக்கு நேரே செல்கிறீர்கள். தவறுக்கு வருத்தம் சொல்கிறீர்கள். காயப்பட்ட வர்களுக்கு ஆறுதல் கூறுகிறீர்கள். இழப்பை சரி செய்வதாக உறுதி தருகிறீர்கள்
சம்பந்தப்பட்ட நபரை கட்சியிலிருந்து தற்காலிகமாக வெளியேற்றுகிறீர்கள்
ஒருமுறை DYFI கருத்தரங்கம் ஒன்றில் பேசிக் கொண்டிருக்கிறேன். அப்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் நட்சத்திர பேச்சாளர்களில் ஒருவரான திரு வெற்றி கொண்டான் அவர்கள் குறித்து பேசும்போது "போகிற போக்கில் அன்று வெற்றி கொண்டான் பேசிவிட்டு போனான்" என்று போகிற போக்கில் பேசி விட்டேன். வழக்கமாக அப்படிப் பேசுபவன் அல்ல.
பேசி முடித்து மேடையிலிருந்து இறங்கியதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாவட்ட தலைவர்களில் ஒருவரான தோழர் இந்துராஜ் என்னை அழைக்கிறார்.
"நீயே இப்படி மரியாதை இல்லாமல் வயதில் மூத்தவரை அவன் என்று எப்படி பேசுகிறாய்? நீயே இப்படி பேசினால் இளைய தோழர்கள் இன்னும் வேகமா தவறு செய்வார்களே" என்று கடிந்து கொள்கிறார். நான் அப்படி பேசியமைக்காக அவரிடம் மன்னிப்பு கேட்ட அனுபவம் எனக்கு இருக்கிறது.
இப்போதும் அதற்காக உங்களிடமும் திமுக தோழர்களிடமும் மன்னிப்பு கேட்கிறேன்.
ஆனாலும் தமிழகத்தில் வெகு ஜன அரசியல் இயக்கங்களில் 'நீங்கள் பாதிக்கப்பட்ட கடை நோக்கி சென்று வருத்தம் தெரிவித்து ஆறுதல் கூறி இழப்புகளை சரி செய்கிறேன் என்று சொன்னது' மிகவும் புதிய ஒன்று.
அது மட்டுமல்ல தமிழக அரசியலின் எதிர்காலம் நாகரிகத்திற்கு உரியதாக இருக்கும் என்று நம்பிக்கையை அது தருகிறது
நீங்கள் நினைத்திருந்தால் பாதிக்கப்பட்டவர்களை வரவழைத்துகூட வருத்தம் தெரிவித்து இருக்க முடியும்
உங்களது இந்த செயலுக்காக நான் எனது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்
உங்களது தந்தையும் தலைவருமான கலைஞர் அவர்கள் மருத்துவமனையில் போராடிக் கொண்டிருக்கும் ஒரு துயரமான பொழுதில் நீங்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கும் தோழர் தா பாண்டியன் அவர்களை நலம் விசாரிப்பதற்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு சென்று அவர் கரம் பற்றி அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று வாழ்த்துகிறீர்கள்
சத்தியமாய் நெகிழ்ந்து போனேன் சார்
