Thursday, December 6, 2012

ஈரம் காஞ்ச சாமிங்க

அலை பேசி சிணுங்கியது.

மௌனப் படுத்தி விட்டு திரும்பிப் படுத்தேன்.

மீண்டும் சிணுங்கியது.

மீண்டும் மௌனப் படுத்திவிட்டு திரும்பிப் படுத்தேன்.

மீண்டும் மீண்டும் சிணுங்கவே அலை பேசியை அணைத்து எறிந்துவிட்டு திரும்பிப் படுத்தேன்.

யார் அழைப்பது என்றுகூட பார்க்கத் தோன்றவில்லை. அவ்வளவு அலுப்பு. இரண்டு நாட்களாக தொடர்ந்து அலைச்சல்.  தஞ்சைக் கூட்டத்தை முடித்துவிட்டு இரண்டு மணி வாக்கில்தான் வந்து படுத்தேன்.

கொஞ்ச நேரத்தில் ஹேமா தட்டி எழுப்பினாள்.

என்னம்மா?,..” சலிப்பின் உச்சத்தில் கேட்டேன்.

ஏங்க , உங்க தம்பி லைன்ல இருக்கு. உங்களுக்கு போன் போட்டுக்கிட்டே இருக்காம். நீங்க எடுக்கலைங்கறதால எனக்கு போட்டிருக்கு. அது குரலே சரியில்ல. கோவிச்சுக்காம கொஞ்சம் என்னன்னு கேளுங்க.”

"என்னடா?” அலுப்பின் அழுத்தம் கூடியிருந்ததை என்னாலேயே உணர முடிந்தது.

அரைத் தூக்கமும் வேண்டா வெறுப்புமாக கேட்டவனது சகலத்தையும் அசைத்துப் போட்டது எதிர்முனையிலிருந்து வந்த செய்தி.

என்ன , என்னடா சொல்ற?”

எனது குரலில் இருந்த பதற்றமும் உடம்பின் நடுக்கமும் ஹேமாவிற்குப் புதிது. ஏதோ நடக்கக் கூடாதது நடந்திருக்கிறது என்று மட்டும் அவளுக்கு புரிந்தது. இந்த எண்ணமே அவளுக்குள்ளும் பதட்டத்தையும் நடுக்கத்தையும் கொண்டு வந்து சேர்த்தது.

சரி, ஒன்னும் ஆகாது. பயப்படாத.பால்ராஜ் இருக்காரா?”

அண்ணன் ஏங்கூடதான் இருக்கார். போனத் தரட்டுமா?”

பால்ராஜ், கொஞ்சம் கோவிச்சுக்காம உங்க கார கொடுத்து உதவ முடியுங்களா?”

என்ன சார் இப்படிக் கேட்டு அந்நியப் படுத்திட்டீங்க. காரப் பத்தினக் கவலை எல்லாம் உங்களுக்கு வேண்டாம் சார். அத நாங்க பார்த்துக்குறோம். நீங்க பதறாம தம்பிக்கிட்ட பேசுங்க சார்

கார எடுத்துக்கிட்டு நேரா திண்டுக்கல் காட்டாஸ்பத்திரிக்குக் கூட்டிட்டு போ. நானும் அண்ணியும் கிளம்பி வாரோம். பயப்படாமப் போ. ஒன்னும் ஆகாது.”

அவனை தைரியமாக இருக்கச் சொன்னாலும் எனக்கு நொடிக்கு நொடி பதற்றமும் பயமும் கூடிக் கொண்டுதானிருந்தது.

ஏங்க, என்ன ஆச்சு?”

அப்பாவுக்கு திடீர்னு கையும் காலும் இழுத்துக்குச்சாம். வாய் வேற கோணிடுச்சாம். காட்டாஸ்பத்திரிக்கு கொண்டுபோக சொல்லியிருக்கேன். ”

தேம்பத் தொடங்கிய ஹேமாவை சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்றானது.

தெனாலியையும் அறத்தையும் அலைபேசியில் அழைத்து விவரத்தை சொன்னேன். அவர்களது உதவி தேவைப் படலாம் என்று சொன்னபோது சொன்னார்கள்,

பார்த்துக்கலாம் விடுங்க சார். ஒன்னும் ஆகாது. போயிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க. கிளம்பி வரோம்

இல்ல தெனாலி , கொஞ்சம் பணம் தேவைப் படலாம்...”  முடிக்கக் கூட விடாமல் இடை மறித்தார்,

அதான் பார்த்துக்கலாம்னு சொன்னேனே சார். நீங்க இதப் பத்தியெல்லாம் கவலப் படாம அப்பாவப் பார்த்து ஆக வேண்டியதப் பாருங்க. இத நாங்கப் பார்த்துக்கறோம்

அப்பாடா என்றிருந்தது. மருத்துவ மனை என்று போய்விட்டால் என்ன ஆகும் என்று தெரியாது. வகை தொகையாக உறிஞ்சி எடுத்து விடுவார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். காட்டாஸ்பத்திரி ஒன்றும் அப்படி இல்லை என்றாலும் இந்த நிலைமையில் நிறையத்தான் ஆகும் என்று பட்டது. பணத்திற்கு என்ன செய்வது என்று விழி பிதுங்கிய நேரத்தில் தெனாலியின் வார்த்தைகள் தெம்பைத் தந்தன.

இரண்டரை மணி நேரத்துப் பயணத்தில் நானும் ஹேமாவும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளக் கூட இல்லை. அநேகமாக பயணச்சீட்டு வாங்குவதற்காக நடத்துநரிடம் வாய் திறந்ததோடு சரி. அடிக்கடி அவள் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தாள். நானும்தான்.

மருத்துவ மனையில் தம்பி எதிர்கொண்டான்.

என்னடா, எப்படி இருக்கார்?”

உதட்டைப் பிதுக்கினான். கண்கள் சன்னமாக சுரக்கத் தொடங்கியிருந்தன. அவன் உதட்டைப் பிதுக்கிய விதம் கொஞ்சம் பயத்தை  கொண்டுவந்து சேர்த்தது.

சொல்லுடா?”

எனக்கும் சுரக்கத் தொடங்கிவிட்டது.

இங்க முடியாதாம். திருச்சிக்கோ அல்லது மதுரைக்கோ கூட்டிட்டுப் போகச் சொல்றாங்க.”

அப்பாவை அப்படி ஒரு நிலையில் நான் பார்த்ததே இல்லை. அப்படி ஒரு நிலையில் அமர்ந்திருதார். யாரையும் அவருக்குத் தெரியவில்லை. சற்றேரக் குறைய கோமா நிலையில் இருந்தார். அம்மாவும் ஹேமாவும் கட்டிப் பிடித்து அழுது கொண்டிருந்தார்கள். அதட்டவும் கொஞ்சம் அமைதியானார்கள்.

டாக்டரப் பார்க்கலாம் வா

தம்பியைப் பார்த்ததும் மருத்துவருக்கு கோபம் வந்துவிட்டது.

“ஏம்பா, இன்னுமா கூட்டிட்டுப் போகல?. பச்சப் புள்ளைக்கு சொல்றமாதிரிதானே சொன்னேன். நேரம் ஆக ஆக ஆபத்துன்னு சொன்னேன்ல. கொஞ்சம் கூட சீரியஸ்னெஸ் இல்லாம”

“இல்ல சார் இப்பதான் அண்ணன் வந்துச்சு. அதான்..”

“ வணக்கங்க சார்.” மருத்துவரிடம் அப்பாவின் நிலை குறித்து விசாரித்தேன்.

அப்பாவிற்கு வாதம் இல்லை என்றும் மூளையில் ஏதோ கசிவு இருப்பதாகப் படுவதாகவும், உடனே மதுரைக்கோ திருச்சிக்கோ அழைத்துப் போய் மூளையில் ஒரு அறுவை செய்தால் காப்பாற்ற வாய்ப்பிருப்பதாகவும் கூறினார்.

