Friday, September 14, 2018

கொஞ்சம் ஆயுளை நீட்டிக் கொள்கிறோம்.

இன்று மூன்று விஷயங்களைக் குறித்து எழுத வேண்டும்
ஒன்று நெகிழ்வினைத் தந்தது
மற்றொன்று மகிழ்வினைத் தந்தது
இன்னுமொன்று நம்பிக்கையைத் தந்தது
பொதுவாகவே அதிகாரிகள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிக்கிறார்கள். பொன்னும் மண்ணுமாய் வாங்கிக் குவிக்கிறார்கள். நிமிர்ந்து பார்த்து ‘என்ன விஷயம்?’ என்று கேட்பதற்கே ஒரு விலை வைத்திருக்கிறார்கள் என்று விரவிக் கிடக்கிற பொதுப்புத்தியை மறுப்பதற்கு முடியாதவர்களாகவே இருக்கிறோம்.
இன்னும் சிலர் “அந்தக் காலத்துல எல்லாம் எப்படி இருந்தது தெரியுமா?” என்று ஆரம்பித்தார்கள் என்றால் ஏதோ அந்தக் காலத்தில் எல்லாம் லஞ்சமே இல்லாதது போலவும் இப்போது லஞ்சம் இல்லாமல் எதுவுமே இல்லாதது போலவும் ஒரு கருத்தியலை நிறுவ முயற்சிக்கிறார்கள்.
இரண்டுமே பழுதான பார்வையின் விளைவுகள்.
எல்லாக் காலத்திலும் இப்போது இருப்பது போன்றே லஞ்சமும் ஊழலும் இருந்தன. முன்பிருந்ததைப் போலவே இந்தக் காலத்திலும் லஞ்ச லாவன்யம் இல்லாத அதிகாரிகளும் இருக்கவே செய்கிறார்கள்.
தனது அலுவலகத்தில் பணிபுரியும் ஆகக் கடைநிலை ஊழியர் கட்டியுள்ள வீட்டை விடவும் சிறிய மற்றும் அவசியத் தேவைக்கு அதிகமாக ஒரு சொட்டு ஆடம்பரமும் இல்லாத ஒரு எளிய வீட்டினை எங்கள் முதன்மைக் கல்வி அலுவலர் வாங்கியிருக்கிறார்.
இன்று புதுமனைப் புகுவிழா வைத்திருந்தார்.
ஒரு புத்தகத்தைக்கூட யாரும் அன்பளிப்பாகத் தரக்கூடாது என்ற நிபந்தனையோடு அழைத்திருந்தார்.
இப்படி ஒரு நேர்மையான அதிகாரியிடம் வேலை பார்க்கிற வாய்ப்பு எப்போதாவது அமையும்.
எமக்கு இப்போது வாய்த்திருக்கிறது. அந்த வகையில் ஆசிர்வதிக்கப் பட்டிருக்கிறோம்.
”நான் பணி ஒய்வு பெறும் வரைக்கும் இங்கேயே இருந்து தொலைங்க” என்று சொன்னேன்.
என்னைவிடவும் சின்னவர்.
பணி ஓய்வு பெற்றதும் இவர் குறித்து உரிமையோடும் அதிகாரி ஊழியன் தயக்கம் இன்றியும் எழுத ஆசை.
நிச்சயம் எழுதுவேன்.
இது இன்று நெகிழ்வைத் தந்த விஷயம்
***************************************************
Kaakkai Cirakinile இதழில் இந்த மாதம் நான் திரு ஸ்டாலின் அவர்களுக்கு எழுதிய கடிதம் சென்று சேர்ந்திருக்கிறது.
நிறைய தோழர்கள் தம்மோடு இது குறித்து நெகிழ்ச்சியோடு உரையாடுவதாக தோழர் முத்தையா நெகிழ்வோடு அவ்வப்போது தெரிவித்தபடியே இருக்கிறார்.
கவிஞர் வைரமுத்து தோழர் முத்தையாவோடும் என்னோடும் பேசினார். அந்தக் கடிதத்தை படித்ததும் பேசாமல் இருக்கவே முடியவில்லை என்று அவர் கூறினார்.
நான் தஞ்சையிலே நடந்த “கறிச்சோறு” விமர்சனக் கூட்டத்திலே சொன்னதுதான்,
வைரமுத்து என்னோடு பேசியதில் எனக்கொன்றும் இல்லை. ஆனால் அவர் என் படைப்பு குறித்து பேசியது நெசமாகவே மகிழ்ச்சியைத் தந்த விஷயம்.
முன்னாள் மத்திய அமைச்சரும் திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான திருமதி சுப்பு லட்சுமி அம்மா பேசினார்கள்.
அய்யா க.திருநாவுக்கரசு பேசினார்.
இன்னும் ஏராளாமான விசாரிப்புகளை அந்தக் கடிஷம் கொண்டுவந்து சேர்த்தது
இவை எல்லாம் கடந்து தம்பி முருக தீட்சண்யா உலகத் தரம் வாய்ந்த கடிதங்களை எல்லாம் இந்தக் கடிதம் அசைபோட வைத்து விட்டதாக ஒரு அழகான பதிவை வைத்திருக்கிறான்.
அந்த அளவில் இந்தக் கடிதம் ஒரு அழகான பதிவை நமக்கு கை ஏந்தி வாங்கித் தந்திருக்கிறது
தம்பி முருக தீட்சண்யாவிற்கு என் நன்றி.
இவற்றால் கொஞ்சம் மகிழ்ந்து போயிருக்கிறேன்.
***********************************
”ரெக்கைகளை
வெட்டி விட்ட்தாய்
சந்தோசப் படுகிறாய்
எனக்கு நடக்கவும் தெரியும்”
என்று தம்பி Yazhi Giridharan போகிற போக்கில் எழுதிப் போகிறான்.
இதை யாரேனும் கவிதை இல்லை என்றால் நான் அவர்களோடு பேசுவதை நிறுத்திக் கொள்வேன்.
அளவுக்கு அதிகமான கட்டுப்பாடுகளாலோ அல்லது துரோகத்தினாலோ தற்கொலைக்குத் தயாராகும் ஒருவர் தற்கொலை செய்வதற்கு முன் இதை வாசித்தால் தற்கொலை தவிர்க்கப் படும்.
நிறைய நம்பிக்கையைத் தருகிறாய் யாழி.
இதுமாதிரி அதிகமாய்த் தாருங்கள் பிள்ளைகளே. கொஞ்சம் ஆயுளை நீட்டிக் கொள்கிறோம்.
#சாமங்கவிய 17 நிமிடங்கள்
13.09.2018