இந்தக் காலக்கட்டத்தில் மூன்றாம் வகுப்பு படிக்கும் ஒரு சின்னக் குழந்தை 'அவளது கலைஞர் தாத்தா' விரைவில் குணம் பெற வேண்டும் என்று எழுதிய கடிதத்தை உதாசீனப்படுத்தாமல் அந்தக் குழந்தையை நேரில் சந்தித்து அவளோடு நீங்கள் அளவளாவிய அந்த அன்பினைக் கண்டும் நெகிழ்ந்து போயிருக்கிறேன்
கேரளாவில் ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கேரள முதல்வர் தோழர் பினரயி விஜயன் அவர்கள் வருகிறார். அங்குள்ள தோழர்கள் அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்று ஒரு குழந்தை அவரது தாயாரிடம் நச்சரித்துக் கொண்டிருப்பதாக அந்த தாயார் தனது முகநூலில் பதிவிட்டிருக்கும் செய்தியை அவரிடம் கூறுகிறார்கள்
வீடு எங்கு இருக்கிறது என்று வினவுகிறார் தோழர் பினரயி. வீடு அருகில் தான் என்று தோழர்கள் கூறவே தோழர்களோடு அந்த குழந்தையின் வீட்டிற்குச் சென்று அவளோடு சற்று நேரம் விளையாடிக்கொண்டிருந்துவிட்டு அவர் பொதுக்கூட்டத்திற்கு வந்த அனுபவம் சமீபத்தியது
கேரளாவில் இடதுசாரிகளிடம் மட்டுமல்ல காங்கிரஸ் தலைவர்களிடமும் இது மாதிரியான போக்குகளை நம்மால் காண முடிகிறது
உம்மன் சாண்டி என்று அழைத்த குழந்தையை நோக்கி போய் குனிந்து அவள் கோரிக்கையைக் கேட்டு அதை நிறைவேற்றிய அன்றைய முதல்வர் உம்மன் சாண்டியை இப்போது நினைத்தாலும் நெகிழ்வேன்
இது கேரளப் பண்பாட்டுக் கூறு
தமிழகத்தில் அப்படி ஒரு சூழல் வராதா என்று ஏங்கி கிடந்த எங்களுக்கு ஒரு நம்பிக்கையைத் தந்து இருக்கிறீர்கள்
எம்எல்ஏக்களை பர்ச்சேஸ் செய்யமாட்டேன். இந்த அரசை போராடித்தான் வீழ்த்த வேண்டும் நீங்கள் உங்கள் உறுப்பினர்களோடு பேசிக் கொண்டிருந்ததாக கேள்விபட்டபோது உங்கள்மீதான நம்பிக்கை இன்னும் கூடியது
இப்போது நான் கூறவரும் விஷயம்தான் மிக முக்கியமானதும் உங்களிடம் ஒரு கோரிக்கையை உரிமையோடு வைப்பதற்கான தேவையையும் தந்திருக்கிறது
திரு எடப்பாடி அவர்களின் தலைமையிலான தமிழக அரசு சேலத்திலிருந்து சென்னையை நோக்கிய எட்டு வழிப்பாதையை கட்டமைப்பதற்காக மலைகளை குடையவும் விவசாய நிலங்களை முறையின்றி கையகப்படுத்தவும் ஆன செயல்களை செய்யத் துவங்கி இருக்கிறது
இதனால் அந்தப் பகுதியில் விவசாயம் பெரிதும் பாழ்பட்டுப் போகக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது
மலைகளைக் குடைவதன் மூலம் கனிமவளம் பெருமளவில் பாதிக்கப்படும்
போக இந்த முயற்சி என்பது ஏழை எளிய நடுத்தர வர்க்கத்தினரின் போக்குவரத்து பயன்பாட்டிற்கு அல்ல. இது பெருமுதலாளிகளின் சரக்கு போக்குவரத்திற்கான ஒரு திட்டம்.
