Sunday, August 5, 2018

65/66 காக்கைச் சிறகினிலே ஜூலை 2018


சிதைவுற் றழியும் பொருள்களில் சேர்ப்பையோ?” என்று கேட்டான் பாரதி.

சிதைவுற்றழியும் பொருட்களின் பட்டியலில் தமிழ் மண்ணையும் தமிழர்களின்  வாழ்வையும் சேர்ப்பீர்களா?” என்று மாநில மற்றும் மத்திய ஆட்சியாளர்களைப் பார்த்து கேட்கத் தோன்றுகிறது.

இப்போது தமிழில்நல்லா வச்சு செய்றாங்கஎன்ற ஒரு சொல்லாடல் வைரலாக வலம் வருகிறது. ‘தமிழ்ப்பூமியை நல்லா வச்சு செய்றாங்க ஆட்சியாளர்கள்என்று சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும். அப்படி வைத்து செய்துகொண்டிருக்கிறார்கள் நம்மை.

                               1

8000 விளைநிலங்களை அழித்தும் எட்டு மலைகளைக் குடைந்தும் வனத்தை அழித்தும் சேலத்திற்கு சென்னைக்கும் இடையேயானஎட்டுவழி சாலைபோடப்படுகிறது.

தமிழ் மண்ணின் கனிம வளத்தை பெருமளவு அழித்து இப்படி ஒரு சாலையை இவ்வளவு அவசரம் அவசரமாகக் கொண்டுவர வேண்டிய அவசியம் என்ன?

இந்த சாலையைக் கட்டமைப்பதற்கு 2200 ஹெக்டேர் நிலம் தேவைப்பட்டதாகவும் ஆனால் தான்  வெறும் 1900 ஹெக்டேர் நிலத்தைதான் கையகப் படுத்தி இருப்பதாகவும், அப்படி கையகப்படுத்தப்பட்ட 1900 ஹெக்டேரிலும் 400 ஹெக்டேர் தரிசு நிலம் என்றும் சொல்கிறார் முதல்வர். அவர் சொல்ல வருவது இதுதான்,

2200 ஹெக்டேர் விளைநிலம் தேவைப்பட்டபோது தரிசு நிலம் போக வெறும் 1500 ஹெக்டேர் மட்டுமே எடுத்திருக்கிற என் பெருந்தன்மையைக் கொண்டாடுங்கள் என்பதுதான் அது. உங்கள் பெருந்தன்மையைக் கொண்டாடுவதற்குமுன் உங்களிடம் சில கேட்கவேண்டும் முதல்வர் அவர்களே

1)   1500 ஹெக்டேர் விளைநிலம் என்பது என்ன அவ்வளவு சுளுவா? அந்த விளைநிலத்து விளைச்சலை ஈடுகட்டுவதற்கு என்ன திட்டம் இருக்கிறது உங்களிடம்?
2)   400 ஹெக்டேர் தரிசு நிலம்தானே என்கிறீர்கள். அந்த 400 ஹெக்டேர் நிலத்தை விளைநிலமாக்க வேண்டும் என்று உங்களுக்கு ஏன் தோன்றவில்லை?

தனிப்பட்ட எவருக்காகவும் இதை செய்யவில்லை என்று சொல்கிறார் முதல்வர்.

எங்களது சந்தேகமே அங்குதான் முதல்வரே?

போராடி நீட்டை நீக்குங்கள், போராடி பேரறிவாளன் உள்ளிட்டவர்களை விடுதலை செய்யுங்கள் என்று நாங்கள் உங்களிடம் மன்றாடிக் கொண்டிருக்கிறோம். அதற்கெல்லாம் துளியும் முயற்சி செய்யாத நீங்கள் வேண்டவே வேண்டாம் என்று எல்லோரும் போராடிக்கொண்டிருக்கும்போது எட்டுவழிச் சாலையை அவசரம் அவசரமாக நிறைவேற்ற முயற்சிப்பதும் அதற்கு எதிராக தேநீர்க்கடையில் கருத்து சொல்வதுகூட தேசவிரோதம் என்பதாக நடவடிக்கை எடுப்பதும் எங்களுக்குள் வலுப்படுத்துகிறது அந்த சந்தேகத்தை,

தனிப்பட்ட யாருக்காகவோதான் எட்டுவழி சாலையை நீங்கள் கட்டமைப்பதாகத் தோன்றுகிறது. கேள்வி இதுதான்,

யார் அவர்கள்? 

