மக்களுக்கான மருத்துவர் கழகம் அமைப்பின் பெரம்பலூர் மாவட்ட கிளையின் சார்பாக 22.07.2018 அன்று ஒரு கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார் மருத்துவர் கருணாகரன்
வலதுசாரி திருப்பமும் இடதுசாரி மாற்றும் என்ற தலைப்பில் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தேன். 25 லிருந்து 30 வரையிலான எண்ணிக்கையில் உள்ளூர் மருத்துவர்கள் வந்திருந்தார்கள். அவர்களில் பாதிக்கு மேற்பட்டோர் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
உரையின் ஊடே ஊக வணிகம் குறித்து பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மருத்துவர்களுக்கு அல்லது அங்கு இருந்த பெரும்பான்மை மருத்துவர்களுக்கு ஊக வணிகம் குறித்து அவ்வளவாக புரிதல் இல்லை என்பதை உணர முடிந்தது.
என்னைப் பொறுத்தவரை மருத்துவர்கள் மருத்துவம் குறித்து மட்டுமே அப்டேட் ஆகியிருந்தால்கூட போதுமென்று நினைப்பவன். காரணம் அவர்கள் உயிர் காக்கும் பணியைச் செய்பவர்கள். அவர்கள் நேரம் முழுவதையும் மருத்துவத்திற்கே தியாகம் செய்வதைத் தவறு என்று கருதுபவனும் அல்ல.
ஆனாலும் மனிதர்களான அவர்களுக்கும் ஓய்வும் பொழுது போக்கும் சமூகப் பார்வையும் அவசியமானதுதான்.அதுவும் மக்களுக்கான மருத்துவர்களுக்கு சமூகத்தின் இந்தப் புள்ளியின் உண்மை நிலவரம் அவசியம் புரிந்திருக்க வேண்டும்தான்.
அப்போதுதான் ஏற்கனவே எல்லா வகையான கார்ப்பரேட்களாலும் வற்ற சுரண்டப்பட்ட நோயாளிகளிடம் தாமும் சுரண்டலாகாது என்ற ஈரம் அவர்களுக்கு சுரக்கும்.
ஊகம் என்பது கற்பனை. எனவே ஊக வணிகம் என்பது ஒரு கற்பனை வணிகம்.
இந்த கட்டமைப்பில் வணிகம்தான் கற்பனையே தவிர லாபம் சர்வ நிஜமானது. ஆனால் இந்த லாபம் உழைப்பவனுக்கோ அல்லது உழுபவனுக்கோ ஒருபோதும் போய் சேர்வதில்லை
இந்த ஊக வணிகத்திற்கு மூலதனம் இணைய வசதியோடு கூடிய ஒரு கணினியும் இணைய வங்கி சேவையில் பரிமாற்றம் செய்ய வசதியாக வங்கிக் கணக்கில் போதுமான அளவு பணமும் மட்டுமே.
ஊக வணிகத்தின் மூலம் துவரம் பருப்பு வணிகத்தில் ஈடுபடக்கூடிய ஒருவர் இணையத்தை திறக்கிறார். இணையத்தை திறந்ததும் அவர் துவரம்பருப்பு எங்கெல்லாம் ஊக வணிகத்தின் மூலம் கிடைக்கும் என்று தேடுகிறார். துவரம் பருப்பின் அன்றைய விலை எவ்வளவு என்று பார்க்கிறார்.
ஒரு பேச்சுக்காக நேற்றைக்கு ஆயிரம் ரூபாய்க்கு விற்ற துவரம் பருப்பு இன்றைக்கு 800 ரூபாய்க்கு விற்பதாக தெரியவந்தால் நேற்றைவிட இன்று அதன் விலை குறைவு என்று கண்டு அதில் முதலீடு செய்ய விரும்புகிறார்
உடனே அவர் செய்ய வேண்டிய விஷயம் உரிய தொகையை எந்த நிறுவனத்திடம் துவரம் பருப்பு இருக்கிறதோ அந்த நிறுவனத்திற்கு பணத்தை அனுப்பி வைக்கிறார்
அவர்கள் பணத்தை பெற்றுக் கொண்டதும் துவரம்பருப்பை இவர்கள் கணக்கில் வைப்பார்கள். இப்பொழுது இணையத்தை திறந்து பார்த்தால் ஊக வணிகத்தில் இவரிடம் ஆயிரம் மூட்டை துவரம் பருப்பு இருக்கும்.
அடுத்த நாள் இன்னொரு ஊக வணிகர் இணையத்தை திறந்தால் இவர் கணக்கில் ஆயிரம் மூட்டை துவரம் பருப்பு இருப்பது அவருக்கு தெரிய வரும்
ஒரு மூட்டை துவரம் பருப்பு ஆயிரம் ரூபாய் என்று ஊக மார்க்கெட்டில் இன்று நிர்ணயிக்கப் பட்டிருப்பதாக வைத்துக் கொள்வோம்.
இப்பொழுது இன்றைக்கு துவரம் பருப்பு வாங்க ஆசைப் படுபவர் நேற்றைக்கு 800 ரூபாய்க்கு விற்ற துவரம் பருப்பு இன்றைக்கு ஆயிரம் ரூபாய்க்கு நகர்ந்திருக்கிறது. எனில், நாளையோ அதன் மறுநாளோ இது ஆயிரத்தி இருநூறு நோக்கி நகரக் கூடும். ஆகவே இதில் முதலீடு செய்தால் இரண்டே நாளில் பெரிய லாபம் கிட்டும் எனக் கருதி அவரிடமிருந்து 1200 ரூபாய் விலைக்கு இருக்கிற துவரம்பருப்பு முட்டைகள் அனைத்தையும் வாங்கிக் கொள்வார்
விஷயம் என்னவென்றால் முதல் நாள் இவர் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்து இருப்பார். அடுத்த நாள் இவர் இடத்திலே ஒருவர் ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய் கொடுத்து வியாபாரம் செய்திருப்பார்.