திருச்சி போக இரண்டரை மணி நேரமாகும் என்பதால் மதுரைக்கே அழைத்துப் போகச் சொன்னார். ஆனால் நண்பர்கள் எல்லோரும் திருச்சியில் இருப்பதாலும் மதுரையில் பணம் புரட்ட இயலாது என்பதாலும் காரில் அப்பாவைத் தூக்கிப் போட்டுக் கொண்டு திருச்சிக்கு கிளம்பினோம். தெனாலிக்கு அலை பேசினேன். எது பற்றியும் பயப்பட வேண்டாம் என்றும், நாங்கள் வருவதற்குள் அறமும் தானும் சகல ஏற்பாடுகளோடும் மருத்துவ மனைக்கு வந்துவிடுவதாகவும் சொன்னார்.

வழி நெடுகிலும் அப்பாவின் வயிறு அசைகிறதா என்று பார்த்துக் கொண்டே வந்தேன். அம்மாவும் ஹேமாவும் அழுதுகொண்டே வந்தார்கள்.

கார் மருத்துவ மனைக்குள் நுழைந்தபோது என்னவெறு சொல்லத் தெரியாத ஒரு அச்சம் எங்கள் அனைவரையும் அப்பிக் கொண்டது.

கதவைத் திறக்கும் முன்னமே அறமும் தெனாலியும் ஸ்ட்ரெச்சரோடு வந்து நின்றார்கள். அப்பாவைத் தூக்கி ஸ்ட்ரெச்சரில் கிடத்துவதற்குள் மருத்துவ மனை ஊழியர்கள் வாங்கிக் கொண்டு பறந்தார்கள்.

அப்பாவின் ஸ்கேனைப் பார்த்த மருத்துவர் ராமக்கிருஷ்ணன் ஈஷ்வர் இதில் பயபடுவதற்கு ஒன்றுமே இல்லை என்று சொன்னது உண்மையிலுமே வயிற்றில் பால் வார்த்தது.

வயது ஆக ஆக மூளை சுருங்கி மூளைக்கும் மண்டை ஓட்டிற்கும் இடையே சின்ன இடைவெளி உருவாகும் என்றும் அந்த இடை வெளியில் ஒரு படிமம் உருவாகி உள்ளதாகவும் சொன்னவர், மண்டையில் சின்னதாய் ஒரு துளையிட்டு மூளைக்கும் மண்டை ஓட்டிற்கும் இடையில் உள்ள படிமத்தை அதிர்வில் நீர்மமாக்கி அப்படியே உறிஞ்சி எடுத்து விட்டால் சரியாகிவிடும் என்றும் சொன்னார்.

எவ்வளவு ஆகுங்க சார்?”

சொன்னார்.

எப்ப சார் செய்யனும்?”

நீங்க எப்ப உங்க அப்பாவக் கொண்டு வந்து என்னிடம் கொடுத்தாலும் நான் அரை மணி நேரத்தில் அவரை குணப்படுத்திக் கொடுத்துடுவேன். ஆனா ஒன்னு நீங்க தெரிஞ்சுக்கனும், இப்ப அவர் செத்துட்டு இருக்கார்.”

சரிங்க சார். செய்துடுங்க.”

தெனாலி தயாராகவே வந்திருந்ததால் பணப் பிரச்சினையில்லாமல் போனது.

ஏற்பாடுகள் விரைவுபட்டன.

மருத்துவர்கள் எழுதிக் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். நாங்களும் அவர்கள் எழுதித் தரும் சீட்டுகளை எடுத்துக்கொண்டு ஆளாளுக்குப் பறந்து கொண்டிருந்தோம்.

அப்பாவிற்கு மொட்டை அடித்துவிட்டிருந்தார்கள். பச்சை நிற உடை அணிவித்து தயாராக வைத்திருந்தார்கள்.

நேரம் ஆக ஆக பயம் பெருமளவு எங்களவிட்டு கடந்து போயிருந்தது. அறுவைக் கூடத்திற்கும் தீவிரக் கண்காணிப்பு பிரிவிற்கும் இடையே உள்ள வெராண்டாவில் அமர்ந்திருந்தோம். அங்கு அமர்ந்திருந்த 40 வயது மதிக்கத் தக்க ஒரு பெண் அழுதபடியே ஒவ்வொரு தெய்வமாக வேண்டிக் கொண்டிருந்தார். “மாரியாத்தா எங்கம்மாவக் கொடுத்துடு, ஏசு சாமி, மேரியாத்தா எங்கம்மாவ எனக்குக் கொடுத்துடுஎன்பதாக இருந்தது அந்த அம்மாவின் கோரிக்கை. அல்லாவையும் அவர் விடவில்லை.

அவர் நிறுத்தவே இல்லை. விடாது அழுதபடியே வேண்டிக் கொண்டிருந்தார்.
என்னவென்று விசாரித்ததில் அவரது அம்மாவிற்கு மூளையில் நரம்பொன்று வெடித்து ரத்தக் கசிவு ஏற்பட்டிருக்கிறது. ரத்தக் கசிவு நிறைய இருந்ததால் மருத்துவர்கள் கை விரித்திருக்கிறார்கள். வீணில் செலவு செய்ய வேண்டமென்றும் வீட்டிற்கு அழைத்துப் போகுமாறும் சொல்லியிருக்கிறார்கள். இவர்களது வற்புறுத்தல் காரணமாக நம்பிக்கை கொஞ்சமும் இல்லாமல் அறுவைக்கு மருத்துவர்கள் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்தப் பெண் இன்னமும் அழுது கொண்டே தொழுதுகொண்டிருந்தார். நேற்றிலிருந்தே அவர் எதுவும் சாப்பிடாமல் இப்படியேதான் அழுதுகொண்டிருப்பதாக சொன்னார்கள்.

அப்பாவோடு அவரது அம்மாவையும் அறுவைக் கூடத்திற்கு எடுத்துப் போனார்கள்.

அழுதுகொண்டே இருந்த அந்தப் பெண்ணை என் அம்மா ஒரு வழியாக தன் மடிக்கு மாற்றியிருந்தார். அவரது முடியை கோதியபடியே அம்மா ,” ஒண்னும் ஆகாது சாமி, பயப்படாதஎன்று ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தார். அம்மாவின் மடியும் ஸ்பரிசமும் அந்தப் பெண்னைக் கொஞ்சம் ஆசுவாசப் படுத்தியிருக்க வேண்டும். சிறு பிள்ளை மாதிரி அம்மாவின்முந்தானையைப் பிடித்து உருட்டிக் கொண்டே இருந்தார். ஆனாலும் அழுகை மட்டும்  நிற்கவே இல்லை.

ஒரு மணி நேரம் கழித்து அறுவைக் கூடத்தின் கதவு திறந்தது.

முதலில் அவர்களைத் தான் மருத்துவர்கள் அழைத்தார்கள். ரத்தம் அதிகமாக கசிவதால் அறுவை செய்ய இயலவில்லை என்று மருத்துவர் சொன்னதுதான் தாமதம் அந்தப் பெண் தரையில் விழுந்து அழ ஆரம்பித்திருந்தார். அவரைத் தூக்கியெடுத்து தாங்கியபடியே வெளியே சென்று விட்டார்கள்.

இப்போது எங்களை அழைத்தார்கள்.

என்னிடம் கை கொடுத்தார் மருத்துவர். அம்மாவின் கன்னத்தை தட்டிக் கொடுத்தார்.  “ போய்ப் பாருங்கம்மா உங்க வீட்டுக் காரரை

தலையில் பெரிதாய் கட்டுப் போட்டிருந்தார்கள். மயக்க நிலையில் இருந்தார். கொஞ்ச நேரத்தில் எங்களை வெளியேற்றிவிட்டார்கள்.

வெராண்டா வெறிச்சோடிக் கிடந்தது.

நாற்காலியில் அமர்ந்ததும் அம்மா அழ ஆரம்பித்துவிட்டார். சரி கொஞ்சம் அழுது ஆறட்டும் என்று விட்டால் போகப் போக அழுகை அதிகமானது.

ஏம்மா அப்பாதான் நல்லா வந்துட்டார்ல.அப்புறம் ஏன் அழறே?”

அதுக்கில்லடா

ஒருக்கால் தலையில் பெரிய கட்டோடு மயக்க நிலையில் பார்த்தது தாங்க வில்லையோ என்று நினைத்து அவற்றை எல்லாம் காலையில் அப்புறப் படுத்தி விடுவார்கள் என்று தைரியம் சொல்லிப் பார்த்தோம்

அதுக்கெல்லாம் ஒன்னும் இல்லடா”, சொல்லிவிட்டு மீண்டும் அழ ஆரம்பித்தார்.