                                     2

பிரதமர் மோடி அவர்களுக்கு மிகவும் வேண்டிய ஒருவருக்காக கேரளாவில் ஒரு துறைமுகம் கட்டமைப்பதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது. துறைமுகம் என்பது முழுக்க முழுக்க மத்திய அரசின் அதிகாரத்தின்கீழ் வருகிறது. எனவே அதில் குறுக்கிடுவதற்கு கேரள அரசிற்கு அதிகாரமோ வாய்ப்போ இல்லை.

அந்தத் துறைமுகத்தைக் கட்டமைக்க ஏறத்தாழ முப்பது லட்சம் டண் பாறை தேவைப்படுகிறது. கேரளாவின் கனிமவளம் இதனால் பாதிக்கப்படும் என்பதால் கேரள அரசு பாறைகளைத் தருவதற்கு மறுத்துவிட்டது. எவ்வளவு முயற்சி செய்தாலும் கேரள அரசு தனது கனிம வளத்தை இழக்காது என்பதை உணர்ந்துகொண்ட மத்திய அரசு இதற்காக தமிழக அரசை அணுகி உள்ளதாகவும், தமிழக அரசு இதற்கு ஒப்புக் கொண்டுவிட்ட்தாகவும் கலைஞரது பிறந்தநாள் விழாவில் உரையாற்றும்போது திரு பீட்டர் அல்போன்ஸ் கூறினார்.

ஆற்றில் நீருக்காகப் போராடிக் கொண்டிருந்தோம். பிறகு நீரோடு மணலுக்காகவும் போராடுகிறோம். இப்போது எங்களை பாறாங்கற்களுக்காகவும் போராட வேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கியிருக்கிறீர்கள்.

நீருக்காக அடுத்த மாநிலத்து அரசுகளோடு போராடிக் கொண்டிருப்பதிலாவது ஒரு அர்த்தம் இருக்கிறது. மணலுக்காகவும், பாறைகளுக்காகவும் எமது அரசோடே போராட வேண்டியிருப்பதுதான் அசிங்கமாக இருக்கிறது.

நமது நதி, நமது மணல், நமது மண், நமது மலை. எனில் நமது பாறைகளைப் பாதுகாக்க வேண்டிய கடமை உங்களுக்கு யாரைவிடவும் பேரதிகமாய் இருக்கிறது என்பதை உணருங்கள். அப்படி எல்லாம் இல்லை என்று நீங்கள் கருதுவீர்கள் எனில் மாற்றிக் கொள்கிறேன்,

எங்கள் நதி, எங்கள் மணல், எங்கள் நீர், எங்கள் மலை. இதுதான் சரி எனில்,

எங்கள் மலைகளை உடைத்து எவனுக்கோ தருவதற்கு நீங்கள் யார்?

**************************************************************  

அமெரிக்க தமிழ்ச் சங்கங்கள் ஒன்றிணைந்து ஒரு நிகழ்ச்சயினை வரும் 29.06.2018 அன்று ஏற்பாடு செய்துள்ளன. அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு தொல்லியல் அறிஞர் திரு அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களைக் கோரின. அதை திரு அமர்நாத் அவர்களும் ஏற்றுக் கொண்டார். ஆனால் இதற்கு மத்திய அரசு அனுமதி தருவதற்கு மறுத்து விட்டது.

அமர்நாத் அவர்கள் மரியாதைக்குரிய தொல்லியல் அறிஞர். அவர் அயல்நாடு சென்று உரையாற்றினால் நமது மண்ணின் தொண்மையின் ஆழ அகலங்களை ஆதாரத்தோடு நிறுவி வருவார். அதன்மூலம் நமது மண் மீதான தொண்மமும் கீர்த்தியும் அதிகரிக்கவே செய்யும். அப்படி இருக்கும்போது மத்திய அரசு இதற்கு ஏன் தடை விதிக்கிறது?

திரு அமர்நாத் அவர்களைஅந்த ஆள்என்று ஒருமுறை நமது ராணுவ மந்திரி விளித்தார். ராணுவ மந்திரி என்பது மத்திய அரசின் மிக முக்கியமானதும் சக்தி வாய்ந்ததுமான துறை என்கிறவகையில் திரு அமர்நாத் மீதான அமைச்சரின் எரிச்சலை அமைச்சரவையின் எரிச்சலாகவே கொள்ளலாம். எனில், இதை  திரு அமர்நாத் மீதான மத்திய அரசின் எரிச்சலாகவே கொள்ளலாம்.

அவர்மீது இவ்வளவு எரிச்சலும் அமெரிக்காவில்  நடக்கும் நிகழ்ச்சியில் அவரது பங்கேற்பிற்கு தடை விதிப்பதும் ஏன்?