இவர் ஒரு லட்சம் ரூபாய் நேற்று கொடுத்ததும் இன்று அவரிடமிருந்து ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய் பெற்றதும் நிஜத்திலும் பரிமாறப்பட்டு இருக்கும்
ஆனால் ஒரு பருக்கை துவரம்பருப்பு கூட யாரிடத்திலும் இருந்திருக்காது. இன்னும் சொல்லப்போனால் ஒரு கிராம் துவரம்பருப்பையும் ஊக வணிக காரர்கள் ஒருபோதும் கொள்முதல் செய்வதில்லை.
இதே கதைதான் தங்கம் மற்றும் எந்த பொருளாயினும் ஊக வணிக நிலைப்பாடு ஆகும். பொருளே இல்லாமல் பொருளையே கொள்முதல் செய்யாமல் அதன் மீது முதலீடு செய்வதும் கொள்முதல் செய்யப்படாத பொருளை விற்பனை செய்வதும் தான் ஊக வணிகம்
இதுகுறித்து சினத்தோடும் பகடியோடும் இவ்வளவு பேசிய நமக்கு இதையெல்லாம் மிகச்சிறிய ஒன்று என்று சொல்லத்தக்க வகையில் ஒரு காரியத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் செய்திருக்கிறது
அம்பானி அவர்கள் ஒரு பல்கலைக்கழகத்தை திறக்க வேண்டும் என்று அவர் மனைவிக்கோ பிள்ளைகளுக்கோ கூட தெரியாத அளவில் ஆசைப்பட்டிருக்கிறார். அவர் ஆசைப்பட்ட பல்கலைக்கழகத்தை கட்டமைப்பதற்கு உரிய இடத்தைக்கூட அவர் இன்னும் தேர்வு செய்யவில்லை.
ஆக, பல்கலைக்கழகத்திற்கான ஆசிரியர்கள் இல்லை, மாணவர்கள் இல்லை, கட்டடங்கள் இல்லை, ஒரு பெயர் பலகை கூட இல்லை. ஏன் அந்த பல்கலைக்கழகம் கட்டப்படுவதற்கு உரிய இடம் கூட இன்னும் பதிவு செய்யப்படாத ஒரு சூழலில் அந்த பல்கலைக்கழகம் ஆகச் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்று என்று கூறி மனிதவள மேம்பாட்டுத்துறை ஏறத்தாழ ஆயிரம் கோடி ரூபாய் அந்த பல்கலைக்கழகத்திற்கு விருதாக அறிவித்திருக்கிறது
பேராசிரியர்களோ மாணவர்களோ இல்லாத அந்த பல்கலைக்கழகத்திற்கு விருது கிடைத்த மாத்திரத்தில் அவசர அவசரமாக அம்பானி அவர்கள் துணைவேந்தரை நியமிக்கிறார். இப்பொழுது அம்பானியின் பல்கலைக்கழகத்திற்கு வேந்தரும் துணைவேந்தரும் இருக்கிறார்கள். இப்பொழுதும் அந்த பல்கலைக்கழகத்திற்கு முதல்வர் கிடையாது பேராசிரியர் கிடையாது ஊழியர்கள் கிடையாது மாணவர்கள் கிடையாது வகுப்பறை கிடையாது தேர்வு கிடையாது எனில் உலகத்தில் முதல் முதலாக கல்வியை ஊகப் பொருளாக வணிகம் செய்த பெருமையை அம்பானி பெறுகிறார்
திரு அம்பானி அவர்கள் மாணவர்களே இல்லாத அந்தப் பல்கலைக்கழகத்தில் படிப்பதாக சொல்லப்படும் மாணவர்களுக்கு அரசிடமிருந்து ஸ்காலர்ஷிப் பெற்றுத் தரக்கூடும்
மாணவர்களே இல்லை ஊக்கத்தொகை எப்படி கிடைக்கும் என்று கேட்டால் மாணவர்களே இல்லை யாருமே இல்லை ஆனால் விருது கிடைத்திருக்கிறதே. இது மட்டும் ஏன் கிடைக்காது என்று பரிசீலிக்க ஆசைப்படுகிறேன்
இவையெல்லாம் சொல்லிவிட்டு மருத்துவர்களிடம் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் ஊக வணிகம் சரி, ஊக கல்வி சரி, ஊக வைத்தியம் என்று ஒன்று வந்து விட்டால் தேசத்தின் நிலைமை என்னவாகும் என்று கொஞ்சம் யோசனை செய்யுங்கள் என்று சொன்னவன் மருந்துகளை ஊகத்தில் விட்டால் நோயாளிகளின் கதி என்ன ஆகும்? என்று நான் சொன்னபோது அந்த மருத்துவர்களின் கண்களிலே ஒரு மிரட்சி தெரிந்தது
மருத்துவத்துறையில் ஊக மருத்துவம் என்று ஒன்று வந்துவிட்டால் இவர்கள் மருத்துவரே இல்லாமல் செவிலியர் இல்லாமல் மருத்துவ கூடமும் இல்லாத நிலையில், நோயாளியும் இல்லாமல் எத்தனை பைபாஸ் சர்ஜரி செய்து முடிப்பார்கள் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.
ஒன்றே ஒன்று
அருள்கூர்ந்து விழித்துக் கொள்வோம்
#சாமங்கவிய ஒரு மணி பதினேழு நிமிடம்
10.08.2018
10.08.2018
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்