, இவ்வளவு பணத்தக் கட்டி எப்படி அப்பாவ வெளியே கொண்டு போகப் போறோம்னு பயமா?

அதெல்லாம் இல்லடா. பத்து வட்டிக்காச்சும் வாங்கி காப்பாத்திடுவீங்கன்னு தெரியாதா?”

அப்புறம் எதுக்கு இப்படி அழுவுற?”

அந்தப் பொண்ணு ஒவ்வொரு சாமியா கூப்பிட்டு எப்படி அழுதுச்சு. எல்லா சாமிக்கும் ஈரங்காஞ்சு கண்ணவிஞ்சுப் போச்சேடா

அம்மா இன்னமும் அழுதுகொண்டுதானிருந்தார்.

நன்றி: “காக்கைச் சிறகினிலே”


Wednesday, December 5, 2012

மூன்றாவது நூல்





அன்பின் தோழர்களே,

வணக்கம்.

இது எனது மூன்றாவது கட்டுரை நூல்.

சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறார்கள்.

வாசித்து கருத்து சொன்னீர்கள் எனில் அது என்னை செழுமைப் படுத்தும்.

தொடர்புக்கு,

சந்தியா பதிப்பகம்
புதிய எண் 77, 53 வது தெரு
9 வது அவன்யூ
அச்சோக் நகர்
சென்னை 600083

தொலைபேசி 04424896979
9841191397

Thursday, November 29, 2012

கைகளில்தான் இருக்கிறது







தெரு தாண்டும் வரை 
கைகளில் 
சுமக்க
தீர்ப்பளித்தீர்

கோபம் வரும்
எங்களுக்கும்

எங்களுக்கு 
கோபம் வரும் வேளை
எம்மெதிரே
நீங்களும் வரலாம்

கழட்ட வேண்டிய
தேவையும் இல்லை

கைகளில்தான் 
இருக்குக்கிறது

Friday, November 23, 2012

செத்ததறிவானோ ?

முற்றாய் முடிந்ததும்
போர்த்தினார்களா?

முடிந்துவிடுமென்று
போர்த்தினார்களா?

போர்த்தப் பட்ட வேட்டி தாண்டி
கசிந்து கொண்டிருந்தது

“ யாரு பெத்த புள்ளையோ...”

 வெடித்தாள்
முன்னிருக்கை தாயொருத்தி

எங்க போயிட்டிருந்தானோ?
தேம்புகிறாள்
இன்னொரு தாய்

“ இப்படி
செத்துக் கிடக்கிறான்னு
ஊட்டுல
யாருக்குத் தெரியும்?”

புலம்பிய
தாயொருத்தியிடம் கேட்கிறாள்
குட்டிமகள்

“ அந்த மாமா செத்தது
அந்த மாமாவுக்குத் தெரியுமா
மொதல்ல”

ஆமாம்
தான்
செத்ததறிவானா
செத்தவன்?

விஞ்ஞானமும்
மெய்ஞானமும்
மழலையில்
பத்திக் கொள்ள

பேருந்து நிற்கும் வரை
நேரமில்லை
குதித்தோடுகிறான்

போகிற
பேருந்தைப்
பிடிக்க

Sunday, October 28, 2012

நதி பயணப் படும் பாதை

சென்ற ஆண்டு இதே மாதிரி ஒரு மழை நாளில் கீர்த்தனாவோடு அமர்ந்து ஏதோ ஒரு செய்தி சேனலைப் பார்த்துக் கொண் டிருந்தேன்.

வழக்கமாக செய்தி சேனலை விரும்பவே விரும்பாத கீர்த்தி அடுத்த நாள் தனக்கு விடுமுறையா என்பதை அறிந்து கொள்ளும் ஆவலில் ஏறத்தாழ இரண்டு மணி நேரமாக என்னோடு அமர்ந்து செய்தியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஆக,

மழைக்கு பிள்ளைகள் செய்தி சேனலுக்குள் ஒதுங்குகிறார்கள். இதற்காகவேனும் மழையை ஒரு முறை வாழ்த்திவிடத்தான் வேண்டும்.

 மதுராந்தகம், வீராணம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளின் கரைகள் உடைந்துவிடும் அபாயம் இருப்பதாகவும், ஆகவே உபரி நீரைத் திறந்து விட இருப்பதாகவும், நீரின் பயணப் பாதையிலிருக்கும் மக்கள் வீடுகளைக் காலி செய்துவிட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் எல்லா செய்தி சேனல்களும் திரும்பத் திரும்ப அறிவுறுத்திக் கொண்டே இருந்தன.

நிரம்பி வழியும் ஏரிகளையும் அவை மாறி மாறி காட்டின. ஏறத்தாழ எல்லா ஏரிகளில் இருந்தும் தண்ணீர் திறந்து விடப் பட்டு முரட்டுக் கோவத்தோடு வெள்ளமெனப் பாய்வதைப் பார்க்க முடிந்தது.

இப்படி சீறிப் பாய்ந்து கொண்டிருந்த வெள்ளம் அதற்குள்ளாக ஒரு டசன் உயிர்களைக் காவு கொண்டிருந்தது. நூற்றுக் கணக்கான குடிசைகள் ஆயிரக் கணக்கான குடும்பங்கள் சின்னாபின்னமாய் சிதைக்கப் பட்டுக் கிடந்தன.

உயிர்ச் சேதத்திற்கு, கால் நடை சேதத்திற்கு, உடமை சேதத்திற்கு, குடிசை சேதத்திற்கு என்று வகை வாரியாக நிவாரணத் தொகைகளை அரசு அறிவித்துக் கொண்டிருந்தது.

கீர்த்தி கேட்டாள்,

“ஏம்பா இப்ப இந்த தண்ணி எல்லாம் எங்க போகும்?”

“கடலுக்கு”

”வருஷா வருஷம் இப்படித்தானா?”

“ ஆமாம்”

” ஏம்பா, அப்ப இப்படி கொடுக்குற காசுல புதுசா ஒரு ஏரி வெட்டிட முடியாதா?”

“ எதுக்கு கேக்கற? வெட்டப் போறியா?”

எனது நக்கலை ஒரு பொருட்டெனவே அவள் மதிக்கவில்லை என்றுதான் தோன்றியது.

“லூசு மாதிரி உளறாம கேட்டதுக்கு பதில் சொல்லுப்பா”

“ வெட்டலாம் தான்”

“ அப்ப ஏன் அரசாங்கம் வெட்ட மாட்டெங்கறாங்க?”

“ வெட்டினா மட்டும்..?”

“ . வெட்டினா தண்ணியும் கடலுக்குப் போகாம பத்திரமா இருக்கும், ஜனங்களும் சாக மாட்டாங்க, மாடு சாகாது, குடிசையும் சாயாதில்ல ...”

இதைக் கேட்ட போது அவள் ஏழாம் வகுப்புதான் படித்துக் கொண்டிருந்தாள்.

இது ஏதோ தனிப்பட்ட கீர்த்தனாவின் எண்ணமாகக் கொள்ளக் கூடாது. அவளொத்த குழந்தைகளின் பொதுப் புத்தியாகத்தான் இதைக் கொள்ள வேண்டும்.

எனில், ஏழாம் வகுப்பு படிக்கும் குழந்தைக்கு புரிகிற இந்த விஷயம் அரசுக்குப் புரியாதா?

புரியும் எனில் ஏன் அதை நிறை வேற்றவில்லை?

கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம்,

ஒவ்வொரு ஆண்டும் செம்பரம்பாக்கம், மதுராந்தகம், மற்றும் வீராணம் ஏரிகளில் இருந்து வெளியேற்றப் படும் தண்ணீரை மூன்று ஏரிகள் வெட்டி சேமித்தால் கிடைக்கும் நீரின் அளவு ஏறத்தாழ ஒரு செம்பரம்பாக்கம் நீரளவு ஆகும்.  இது கொஞ்சம் கூடலாம் குறையலாம்.

