Sunday, August 26, 2018

ஒரு பள்ளியை மூடுவதென்று முடிவெடுத்துவிட்டார்கள் என்றால்…


ஒரு குறிப்பிட்ட அரசுப் பள்ளியை இழுத்து மூடவேண்டும் என்று
முடிவெடுத்து  விடுகிறார்கள். மூடுவதற்குரிய காரணங்களைச் சொல்லாமல் அதை அவர்களால் செய்ய இயலாது. எனவே அதற்கு என்னென்ன 
செய்ய வேண்டும் என்ற ஒரு பட்டியலைத் தயாரிக்க அமர்கிறார்கள்.

காரணங்களைத் தேடி அவர்கள் மண்டையைப் போட்டு  குழப்பிக்கொள்ளத்  தேவை இல்லை. 

தேநீர்க் கடைக்காரர் கலியனிடம்  சர்க்கரை கம்மியாய்  ஒரு  கோப்பை  தேநீரை வாங்கிப் பருகிக் கொண்டே அன்றைய தினசரியை அவர்கள்  மேம்போக்காக  மேயத் தொடங்குகிறார்கள்.

மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் ஏதோ  ஒரு ஊரின் அரசுப்  பள்ளி  ஒன்று மூடப் பட்டதாக ஒரு செய்தி அதில் வந்திருக்கிறது. இப்போது  அவர்களுக்கு தெளிவாகப் புரிந்துவிடும், ஒரு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தால் அந்தப் பள்ளியை மூடிவிடலாம்.

என்ன சோதனை என்றால் அவர்கள் மூட வேண்டும் என்று ஆசைப்படுகிற 
பள்ளியில் மாணவர்களின்  எண்ணிக்கைக்கு குறைவில்லை.

கொஞ்சம் யோசிக்கிறார்கள். மாணவர்கள் பள்ளிக்கு வராவிட்டால் பள்ளியைப்  பூட்டலாம் என்றால் மாணவர்களை பள்ளிக்கு வரவிடாமல் தடுத்துவிட்டாலும்  பள்ளியை பூட்டமுடியும் என்று புரிந்து கொள்கிறார்கள்.

 அவர்களிடம் அதிகாரம், ஆள்பலம், மற்றும் பணபலம், இருக்கிறது. இவற்றைப் பயன்படுத்தி பள்ளிக்கு குழந்தைகளை வரவிடாமல் தடுக்க முடியுமா என்று யோசிக்கிறார்கள்.

1)   பள்ளியின் உள்கட்டமைப்பினை (INFRASTRUCTURE) சிதைப்பதன் மூலம்
2)   மிகவும் அத்தியாவசிமான பராமரிப்புகளையும் மராமத்துகளையும்கூட செய்யாமல் விடுவது
3)   தேவையான ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை நியமிக்காமல் விடுவது
4)   குழந்தைகள் கடந்துவரும் சின்னச் சின்னக் காட்டாறுகளில் பாலங்களைக் கட்டாமல் விடுவது அல்லது மராமத்து பார்க்காமல் விடுவது
5)   பள்ளி சரியில்லை, பாதுகாப்பானதாக இல்லை என்ற புரளியை மக்கள் நம்புகிறமாதிரி கிளப்பிவிடுவது.
6)   பிள்ளை பிடிக்கிறவர்கள் நடமாடுவதாய் புரளிகளை கிளப்புவது
7)   அடியாட்களை களமிறக்கி பிள்ளைகளை வர விடாமல் தடுப்பது 

பள்ளியின் உள்கட்டமைப்பை சேதப்படுத்துவது

பள்ளி வளாகத்திற்குள் இரவு வேளைகளில் நுழைந்து கூட்டமாக மது அருந்திவிட்டு காலி பாட்டில்களையும் இதரக் குப்பைகளையும் அங்கேயே போட்டு விட்டு வந்துவிடுவது.

