Monday, June 30, 2025

கவிதை 016 / 2025

 என் சொற்களை
பலவீனமானவைகளாக நீங்கள் கருதலாம் 
கூர்மையற்றும்
தரமற்றும்
பயனற்றவையாகவும்கூட 
அவை
உங்களுக்குத் தோன்றலாம்
ஆனால்
ஒடுக்கப்பட்டவன் பக்கம் நின்று
குரல் கொடுப்பவர்களின்
உடன் நிற்கும் என்ற வகையில்
என் சொற்களை
எனக்குப் பிடிக்கும்

Sunday, June 29, 2025

கவிதை 015/2025

 தேநீரெதற்கு

பெருவிருந்துதானெதற்கு
வந்தார் வந்தமட்டில்
செல்லை நீங்கி
தொலைக்காட்சிதனை நீங்கி
அன்னார்
முகம் பார்த்து
அளாவுதலே விருந்தோம்பல்

Saturday, June 28, 2025

எடப்பாடி உணரவேண்டியது

 2026 இல் தமிழ்நாட்டில் பாஜக பங்கேற்கும் NDA கூட்டணி ஆட்சி

2026 இல் தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி ஆட்சி
2026 இல் அதிமுக தலைமையில் பாஜக பங்கேற்கும் NDA கூட்டணி ஆட்சி
2026 இல் பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி
எடப்படி தலைமையில்தான் கூட்டணி ஆட்சி
எடப்பாடி அல்லாத அதிமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி
என்று மாறி மாறி ஷா பேசுவதும்
இது நியாயமா, அடுக்குமா என்றெல்லாம் விவாதங்கள் கிளம்புவதும் வேடிக்கையாக உள்ளன
இதில் எதுவும் நடக்கப் போவதில்லை என்பது பாஜகவிற்குத் தெரியும்
பிறகு ஏன்?
இப்படியாக அதிமுகவை குழப்பி அதை ஆட்டையப் போட வேண்டும்
ஆக, இந்தத் தேர்தல் என்பது பாஜகவை பொறுத்தவரை அதிமுகவை சிதைத்து ஏப்பம் விடுவதற்கானது
இதை அதிமுக ஊழியன் உணர்ந்திருக்கிற அளவிற்கு எடப்பாடி உணரவில்லை என்பதுதான் துயரமானது

Friday, June 27, 2025

கவிதை 014/2025

 ஏவுகணை தாக்கிய இடத்திற்கு

ஒரு மணி நேர
வான்வெளி பயணதூரம்
பயப்பட
ஏதுமில்லை
என்ற மகனிடம்
பார்த்துவிட்டு வந்த
மாப்பிள்ளை வீடு குறித்தும்
சண்டை
அண்ணன் இடத்திற்கு
கொஞ்சம் தள்ளிதான்
பயப்பட ஏதுமில்லை என்று
மகளிடமும்
சொல்லும் என்னிடம்
சொல்வதற்கு
சுவாரசியமாய் ஏதுமில்லை

நாங்கள் நாய்களைவிட கேவலமா

 ”பங்கர்” என்பது பதுங்கு குழி

போர் உள்ளிட்டு ஏதேனும் ஆபத்துகள் வரும் வேளையில் உள் சென்று தற்காலிகமாக தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கான இடம்
சியோனிஸ்டுகள் ஆக்கிரமித்து வைத்துள்ள பாலஸ்தீனத்தில் இவை கொஞ்சம் அதிகம்
தேவையில்லாமல் அவர்கள் ஈரானை வம்புக்கிழுத்து மரண அடியை வாங்குகிறார்கள்
அங்கு உள்ள மக்கள் அனைவரும் பதுங்கு குழிகளுக்குள் நுழைந்துகொண்டிருக்கிறார்கள்
சிலர் தங்களது செல்ல நாய்களையும் பூனைகளையும்கூட கொண்டு செல்கிறார்கள்
படிப்பின் நிமித்தம், வேலைகளின் நிமித்தம் அங்குள்ள இந்தியர்களும் பங்கருக்கு வருகிறார்கள்
அவர்களை சீயோனிஸ்டுகள் துப்பி விரட்டுகிறார்கள்
இந்தியர்கள் கேட்கிறார்கள்
“நாய்களை கூட்டிப் போகிறீர்களே. நாங்கள் நாய்களாஇவிட கேவலமா?”
அவர்கள் சொல்கிறார்கள்,
“ஆமாம்”
நமது வருத்தமெல்லாம் நமது ஒன்றிய அரசாங்கம் ஏன் சீயோனிஸ்டுகள் பக்கமே சாய்கிறது என்பதுதான்
அதற்கும் விடை இருக்கவே செய்கிறது
இஸ்ரேல் ஹைபா துறைமுகத்தை அதானிக்கு கொடுத்திருக்கிறது
இவர்கள் இஸ்ரேலில் அசிங்கப்பட்ட இந்தியர்களுக்காக குரல் கொடுத்தால்
அதானிக்கு பங்கம் வரும்
இவர்களைப் பொறுத்தவரை
இவர்களும் அம்பானியும் அதானியும் மட்டுமே இந்தியர்கள்

