Tuesday, October 2, 2012

அக்டோபர் இரண்டுநாகம்மையார் உடலைக் கிடத்தியிருக்கிறார்கள். சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் கதறி அழுகிறார்கள். ஒப்பாரி வேறு. இது பெரியாரை எரிச்சல் படுத்துகிறது.

“ அழுபவர்கள் இங்கிருந்து ஓடுங்கள். அழுவதால் அவர் எழப் போவதில்லை. போக சாவு என்பது இயல்பானது. எல்லோருக்கும் வரக்கூடியது”

என்று அழுது ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தவர்களை விரட்டியடித்தவர்.

ராஜாஜி மறைந்த பொழுது பெரியார் ஒரு சக்கர நாற்காலியில் அமர்ந்து கிருஷ்ணாம்பேட்டை சுடுக்காட்டுக்கு வருகிறார்.

தனது மனைவி இறந்த பொழுது அழுதவர்களை விரட்டி அடித்தவர் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே தேம்பித் தேம்பி அழுகிறார்.

வேறு எப்போதேனும் பெரியார் இப்படி அழுதிருப்பாரா என்று தெரியவில்லை.

கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் இடம் கொள்ளாததால் மக்கள் வெளியே நிறுத்தப் படுகிறார்கள். கோபம் கொண்ட கூட்டம் கல்லெடுத்து எறிகிறது.

பெரியார் மீது கற்கள் விழுந்து விடக் கூடாது என்பதற்காக காமராசர் பெரியாரை மூடி மறைத்தபடி நிற்கிறார்.

கற்கள் காமராசர்மேல் விழுகின்றன. ஆனாலும் நகராமல் பெரியார்மேல் கற்கள் விழாமல் பார்த்துக் கொள்கிறார்.

அவர்தான் காமராசர்.


அவரும் சராசரிதான் பல விஷயங்களில்.

எதிரிகளின், எதிர்க் கட்சியின் வளர்ச்சி குறித்தோ, பலம் குறித்தோ, மக்களின் மனநிலை குறித்தோ சரியாய் கணிக்கத் தெரியாதவர்தான்.

நல்லது செய்திருக்கிறோம், மக்கள் நம்மை ஆதரிப்பார்கள் என்று அப்பாவியாய் நம்பி ஏமாந்தவர்தான்.

ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தந்தைப் பெரியாரின் மீது கற்கள் விழுந்து விடக் கூடாது என்று தான் கல்லடிப் பட்ட,

அணைகள் கட்டினோம், தொழிற்சாலைகள் கொண்டு வந்தோம்,  நெய்வேலி சுரங்கம் கொண்டு வந்தோம். விவசாயமும் வேலை வாய்ப்புகளும் பெருக்கினோம். பயனடைந்த மக்கள் ஆதரிப்பார்கள் என்று நம்பிய அப்பாவி சராசரியின் நினைவு நாள் இன்று.

எத்தனையோ கருத்து வேறுபாடுகளும் விமர்சனங்களும் உங்கள் மீது எனக்கும் உண்டு.

ஆனாலும் உங்கள் நினைவு நாள் ஒரு பெரிய வெற்றிடத்தை நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது பெருந்தலைவரே.

40 comments:

 1. /// ஒரு பெரிய வெற்றிடத்தை நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது பெருந்தலைவரே.///

  உண்மை... வெற்றிடத்தை நிரப்பத் தான் யாருமில்லை...

  சிறந்த பகிர்வுக்கு நன்றி ஐயா...

  ReplyDelete
 2. பெருந்தலைவரை பற்றிய அரிய, ஆனால் அறியாத தகவல்கள் ... மிக்க நன்றி பகிர்ந்தமைக்கு ....

  ReplyDelete
 3. பெருந்தலைவரை பற்றிய அரிய, ஆனால் அறியாத தகவல்கள் ... மிக்க நன்றி பகிர்ந்தமைக்கு ....

  ReplyDelete
 4. அந்த வெற்றிடத்தை நிரப்ப தன்னலமற்ற பாரத புத்திரர்கள் இருக்கத்தன் செய்கிறார்கள். அவர்களை நமக்கு அடையாளம் தெரிந்தும் தேரியாதது போல் நடிக்கிறொமே தோழா! என்ன செய்ய?---காஸ்யபன்.

  ReplyDelete


 5. நல்லதோர் நாளில் நல்லோரை நினைவு படுத்தும் நல்லதோர்பதிவு! நன்று!நன்றி!

