Monday, August 6, 2018

65/66 காக்கைச் சிறகினிலே ஆகஸ்ட் 18

மருத்துவம் என்பது உயிர்காகாக்கும் நுட்பமான ஒரு துறை. கொஞ்சம் பிசகினாலும் சேதப்படுவது மனித உயிர். மனித உயிர் என்பது விலை மதிப்பிட இயலாத ஒரு உன்னதம். எனவேதான் நுட்ப மதியும் கூரிய ஞானமும் கொண்டவர்களை மருத்துவர்களாக உருவாக்க வேண்டும். அத்தகைய தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கத்தான் ”நீட் தேர்வு” என்றார்கள்.
உயிர்காக்கும் நுட்பத்தையும் ஞானத்தையும் கொண்டவர்களாக மருத்துவம் படிக்கும் மாணவர்களை வார்த்தெடுக்க வேண்டுமே தவிர அத்தகைய நுட்பமும் ஞானமும் உள்ளவர்களைத்தான் மாணவர்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது பொருந்தாதது மட்டுமல்ல, பித்தலாட்டமானதும் ஆகும்.
ஞானத்தையும் நுட்பத்தையும் உள்ளவர்களைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் எனில் நாற்பது அல்லது ஐம்பது வயது நிரம்பிய மருத்துவர்களைத்தான் MBBS படிப்பிற்குத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இது அவர்களுக்கும் தெரியாதது அல்ல.
“தோன்றிற் புகழொடு தோன்றுக” என்ற குறளை நாம் விமர்சிக்கிறோம். ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற குறளை அவர்கள் விமர்சிக்கிறார்கள். விமர்சிக்கிறோம், விமர்சிக்கிறார்கள் என்பதைவிட அதை நாமும் இதை அவர்களும் ஏற்க மறுக்கிறார்கள் என்பதும்தான் சாலப் பொருந்தும்.
”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்றால் பிறப்பால் அனைவரும் சமம் என்று பொருள்படும். அனைவரும் ஒன்றல்ல என்பது அவர்களது வாதம். உயர் குடியில் பிறந்தவர்களே உயர்ந்தவர்கள் மற்றவர்கள் அவர்களுக்கு ஏவல் பணியாற்ற பிறந்தவர்களே ஆகும் என்பது அவர்களது வாதம்.
தோன்றும் போதே புகழொடு யாரும் பிறக்க முடியாது. ஒருவனுடைய செயலே அவனுக்குப் புகழைக் கொண்டுவர முடியும். புகலொடு பிறத்தல் என்பது ஏறத்தாழ உயர்க்குடியில் பிறத்தலே சிறப்பு எனப் பொருள் தரும். அனைவரும் பிறப்பால் ஏற்றத்தாழ்வு இல்லாதவர்களே என்பது நமது வாதம்.
இந்த முரண்பாடே ”நீட் தினிப்பு” மற்றும் ”நீட் மறுப்பு” அவர்களையும் நம்மையும் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. இதைச் சொல்லுமிடத்து நாம் மிகத் தெளிவாகவே ”நீட்திணிப்பு” என்று அவர்களது நிலையை சுட்டுகிறோம். “நீடாதரவு” என்பது சற்றும் பொறுத்தமில்லாத பதம். எனவேதான் அவர்களை நீட்டைத் திணிப்பவர்களாக சொல்கிறோம்.
”அந்தந்த காலங்களின் சிந்தனைகளை உருக்குபவர்களாகவும் அவற்றை நிரவிப் பங்கிடுபவர்களாகவும் ஆளும் வர்க்கத்தின் சிந்தனையாளர்கள் இருக்கிறார்கள்” என்பதாக மார்க்சும் ஏங்கல்சும் கண்டுணர்ந்தது இந்தியாவைப் பொறுத்தமட்டிலும் மிகச் சரியான ஒன்று.
இவர்கள் ஒருபோதும் ஆளும் வர்க்கத்தை சிந்திக்க அனுமதிப்பதே இல்லை. தங்களது சிந்தனையை ஆளும் வர்க்கத்து சிந்தனையாக மாற்றுகிற லாவகம் இவர்களுக்கு கைவந்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் சிந்திப்பதற்கான சிரமத்தை இவர்கள் ஒருபோதும் ஆளும் வர்க்கத்திற்கு தந்ததில்லை.