இது போக ஏரிகள், குளங்கள், குட்டைகள், கசிவு நீர் குட்டைகள், தடுப்பணைகள், வாய்க்கால்கள் போன்றவற்றை காலமுறையில் தூர் எடுப்பதன் மூலமும் நதிகளில் ஏரிகளில் மற்றும் நீர் நிலைகளில் மண்டிக் கிடக்கும் ஆகாயத்தாமரை, சீத்தக் கருவை போன்றவற்றை அப்புறப் படுத்துதல் போன்றவற்றை செய்தாலே 25 விழுக்காடு நீரை நம்மால் சேமிக்க முடியும்.

இது போக மழைக் காலங்களில் தெருக்களில் ஓடும் கீற்றோடைகளை நன்கு திட்டமிட்டு ஊருக்கு வெளியே கொண்டு போய் ஒன்றிணைத்து சிறு சிறு ஓடைகளாக்கி அவற்றை ஒன்றிணைத்து ஒரு குளமாக்கி அல்லது தடுப்பணைகள் அமைப்பதாக் கொள்ளுங்கள்.

ஊருக்கு ஊர் இப்படி அமைத்தால், அரசு நினைத்து நேர்மையாக தொடங்கினால் ஒரே வாரத்தில் இது சாத்தியம்தான். ஊருக்கு ஊர் புதிது புதிதாய் குளங்கள் , தடுப்பணைகள் என்று மலர்ந்து அனைத்திலும் மழை நீர் தேங்கி நின்றால் அது எவ்வளவு மகத்தான நீராதார சக்தியாக மாறும்.

முதலில் இது மாதிரி பெரிய, நடுத்தர மற்றும் சிறிய நீர் நிலைகளுக்கு வரும் நீர்ப் பாதைகளை ஆக்கிரமித்துள்ள எதுவாயினும், அவற்றின் பின்னால் எத்தகையதொரு சக்தி வாய்ந்த அரசியல் சக்திகள் இருப்பினும் அவற்றை அப்புறப் படுத்த வேண்டும். அப்படி செய்வதன் மூலம் மழை நீர் விரையமாகாமல் நீர் நிலைகளுக்கு வந்து சேரும்.

போக,
நிலத்தில் பெய்யும் மழையில் 35 விழுக்காடு வெப்பத்தால் ஆவியாகி வீணாவதாக 09.10.2012 அன்று வெளியான தினமணிக் கட்டுரையில் ராமையா சொல்கிறார். நினைக்கவே கொடுமையாக இருக்கிறது. யோசித்துப் பாருங்கள்,  மழை நீரில் நமக்கு பயனாகும் நீரின் அளவே 35 சதவிகிதத்திற்கும் சற்று குறைவாகத்தான் இருக்கும். எனில் நாம் பயன்படுத்தும் நீரின் அளவி மிக ஒத்த அளவு நீர் ஆவியாகிறது என்றால் அதைத் தடுத்தால் நீர்ப் பஞ்சமே இருக்காதே.

நீர் ஏன் ஆவியாகிறது?

புவியும் வெளியும் அளவுக்கு அதிகமாய் வெப்பமடைவதால்தான்.

பூமி ஏன் வெப்பமடைகிறது?

தாராளமயம் நிர்ப்பந்திக்க, உலக மயம் உந்தித் தள்ள விரைவுபடும் நகர் மயமாதலின் பொருட்டு அழிக்கப் படும் வனங்கள் இதற்கான முக்கிய காரணங்களுள் முதன்மையானது.

வனங்கள் அழிக்கப் படுவதன் மூலம் பூமி சூடாவது ஒரு புறமெனில் காட்டைத் தவிர வேறு எதையும் அறிந்திராத மலை மக்களும் சேர்த்தே அழிக்கப் படுகிறார்கள் என்பதுதான் கொடுமையான விசயம். அதை விடவும் கொடுமை என்னவெனில் அவர்கள் படும் சித்திரவதைதான்.

வனங்களின் அழிவு வனங்களோடு சம்பந்தப்பட்ட பறவைகளும் விலங்குகளும் இன்னபிற ஜந்துக்களும் சேர்ந்தே அழிக்கப் படுகின்றன. இவை புவி வெப்பத்தை அதிகப் படுத்துவதுடன் இயற்கைச் சமநிலையையும் குலைத்துப் போடுகின்றன.

போக, வேக வேகமாக எழும்பும் பெரிய பெரிய தொழிற்சாலைகளும் தமது பங்கிற்கு புகையை கக்கிவிட்டு செல்கின்றன.

இவ்வாறு பூமி வெப்பப் படுவதால் நீரற்று ஒரு அழிவு சாத்திப் படும் அதே வேளையில் நீர் பெருத்து பூமி அழியவும் வாய்ப்பிருக்கிறது. புவி வெப்பமடைவதால் துருவப் பகுதிகளில் பனி விரைவாய் உருகும் சாத்தியம் உள்ளது. அப்படி துருவப் பனி உருகும் போது அது கடலில் கலந்து கடலின் மட்டம் பெருமளவு உயரும் அபாயம் உள்ளது. அப்படி உபரியாய் உயரும் கடல் நீர் நிலப் பரப்பில் புகுந்து நிலத்தை மூழ்கடிக்கும் அபாயம் விரைவில் நிகழக் கூடும்.

 ஆக அது குறித்து உலகத் தலைவர்கள் உட்கார்ந்து முடிவுக்கு வர வேண்டும். அவ்வளவு எளிதாக செய்வார்களா?

அவரவர்களுக்கு ஆயிரமாயிரம் பிரச்சினைகள். இதில் கேவலம் பொது மக்களைப் பற்றி சிந்திக்க ஏது நேரம்?

பிறகு, என்ன செய்வது. அவர்களை இது குறித்து சிந்திக்க வைக்க வேண்டும். இதன் அவசியத்தைப் பொதுப் புத்திக்கு உரிய வழிகளில் கொண்டு போக வேண்டும். பொதுத் திரள் கிளர்ந்து எழுந்தால் மட்டுமே இது சாத்தியம்.

பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையும் நிலம் சூடாக தன்னாலான பங்களிப்பை செய்கின்றன.

சொந்தமாக மகிழுந்து வைத்திருப்பது என்பது இன்றைய மத்திய தர வர்க்கத்து அடையாளமாகிப் போனது. சற்ரேரக் குறைய 40 விழுக்காடு மகிழுந்துகளில் ஒருவர் மட்டுமே பயணிக்கக் கூடிய நிலைதான் இன்றைக்கு உள்ளது. அரசு இதைத் தடுக்க ஏதேனும் செய்தாக வேண்டும். குறைந்த பட்சம் மகிழுந்துகளுக்கான வரியை உயர்த்தலாம். அதன் மூலம் கௌரவத்திற்காகவும், எளிய தவணையில் கிடைக்கிறதே என்பதற்காகவும்
மகிழுந்து வாங்குபவர்களின் எண்னிக்கை பெருமளவு குறைந்து தேவைப் படுவோர் மட்டுமே வாங்கும் நிலை ஏற்படும்.

இதுவும் பெருமளவு வெப்பத்தைக் குறைக்க உதவும்.

அடுத்து மணல் கொள்ளை. காவிரியில் மணலின் உயரம் 100 மீட்டராக இருந்தது என்று வைத்துக் கொள்வோம். இதைத் தோராயமாகத்தான் சொல்கிறேன். தமிழ்நாட்டில் காவிரியின் பரப்பளவு 43856 சதுர கிலோமீட்டர் என்று விக்கி பீடியா சொல்கிறது.

எனில்,
438.56 கன கிலோமீட்டர் மணல் என்றாகிறது. எனில், 438.56 கன கிலோமீட்டர் அளவிற்கு ஈரம் என்றாகிறது. இப்போது ஏறத்தாழ 50 அடி ஆழத்திற்கு மணலை கொள்ளை அடித்தாயிற்று. எனில், இப்போது காவிரியின் மணல் பரப்பளவு 219.28 கன கிலோமீட்டர் என்றாகிறது. ஆகவே காவிரி மணலின் ஈரப்பதமும் 438.56 கன கிலோமீட்டரிலிருந்து 219.28 கன கிலோமீட்டர் என்றாகிறது.

மணல் குறித்த இந்தப் புள்ளிவிவரம் எல்லா ஆறுகளுக்கும் பொருந்தவே செய்யும். ஆக மணல் கொள்ளை பாதியளவு ஆற்று மணல் ஈரப் பதத்தை களவு கொண்டிருக்கிறது.

