அலை பேசி சிணுங்கியது.
மௌனப் படுத்தி விட்டு திரும்பிப் படுத்தேன்.
மீண்டும் சிணுங்கியது.
மீண்டும் மௌனப் படுத்திவிட்டு திரும்பிப் படுத்தேன்.
மீண்டும் மீண்டும் சிணுங்கவே அலை பேசியை அணைத்து எறிந்துவிட்டு திரும்பிப் படுத்தேன்.
யார் அழைப்பது என்றுகூட பார்க்கத் தோன்றவில்லை.
அவ்வளவு அலுப்பு. இரண்டு நாட்களாக தொடர்ந்து அலைச்சல். தஞ்சைக் கூட்டத்தை முடித்துவிட்டு இரண்டு மணி வாக்கில்தான் வந்து படுத்தேன்.
கொஞ்ச நேரத்தில் ஹேமா தட்டி எழுப்பினாள்.
“ என்னம்மா?,..” சலிப்பின் உச்சத்தில் கேட்டேன்.
“ஏங்க , உங்க தம்பி லைன்ல இருக்கு. உங்களுக்கு போன் போட்டுக்கிட்டே இருக்காம். நீங்க எடுக்கலைங்கறதால எனக்கு போட்டிருக்கு. அது குரலே சரியில்ல.
கோவிச்சுக்காம கொஞ்சம் என்னன்னு கேளுங்க.”
"என்னடா?” அலுப்பின் அழுத்தம் கூடியிருந்ததை என்னாலேயே உணர முடிந்தது.
அரைத் தூக்கமும் வேண்டா வெறுப்புமாக கேட்டவனது சகலத்தையும் அசைத்துப் போட்டது எதிர்முனையிலிருந்து வந்த செய்தி.
“என்ன , என்னடா சொல்ற?”
எனது குரலில் இருந்த பதற்றமும் உடம்பின் நடுக்கமும் ஹேமாவிற்குப் புதிது. ஏதோ நடக்கக் கூடாதது நடந்திருக்கிறது என்று மட்டும் அவளுக்கு புரிந்தது. இந்த எண்ணமே அவளுக்குள்ளும் பதட்டத்தையும்
நடுக்கத்தையும் கொண்டு வந்து சேர்த்தது.
“ சரி, ஒன்னும் ஆகாது. பயப்படாத.பால்ராஜ் இருக்காரா?”
” அண்ணன் ஏங்கூடதான் இருக்கார். போனத் தரட்டுமா?”
“பால்ராஜ், கொஞ்சம் கோவிச்சுக்காம
உங்க கார கொடுத்து உதவ முடியுங்களா?”
“ என்ன சார் இப்படிக் கேட்டு
அந்நியப் படுத்திட்டீங்க.
காரப் பத்தினக் கவலை எல்லாம் உங்களுக்கு வேண்டாம் சார். அத நாங்க பார்த்துக்குறோம். நீங்க பதறாம தம்பிக்கிட்ட
பேசுங்க சார்”
“ கார எடுத்துக்கிட்டு நேரா திண்டுக்கல் காட்டாஸ்பத்திரிக்குக் கூட்டிட்டு போ. நானும் அண்ணியும் கிளம்பி வாரோம். பயப்படாமப் போ. ஒன்னும் ஆகாது.”
அவனை தைரியமாக இருக்கச் சொன்னாலும் எனக்கு நொடிக்கு நொடி பதற்றமும் பயமும் கூடிக் கொண்டுதானிருந்தது.
“ ஏங்க, என்ன ஆச்சு?”
“ அப்பாவுக்கு திடீர்னு கையும் காலும் இழுத்துக்குச்சாம். வாய் வேற கோணிடுச்சாம். காட்டாஸ்பத்திரிக்கு கொண்டுபோக சொல்லியிருக்கேன்.
”
தேம்பத் தொடங்கிய ஹேமாவை சமாதானம் செய்வதற்குள்
போதும் போதும் என்றானது.