அவர்களுக்கு சொத்து, சுகம், படாடோபம், மற்றும் அதிகாரம் என்பவை போதுமானதாக இருக்கிறது. இவர்களால் கரங்களால் இயங்க இயலாது. எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாது. அந்த நேரத்தில் ஆளும் வர்க்கம் இவர்களுக்காக களமேகி உழைக்கும் மக்களை நசுக்கி கசக்கும்.
ஆளும் வர்க்கம் பெரும்பாலும் பணக்கார வர்க்கம். அந்த வகையில் ஆளும் வர்க்கத்தினரான செல்வந்தர்களுக்கும் உயர் மேட்டுக்குடியினருக்கும் இயல்பாகவே ஒரு ஒருங்கிணைவு ஏற்படுகிறது.
இந்த ஒருங்கிணைவுதான் பேரதிக வன்மத்தோடு நம் குழந்தைகள் மீது தாக்குதலைத் தொடுக்கிறது.
அவர்களது பள்ளிப் படிப்பு உசத்தியானது என்றும் நம் குழந்தைகளின் பள்ளிப் படிப்பு தரமற்றது என்றும் பச்சையாக பேசுகிறார்கள். ஆகவே நம் பிள்ளைகள் எவ்வளவுதான் மதிப்பெண் பெற்றிருந்தாலும் அது உபயோகமற்றது என்றும் கூறினார்கள்.
ஆங்கிலத்திலே மருத்துவம் பயில்வதற்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்று சொன்னவர்கள்தானே இவர்கள். தமக்கு தெரிந்திருந்த மருத்துவம் அடுத்தவனுக்கு தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக தமக்கு மட்டுமே தெரிந்திருக்க்க் கூடிய சமஸ்கிருதத்தை மருவத்திற்கான தகுதியாக்கினார்கள்.
ஆங்கில வழியிலே மருத்துவம் படிப்பதற்கு சமஸ்கிருதம் எதற்கு? இது ஒரு சாதிக்காரர்கள் மட்டுமே மருத்துவம் படிக்க வேண்டும் எனும் சனாதனம் என்று உணர்ந்த அன்றைய சென்னை மாகான முதல்வர் பனகல் அரசர் ராமராய நிங்கா மருத்துவம் படிப்பதற்கு சமஸ்கிருதம் தேவையில்லை என்று உத்தரவிட்டார்.
அன்று வாங்கிய அடியில் சற்று ஒளிந்திருந்தவர்கள் காங்கிரஸ் ஆட்சியின்போது அங்கிருந்த மெல்சாதிக்காரர்களின் துணையோடு மருத்துவத்திற்கான உரிமை தங்களுக்கு மட்டுமேயானது என்று நிலைநாட்ட எத்தனித்தார்கள். முழுக்க முழுக்க சனாதன ஆட்சி மத்தியிலும் அவர்களுக்கு ஏவலூழியம் செய்கிற மாநில சர்க்காரும் கிடைத்தவுடன் தாவிப் பறக்கிறார்கள்.
1176 மதிப்பெண் பெற்ற நம் குழந்தை நீட்டில் வெற்றிபெறமுடியாது தற்கொலை செய்து கொண்டதும் “பார்த்தீர்களா, 1176 இல் ஒன்றும் இல்லை தகுதி இருந்திருப்பின் நீட்டில் தேர்ச்சி பெற்றிருக்கலாமே என்றார்கள்.நீட்டில் வெற்றி பெற்றவர்களால் ஏன் 1176 எடுக்க முடியவில்லை. எனில் நீட்டில் ஒன்றும் இல்லை என்ற எதிர் சிந்தனையை அரசின் துணையோடு இவர்கள் எதிர் கொண்டார்கள்.
நீட் தேர்வு எழுதப்போகும் நம் குழந்தைகளை ஏதோ திருடர்களாஇ சோதிப்பதுபோல சோதித்து அசிங்கப் படுத்தினார்கள். அவற்றைப் பற்றி விவரிப்பது எனில் எனக்கு மூன்றுமாத கடைசிப் பக்கங்கள்கூட போதாது.
இந்த ஆண்டு தேர்வு எழுத விண்ணப்பித்த நம் குழந்தைகளை 3000 கிலோமீட்டர்வரை அலைய விட்டார்கள்.
தமிழில் தேர்வெழுதப் போனால் 49 கேள்விகள் தவறாக இருந்தன. CHEETA என்று ஆங்கிலத்திலும் சீதா என்று தமிழிலும் வினாக்கள் இருந்தன.