அமைய இருக்கிற எட்டு வழி சாலையில் எட்டு ட்ராக்களில் இரண்டு மட்டுமே கார் மற்றும் பொதுப் பயண போக்குவரத்திற்கானது என்பதும் மற்றவை கனரக சரக்கு வாகனங்களுக்கானவை என்றும் செய்திகள் நமக்குச் சொல்கின்றன
அதுவும் அதிவேகத்தில் செல்லக்கூடிய பணக்கார கார்கள்மட்டுமே அந்த ட்ராக்களில் போகமுடியும் என்பது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை
ஆக, ஆறு ட்ராக்களில் கனரக வாகனங்களும் மிச்சமிருக்கிற இரண்டு ட்ராக்களில் அவற்றின் முதலாளிகளும்தான் பயணிக்க முடியும் என்று ஆகிறது
இந்த நிலையில் இந்த கொடூரமான, மக்களை பெரிதும் பாதிக்கக்கூடிய ஒரு முயற்சியை தடுத்து நிறுத்த தியாகமும் வீரமும் செரிந்த ஒரு நடை பயணத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்திருக்கிறது
திருவண்ணாமலையிலிருந்து சேலம் நோக்கிய அந்த அமைதி வழி நடைபயண போராட்டத்திற்கு தமிழக அரசு தடைவிதிக்கிறது
சொன்னபடி தடையை மீறி நடை பயணத்தை தொடங்கிய தோழர்களை அரசு கைது செய்து ரிமாண்ட் செய்யாமல் வீட்டிற்கு செல்வதென்றால் வெளியே விடுகிறோம் என்கிற பெயரில் ஏறத்தாழ 23 மணி நேரம் மண்டபத்திலேயே வைத்து அதிக அளவு காரம் கலந்த உணவை கைது செய்யப்பட்ட தோழர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள்
எது செய்தாலும் எது வேண்டுமானாலும் செய்யுங்கள் எங்கள் நடை பயணம் நிற்காது என்கிற முனைப்போடு தோழர்கள் களமிறங்கி இருக்கிறார்கள்
அது குறித்துக் கூட பிறகு பேசலாம்
நடைபயணத்தை தடை செய்தது தவறு என்றும் கைது செய்யப்பட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் இத்தனைக்குப் பிறகும் தங்களது போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்களை பாராட்டுவதாகவும் கூறியிருக்கிறீர்கள்
இந்த அறிக்கைக்காக உங்களை நன்றியோடு வணங்குகிறேன்
உங்களது இந்த நிலை, போராடிக் கொண்டிருக்கும் எங்கள் தோழர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும் என்பதை நான் மறுக்க விரும்பவில்லை
ஆனால் இது கடந்து உங்களிடம் எனக்கு ஒரு கோரிக்கை இருக்கிறது
அரசு செய்வது அநியாயம் என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள்.
அரசின் அடாவடித்தனமான இந்த போக்கிற்கு எதிர் நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள்.
இந்த செயலுக்கு எதிரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டம் சரி என்று உணர்ந்து இருக்கிறீர்கள்.
இந்த நடைபயணத்தை தடை செய்ததும் ஊழியர்களை கைது செய்ததும் தவறு என்று உணர்கிறீர்கள்.
அதற்கு எதிராக பலமானதொரு குரல் கொடுத்து இருக்கிறீர்கள்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களின் நெஞ்சார பாராட்டியிருக்கிறார்கள்.
மரியாதைக்குரிய தோழர் ஸ்டாலின் அவர்களே எனது அன்பான கோரிக்கை ஒன்று தான்.
இத்தனையையும் உணர்ந்த நீங்கள், அரசின் அடாவடித்தனத்திற்கு எதிரான ஒரு கடமைகளை செய்திருக்க வேண்டிய நீங்கள், அதை செய்து கொண்டு இருக்கிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களோடு என் தொண்டர்களும் களமேகுவார்கள் என்று சொல்லியிருந்தால் அதிர்வு கூடியிருக்குமே சார்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த செயலோடு இந்த புள்ளியில் இணைந்தாலும் அந்தப் போராட்டம் வலுப்பெறும் தானே
ஒருக்கால் இப்படியான ஒரு போராட்டத்தை நீங்கள் கையெடுத்திருந்தால் மகிழ்ந்து இணைந்திருப்போம்
வெற்றி பெறவேண்டும் என்று நீங்கள் வாழ்த்திய போராட்டத்தை சன் மற்றும் கலைஞர் குழும ஊடகங்கள் கண்டு கொள்ளாததை நீங்கள் கண்டித்திருந்தால் மகிழ்ந்திருப்போம்
கலைஞர் விரைவில் குணமடையவும்
இந்தக் கொடூரமான ஆட்சியை ஆதரவு சக்திகளை அரவணைத்து நீங்கள் வெற்றி பெறவும் வாழ்த்துகிறேன்
மிக்க நன்றி
இரா.எட்வின்
#சாமங்கவிய ஒரு மணி இருபத்தி ஐந்து நிமிடங்கள்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்