தெனாலியையும் அறத்தையும் அலைபேசியில் அழைத்து விவரத்தை சொன்னேன். அவர்களது உதவி தேவைப் படலாம் என்று சொன்னபோது சொன்னார்கள்,
“ பார்த்துக்கலாம் விடுங்க சார். ஒன்னும் ஆகாது. போயிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க. கிளம்பி வரோம்”
“ இல்ல தெனாலி , கொஞ்சம் பணம் தேவைப் படலாம்...” முடிக்கக் கூட விடாமல் இடை மறித்தார்,
“அதான் பார்த்துக்கலாம்னு சொன்னேனே சார். நீங்க இதப் பத்தியெல்லாம் கவலப் படாம அப்பாவப் பார்த்து ஆக வேண்டியதப் பாருங்க. இத நாங்கப் பார்த்துக்கறோம்”
அப்பாடா என்றிருந்தது.
மருத்துவ மனை என்று போய்விட்டால் என்ன ஆகும் என்று தெரியாது. வகை தொகையாக உறிஞ்சி எடுத்து விடுவார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். காட்டாஸ்பத்திரி
ஒன்றும் அப்படி இல்லை என்றாலும் இந்த நிலைமையில் நிறையத்தான் ஆகும் என்று பட்டது. பணத்திற்கு என்ன செய்வது என்று விழி பிதுங்கிய நேரத்தில் தெனாலியின் வார்த்தைகள் தெம்பைத் தந்தன.
இரண்டரை மணி நேரத்துப் பயணத்தில் நானும் ஹேமாவும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளக் கூட இல்லை. அநேகமாக பயணச்சீட்டு வாங்குவதற்காக நடத்துநரிடம் வாய்
திறந்ததோடு சரி. அடிக்கடி அவள் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தாள். நானும்தான்.
மருத்துவ மனையில் தம்பி எதிர்கொண்டான்.
“என்னடா, எப்படி இருக்கார்?”
உதட்டைப் பிதுக்கினான்.
கண்கள் சன்னமாக சுரக்கத் தொடங்கியிருந்தன. அவன் உதட்டைப் பிதுக்கிய விதம் கொஞ்சம் பயத்தை கொண்டுவந்து சேர்த்தது.
“சொல்லுடா?”
எனக்கும் சுரக்கத் தொடங்கிவிட்டது.
“இங்க முடியாதாம். திருச்சிக்கோ
அல்லது மதுரைக்கோ கூட்டிட்டுப் போகச் சொல்றாங்க.”
அப்பாவை அப்படி ஒரு நிலையில் நான் பார்த்ததே இல்லை. அப்படி ஒரு நிலையில் அமர்ந்திருதார்.
யாரையும் அவருக்குத் தெரியவில்லை. சற்றேரக் குறைய கோமா நிலையில் இருந்தார். அம்மாவும் ஹேமாவும் கட்டிப் பிடித்து அழுது கொண்டிருந்தார்கள். அதட்டவும் கொஞ்சம் அமைதியானார்கள்.
“டாக்டரப் பார்க்கலாம் வா”
தம்பியைப் பார்த்ததும்
மருத்துவருக்கு கோபம் வந்துவிட்டது.
“ஏம்பா, இன்னுமா
கூட்டிட்டுப் போகல?. பச்சப் புள்ளைக்கு சொல்றமாதிரிதானே சொன்னேன். நேரம் ஆக ஆக
ஆபத்துன்னு சொன்னேன்ல. கொஞ்சம் கூட சீரியஸ்னெஸ் இல்லாம”
“இல்ல சார் இப்பதான்
அண்ணன் வந்துச்சு. அதான்..”
“ வணக்கங்க சார்.”
மருத்துவரிடம் அப்பாவின் நிலை குறித்து விசாரித்தேன்.
அப்பாவிற்கு வாதம் இல்லை என்றும் மூளையில் ஏதோ கசிவு இருப்பதாகப்
படுவதாகவும், உடனே மதுரைக்கோ திருச்சிக்கோ அழைத்துப் போய் மூளையில் ஒரு அறுவை செய்தால் காப்பாற்ற வாய்ப்பிருப்பதாகவும் கூறினார்.