இதன் விளைவாக ஆற்று நீரின் வேகமும் அதிகரித்திருக்கிறது. இதன் சோக விளைவாக ஆடிப் பதினெட்டன்று காவிரியில் ஆழ்குழாய் கிணறு வெட்டி நீரெடுத்து குளிக்க வெண்டியதாயிற்று.

மேற்சொன்ன காரணங்களின் விளைவாக சராசரியா 40 மீட்டர் ஆழத்தில் தென்பட்ட நிலத்தடிநீர் மட்டம் இப்போது 200 மீட்டருக்கு நகர்ந்திருக்கிறது.

இதே நிலையினை கர்நாடகாவும் எடுக்கும் பட்சத்தில் காவிரி நீரை அவர்கள் மிகத் தாராள மனதுடன் தர இயலும்.

அதுமட்டும் அல்ல இவை சரி செய்யப் படும் போது எங்கள் உடமைகளும் உயிர்களும் கூட தப்பும்.

அரச கனவான்களே,

எங்களது உயிரின் மதிப்பும் , எங்கள் வலியும் உங்களுக்கு புரியாது போயினும்
இவற்றை நீங்கள் செய்து முடித்தால் வருடா வருடம் நீங்கள் தர வேண்டிய நிவாரணத் தொகை மிச்சமாகும்.

அதற்காகவேனும் இதில் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள்.

நன்றி : “காக்கைச் சிறகினிலே”

Sunday, October 7, 2012

இரவு...தீப் பந்தங்கள்... கல்வி

அந்தப் பல்கலை கழகத்தில் என்ன நடத்தினார்கள் என்பதில் ஏதேனும் விவாதம் இருக்குமானால் அதைக் கொஞ்சம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றேத் தோன்றுகிறது.

அந்தப் பல்கலைக் கழகம் குறித்த எந்தத் தகவலும் ஆச்சரியத்தின் உச்சத்திற்கே நம்மை அழைத்துப் போகின்றன.

பத்தாயிரம் மாணவர்கள் ஒரே இடத்தில் தங்கிப் படித்திருக்கிறார்கள்.



இத்தனை விளம்பரங்கள், இத்தனை விதமான போக்கு வரத்து வசதிகள், இத்தனை கேம்பஸ் வாய்ப்புகள் எல்லாம் கடந்து வியக்குமளவு ஜனத்தொகை
எல்லாம் இருந்தே இவ்வளவு மாணவர்களை கொண்டு வருவது சாத்தியமே இல்லாத போது அது சாத்தியப் பட்டிருக்கிறது.

படிக்கிறவர்களுக்கு கல்வி, உணவு, தங்குமிடம் இன்னபிற கல்விச் செலவுகள் எல்லாம் இலவசம்.

இலவசம் என்பதை விட இது அரசின் கடமை என்பதை அந்த மன்னன் உணர்ந்திருக்கிறான்.

இரவிலும் வகுப்புகளும் விவாதங்களும் தொடர்ந்திருக்கின்றன. நினைத்துப் பார்க்கவே இயலவில்லை,

தீப் பந்தங்களின் ஒளியில் இவை சாத்தியப் பட்டிருக்கிறது.

ஒரு மன்னனின் சாம்ராஜியத்தில் எத்தனை கிராமங்கள் இருந்திருக்கும் என்று தெரியவில்லை. ஆனால் இருநூறு கிராமங்களிலிருந்து கிடைத்த வருமானம் முழுவதையும் அந்த மன்னன் கல்விக்காக அள்ளிக் கொடுத்திருக்கிறான்.

பாஹியான் சொன்னதாகக் கிடைக்கும் குறிப்புகள் நம்மை திக்கு முக்காட வைக்கின்றன,

 பத்தாயிரம் மாணவர்களுக்கு இரண்டாயிரம் ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்து நெறிப் படுத்தியிருக்கிறார்கள். ஏறத்தாழ மூவாயிரம் ஆசிரியரல்லாத ஊழியர்கள் அங்கு பணியாற்றியிருக்கிறார்கள்.

கல்விதான் மண்ணிற்கு வெளிச்சத்தையும் சாரத்தையும் தரும் என்று புரிந்திருக்கிறது அந்த மன்னர்களுக்கு.

“ அறிவை அள்ளித் தரும் இடம்” என்று பொருள் படும் படி “நாளந்தா” என்று பெயரிட்டு மகிழ்ந்திருக்கிறார்கள்.



வருவாயில் பெரும்பகுதியை கல்விக்கு செலவு செய்திருக்கிறார்கள் முடி சுமந்த மன்னர்கள்.

வருவாயில் பத்து சத விகிதம் கூட மக்களாட்சியில் கல்விக்கு இல்லை.

பத்தாயிரம் மாணவர்கள் படிக்கும் இடத்தில் இரண்டாயிரம் ஆசிரியர்களும், மூவாயிரம் ஆசிரியரில்லாத ஊழியர்களுமென்று ஏறத்தாழ ஐந்தாயிரம் பேர் பணி புரிந்துள்ளனர்.

முப்பது மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்பது நம் மண்ணின் மிக நீண்ட கனவாகவே உள்ளது.

நாளந்தாவின் பெருமையும் கல்வியின் மகத்துவமும் நிச்சயமாய் பிரதமருக்கும் எல்லா முதல்வர்களுக்கும் தெரிந்தேதான் உள்ளது.



எனில் ,

இவர்கள் கல்வியை இப்படி வணிகப் படுத்துகிறார்களே. ஏன்?

உழைக்கும் ஜனத்திரளும், ஒடுக்கப் பட்ட ஜனத் திரளும் கல்வி பெற்றுவிட்டால் தாங்கள் சொகுசாக இருக்க முடியாது என்பதைத் தவிர வேறு என்ன?


Tuesday, October 2, 2012

அக்டோபர் இரண்டு



நாகம்மையார் உடலைக் கிடத்தியிருக்கிறார்கள். சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் கதறி அழுகிறார்கள். ஒப்பாரி வேறு. இது பெரியாரை எரிச்சல் படுத்துகிறது.

“ அழுபவர்கள் இங்கிருந்து ஓடுங்கள். அழுவதால் அவர் எழப் போவதில்லை. போக சாவு என்பது இயல்பானது. எல்லோருக்கும் வரக்கூடியது”

என்று அழுது ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தவர்களை விரட்டியடித்தவர்.

ராஜாஜி மறைந்த பொழுது பெரியார் ஒரு சக்கர நாற்காலியில் அமர்ந்து கிருஷ்ணாம்பேட்டை சுடுக்காட்டுக்கு வருகிறார்.

தனது மனைவி இறந்த பொழுது அழுதவர்களை விரட்டி அடித்தவர் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே தேம்பித் தேம்பி அழுகிறார்.

வேறு எப்போதேனும் பெரியார் இப்படி அழுதிருப்பாரா என்று தெரியவில்லை.

கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் இடம் கொள்ளாததால் மக்கள் வெளியே நிறுத்தப் படுகிறார்கள். கோபம் கொண்ட கூட்டம் கல்லெடுத்து எறிகிறது.

பெரியார் மீது கற்கள் விழுந்து விடக் கூடாது என்பதற்காக காமராசர் பெரியாரை மூடி மறைத்தபடி நிற்கிறார்.

கற்கள் காமராசர்மேல் விழுகின்றன. ஆனாலும் நகராமல் பெரியார்மேல் கற்கள் விழாமல் பார்த்துக் கொள்கிறார்.

அவர்தான் காமராசர்.


அவரும் சராசரிதான் பல விஷயங்களில்.

எதிரிகளின், எதிர்க் கட்சியின் வளர்ச்சி குறித்தோ, பலம் குறித்தோ, மக்களின் மனநிலை குறித்தோ சரியாய் கணிக்கத் தெரியாதவர்தான்.

நல்லது செய்திருக்கிறோம், மக்கள் நம்மை ஆதரிப்பார்கள் என்று அப்பாவியாய் நம்பி ஏமாந்தவர்தான்.

ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தந்தைப் பெரியாரின் மீது கற்கள் விழுந்து விடக் கூடாது என்று தான் கல்லடிப் பட்ட,

அணைகள் கட்டினோம், தொழிற்சாலைகள் கொண்டு வந்தோம்,  நெய்வேலி சுரங்கம் கொண்டு வந்தோம். விவசாயமும் வேலை வாய்ப்புகளும் பெருக்கினோம். பயனடைந்த மக்கள் ஆதரிப்பார்கள் என்று நம்பிய அப்பாவி சராசரியின் நினைவு நாள் இன்று.

எத்தனையோ கருத்து வேறுபாடுகளும் விமர்சனங்களும் உங்கள் மீது எனக்கும் உண்டு.

ஆனாலும் உங்கள் நினைவு நாள் ஒரு பெரிய வெற்றிடத்தை நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது பெருந்தலைவரே.

Thursday, September 27, 2012

கணபதியே சரணம்






நல்ல வேளை,

எங்களூர் மலை உச்சியில் பிள்ளையாரைக்
கொண்டு வந்து வைத்தார்கள்.

இல்லையேல்

மலைக்கோட்டை இருக்கும் இடத்தில் 

இந்நேரம் ஒரு பெரிய ஷாப்பிங் மால் வந்திருக்கும்

Sunday, September 23, 2012

பாரதியின் “இந்திய பாங்க்”

ஒரு பக்கம் பார்த்தால் பாரதியைப் பற்றி எவ்வளவு பேசியாயிற்று என்று மலைப்பாகத் தோன்றுகிறது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் பேசுவதற்கு பாரதியைப் பற்றி இன்னும் இவ்வளவு இருக்கிறதே என்றும் தோன்றுகிறது.

அதுதான் பாரதி.

எவ்வளவோ விமர்சனங்கள், எவ்வளவோ வசைகள் எவ்வளவோ பாராட்டுக்கள் எனப் பரந்து விரியும் பாரதியின் தளம்.

பாரதியைக் கொண்டாடுபவர்களுள்ளும் சரி தூற்றுபவர்களுள்ளும் சரி பாரதியை முழுமையாகப் பார்க்காதவர்களே ஏராளம் எனலாம். கோனார் நோட்ஸில் போட்டிருப்பதற்காகவே பாரதியை மகாகவியாகக் கொண்டாடும் பலரை நானறிவேன்தான்.

ஆனால் இவை யாவும் கடந்து அள்ள அள்ளக் குறையாமல் ஏராளம் கிடக்கிறது பாரதியிடம்.

எது குறித்து பேசவில்லை பாரதி?

எது குறித்தும் பேசியவன்தான் பாரதி என்று ஆழமாய் நம்புபவனும் ஆச்சரியப் படும்படியாக ஒரு விசயத்திற்காக பாரதி விடாப் பிடியாகப் போராடியிருக்கிறான்.

தமிழகத்தில் ஒரு சுதேசி வங்கியைக் கொண்டு வந்துவிட வேண்டும் என்று போராடி அதில் வெற்றியும் பெற்றவன் பாரதி என்பது பாரதியின் பன்முகத் தன்மை குறித்து தொடர் வகுப்பு எடுக்குமளவிற்கு ஞானம் உள்ளவர்களில்கூட பலருக்கு ஆச்சிரியத்தைத் தரும் செய்தி.

36 சதவிகித வட்டி, வண்ண வண்ண, மற்றும் இதுமாதிரியான கவர்ச்சிகரமான அறிவிப்புகளில் மயங்கி தங்களது உழைப்பின் விளைவை எல்லாம் மொத்தமாக முதலீடு செய்துவிட்டு நிதி நிறுவனத்துக்காரன் கம்பியை நீட்டியவுடன் வயிற்றிலும் வாயிலும் அடித்துக்கொண்டு அழுகின்றவர்களை, சமயத்தில் தற்கொலை செய்துகொள்கிறவர்களை ஊடகங்களின் வாயிலாக நாம் ஏராளம் பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம்.

எவ்வளவோ எடுத்து சொன்னாலும், ஊடகங்களின் வழியே அறிவுறுத்தினாலும் இது தொடர் கதையாகத்தான் இருக்கிறது. எத்தனை முறை எடுத்து சொன்னாலும் திருப்பித் திருப்பி இப்படி ஏமாறுகிறார்கள் எனில் எவ்வளவு பேராசை இவர்களுக்கு. இவ்வளவு பேராசை பட்டால் இப்படித்தான் நட்டப் படவேண்டும் என்று சொல்பவர்களும் உண்டுதான்.

ஆனாலும் இவர்கள் நிதி நிறுவனங்களில் கொண்டு போய் தங்களது வாழ்நாள் சேமிப்பைக் கொட்டுவது அவர்களது பேராசையினால் அல்ல. பிள்ளைகளை எப்படியேனும் உயர் படிப்பு படிக்க வைத்துவிடமாட்டோமா?, அவர்களின் திருமணத்தை நடத்திவிட மாட்டோமா? என்ற வாழ்க்கை நைந்து போயிருப்பவர்களின் ஏக்கத்தைதான் இந்த நிதிநிறுவனங்கள் கொள்ளை அடிக்கின்றன.

விலக்காய் சில பேராசைகளும் இருக்கவே செய்யும் என்பதையும் முற்றாக மறுத்துவிட முடியாதுதான்.

இவ்வளவு தொடர்பு சாதனங்கள்,  இவ்வளவு தொடர் பிரச்சாரங்கள் இருக்கிற இந்த நாளிலும் இத்தனைபேர் ஏமாறுகிறார்கள் என்றால் இவை ஏதுமில்லாத 1906 ஆம் ஆண்டு மக்கள் பெரிதாய் ஒரு வங்கியால் ஏமாற்றப் பட்டிருப்பதில் பெரிதாய் ஆச்சரியப் பட ஒன்றும் இல்லைதான். அதுவும் அன்றைய அரசாங்கமே அந்த வங்கியைத் தவிர வேறு எதிலும் லேவாதேவி செய்யக் கூடாது என்று சொல்லியிருந்த ஒரு கால கட்டத்தில் அரசு சொன்ன நிதி நிறுவனத்தைத் தாண்டி அவர்களுக்கு வேறு வழி ஏது?

1906 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி அன்று சென்னை அர்பத்னாட் வங்கி இழுத்து மூடப்பட்டு அதன் கதவில் இப்படி எழுதி ஒட்டப் பட்டிருந்தது,

“அர்பத்னாட் கம்பெனியார் கடனாளிகளுக்குப் பணம் கொடுப்பதை நிறுத்தி வைத்திருப்பதாக விசனத்துடன் அறிவித்துக் கொள்கிறார்கள்.”

ஹிந்து நாளிதழ் 23.10.1906 அன்று இப்படி எழுதியது,

“:the consequence of this sudden and disastrous failiure will mean the ruin of many hundreds of families in southern india"

“ இந்த வங்கி இப்படித் திடீரென மூழ்கிப் போனதால் தென்னிந்தியாவில் உள்ள பல நூற்றுக் கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வந்துள்ளன” என்பது மாதிரி ஹிந்து பத்திரிக்கை எழுதுமளவிற்கு அப்படி என்ன நடந்தது அந்த வங்கிக்கு.

“ஹிந்து” சொல்கிறமாதிரி திடீரென்றெல்லாம் அந்த வங்கி மூழ்கிப் போனதாத் தெரியவில்லை. 22.10.1906 திங்கள் அன்று வங்கி திவால் ஆனதாக அறிவிக்கக் கோரிய மனுவினை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்கிறார் வங்கியின் தலைவர். ஆனால் சனி மாலை வரை வங்கி பொது மக்களிடமிருந்து “வைப்பு நிதி”களைப் பெற்றுக் கொண்டிருந்திருக்கிறது.

திங்கள் கிழமை காலை திவால் ஆனதாகக் கோரும் மனுவைத் தாக்கல் செய்கிறவருக்கு சனிக்கிழமை அன்று அந்த விவரம் தெரியாமல் போயிருக்க வாய்ப்பே இல்லை.

வழக்கறிஞரை நாடுதல், விவரங்களை சொல்லி மனுப்போடச் சொல்லி அவர் மனுதாக்கல் செய்தல் என்பதான இந்தச் சங்கிளித் தொடருக்கு எப்படிக் குறைச்சலாக வைத்துக் கொண்டாலும் ஒருமாத காலம் தேவைப் பட்டிருக்கும்.