சீட்டு விளையாடிவிட்டு சீட்டுக் கட்டுகளையும் கொண்டு சென்ற தின்பண்டங்களின் ஈவையும் காகிதக் குப்பைகளையும் அங்கேயே போட்டுவிட்டு வருவது.

சுவற்றில் அசிங்க அசிங்கமாக கிறுக்கி வைத்துவிட்டு வருவது

பள்ளியில் அங்கங்கே அசுத்தம் செய்துவிட்டு வருவது

கூரையை, மேசை, டெஸ்க் மின்விசிறி உள்ளிட்ட தளவாடப் பொருட்களை சேதப்படுத்திவிட்டு வருதல் போன்றவை ஆகும்.

இவற்றின் மூலம் பள்ளிக்கு வரும் குழந்தைகளின் முகச்சுளிப்பைத் துவங்கி வைப்பது. இவை தொடருகிற பொழுது பள்ளிப் பிள்ளைகளுக்கு பள்ளியின்மேல் ஒருவிதமான அருவெறுப்பை ஏற்படச் செய்வது என்று தொடங்கி அந்தப் பள்ளி படிப்பதற்கு உகந்த இடமல்ல என்கிற தோற்றத்தை ஏற்படுத்துவது. இவற்றின் மூலம் இந்தப் பள்ளி நம் பிள்ளைகளுக்கு ஏற்ற பள்ளி இல்லை என்பதை பெற்றோர்களிடம் ஏற்படுத்துவது. கொஞ்சம் கடன் பட்டாலும் பரவாயில்லை நல்ல தனியார் பள்ளிகளில் தமது குழந்தைகளை சேர்த்துவிட வேண்டும் என்ற மனநிலைக்கு அவர்களை தயார் படுத்துவது.

உரிய பராமரிப்புகளையும் மராமத்துகளையும் மறுப்பது

பள்ளியை அன்றாடம் சுத்தம் செய்வது, அறைகளில் சேர்ந்துள்ள ஒட்டடைகளை எடுப்பது, தண்ணீர்த் தொட்டிகளை உரிய காலத்திற்குள் தூய்மைப் படுத்துவது, கழிவறைகளை சுத்தம் செய்து உரிய திராவகங்களை தெளித்து சுகாதாரம் பேணுவது, பள்ளி வளாகத்தில் புதர் அண்டாமல் பார்த்துக் கொள்வது, மின் கசிவு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது போன்றவை பள்ளியின் அன்றாடப் பராமரிப்புப் பணிகள் ஆகும்.

மின்தடையோ, மின்கசிவோ ஏற்பட்டால் அதை உடனே சரி செய்வது, நீர் இறைக்கும் மின் மோட்டார்கள் பழுதுபட்டால் அவற்றை உடனே பழுதுநீக்கி சரி செய்வது, தரையில் கட்டிடங்களில் ஏதேனும் சேதாரம் ஏற்படும்போது அதை சரி செய்வது, மேசைகள், நாற்காளிகள், பெஞ்ச்சுகள், டெஸ்குகள் போன்றவற்றில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் அவற்றை சரி செய்வது ஆகியவை மராமத்துப் பணிகள் ஆகும்.

இவற்றை செய்ய மறுப்பது அல்லது தமக்கிருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி இவற்றை செய்ய விடாமல் தடுப்பது.

இதன்மூலம் பெற்றோர்களை தம் பிள்ளைகளை வேறு தனியார் பள்ளிகளை நோக்கி நகர்த்துகிற மனநிலைக்கு பெற்றோர்களைத் தள்ளுவது.

ஆசிரியர் மற்றும் ஊழியர் பற்றாக்குறையை ஏற்படுத்துவது

ஆசிரியர் மற்றும் ஊழியர்களிடம் பிரச்சினைகளை ஏற்படுத்தி அவர்களை நிர்வாக மாறுதல் மூலம் வெளியிடங்களுக்கு அனுப்பிவிட்டு அந்த இடங்களை நிரப்பாமல் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி பார்த்துக் கொள்வது. ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களுக்கு யாரேனும் வருவதற்கு முயற்சி செய்தால் வரவிடாமல் பார்த்துக் கொள்வது.