திருச்சி போக இரண்டரை மணி நேரமாகும் என்பதால் மதுரைக்கே அழைத்துப் போகச் சொன்னார். ஆனால் நண்பர்கள் எல்லோரும் திருச்சியில்
இருப்பதாலும் மதுரையில் பணம் புரட்ட இயலாது என்பதாலும் காரில் அப்பாவைத் தூக்கிப் போட்டுக் கொண்டு திருச்சிக்கு கிளம்பினோம். தெனாலிக்கு அலை பேசினேன். எது பற்றியும் பயப்பட வேண்டாம் என்றும், நாங்கள் வருவதற்குள்
அறமும் தானும் சகல ஏற்பாடுகளோடும் மருத்துவ மனைக்கு வந்துவிடுவதாகவும் சொன்னார்.
வழி நெடுகிலும்
அப்பாவின் வயிறு அசைகிறதா என்று பார்த்துக் கொண்டே வந்தேன். அம்மாவும் ஹேமாவும்
அழுதுகொண்டே வந்தார்கள்.
கார் மருத்துவ மனைக்குள் நுழைந்தபோது என்னவெறு சொல்லத் தெரியாத ஒரு அச்சம் எங்கள் அனைவரையும் அப்பிக் கொண்டது.
கதவைத் திறக்கும் முன்னமே அறமும் தெனாலியும் ஸ்ட்ரெச்சரோடு வந்து நின்றார்கள்.
அப்பாவைத் தூக்கி ஸ்ட்ரெச்சரில் கிடத்துவதற்குள் மருத்துவ மனை ஊழியர்கள் வாங்கிக் கொண்டு பறந்தார்கள்.
அப்பாவின் ஸ்கேனைப் பார்த்த மருத்துவர் ராமக்கிருஷ்ணன்
ஈஷ்வர் இதில் பயபடுவதற்கு ஒன்றுமே இல்லை என்று சொன்னது உண்மையிலுமே
வயிற்றில் பால் வார்த்தது.
வயது ஆக ஆக மூளை சுருங்கி மூளைக்கும் மண்டை ஓட்டிற்கும்
இடையே சின்ன இடைவெளி உருவாகும் என்றும் அந்த இடை வெளியில் ஒரு படிமம் உருவாகி உள்ளதாகவும் சொன்னவர், மண்டையில் சின்னதாய் ஒரு துளையிட்டு மூளைக்கும் மண்டை ஓட்டிற்கும் இடையில் உள்ள படிமத்தை அதிர்வில் நீர்மமாக்கி அப்படியே உறிஞ்சி எடுத்து விட்டால் சரியாகிவிடும்
என்றும் சொன்னார்.
“எவ்வளவு ஆகுங்க சார்?”
சொன்னார்.
“எப்ப சார் செய்யனும்?”
“நீங்க எப்ப உங்க அப்பாவக் கொண்டு வந்து என்னிடம் கொடுத்தாலும் நான் அரை மணி நேரத்தில் அவரை குணப்படுத்திக் கொடுத்துடுவேன்.
ஆனா ஒன்னு நீங்க தெரிஞ்சுக்கனும், இப்ப அவர் செத்துட்டு இருக்கார்.”
“ சரிங்க சார். செய்துடுங்க.”
தெனாலி தயாராகவே வந்திருந்ததால் பணப் பிரச்சினையில்லாமல் போனது.
ஏற்பாடுகள் விரைவுபட்டன.
மருத்துவர்கள் எழுதிக் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள்.
நாங்களும் அவர்கள் எழுதித் தரும் சீட்டுகளை எடுத்துக்கொண்டு ஆளாளுக்குப் பறந்து கொண்டிருந்தோம்.
அப்பாவிற்கு மொட்டை அடித்துவிட்டிருந்தார்கள். பச்சை நிற உடை அணிவித்து தயாராக வைத்திருந்தார்கள்.
நேரம் ஆக ஆக பயம் பெருமளவு எங்களவிட்டு கடந்து போயிருந்தது.
அறுவைக் கூடத்திற்கும்
தீவிரக் கண்காணிப்பு
பிரிவிற்கும் இடையே உள்ள வெராண்டாவில் அமர்ந்திருந்தோம்.