Thursday, June 26, 2025

அமெரிக்கா இந்தியாவின் பலத்திற்கும் கீழான நாடுதான்

 மெய்யாகவே எல்லா நாடுகளும் அணு ஆயுதங்களை அழித்துவிடும் நிலையில்

அமெரிக்கா இந்தியாவின் பலத்திற்கும் கீழான நாடுதான்
இரண்டுநாள் முன்பு ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலும்
இர்ரான் அதை எதிர்கொண்ட விதமும் இதைத்தான் சொல்கின்றன

இஸ்ரேல் என்பதே பாலஸ்தீனம்தான்

 


இப்படி ஒவ்வொரு நாடாக வரவேண்டும் என்பதே நமது ஆசை
தொடர்ந்து பாலஸ்தீனம் குறித்தும்
இஸ்ரேலின் அயோக்கியத்தனக்கள் குறித்தும்
பேசிக்கொண்டே இருப்போம்
இஸ்ரேல் என்ற ஒன்றே இல்லை என்ற வகையிலும்,
இஸ்ரேல் என்பதே பாலஸ்தீனம்தான் என்ற வகையிலும்
இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பாலஸ்தீனம் என்று சொல்வதும் பிழையானதுதான் சைமன் ஹாரிஸ் சார்

சீயோனிசத்திற்கு எதிராக நியூயார்க்கிலும்

 


32 வயதேயான ஜோரன் மம்தானி
ஜனநாயகக் கட்சியின் நியூயார்க் மேயர் வேட்பாளர்
சன்னமாக இடதுசாரி
அநேகமாக மேயராவார் என்று தெரிகிறது
கேட்கிறார்கள்,
நீங்கள் மேயரானதும் எல்லா மேயரையும் போல் இஸ்ரேல் சென்று வருவீர்களா?
நியூயார்க் மேயரானதும் முதலில் இஸ்ரேல் சென்று வருவது என்பது கிட்டத்தட்ட மரபாகிப் போன விஷயம்
சீயோனிசத்தின் எச்சக் கூறு இது
கிட்டத்தட்ட சீயோனிஸ்டுகளின் விருப்பத்தளம் நியூயார்க்
அங்கு போட்டியிடுகிற இந்தப் பிள்ளை சொல்கிறார்
நான் ஏன் அங்கு போக வேண்டும்
மக்களும் அவரைக் கொண்டாடுகிறார்கள்
வேறொன்றும் இல்லை
சீயோனிசத்திற்கு எதிராக நியூயார்க்கிலும் மக்கள் ஆடத் தொடங்கி இருக்கிறார்கள்

காசா குறித்து ஏதும் உறுதியைப் பெறாமல் விட்டது தவறு

 இஸ்ரேலை ஏவி ஈரான்மீது தாக்குதலைத் தொடங்க வைத்தது அமெரிக்கா

தாக்குதலில் இருந்து ஈரான் சுதாரிப்பதற்கு முன் ஒழுங்காக இல்லாவிட்டால் ஈரான் வரைபடத்தில் இருக்காது என்று கொக்கரித்தது அமெரிக்கா
ஈரான் எழுந்து சதிராடி இஸ்ரேலை துவம்சம் செய்ததும்
நெதனின் கட்டளைக்காக ஈரான்மீது தாக்குதலை நடத்தியது அமெரிக்கா
அமெரிக்க போர்த் தளவாடங்கள்மீதும் ஈரான் தாக்குதலைத் தொடங்கியதும் ஈரானிடம் மண்டியிட்டது அமெரிக்கா
எல்லாம் சரி
அமெரிக்கா கெஞ்சிக் கொண்டதால் போரை நிறுத்தியதாக ஈரான் கூறுவதில் என்ன லாஜிக் இருக்கிறது