Tuesday, September 11, 2018

தஞ்சை வாசகசாலை

முன்பெல்லாம் மாதம் ஒரு கூட்டமேனும் தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் எனக்கு. இந்த வாய்ப்பை பயன்படுத்தி இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையேனும் சுகன், நா. விச்வநாதன் உள்ளிட்ட எனது தஞ்சைத் தோழர்களை சந்தித்து விடுவேன்.
கூட்டங்களைக் குறைத்துக் கொள்வது என்று ஒரு புள்ளியில் முடிவெடுத்ததும் இந்த வாய்ப்பு குறைந்தது. அவசர அவசரமாக சுகன் செத்துப் போனதும் நான் தஞ்சைக்குப் போவதே நின்றுபோனது.
இந்தச் சூழலில் ஒரு அதிகாலையில் அசந்து தூங்கிக் கொண்டிருந்தவனை எழுப்பி தஞ்சை வாசக சாலையில் சி.எம்.முத்து அவர்களின் நாவலான “கறிச்சோறு” குறித்து பேச வேண்டும் என்று அழைத்ததும் ”எந்த மறுப்பும் சொல்லாமல்” என்று சொன்னால் அது பொய், ஆசை ஆசையாக ஒதுக்கொண்டேன் என்பதே உண்மை.
இதற்கு இரண்டு காரணங்கள்,
நாவி உள்ளிட்ட தஞ்சைத் தோழர்களை சந்திக்கிற வாய்ப்பு என்பது ஒன்று.
தோழர் கல்பனாசேக்கிழார் செல்வம் அவர்கள் சொல்லித்தான் தோழர் சி.எம்.முத்து அவர்களின் “கறிச்சோறு” எனக்கு தெரிய வந்தது. வாய்ப்பு கிடைத்து பேசுகிறபோதெல்லாம் கல்பானா முத்து குறித்தும் அவரது எழுத்து குறித்தும் சிலாகித்துக் கொண்டே இருக்கிறார். கல்பனா தோழர் முத்துவை இப்படி சிலாகிக்கிற அளவிற்கு உலகில் எந்த ஒரு எழுத்தாளனையாவது யாரும் சிலாகித்திருப்பார்களா என்பதும் இந்த உண்மை தோழர் முத்துவிற்கு தெரியுமா என்பதும் எனக்குத் தெரியவில்லை.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தியாவது அவரது நாவல்களை வாசித்துவிடுவது என்பது இரண்டாவது காரணம்.
தம்பி Dinesh Palani Raj தஞ்சையில் இருந்து சமயபுரம் வரைக்கும் இரு சக்கர வாகனத்தில் வந்து புத்தகத்தைக் கொடுத்துவிட்டுப் போனார். ஒரு கூட்டத்தை நடத்தும்போது ஒரு பொறுப்பாளர் எப்படி எல்லாம் உழைக்க வேண்டும் என்பதை அவரிடம் இருந்து நெகிழ்ச்சியோடு கற்றுக் கொண்டேன்.
கூட்டம் தொடங்குவதற்கு வெகு நேரம் முன்னமே அரங்கிற்குள் நுழைந்தால் எனக்கும் முன்னமே தோழர் Pena Manoharanஅவர்களும் முத்து அவர்களும் வந்திருந்தனர்.
தோழர்கள் ஹேமலதா கார்த்திகேயன் அவர்களும் Kannammal Manoharan அறிமுகம் ஆனார்கள்.
இருவரும் தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர்கள்.
ஹேமா உரையாற்றினார். நேர்த்தியாக இருந்தது. அவரிடம் எனக்குப் பிடித்தது உரையாற்றுவதில் அவருக்கு இருந்த ஆசை. ஆசைப் படுபவன்தான் அடைவான் என்பதுதான் விதி.