  ReplyDelete
 6. ஆம் தோழர்! அரசியலில் எளிமை காணற்கரியதாகி விட்ட நிலையில் காமராஜர் விட்டுச் சென்ற வெற்றிடம் நம்மனைவருக்கும் ஒரு நினைவூட்டல்தான்!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் , உண்மைதான் தோழர்.மிக்க நன்றி.

   Delete
 7. வெற்றிடம் பெரியதாகிக்கொண்டே போவதுதான் ஏக்கத்தைத்த்தருகிறது.

  ReplyDelete
 8. அறிய தகவல் ..அறியாத தகவல் ....அதுவும் அவருடைய நினைவு நாளில் ...நன்றி தோழர் அருமை ....

  ReplyDelete
 9. ஏதோ mythology வாசிப்பது போல உள்ளது எனக்கு... எங்கள் தலைமுறை இப்படி யாரையும் கண்டதில்லை அல்லவா...

  ReplyDelete
 10. http://cmayilan.blogspot.com/2012/10/blog-post.html
  ஐயா, நீங்கள் இந்த பதிவை கட்டாயம் வாசிக்கணும்... ஏனெனில் ஆரம்பம் முதலே அதிக ஈடுபாட்டுடன் விசாரித்து வந்தவர் நீங்கள்... நன்றி....

  ReplyDelete

 11. உலகப் புகழ் பெற்ற மனிதரின் பிறந்த நாள் இன்று. முன்னாள் இந்தியப் பிரதமர் ஒருவரது பிறந்த நாளும் இன்று. இதே நாள் காமராஜர் நினைவு நாள். எல்லோரும் நினைவு கூறப்பட வேண்டியவர்களே.

  ReplyDelete
 12. // எத்தனையோ கருத்து வேறுபாடுகளும் விமர்சனங்களும் உங்கள் மீது எனக்கும் உண்டு. ஆனாலும் உங்கள் நினைவு நாள் ஒரு பெரிய வெற்றிடத்தை நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது.// காமராசரைப் பற்றிய சரியான மதிப்பீடு.

  ReplyDelete
 13. உண்மைதான் எட்வின்!
  நமக்கு முந்திய தலைமுறை வரை “இவரைப் போல நீ வரணும் பா”ன்னு காமராசர், அண்ணா போன்றவர்களை காட்டினார்கள் நாமும் ஏதோ வளர்ந்து நிற்கிறோம்்
  நம் காலத்தில் எதிர்க்கட்சி எம்எல்ஏ வீட்டுக் கல்யாணத்திலோ கருமாதியிலோ கலந்துகொண்டவர் வீடு திரும்புவதற்குள் கட்சிப் பதவி பறிபோகிறதே!
  இப்போது “இவர்மாதிரி நீ வரணும் பா“னு யாரைக் காட்டிச் சொல்றதுன்னு தெரியலயே!

  ReplyDelete
 14. பீர்மேடு, தேவிகுளம் பகுதியை தாரைவார்த்தவர் என்ட குற்றச்சாட்டும் உள்ளது..

  ReplyDelete
 15. ஆனாலும் உங்கள் நினைவு நாள் ஒரு பெரிய வெற்றிடத்தை நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது பெருந்தலைவரே/// உண்மை......

  ReplyDelete
 16. அருமையான அவசியமான பதிவு
  இதுவரை கேள்விப்படாத ஒரு வரலாற்று நகழ்ச்சியை மிகச்சிறப்பாக எங்களுக்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி

  ReplyDelete
 17. வணக்கம் தோழரே..காலையில் உங்களின் பதிவைப் பார்த்து லைக் போட்ட பின், பெருந்தலைவர் என நீங்கள் குறிப்பிட்டது எனக்கு காமராஜர் என்று தோன்றாமல், காந்தியைப் பற்றிதானே, மெதுவாகப் படித்துக்கொள்வோம் என்று இருந்துவிட்டேன். இப்போது படித்தால், கல்விக்கண் திறந்த காமராஜர் பற்றியதை அப்போதே படிக்காமல் இருந்துவிட்டோமே என வருந்தினேன். என்ன அரிதான தகவலைத் தந்திருக்கிறீர்கள் தோழரே. மிக்க நன்றி தங்களின் ஆர்வத்துக்கும், சமூக சேவைக்கும்.ஆனால் என்ன ஒரு முரண் தொடையான நபர்கள் இருவரும். ஆயிரம் பள்ளிகளை மூடிய ராஜகோபாலாச்சாரியார் இறந்ததிற்கு 25,000 பள்ளிகள் திறந்த காமராஜர், பள்ளிகளைத் திறக்கச்சொல்லி வற்புறுத்தியும் பேசியும் வந்த பகுத்தறிவு பகலவனைப்பாதுகாத்தார் என்பது அற்புதமான விஷ்யங்கள். அரசியல் கொள்ள்கையில் மாறுபட்டாலும், ம்னித நேயத்தோடு வாழ்ந்த மனிதங்களைக் காட்டுகிறது. இன்று சகதிகளும், சாக்க்டைகளும்.///ஆனாலும் உங்கள் நினைவு நாள் ஒரு பெரிய வெற்றிடத்தை நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது பெருந்தலைவரே./// அடடா.. இன்று யாருமில்லை இது போல். அரிதான பதிவுகளை எழுதுங்கள் தோழர். நெஞ்சுக்கினிய வாழ்த்துகள்.