எனில்,

22.09.1906 ஆம் தேதிக்கு ஏறத்தாழ ஒரு மாதத்திற்கு முன்னமே அதற்கான நடவடிக்கைகள் தொடங்கியிருக்க வேண்டும்.

எனில்,

குறைந்துபட்சம் மூன்று மாதங்களுக்கு முன்பே வங்கியின் நிலைமை குறித்து அவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.

எனில்,

வங்கியை திங்கள் கிழமை மூடப் போகிறோம் என்று நன்கு தெரிந்திருந்தும் சனிக்கிழமை மாலை வரை பொது மக்களிடமிருந்து “வைப்பு நிதியினை”ப் பெற்றிருக்கிறார்கள் எவ்வளவு அயோகியத்தனமான கொள்ளையர்கள் அவர்கள்.

ஆனால் பாரதியோ அவர்களை வெறும் கொள்ளையர்களாகப் பார்க்கவில்லை. சுதேசிப் பணத்தினைக் கொள்ளை அடித்த அந்நியர்களாகப் பார்த்தான்.

“அரசாங்க வேலையில் உள்ளவர்கள் வெள்ளைக் கார வங்கிகளைலன்றி வேறு எந்த வங்கிகளிலோ அல்லது மற்ற பொதுமக்களிடமோ எந்தவிதமான பணப்பரிமாற்றமும் வைத்துக் கொள்ளக் கூடாது” என்றொரு விதி அந்தக் காலத்தில் இருந்தது.

03.11.1906 ஆம் தேதியிட்ட “இந்தியா” வில் பாரதி கேட்டான்,

“இவர்களெல்லாம் இப்படி நாசம் அடைவதற்கு சர்க்கார் விதியொன்று பெருந்துணையாக இருந்திருக்கிறது. அதாவது கவர்ன்மெண்ட் உத்தியோகஸ்தர்கள் மற்ற ஜனங்களுடன் எவ்விதமான கொடுக்கல்- வாங்கலும் வைத்துக் கொள்ளக் கூடாதுஎன்றும், வெள்ளைக்காரபாங்கிகளில்தான் கொடுக்கல்- வாங்கல் வைத்துக் கொள்ளலாம் என்றும் ஒரு விதி இருக்கின்றது.

இதனால் எத்தனையோ கவர்ன்மெண்ட் காலேஜ் உபாத்திமார்களும், கலெக்டராபீஸ் முதலிய கச்சேரிகளில் உள்ள நாள் எல்லாம் அரைவயிற்றுச் சோறுக்கு உழைக்கும் ஏழை ஜனக்களும் தாம் கஷ்டப்பட்டு மிச்சம் வைத்திருப்பதை இருக்கிற பிரிட்டிஷ்பாங்கிகளிலேசிறிது நல்ல மாதிரியாக இருந்த ஆர்பத் நாட் கம்பெனியிலே கொட்டிக் கொடுத்தார்கள்.

இப்போது அவர்களெல்லாம் உடைமையைத் தோற்றுவிட்டுப் பரிதபிக்கிறார்களே! இவர்களுக்கு சகாயம் செய்ய வேண்டியது கவர்ன்மெண்டாரின் கடமையல்லவா?”

ஆக, அரசு விதிகளுக்குக் கட்டுப் பட்டுத்தான் மக்கள் ஆர்பத்நாட் வங்கியில் பணம் போட்டார்கள் என்பதால் அவர்களுக்கு நியாயம் வழங்க வேண்டிய கடமையும் பொறுப்பும் அரசாங்கத்திற்கு உண்டென்றும் , அதிலிருந்து நழுவிவிடாமல் அவர்களுக்கு அரசாங்கம் நியாயங்கிடைக்கச் செய்யவேண்டும் என்றும் கோரினான்.

“ ரீட்” என்பவரை இது குறித்து விசாரிக்கும் காரியஸ்தராக அரசாங்கம் நியமித்தது. இது போதாது என்றும் அரசாங்க காரியஸ்தரோடு கடனாளிகள் சார்பிலே அவர்கள் நியமிக்கும் ஒரு காரியஸ்தரும் இணைந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் பாரதி எழுதினான்.

03. 10 1906 ஆம் “இந்தியா” வில் அவன் எழுதினான்,

“ மொத்தம் கம்பெனியில் இருக்கும் தொகையில்100-க்கு 5 கமிஷன் சர்க்கார் காரியஸ்தருக்குக் கொடுக்கப் படவேண்டும் என்று விதி இருக்கிறது, என்றபோதிலும் ,ஹைகோர்ட்டாருக்கு இஷ்டமுண்டானால்சர்க்கார் காரியஸ்தருக்கு இவ்வளவுதான் என்பதைக் குறிப்பிடலாம் என்ற விதியும் இருக்கிறது.

இந்தச் சம்பவம் அசாதாரணமானதும், ஜனங்களுக்கெல்லாம் அளவறிந்தவருத்தம் உண்டாக்கத் தக்கதும் ஆக இருப்பதால்,இவ்விஷயத்தில் ஹைகோர்ட்டார் சர்க்கார் காரியஸ்தரின் லாபத்தை இவ்வளவென்று வரையறுத்துக் கொடுப்பது அவர்களுடைய பொறுப்பாகும்,

அப்படியில்லாவிடினும் மொத்த லாபத்தை சர்க்கார் காரியஸ்தருக்கு பாதியும், கடனாளிகளால் நியமிக்கப் படும் காரியஸ்தருக்குப் பாதியும் ஆகவகுத்துக் கொடுக்க வேண்டும்”

ஏற்கனவே இழந்து நிற்கும் மக்களின் பணத்தில் 5 விழுக்காடு அரசாங்க காரியஸ்தருக்கு கொடுக்கக் கூடாது என்று வாதாடுகிறான். அதற்கான விதிகளைச் சுட்டிக் காட்டுகிறான். ஒருக்கால் அதற்கு சாத்தியம் இல்லாது போனால் 5 விழுக்காட்டையும் வெள்ளைக் காரனுக்கு கொடுக்காமல் அதில் பாதியை சுதேசிக் காரியஸ்தருக்கு கொடுக்க வேண்டும் என்றும் கூறுகிறான்.

விக்கி பீடியா சொல்கிறது,

“when the auditors appointed bythe official assigneebegan examining Arbuthnot s accounts, they found thefirm had 2300 accounts in India with balance of RS2.75 million and about 4,000 fixed deposits with claims to amount of 25 million.

This was the biggest crash in Indian banking history, till then."

இது ஒரு புறம் நடந்துகொண்டிருக்க இழந்த மக்களுக்கு ஏதேனும் உதவ வேண்டும் என்று சில நல்லவர்கள் முடிவெடுக்கிறார்கள். இதைக் கேள்விப் பட்டதும் பாரதி துள்ளிக் குதிக்கிறான். கையில்தாஅன் “இந்தியா” இருக்கிறதே, 10.11.1906 ஆம் தேதியிட்ட “இந்தியா” வில் எழுதுகிறான்,

“இந்த நிதிக்குப் போதுமான்படி பணம் வந்து குவிந்து அனேக அநாதைகளுக்கு உதவி ஏற்படும் என்று நம்புகிறோம்.

ஆர்பத்னாட் கம்பெனி சிதறிப் போனதில்நஷ்டமடையாத பிரபுக்கள் எத்தனையோபேர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் கஷ்டப்படும் ஜனங்களுக்கு உதவி செய்வதைத் தமதுகடமையாகப் பாவிக்க வேண்டும்”

பாரதி கோரியபடி ஒருவார கால அவகாசத்திற்குள் 45,150 ரூபாய் நன்கொடைகளாக வந்து சேர்ந்தது. ஏமாந்ததைத் திரும்பப் பெறுவதற்கான போராட்டம் ஒருபுறம் நடந்து கொண்டே இருக்க இடைபட்ட காலத்தில் அவர்களுக்கு உதவுவது அவசியம் என்ற பட்டறிவும் ஈரமும் அவனுக்கிருந்தது.

ஊதாரித் தனமான செலவு, தாறுமாறான முதலீடு , முதலே இல்லாமல் கம்பெனியைத் துவங்கியது போன்றவையே வங்கி திவாலானதற்கு காரணமென்று ரீட் சொன்னார்.