Wednesday, June 25, 2025

கவிதை 13/2025

 

அமெரிக்காவே
நம்ப முடியாத அளவிற்கு
அசிங்கமானது
அமெரிக்கா

65/66, காக்கைச் சிறகினிலே ஜூன் 2025

    அன்பிற்குரிய தமிழ் மடாதிபதிகளே,

வணக்கம்
கடவுள் நம்பிக்கையற்றவன் நான். ஆனால் எனக்கு தமிழ் பக்திமரபு பிடிக்கும்.
தமிழ் பக்திமரபு என்னை அப்படி நெகிழ்த்தும். அதுமட்டுமல்ல உலகின் வேறு எந்த மொழியேனும் பக்திமரபினை தனது அடையாளமாகக் கொண்டிருக்கிறதா என்பது அய்யம்தான். அப்படியே இருந்தாலும் பக்தனையும் கடவுளையும் தமிழ் இணைப்பதுபோல வேறு மொழி இணைக்கும் என்று நான் நம்பவில்லை.
தமிழ் பக்திமரபு அனைவரையும் அணைக்கும், இணைக்கும். தமிழ் பக்திமரபு என்பது குறிப்பாக சைவ பக்திமரபு என்பது சனாதனத்திற்கு எதிரானது.
மடங்களின் அதிபர்களை கிட்டத்தட்ட சாமியாகவே பார்க்கிற அன்பு தமிழ் பக்தர்களின் அன்பு.
இந்த அன்பு, எதையும் கடந்தவர்கள் நீங்கள் என்று அவர்கள் கருதுவதால் வருவது.
அவர்கள் எளியவர்கள், ஆனால் கூர்மையானவர்கள்.
வெளிப்படையானவர்கள், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதவர்கள். சரியோ தவறோ எதையும் முகத்திற்கு நேராகக் கேட்டுவிடக் கூடியவர்கள்.
திருவிளையாடல் புராணத்தில் இது இருக்கிறதா இல்லையா என்று எனக்குத் தெரியாது. ஆனால் சினிமாவில் பார்த்திருக்கிறேன்.
கடவுளுக்கும் பக்தனுக்கும் இடையே இருக்கும் இந்த உறவை...
அது கற்பனை என்றே கொண்டாலும், விவரம் தெரிந்த நாள்முதலாக நான் கொண்டாடிக்கொண்டே இருக்கிறேன்.
குறுந்தொகையின் இரண்டாம் பாடலை இறைவன் சிவன் எழுதியதாக நம்பப்படுகிறது. இந்த நம்பிக்கையை நாம் கேள்வி கேட்கவேண்டிய அவசியம் நமக்கு இப்போது இல்லை.
தன் மனைவியின் கூந்தலில் இருந்து வரும் மணம் இயற்கையானதா அல்லது அவள் பூசும் வாசனை திரவியங்கள்வழி வருவதா என்கிற அய்யம் மன்னன் செண்பகபாண்டியனுக்கு வருகிறது. இந்த அய்யம் அவ்வளவு முக்கியமானதா என்கிற அறிவு பூர்வமான வினாக்களுக்குள் நாம் இப்போது போகத் தேவை இல்லை. அவனது அவையில் உள்ள சான்றோர்களிடம் இவனது அய்யத்திற்கான விடை இல்லை.
எனவே தனது அய்யத்தைத் தீர்ப்பவனுக்கு தக்க சன்மானம் தரப்படும் என்று அறிவிக்கிறான். இந்த சன்மானத்திற்கு ஆசைப்படும் ஒரு எளிய மனிதனின் வழியாக இறைவன் கீழ்க்காணும் குறுந்தொகைப் பாடலை அனுப்பி வைக்கிறான்.
“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே”
செண்பகப் பண்டியனின் அரசவைக் கவிஞரான நக்கீரன் தருமி கொண்டு வந்திருக்கும் இந்தப் பாடலில் பிழை இருப்பதாக சொல்கிறார். இதை தருமி சொல்லக் கேட்டதும் சிவனுக்கு கோபம் வருகிறது. அவரே நேராக செண்பகப் பாண்டியனின் அவைக்கு வருகிறார்.
வந்திருப்பது தாம் வணங்கும் இறைவன் என்பது நக்கீரனுக்குத் தெரிகிறது. அந்தப் பாடலை எழுதியது தாம் தினமும் வணங்கும் இறைவனே என்றாலும் அதை ஏற்க மறுக்கிறார்.
இறைவனுக்கும் நக்கீரனுக்கும் விவாதம் நீள்கிறது. தன்னை தன் பக்தன் வென்றுகொண்டே வருவது இறைவனுக்குப் புரிகிறது. கொஞ்சம் எல்லை தாண்டுகிறார்.
கோபம் தலைக்கேற,
“அங்கம் புழுதிபட,
அரிவாளில் நெய்பூசி
பங்கம் பட இரண்டு கால் பரப்பி
சங்கதனைக்
கீர்கீர் என அறுக்கும்
நக்கீரனோ
எம் கவியை