  ReplyDelete
 18. அருமையான பதிவு.
  மிக்க நன்றி.

  ReplyDelete
 19. நடுநிலையாளர்களின் மனங்களில் எழும் எண்ணங்களை வார்த்தைகளால் அருமையாக வடித்திருக்கிறீர்கள் எட்வின் அய்யா. வாழ்த்துக்கள். இன்றைய தலைமுறை அவசியம் தெரிந்த கொள்ள வேண்டிய தகவல்கள்... தொடரட்டும் உங்கள் அற்புதப் பணி...

  ReplyDelete
 20. எல்லோரும் காந்தியை பற்றிமட்டுமே பேசுகிற நாளில் பெருந்தலைவர் காமராஜரை பற்றிய தங்கள் பதிவு ஒரு வரலாற்று பொக்கிஷம். நன்றி.

  ReplyDelete
 21. இனிய காலையின் மழைத்தாள வணக்கம். இன்று மீண்டும் அப்பாவி சாதாரணரைப் படித்தேன் ரபீக்குடன். வேற சிந்தனை ஓடுது. அவரின் சமகாலத்தில் வாழ்ந்து, அவரின் பேச்சுக்களைக் கேட்டு பழகியவள் நான். அவரின் எளிமை புகழ் பெற்றது. அவர் இல்லாமல் இருந்திருந்தால், நான் பள்ளிப்படிப்பை முடித்திருப்பேனா, இல்லை என்பதுதான் பதில். என் பெயருக்குப் பின்னால் இருக்கும் நீண்ட பட்டங்களும், பள்ளிப் படிப்பின் தயவால் உள்ளே நுழைந்ததுதான்.அன்று அவரின் பெருமை எத்தனை பேருக்குத் தெரிந்ததோ, தெரியாது. இப்போதுள்ள மக்களுக்கும் கட்டணாமற்ற கல்வியின் அருமை தெரியாது. அரசுப் பள்ளியிலும், வர்க்கத்தின் உயர்தரம், செல்வவளம் உள்ளவர்தான் படிக்க முடியும் என்பது இந்த தலைமுறைக்குத் தெரியுமோ என்னவோ.1953 ல் ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வி திட்டத்தை ஒழித்துவிட்டு, 1954ல்,அனைவரும் படிக்க வேண்டும் என்று கல்வித்திட்டம் கொண்டுவந்தவர். இன்றிருக்கும் நிறைய பேருக்கு, குலக்கல்வி திட்டம் என்றால் என்னவென்று கூட தெரியுமோ, என்னவோ, காலையில் பள்ளி, மாலையில் பெற்றோருடன், குலத்தொழில் கற்றுக்கொள்ளல். மதிய உணவுத்திட்டத்தை உலக அள்வில் முதன் முறையாக கொண்டுவந்தவரும் அவர்தானே. ஆனால் அ.தி.மு.க காரர்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் கொண்டு வந்தது என்று பிதற்றிக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் நல்லதுக்கு தலை சாய்ப்பார்கள் என்று நம்பிய அப்பாவித்தலைவர்தான் பெருந்தலைவர் எனப்து தங்களின் எழுத்தின் மூலம் மீண்டும் சமூகத்துக்கு கொண்டுசெல்லப்படுகிறது தோழரே..//அப்பாவி சராசரியின் நினைவு நாள் இன்று// சூப்பர் தோழர். தங்களின் எழுத்துக்களின் வலிமை அற்புதம். வாழ்த்துக்கள் .

  ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

Labels