அங்கு அமர்ந்திருந்த
40 வயது மதிக்கத் தக்க ஒரு பெண் அழுதபடியே ஒவ்வொரு தெய்வமாக வேண்டிக் கொண்டிருந்தார். “மாரியாத்தா எங்கம்மாவக் கொடுத்துடு, ஏசு சாமி, மேரியாத்தா எங்கம்மாவ எனக்குக் கொடுத்துடு” என்பதாக இருந்தது அந்த அம்மாவின் கோரிக்கை. அல்லாவையும் அவர் விடவில்லை.
அவர் நிறுத்தவே இல்லை. விடாது அழுதபடியே வேண்டிக் கொண்டிருந்தார்.
என்னவென்று விசாரித்ததில்
அவரது அம்மாவிற்கு
மூளையில் நரம்பொன்று வெடித்து ரத்தக் கசிவு ஏற்பட்டிருக்கிறது. ரத்தக் கசிவு நிறைய இருந்ததால் மருத்துவர்கள் கை விரித்திருக்கிறார்கள். வீணில் செலவு செய்ய வேண்டமென்றும் வீட்டிற்கு அழைத்துப் போகுமாறும் சொல்லியிருக்கிறார்கள். இவர்களது வற்புறுத்தல்
காரணமாக நம்பிக்கை கொஞ்சமும் இல்லாமல் அறுவைக்கு மருத்துவர்கள் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்தப் பெண் இன்னமும் அழுது கொண்டே தொழுதுகொண்டிருந்தார். நேற்றிலிருந்தே அவர் எதுவும் சாப்பிடாமல் இப்படியேதான்
அழுதுகொண்டிருப்பதாக சொன்னார்கள்.
அப்பாவோடு அவரது அம்மாவையும் அறுவைக் கூடத்திற்கு
எடுத்துப் போனார்கள்.
அழுதுகொண்டே இருந்த அந்தப் பெண்ணை என் அம்மா ஒரு வழியாக தன் மடிக்கு மாற்றியிருந்தார்.
அவரது முடியை கோதியபடியே அம்மா ,” ஒண்னும் ஆகாது சாமி, பயப்படாத” என்று ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தார். அம்மாவின் மடியும் ஸ்பரிசமும் அந்தப் பெண்னைக் கொஞ்சம் ஆசுவாசப் படுத்தியிருக்க
வேண்டும். சிறு பிள்ளை மாதிரி அம்மாவின்முந்தானையைப் பிடித்து உருட்டிக் கொண்டே இருந்தார். ஆனாலும் அழுகை மட்டும் நிற்கவே இல்லை.
ஒரு மணி நேரம் கழித்து அறுவைக் கூடத்தின் கதவு திறந்தது.
முதலில் அவர்களைத் தான் மருத்துவர்கள் அழைத்தார்கள்.
ரத்தம் அதிகமாக கசிவதால் அறுவை செய்ய இயலவில்லை என்று மருத்துவர் சொன்னதுதான் தாமதம் அந்தப் பெண் தரையில் விழுந்து அழ ஆரம்பித்திருந்தார். அவரைத் தூக்கியெடுத்து தாங்கியபடியே வெளியே சென்று விட்டார்கள்.
இப்போது எங்களை அழைத்தார்கள்.
என்னிடம் கை கொடுத்தார் மருத்துவர். அம்மாவின் கன்னத்தை தட்டிக் கொடுத்தார். “ போய்ப் பாருங்கம்மா உங்க வீட்டுக் காரரை”
தலையில் பெரிதாய் கட்டுப் போட்டிருந்தார்கள். மயக்க நிலையில் இருந்தார். கொஞ்ச நேரத்தில் எங்களை வெளியேற்றிவிட்டார்கள்.
வெராண்டா வெறிச்சோடிக்
கிடந்தது.
நாற்காலியில் அமர்ந்ததும்
அம்மா அழ ஆரம்பித்துவிட்டார். சரி கொஞ்சம் அழுது ஆறட்டும் என்று விட்டால் போகப் போக அழுகை அதிகமானது.
“ ஏம்மா அப்பாதான் நல்லா வந்துட்டார்ல.அப்புறம் ஏன் அழறே?”