ஆராய்ந்து சொல்லத் தக்கவன்”
என்று வெடித்து விடுகிறார்.
“சங்குகளை அறுத்து வளையல் செய்து விற்று வயிறு வளர்க்கும் கடையனான நீ என் பாடலில் பிழை காண்கிறாயா?” என்ற இறைவனின் கோபத்தையும் நேராக எதிர்கொள்கிறார் நக்கீரன்.
நக்கீரர் சொல்வார்,
“சங்கருப்பதெங்கள் குலம்
சங்கரனார்க்கேது குலம்?”
இந்த இரண்டு வரிகளை நினைக்குந்தோறும் நெக்குருகிப் போகிறேன் சன்னிதானங்களே.
”சங்கரன் நீ
நீ குலமற்று இருப்பதுதானே நியாயம்
நீ எப்படி குல பேதம் சொல்லலாம்”
என்றும் இதற்கு பொருள் கொள்ளலாம் என்றே இந்த எளிய நாத்திகன் நினைக்கிறேன். ஆமாம் சன்னிதானங்களே, நக்கீரனாரின் கோபத்தை இந்த எளியவன் இப்படித்தான் புரிந்து கொள்கிறேன்.
படைக்கப்பட்ட எந்த இறைவனுக்கும் பக்தனுக்கும் இடையே இப்படி ஒரு உறவை உலகில் எங்கும் பார்க்க இயலாது. எந்த ஒரு மொழியும் இறைவனையும் பக்தனையும் இப்படி படைத்தளித்ததில்லை. தமிழ் இந்த அதிசயத்தை செய்திருக்கிறது. இந்த இடத்தில் தமிழ் எதுவரைக்கும் நகர்ந்திருக்கிறது தெரியுமா சாமிகளே…
”திருவிளையாடல்” திரைப்படத்தில் இந்த உரையாடல் இறைவனின் இந்த ஆறு வார்த்தைகளோடு நிறைவுப் பகுதிக்கு நகரும். சிவன் சொல்வார்,
“நக்கீரனே! நின் தமிழோடு விளையாடவே யாம்
வந்தோம்”
அய்யோ, அய்யோ, ஒரு பக்தனின் மொழியை ரசித்து சுவைக்க ஏங்குகிறவனாக கடவுளைக் காட்டும் மொழி தமிழ். இதெல்லாம் புனைவு அல்லவா என்று யாரேனும் கேட்பீர்களேயானால், “இறைவனும் புனைவுதானே சாமிகளே” என்பதுதான் எனது பதில்.
”பித்தா
பிறைசூடி
பெருமானே
அருளாளா”
என்று சுந்தரமூர்த்தி சாமிகளையும் எங்கள் தமிழ் பாட வைக்கும். அதற்கு நேர் எதிராக
“தாவாரம் இல்லை
தங்க ஒரு வீடில்லை
தேவாரம் ஏதுக்கடி”
என்று சித்தனையும் பாட வைக்கும்.
நீங்கள் அரவணைக்க வேண்டியவர்கள்.
”ஏகன் அநேகன்” என்ற ஒப்பற்ற தத்துவத்தின் தூதுவர்கள் நீங்கள். அநேக பெயர்களில் இருக்கிறவன் ஒரே ஒருவன்தான். அவனை நாம் சிவன் என்கிறோம். இன்னொருவன் இன்னொரு பெயரில் அழைக்கிறான். அவ்வளவுதான் பிள்ளைகளே. அமைதியாக, ஒற்றுமையாக அணைந்து வாழுங்கள் என்று எங்களை ஆற்றுப்படுத்தி வழிநடத்த வேண்டியவர்கள் நீங்கள்.
எல்லோரிடமும் சமமாக அன்பு பாராட்ட வேண்டியவர்கள். ஒரு மதத்தின் பிரதிநிதி என்பது உங்களது முற்றான அடையாளம் அல்ல.
எல்லோருக்கும் பொதுவானவர்கள் நீங்கள்.
குல்லா தரித்தவனும் உங்கள் பிள்ளைதான்
சிலுவை தரித்தவனும் உங்கள் பிள்ளைதான்
குங்குமம் வைத்தவனும் உங்கள் பிள்ளைதான்
உங்களில் ஒருவர் தொப்பியோடும் தாடியோடும் ஒருவர் தன்னைக் கொல்ல வந்தார் என்று சொல்வது மட்டுமல்ல அதைக் கேட்டு மற்ற சன்னிதானங்கள் மௌனமாக இருப்பதும் தவறுதான்.
குன்றக்குடி பெரிய சன்னிதானத்தின் இறுதி இலக்கிய பொதுமேடை ஜெயங்கொண்டத்தில் நடந்த கலை இரவுதான். அன்று நடந்த வழக்காடு மன்றத்தில் அவரது கீழ் நானும் பேசினேன். கடவுள் இல்லை என்று சொல்லும் நான் எப்போதும் வாயருகே கை வைத்து மரியாதையோடுதான் அவரோடு பேசி இருக்கிறேன்.
காரணம் மதச்சார்பின்மை என்ற இந்திய அடையாளத்தின் ஒப்பற்ற முகவரி அவர்.
இப்படியாகவே இருங்கள்.
அன்போடு இருங்கள். அனைத்து சன்னிதானங்களுக்கும் என் அன்பும் நன்றியும்
அன்புடன்,
இரா.எட்வின்.