காரணம் மிகவும் எளிமையானது. திரு அமர்நாத் அவர்கள் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றால் நிச்சயமாககீழடிகுறித்து உரையாற்றுவார். இன்றைய அந்த கிராமம் 3500 ஆண்டுகளுக்கு முன்னால் நகரமாக இருந்த உண்மையை எடுத்து வைப்பார். 3500 ஆண்டுகளுக்கு முன்னால் அங்கு நாகரிகம் சிறந்திருந்ததை, மதச்சார்பற்று இருந்ததை, எவ்வளவு தோண்டியும், எவ்வளவு தேடியும் எந்தவிதமான மதச் சின்னங்களோ தடயங்களோ கிடைக்காத சிறப்பையும் எடுத்து வைப்பார்.

இவையெல்லாம் மத்திய ஆளுங்கட்சிக்கு ஆகாது. அகழ்வில் ஏதேனும் இந்துமத தடயங்கள் கிடைத்ததாய் சொல்லி இந்தியாவின் தொண்மம் என்பது இந்துமதம் என்று நிறுவ எத்தணித்தவர்கள். அதற்கு தடையாக உண்மையின் பக்கம் நின்றவர் திரு அமர்நாத்.

அந்த நிகழ்வில் அவரது பங்கேற்பானது இரண்டு வகையில் அவர்களுக்கு இடைஞ்சலானது. இந்துமதம் இந்தியாவின் பூர்வமதம் அல்ல என்று நிறுவுவார். 3500 ஆண்டுகளுக்கு முன்னரே மதக்கசப்பற்ற ஒரு தொண்ம சமூகம் தமிழ் மண்ணில் இருந்ததை எடுத்து வைப்பார்.

சிந்துவை, அகர்தலாவை நாம் இந்தியா என்று ஏற்பதுபோல் கீழடியை அவர்கள் இந்தியாவாக ஏற்கவில்லை என்பதை உணர்ந்தே இருக்கிறோம். அந்த வகையில் அவர்களது எதிர்ப்பு நமக்கு ஆச்சரித்தைத் தரவில்லை. தமிழ் மண்ணின் தொண்மத்தையும் புகழையும் மேலெடுக்கும் அவரது பயணத்திற்கான அனுமதிக்காக மாநில அரசு எந்தவிதமான முயற்சிகளையும் செய்யவில்லை என்பதிலும்கூட நமக்கு ஆச்சரியம் ஏதும் இல்லை.

************************************************************ 

லங்கேசைக் கொன்றிருக்கக் கூடாது என்று நினைக்கிறேன்என்று அவரைக் கொன்றவர் என்று கைது செய்யப்பட்டுள்ள பரசுராம் வாக்மோர் கூறியுள்ளதாக பத்திரிக்கைகள் கூறுகின்றன.

ஒருவரைக் கொல்வதன் மூலம் நமது மதத்தைக் காப்பாற்ற உதவ வேண்டும்என்று 2017 ஆண்டு மே மாதத்தில் தம்மை அணுகிய ஒரு கூட்டம் தம்மை தொடர்ந்து அதற்காக தயாரித்ததாகவும் 03.05.2017 அன்று தன்னை பெங்களூரு அழைத்துச் சென்று ஐந்தாம் தேதி துப்பாக்கி தந்ததாகவும் கூறியிருக்கிறான்.

காரைவிட்டு லங்கேஷ் இறங்கியதும் ஒரு இருமலின் மூலம் அவரது கவனத்தைத் திருப்பி சுட்டுக் கொன்றதாகவும் கூறியிருக்கிறான்

1)   பன்சாரே, கல்புர்கி, லங்கேஷ் மூவரும் ஒரே ரகத் துப்பாக்கியால் சுடப்பட்டது உறுதியாகி உள்ளதால் லங்கேஷை கொன்றது பரசுராம்தானா என்கிற அய்யம் எழுகிறது
2)   ஒருவரைக் கொல்வதன் மூலம்தான் ஒரு மதத்தை காப்பாற்ற முடியும் எனில் அது எந்த மதமாக இருந்தாலும் நாசமாகப் போகட்டும்
3)   ஒரு கொலைகாரனுக்கே அவர்களை ஒரு கூட்டம் என்று அடையாளப்படுத்த தெரிந்திருக்கும்போது அந்தக் கூட்டத்திடம் இன்னும் எவ்வளவு காலம் நாட்டை விட்டு வைத்திருப்போம்?       


No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...