இதை எதிர்த்து CPIM கட்சியைச் சார்ந்த மாநிலங்களவ உறுப்பினர் சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு தொடுக்கிறார். வழக்கின் போக்கில் வழக்கறிஞர் ஒருவர் மாணவர்களுக்காக வழக்குத் தொடுக்க ரெங்கராஜன் யார் என்றுகூட கேட்டதாகவும் நீதிபதிகள் அதை பொருட்படுத்தவில்லை என்றும் தோழர் TKR ஒரு நேர்காணாலில் கூறுகிறார்.
ஒரு வழியாக நீதிமன்றம் தவறாகக் கேட்கப்பட்ட 49 கேள்விகளுக்கும் உரிய 196 மதிபெண்ணை தமிழில் தேர்வு எழுதியவர்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறியது.
அப்போதுகூட தோழர் TKR இதனால் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டவர்களை இடையூறு செய்ய வேண்டாம். 196 மதிப்பெண் கூடும்போது தகுதி பெறுகிற எம் குழந்தைகளுக்கு கூடுதலாக இடம் ஒதுக்கி அதைக் கொடுங்கள் என்றுதான் கேட்டார்.
CBSE இதை அந்த அளவோடு விட்டிருக்க வேண்டும். அது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறது. தாங்கள் மொழிபெயர்க்கவில்லை எனவும் மொழிபெயர்த்தது தமிழ்நாட்டின் ஏற்பாட்டில், எனவே தாங்கள் இதற்கு பொறுப்பேற்க இயலாது என்று கூறியதை உச்சநீதி மன்றம் ஏற்றிருப்பது மிகவும் கவலைக்குரிய விஷயம்.
கண்களில் நீரழுத்தம் சோதிக்க முகாம் ஏற்பாடாகிறது என்று கொள்வோம். சோதனையில் சோதிக்கும் கம்பி குத்தி பலருக்கு கண்களில் ரத்தம் வருகிறது. சரி செய்ய சொல்கிறோம் . மறுக்கிறார்கள். நீதிமன்றம் போகிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை வழங்கவேண்டும் என்று நீதிமன்றம் கூறுகிறது.
கண்களை சரி செய்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் பாதிக்கப் பட்டவர்கள் காத்திருக்கிறார்கள். முகாமை ஏற்பாடு செய்திருந்த மேலமைப்பு மேல் கோர்ட்டிற்குப் போகிறது. தாங்கள் நேரடியாக அந்த சோதனையை செய்யவில்லை என்றும். அந்த வேளைக்காக த்ங்களது துணை அமைப்பு ஒன்றினை தாம் பணித்திருந்ததாகவும் இது அவர்கள் செய்த பிழை என்றும், எனவே பாதிக்கப் பட்டவர்களுக்கு தங்களால் ஏதும் செய்ய முடியாது என்றும் வாதிடுகிறது.
அவர்களது வாதத்தைக் கேட்ட கோர்ட் அதை ஏற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்கத் தேவை இல்லை என்றும் கூறுகிறது. கண்களில் ரத்தம் கசிய பாதிக்கப் பட்டவர்கள் நிற்கிறார்கள்.
யார் கிழித்தது என்பது பிரச்சினை இல்லை. கிழிந்த கண்களுக்கு நியாயமே இல்லையா நீதிமான்களே.
இப்போது அடுத்த ஆண்டுமுதல் பொறியியல் படிப்பிற்கும் நீட் என்று ஆரம்பித்து விட்டார்கள்.
நீட்டே வேண்டாம் என்று போராடினோம்.
குளறுபடிகளோடு தேர்வை நடத்தினார்கள்.
இவ்வளவு குளறுபடிகளா என்றோம்.
தேர்வெழுத 3000 கிலோமீட்டர் அலைக்கழித்தார்கள்.
உள்ளூரிலே மையம் இல்லையா என்று கொதித்தோம்.
வினாத்தாளைத் தவறாகத் தயாரித்தார்கள்.
வினாத்தாளை சரியாக தயாரிக்க வேண்டாமா என்கிறோம்.
இப்போது பொறியியலுக்கும் நீட் என்கிறார்கள்.
பொறியியலுக்குமா என்போம்.
அவர்களுக்கு நம்மை என்ன செய்யவேண்டும் என்று தெரிகிறது. என்ன செய்ய வேண்டும் என்பதை நாமும் தெளிவாய் முடிவெடுப்போம்.

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...