Tuesday, June 24, 2025

அடுத்த பதிப்பு வந்திருக்கிறது

 


அடுத்த பதிப்பு வந்திருக்கிறது என்பது தரும் மகிழ்ச்சி இருக்கே..
10.06.202

நாத்திகர்கள் நாங்களே புன்னகைத்து நழுவும் இடம்

 

ஒரு கிழவி நடந்துகொண்டே இருக்கிறாள்
அசதியாக இருக்கிறது
ஒரு மரம் தென்படுகிறது
நிழலுக்காக ஒதுங்குகிறாள்
ஒரு சுட்டிப் பொடியன் மரத்தின் கிளையொன்றில் அமர்ந்திருக்கிறான்
“பாட்டி” என்று கத்துகிறான்
கிழவி மேலே பார்க்கிறாள்
பசிக்குதா?
ஆமாம்பா
பழம் சாப்பிடுகிறாயா
உலுக்கித் தாயேன்
சரி பெரிசு என்ன பழம் வேண்டும்
நாவல் மரத்தில் மாம்பழமா இருக்கும். உலுக்குடா பொடியா
இல்ல பாட்டி இதுல ரெண்டுவிதமான பழங்கள் இருக்கு
கிழவியே குசும்புக்காரி. குசும்பென்றால் அப்படியொரு ஞானக் குசும்பு. தன்னையே சீண்டுகிறானே என்று ஒரு நிமிடம் குழம்பியவள்
என்ன ?
சுட்ட பழமும் இருக்கு சுடாத பழமும் இருக்கு. எது வேண்டும்
சரி சரி, சுட்ட பழமா போடு. சாப்பிடற சூடில்
உலுக்குகிறான்
பழங்கள் உதிர்கின்றன
பழமெல்லாம் மணல்
மணலை ஊதிக்கொண்டே கேட்கிறாள்
சேட்டக்காரக் கழுத, சுடவே இல்ல
பையன் சொல்கிறான்
சுடாமலா ஊதற
கிழவி வெளவெளத்துப் போகிறாள்
உங்களுக்குப் புரியும் ,
கிழவி அவ்வை, பொடியன் முருகன்
இது அமித்ஷாவிற்குப் புரிய வேண்டும்
இது புனைவாகவேகூட இருந்துவிட்டுப் போகட்டும்
எங்கள் தமிழ் சமய மரபு எங்கள் முருகனை தன் பிள்ளைகளோடு இப்படியாக உறவாடவும் விளையாடவுமாக படைத்தளித்திருக்கிறது
எங்கள் கிழவிமார்கள்
எங்கள் முருகனுக்கே புத்தி சொல்வார்கள்
உன் தத்துவம் தவறென்று சொல்லவும் அவ்வையின் தமிழுக்கு உரிமை உண்டு என்பார்கள்
இந்த இடம் நாத்திகர்கள் நாங்களே புன்னகைத்து நழுவும் இடம்
இது குமரி அனந்தன் அய்யா பொண்ணுக்கே புரியாதபோது அமித்ஷாவிற்கு எப்படி புரியும்
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் என்ற பாடலில் ஒரு இடம்
”சிறப்புடனே கந்தக்
கோட்டமுண்டு உன்
சிங்கார மயிலாட
தோட்டமுண்டு
உனக்கான மனக் கோயில்
கொஞ்சமில்லை
உனக்கான மனக் கோயில்
கொஞ்சமில்லை
அங்கு உருவாகும் அன்புக்கோ
பஞ்சமில்லை
அங்கு உருவாகும் அன்புக்கோ
பஞ்சமில்லை”
அமித்ஷா
எங்கள் முருகனை உங்களுக்குத் தெரியாது
நகருங்கள்
அவனுக்கான மனக்கோயிலில் அன்புக்கு பஞ்சமேயிருக்காது ஷா சார்
அதைக் கெடுக்காமல் நகருங்க சாமிகளா