“ அதுக்கில்லடா”
ஒருக்கால் தலையில் பெரிய கட்டோடு மயக்க நிலையில் பார்த்தது தாங்க வில்லையோ என்று நினைத்து அவற்றை எல்லாம் காலையில் அப்புறப் படுத்தி விடுவார்கள்
என்று தைரியம் சொல்லிப் பார்த்தோம்.
“அதுக்கெல்லாம் ஒன்னும் இல்லடா”, சொல்லிவிட்டு மீண்டும் அழ ஆரம்பித்தார்.
“ ஓ, இவ்வளவு பணத்தக் கட்டி எப்படி அப்பாவ வெளியே கொண்டு போகப் போறோம்னு பயமா?
“ அதெல்லாம் இல்லடா. பத்து வட்டிக்காச்சும் வாங்கி காப்பாத்திடுவீங்கன்னு தெரியாதா?”
“ அப்புறம் எதுக்கு இப்படி அழுவுற?”
“ அந்தப் பொண்ணு ஒவ்வொரு சாமியா கூப்பிட்டு எப்படி அழுதுச்சு. எல்லா சாமிக்கும் ஈரங்காஞ்சு கண்ணவிஞ்சுப் போச்சேடா “
அம்மா இன்னமும்
அழுதுகொண்டுதானிருந்தார்.
நன்றி: “காக்கைச் சிறகினிலே”
நன்றி: “காக்கைச் சிறகினிலே”
என்றைக்கும் அம்மாவின் அன்புதான் இணையில்லாதது அதை வெகு இயல்பாய் சொல்லி விட்டீர்கள்.
ReplyDelete///அழுதுகொண்டே இருந்த அந்தப் பெண்ணை என் அம்மா ஒரு வழியாக தன் மடிக்கு மாற்றியிருந்தார். /// இந்த மனது ஒரு தாய்க்கு மட்டுமே வரும், அவர் ஒரு மனைவியாக மட்டுமன்றி ஒரு தாயாகவும் இருக்கவே இந்த செயல் உருவாயிற்று.
அம்மான்னா அம்மாதான். மிக்க நன்றி தோழர்
Deleteஅழகான எழுத்து நடை...அருமை
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteமனசை நெகிழ வைக்கும் பதிவு.
ReplyDeleteஎனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
படித்துப் பாருங்கள்.
நன்றி தோழர் இரா எட்வின்.
(வயது மூப்பினால் வரும் மூளை கசிவு நோய் பற்றிய அருமையான பதிவு).
மிக்க நன்றிங்க அய்யா
Deleteஅய்யோ மனசு ரொம்ப கனத்துப் போச்சு
ReplyDeleteஅம்மாக்கள் எப்பவுமே இப்டிதான் தன் கஷ்டமோ பிறர் கஷ்டமோ
வலியை வெளிப்படுத்தி கடவுளை அழைப்பதும் சபிப்பதும்
தாய்மையின் வெளிப்பாடு
மிக்க நன்றி வள்ளி
Deleteஅய்யோ மனசு ரொம்ப கனத்துப் போச்சு
ReplyDeleteஅம்மாக்கள் எப்பவுமே இப்டிதான் தன் கஷ்டமோ பிறர் கஷ்டமோ
வலியை வெளிப்படுத்தி கடவுளை அழைப்பதும் சபிப்பதும்
தாய்மையின் வெளிப்பாடு
மிக்க நன்றி சுபா
Deleteவாசிக்க வாசிக்க மனம் அடித்தபடி.எந்தப் பக்கம் இழப்பானாலும் கஸ்டம்தான்.கடவுள் கல் என்பதை சில இடங்களில் நிரூபித்துக்கொள்கிறார்.’காக்கைச் சிறகினிலே’யில் வாசித்தபோது முதல் தடவையில் கலங்கிப்போனேன் !
ReplyDeleteமிக்க நன்றி ஹேமா
Deleteஈரம்காஞ்ச கண்ணவிஞ்ச சாமிய நானும் பார்த்தவ என்பதால் வலி உணரமுடிந்தது.நெகிழ்வான பதிவு.
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteஇது நடந்த கதைபோல தெரிகிறதே?