போதுமான ஆசிரியர்களும் ஊழியர்களும் இல்லை என்கிற நிலையில் தமது பிள்ளைகளை தனியார் பள்ளிகளுக்கு  கொண்டு செல்லும் நிர்ப்பந்தத்தை பெற்றோருக்கு ஏற்படுத்துவது.

பாதுகாப்பின்மை குறித்து வதந்திகளைப் பரப்புதல்

மேலே விவரித்தவைபோக பள்ளிக்கு குழந்தைகள் வரும் காட்டாறு பாலங்களை சேதப் படுத்துவது அல்லது அங்கு அமர்ந்து சாராயம் அடித்துக் கொண்டு குழந்தைகளுக்கு அச்சத்தைக் கொடுப்பது.

பாதுகாப்பு குறித்த அச்சத்தை, பிள்ளை பிடிக்கிறவர்கள் அலைகிறார்கள் என்ற அச்சத்தை வதந்திகளின்மூலம் பரப்புதல்.

பள்ளிக்கு குழந்தைகள் வரும் வழியில் அவர்களை மறிப்பது அச்சமூட்டுவது போன்ற காரியங்களை செய்தல்.

ஒரு அரசுப் பள்ளியை மூடுவது என்று செல்வாக்குள்ளவர்கள் முடிவெடுத்து விட்டால் வழக்கமாக மேலே விவரிக்கப்பட்ட விஷயங்களைக் கையில் எடுப்பார்கள்.

இதை இவர்கள்தான் செய்கிறார்கள் என்று யாரும் அறியாதபடி பார்த்துக் கொள்வார்கள். சிலநேரங்களில் எந்தவிதமான கவனக்குவிப்பையும் கடந்து அவர்களது அடையாளம் வெளிப்பட்டால் பலநேரங்களில் அதுகுறித்து எந்தவிதமான வெட்கமும் இன்றி வலம் வருவார்கள்.

இவர்கள் இவ்வளவும் செய்த பிறகும் பிள்ளைகள் பள்ளிக்கு வருவது தொடர்ந்தால் என்ன செய்வது என்று இவர்களுக்கு கீழ்வரும் சம்பவம் சொல்லித்தருகிறது.

கும்பகோணம் அருகே நீலத்தநல்லூர் இருக்கிறது. அங்கு ஒரு அரசுப் பள்ளி இருக்கிறது. இந்தப் பள்ளியில் திருநல்லூர், பறட்டை, தேவனாஞ்சேரி, ஊருடையான்நத்தம், அந்தியூர், கழுக்காணிவட்டம், இணைபிரியாள்வட்டம் போன்ற ஊர்களில் இருந்து குழந்தைகள் வந்து படிக்கிறார்கள்.

கும்பகோணத்திலிருந்து காவற்கூடம் வரைக்குமான அரசுப் பேருந்து நீலத்தநல்லூர் வழியாக இயக்கப் படுகிறது. இந்தப் பேருந்து பிற்பகல் 3.50  மணி வாக்கில் நீலத்தநல்லூரைக் கடக்கிறது.

நீலத்தநல்லூர் அரசுப்பள்ளி சரியாக 4.10 மணிக்கு முடிகிறது. இதற்கு அடுத்த பேருந்து இரண்டுமணி நேரம் கழித்தே நீலத்தநல்லூரைக் கடக்கிறது.

ஆக, 4.10 கு பள்ளி முடிந்த மாணவர்கள் ஏறத்தாழ இரண்டுமணி நேரம் பேருந்திற்காக காத்திருக்க வேண்டியுள்ளது என்ற செய்தியை 10.08.2018 ஆம் நாளிட்டஇந்து தமிழ்கூறுகிறது.