வீட்டோ அதிகாரத்தை நீக்குங்கள்

 இரண்டில் ஒன்றுதான்

ஒன்று, வீட்டோ அதிகாரத்தை நீக்குங்கள்
அல்லது, ஐநாவைக் கலைந்துவிடுங்கள்

ஈரானோடு நிற்பதென்பது

 

இந்த நொடியின் நியாயத்தோடு நிற்பது
மெளனமாக இருப்பதென்பது அநியாயத்தோடு நிற்பது

21.06.2025

Wednesday, June 18, 2025

சரவணனை என்னோடு பழம்விட வைத்த புத்தகம்

 


திருவாரூரில் "ஒற்றைச் சிறகு ஓவியா " உள்ளிட்டு மூன்று புத்தகங்களின் வெளியீடு நடப்பதாகவும்
நான் "ஒற்றைச் சிறகு ஓவியா " குறித்து பேசவேண்டும் என்றும் Mohammed Sirajudeen கூறுகிறார்
சரவணன் என்னோடு காய் விட்டிருந்த காலம் அது
சரவணன் ஏதாவது நினைக்கப் போறான் சிராஜ் என்கிறேன்
''அய்யோ எட்வின், யாரைக் கூப்பிடலாம்னு அவர்ட்ட தான் கேட்டோம்
அண்ணன் பேசனும்னு அவர்தான் சொன்னார்" என்கிறார்



சரவணனை என்னோடு பழம்விட வைத்த புத்தகம்
விருது கிடைத்திக்கிறது
நிறைய வரும்
முத்தம் சரவணன்

Tuesday, June 17, 2025

காரணம் எவனெனினும்

 


காரணம் எவனெனினும்

ட்ரம்ப் எனினும்

நெதனெனினும்

அவன் யார் தொழும் கடவுளே ஆயினும்

நாசமா போகட்டும்


17.06.2025

கூடாது என்றால் எந்தவொரு நாட்டிலும் கூடாது

அணுகுண்டு ஈரானில் இருக்கலாமா வேண்டாமா என்பதை 5400 அணுகுண்டுகளை வைத்திருக்கும் அமெரிக்கா தீர்மானிக்கக்கூடாது

கூடாது என்றால் எந்தவொரு நாட்டிலும் கூடாது
யாராக இருப்பினும் தங்களிடம் உள்ள அத்தனை அணு குண்டுகளையும் செயலிழக்கச் செய்துவிட்டு பிறகு வந்து பேசட்டும்

கவிதை 12/2025

 ஏவுகணைகள்

நொறுக்கிப்போட்ட
கட்டடங்களின்
சிதிலங்களின்மேல் நின்றபடி
உலகோடு
உரையாடிக்கொண்டிருக்கும்
பத்திரிக்கையாளனின்
இடது காலை
ஏதோ நிமிண்ட
குனிந்து பார்க்கிறான்
அட்டைமாதிரி
ஏதோ ஒன்று
வலது காலால்
தட்டிவிட்டு
விவரணையைத்
தொடர்கிறான்
மீண்டும்
அதே இடது காலை
ஏதோ நிமிண்ட
அட்டையாகத்தான்
இருக்கும் என்று
குனிந்து பார்க்காமலே
சிதிலங்களில் சிக்கிக்கொண்டிருக்கும்
குழந்தையின் விரலை
வலது காலால் தட்டிவிட்டு
விவரணைகளைத்
தொடர்கிறான்
அந்த செய்தியாளன்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...