ReplyDeleteஆமாம் ஆமாம்
DeleteNenjai urkka seithathu ammavin kanner . . . Kattchiyaga irukirathu en ammavin kannerum . . . . Arumai sir
ReplyDeleteManathai urugida seigirathu Ammavin kanneer . . . Kattchchiyaga irukirathu . . . . ARUMAI SIR
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteஎட்வின் அவர்களே! ஏது மற்ற,நிர்கதியான நிலையில் மனிதன் விடும் பெருமூச்சின் பெருமூச்சு தான் "இறை நம்பிக்கை" (Marx) ! pl.visit naathikan.blog spot also.அருமையான சித்தரிப்பு !---காஸ்யபன்
ReplyDeleteமிக்க நன்றிங்க தோழர்
Deleteஅந்த தாயின் மடியில் மனமும்,கண்ணீரும்.
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteஅன்புள்ள...
ReplyDeleteவணக்கம். கதை வந்த அன்றே படித்துவிட்டேன். மெலிதான உணர்வலைகள் என்றாலும் தாய்மையின் அழுத்தம் படிந்த கதை. கதையில் சொல்லப்பட்ட மருத்துவமனை சார்ந்த பின்னணியில் எனக்கு நிறைய தொட்ர்புண்டு. பல முக்கியமான உறவுகளுக்காக மருத்துவமனையில் பல இரவுகள் தங்கி கடைசியில் அந்த உறவுகளை இழந்து மருந்து வாடையோடு மீண்டதுதான் மிச்சம். அருமையான காட்சிப்பதிவான கதை. தாய்மையின் மேன்மையுரைக்கும் கதை.
அளவற்ற பெருந்தன்மை ஹரணிக்கு. மிக்க நன்றி தோழர்
DeleteTHAI ANBUKKU VERU EEDA ETHUVUM ILLAI.
ReplyDeleteNICE STORY
BY
Raviselva
மிக்க நன்றி ரவி
Deleteஇந்த கதையை நான் ஏற்கனவே காக்கை சிறகினிலே இதழில் படித்து விட்டேன். அப்போதே போனில் அழைத்து பேச நினைத்தேன். என் தந்தையை ஆஸ்பத்திரியில் அனுமதித்த போது ஏற்பட்ட வலியை உணர்ந்தேன். அருமையான எழுத்து நடை. விறுவிறுப்பாக ஒரே மூச்சில் படித்து முடித்தேன். அன்றும் இன்றும் என்றும். வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றிங்க சரவணன்
Deleteஎட்வின் ஐயா ..இந்த சிறுகதையை நான் படிக்கும்போது எந்தந்தையை இப்படி மருத்துவமனையில் அனுமதிக்கும் பொது பட்ட வேதனைகள் என் நினைவுக்கு வந்தது. நல்ல கதை. ஆனால் பலரின் மனதை தொட்டது. நான் ஒரு மேல்நிலை பள்ளி பள்ளியில் முதல்வர். இங்கு அல்ல. பீகார் மாநிலம். முத்துநிலவன் என் நபர் அவர் மூலம் உங்கள் பதிவு பரிந்துரைக்கப்பட்டது. அடிக்கடி தொடர்பு கொள்ளுகிறேன்.வாழ்த்துக்கள். நிறைய எழுதுங்கள் நானும் கமெண்ட்ஸ் போடுகிறேன். நன்றி அன்புடன் ஜெயராம்
ReplyDeleteமிக்க நன்றிங்க தோழர்
Deleteஅன்பு நண்பர் திரு.எட்வின்,
ReplyDelete‘ஈரம் காஞ்ச சாமிங்க’
ஒரு நல்ல அருமையான சிறுகதை பதிவு ... உயிரோட்டமான நடை...துரத்திக் கொண்டே கதையின் பின் செல்ல வைத்தது.
தந்தையை இழந்தவனுக்கு இந்த வலி நன்கு தெரியும்.
வாழ்த்துகள்.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in
வணக்கம் ஜேம்ஸ். எப்படி இருக்கீங்க? RC மேல்நிலைப் பள்ளியில்தானே?
Delete