எங்கு தொடங்குவது, எப்படி நகர்வது, எங்கு முடிப்பது என்ற நுட்பங்களில் அவர் தேரும் புள்ளியில் ஒரு மிகச் சிறந்த உரையாளர் நமக்குக் கிடைப்பார். காரணம் மொழியும் குரலும் அவர் சொன்னதை எல்லாம் செய்கின்றன.
கண்ணம்மா உணர்ச்சிப் பிழம்பாக அதே நேரம் பிசிறற்று உரையாடுகிறார். அவரது வாசிப்பின் ஆழத்தை நான் சொல்லியே ஆக வேண்டும். வார்த்தைகளைத் தேடித் தேடி சேகரித்து, சேகரித்தவற்றை இழைத்துக் குழைத்து சாரலாய்த் தெளிக்கிறார்.
மிக நேர்த்தியாக தொகுத்தளித்தார்.
என்னை முற்றாய் வாசித்தவர்களில் அவரும் ஒருவராயிருக்கிறார். எப்போதோ நான் எழுதி மறந்துபோன
எந்தச் சுடுகாட்டின்
எத்தனையாவது
பிணம் நான்?
என்ற கவிதையை அவர் சொன்ன போது மிரண்டே போனேன். கண்கள் பனிக்க உணர்ச்சிப் பிழம்பாய் புன்னகைவழி அழுதுகொண்டே அந்தக் கவிதையை அவர் சிலாகித்ததில் நெகிழ்ந்து போனேன். என் கடைசி பக்கங்கள் அனைத்தும் அவருக்கு அத்துப்படியாய் இருக்கிறது. நன்றி கண்ணம்மா.
சொன்னபடி நல்ல பிள்ளையாய் கட்டுரை கொடுங்கள்
இடைசாதி அரசியலை எந்த விதமான வறட்டுத் தனமோ முரட்டுத்தனமோ இல்லாமல் இவ்வளவு இயல்பாக ஒரு நாவலின் வழி தர முடியுமா என்பது அய்யம்.
வாசகனை முறுக்கேற்றுகிற வேலையை இந்த நாவல் எந்த இடத்திலும் செய்யவில்லை.
உள்ளதை உள்ளபடி அழகான புனைவாக்கி இருக்கிறார்.
பல இடங்களில் கைகளை தலைக்குமேலே தூக்கி கரவொலித்தார். பண்டிதனாய் இல்லாமல் ஒரு எளிய வாசகனாக நிற்கிறோம் என்று புரிந்தது.
“கறிச்சோறு” குறித்து இரண்டொரு நாளில் எழுதுவேன்.
இனி கூட்டங்களுக்கு போவது என்று முடிவெடுத்திருக்கிறேன்.
என்னோடு எடுத்த புகைப்படத்தை முகநூலில் பதிந்திருக்கிறார் தமிழ் பாலா. அந்த ஈரத்திற்கு என் அன்பும் முத்தமும்
போக, Kaakkai Cirakinile குடியரசு இரண்டு இரண்டாண்டு சந்தாக்கள் கிடைத்தன. இன்னும் சில வரும். காக்கையை கொண்டு சேர்க்க உதவுவதாலும் இத்தகைய பயணங்கள் இனிக்கின்றன
இன்னொன்று ஜனவரி மாதத்தில் பிறந்து 72 மணி நேரத்திற்குள் என் தங்கை மகனுக்கு ஒரு மேஜர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வந்தது. மாப்பிள்ளை வெளிநாட்டில், தங்கை மணப்பாறையில் ஒரு மருத்துவ மனையில், பிள்ளைக்கு திருச்சியில் அறுவை.
அழுதுகொண்டே இருந்தேன். முடியவே முடியாது என்று தோன்றிய பொழுது அதுகுறித்து ஒரு பதிவு போட்டிருந்தேன். அதை நினைவு கொண்டு “தம்பி எப்படி இருக்கான்?” என்று தோழர் Subhasree Muraleetharan கேட்டபோது கலங்கிப் போனேன்.
நன்றி சுபா
#சாமங்கவிய 19 நிமிடங்கள்
10.09.2018