“தன் பணத்தைச் சூதாடுகிறவனையே கோர்ட்டில் தண்டிக்கிறார்கள். அன்னியர் பணத்தைச் சூதாட்டம் போன்ற முயற்சிகளில் செலவிடுவோரை சும்மா விடுவது நியாயமாகுமா?” என்று “இந்தியா” வில் எழுதினான் பாரதி.

ஆர்பத்நாட் சிறைக்குப் போனான்.

இப்போது சுதேசி வங்கி ஒன்றின் தேவை குறித்து யோசித்தான் பாரதி. பம்பாயில் அது அப்போது சாத்தியப் பட்டிருந்தது.

இதில் பாரதியை ஈர்த்தது என்னவெனில் ஒருக்கால் சுதேசி வங்கி திவால் ஆனாலும் பணம் முழுக்க நம் மண்னிற்குள்ளேயே இருக்கும் என்பதுதான். மண்ணின் ஒரு துரும்பும் மண்ணைத் தாண்டக் கூடாது என்று அந்தக் காலத்தில் போராடியிருக்கிறார்கள். இன்றோ ஊசி பாசி உருளைக் கிழங்கு முதல் ராக்கெட் வரை சகலத்திற்கும் அந்நியனுக்கு ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்கிறார்கள்.

“இந்திய பாங்க்” என்று வரவேண்டிய வங்கிக்கு பெயரும் வைக்கிறான்.

இதே நேரத்தில் இதே கருத்தை “இந்தியன் பேட்ரியாட்” இதழில் திரு கோவிந்த தாஸ் அவர்கள் எழுதுகிறார்,

பாரதி கொண்டாடி எழுதுகிறான். 10.11.1906 “இந்தியா” வில் எழுதினான்,

“சென்னையிலே ஓர் இந்திய பாங்க் ஸ்தாபிக்கப் பட வேண்டியதன் அவசியத் தன்மை பற்றி நாம் பல முறை பேசியிருக்கின்றோம்.

இப்போது சென்னையிலே முக்கிய தனவந்தரும் மிகுந்த செல்வாக்குடையவருமாகிய ஸ்ரீ லாட் கோவிந்ததாஸ் “இந்தியன் பேட்ரியட்” பத்திரிக்கையிலே ஒரு கடிதம் எழுதியிருப்பதில் மேற்கண்டவாறு ஒரு பாங்க் ஸ்தாபிக்க வேண்டும் என்று சிபாரிசு செய்திருப்பதை மிகவும் மகிழ்வுடன் படித்தோம்.

வெறும் வாய்ப் பேச்சுக்காரர் முயற்சியிலே ஒரு பாங்க் ஸ்தாபனமாகி விடாது.

ஆதலால்,

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்தும், அந்நிய பாங்கிகளிலே கொட்டி வைத்தும் இருக்கும் சுதேசிகள் எல்லாம் உடனே கண் விழித்து கோவிந்த தாசருக்கு கடிதங்கள் எழுதிக் காரியங்களைப் பக்குவத்திற்கு கொண்டு வர வேண்டும்”

பாரதியின் கனவு ஒரு வழியாக மெய்ப் பட்டது. 02.12.1906 அன்று “இந்தியா பாங்க்” அமைப்புக் கூட்டம் நடந்தது.

08.12.1906 “இந்தியா”வில் பாரதி எழுதினான்,

சென்னையில் ஒரு சுதேசி பாங்க் ஸ்தாபிக்கும் அவசியத்தைக் குரித்து மகா ஜன சபையிலே சிலர் கூடி ஆலோசித்ததில் ஒரு பங்கு 500 ரூபா வீதம் 4000 பங்குகள் சேர்த்து, 20 லட்சம் ரூபாய் மூலதனம் உண்டாக்க திவான் பகதூர் ராஜரத்தின முதலியாரும், திவான் பகதூர் ஆதி நாராயய்யாவும், மிஸ்டர் சீதாராம் செட்டியும், மிஸ்டர் அண்ணாமலை செட்டியும், மிஸ்டர் சுந்தரம் அய்யரும், மிஸ்டர் முரளி தாஸும், மிஸ்டர் நடேச அய்யரும், மிஸ்டர் முத்தையா செட்டியும், மிஸ்டர் வெங்கடாசலம் செட்டியும், - ஒரு கமிட்டியாய் நியமிக்கப் பட்டார்கள்.

மிஸ்டர் சுந்தர அய்யரும், மிஸ்டர் முத்தையா செட்டியாரும்., மிஸ்டர்சீனிவாச அய்யரும் தற்காலத்துக்கு கமிட்டிக் காரிய தரிசிகளாய் நியமிக்கப் பட்டார்கள்.”

ஆக, தமிழ் மண்ணில் முதல் சுதேசி வங்கி உருவானதில் பாரதியின் பங்கு மகத்தானது.

ஒன்று சொல்ல வேண்டும்,

அது கோவிந்த தாஸன்கள் காலம். சுதேசி வங்கிகளைத் தோற்றுவித்தார்கள்.
இது ”கோவிந்த வாசன்”கள் காலம். அசந்தால் சுதேசி வங்கிகளை முற்றாய் முழுசாய் அந்நியர்களுக்கு விற்று விடுவார்கள்.

கொஞ்சம் விழிப்போடே இருப்போம்.

கட்டுரைக்கு பெரிதும் உதவியவை;

1)சீனி.விசுவநாதன் எழுதிப் பதிப்பித்த “ மகாகவி பாரதி வரலாறு”
2)விக்கி பீடியா இணைய தளம்
3)23.10.1906 ஆன் நாளிட்ட ஹிந்து நாளிதழ்
4) www.arbuthnot.org/crash_of_arbuthnot.html








Wednesday, September 5, 2012

இத்தனைக்குப் பிறகும்


வகுப்புகள்... 
மாலை வகுப்புகள்... 
சிறப்பு  வகுப்புகள்...

இத்தனைக்குப் பிறகும் 
தேர்வறையில் 
திருட்டுத் தனமாய் 
நோட்சைப் பார்க்கிறான் 

நோட்சைப் பிடுங்கி... 
முதுகில் 
இரண்டு பலமாய் போட்டு 

கோபம் நிழலாய் 
கூடவே தொடர 
குறுக்கும் நெடுக்குமாய் 
அறையில் நடந்து 

"பதினேழு வருஷ அனுபவம் ...
தப்ப முடியுமா?"
பெருமை கொப்பளிக்க 
நாற்காலி சேர்ந்து 

பற்றிய நோட்சைப் புரட்டினேன் 
வினாத் தாளுக்கு 
விடை தயாரிக்க  

Sunday, September 2, 2012

அம்மாவின் ஞானம்

அம்மா
அப்பா
அப்பாயி
அண்ணன்கள்
அண்ணிகள்
குழந்தைகள்
அப்புறம் நான்

கொஞ்சம் பெரிசுதான்
விடுங்கள்

குடும்ப அட்டையில்
 கடைசிப்பக்க விளிம்புவரை
பெயர்கள் நீண்டாலும்

கழிவறை ஒன்றுதான்
ஆனாலும்

நகராட்சிக் கழிவறை
வரிசைதான் காலையில்

எழுப்பொலி வைத்துப் போனதுண்டு
நிம்மதியாய்க் கழிக்க

எழுப்பொலி
எல்லா அறைகளிலும் ஒலிக்க
புரிந்தது

வதந்திபோல் பரவியது
நுணுக்கம்

பற்கள் கடித்து
கால்கள் நெருக்கி

அவசர அவஸ்தையில்
கண்கள் செருக

கழிவறை வாளியில்
நீர் விழும் சத்தம்

ஏ. ஆர். ரஹ்மானாவது
இளையராஜாவாவது

வலிக்கும் அவஸ்தை
இடம் கிடைத்த நிம்மதி

தாள் போடும் வேளை
சிணுங்கியது தொலைபேசி

“கொஞ்சம்
யாருன்னு பாரேன்”

குபுக்கென கொப்பளித்தது
அம்மாவின் ஞானம்

“எந்தக் கடங்காரனோ
ஆமா
இப்ப நீ
எந்த ஊர்ல இருக்கிறதா
சொல்லித் தொலைய?”

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...