இதைவிட முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது.
மாலை ஆறுமணிக்கு பேருந்து ஏறும் அந்தக் குழந்தைகள் வீடுபோய் சேர்வதற்கு எப்படியும் ஏழு அல்லது ஏழரை ஆகிவிடும்.

அந்தக் குழந்தைகளுக்கான மாலை நேரத்துப் பேருந்துப் பிரச்சினையை மட்டுமே இங்கு பார்த்தோம். காலையில் பள்ளிக்கு வரும்போதும் இத்தகைய பிரச்சினைகள் அந்தக் குழந்தைகளுக்கோ அல்லது வேறு பள்ளி அல்லது பள்ளிகளைச் சார்ந்த குழந்தைகளுக்கோ இருக்கக் கூடும்.

உதாரணமாக பள்ளி 9.30 கு துவங்குகிறது என்று கொள்வோம். பெருந்து 7.30 கு அந்த ஊரைக் கடக்கிறது. அடுத்தப் பேருந்து 10 மணிக்கு கடக்கிறது என்று கொள்வோம். ஒன்று குழந்தைகள் பள்ளிக்கு இரண்டு மணி நேரம் முன்னமே வந்து காத்திருக்க வேண்டும். அல்லது தாமதமாக வர வேண்டும். கூலித் தொழிலாளிகளின் பிள்ளைகள் பட்டிணியோடு வந்து காத்திருக்க வேண்டும்.

சில குழந்தைகளுக்கு இரண்டு நேரமும் பிரச்சினையாகி விடும்.

இவை அந்தக் குழந்தைகளை ஏதோ ஒரு புள்ளியில் இடைநிற்கச் செய்துவிடும்.  

இப்போது கொஞ்சம் யோசிப்போம்.

பள்ளி நேரத்திற்கு வெகு முன்னமோ அல்லது பள்ளிவிட்டு வெகுநேரம் கழித்தோ அந்த ஊருக்குப் பேருந்து வரும் எனில் அந்தக் குழந்தைகள் இடைநிற்க ஏதுவாகும்.

கொஞ்சம் மாற்றி யோசித்தால்,

அந்தப் பள்ளியை மூடவேண்டும் என்று நினைப்பவர்கள் பேருந்துகளை முன்னமோ அல்லது பின்னரோ இயக்க செய்துவிட்டால்கூட பள்ளிக்கு குழந்தைகளின் வரத்து குறைந்துவிடும். இது ஏதோ ஒரு புள்ளியில் அந்தப் பள்ளி மூடப்படுவதற்கான காரணமாக அமைந்துவிடும்.

இவ்வளவு எதற்கு என்று கேட்கத் தோன்றும்.

பள்ளிநேரத்திற்கு ஏற்ப அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும். பொதுப் பள்ளிகள் இருக்கும் இடத்திற்கு பள்ளி தொடங்குவதற்கும் முடிவதற்கும் ஏற்றாற்போல் அரசுப் பேருந்துகளை இயக்கு என்ற கோரிக்கை அனைத்து அமைப்புகளின் அனைத்து மட்டங்களிலுமான கோரிக்கையாக இருக்க வேண்டும்.


நன்றி: தீக்கதிர் 26.08.2018














4 comments:

  1. good post.
    http://marubadiyumpookkum.blogspot.com/2018/08/blog-post_26.html

    ReplyDelete
  2. பள்ளிநேரத்திற்கு ஏற்ப அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும். பொதுப் பள்ளிகள் இருக்கும் இடத்திற்கு பள்ளி தொடங்குவதற்கும் முடிவதற்கும் ஏற்றாற்போல் அரசுப் பேருந்துகளை இயக்கு என்ற கோரிக்கை அனைத்து அமைப்புகளின் அனைத்து மட்டங்களிலுமான கோரிக்கையாக இருக்க வேண்டும்.

    சரியான கோரிக்கைதான் தோழர்

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...