Saturday, September 8, 2018

போர்த்தொழிலில் ஊழல் ஒருபோதும் ஆகாது

”‘யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின்,
போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது; தன்
தார் ஒடுங்கல் செல்லாது; அது தந்தபின்,
வேரொடும் கெடல் வேண்டல் உண்டாகுமோ?”
என்று ராமருக்கு வசிஸ்டர் அறிவுரை கூறுவதாக கம்பராமாயணத்தில் வருகிறது.
ஒரு மன்னன் அடுத்த நாட்டு மன்னனோடு பகை கொள்வதற்கு பதில் அன்பை தெளிக்க முன் வருவான் எனில் இந்த மண்ணில் போர் ஏற்படாது.
அதாவது நாடுகள் பகை மறந்து அன்பை சந்தனமாக தேய்த்து ஒருவருக்கொருவர் பூசிக் கொண்டால் இந்த மண்ணில் போரே இருக்காது.
எந்த நாடு சமாதானத்தை தூவுவதன் மூலம் போரைத் தவிர்க்கிறதோ அந்த நாட்டின், அந்த நாட்டின் மன்னனின் புகழ் இப்புவி எங்கும் பரந்து விரியும்.
போரே இல்லை என்றானால் படையினர் போரில் சாக மாட்டார்கள். எனில், போர் வீரர்களின் எண்ணிக்கை குறையாது. அத்தோடு அவ்வப்போது படைக்கான ஆள்சேர்ப்பின் மூலம் படையின் பலம் கூடிக்கொண்டே இருக்கும்.
போரில் இடையறாது ஈடுபடும் நாடு தொடர்ந்து வீரர்களை இழக்கும்.
எனவே பகை கொள்ளாத நாடு போர் செய்யாது. போர் இல்லை எனில் வீரகளை இழக்கத் தேவை இருக்காது.
வீரர்களை இழக்காத படை பலமான படை.யாக இருக்கும். பலமான படை பயம் கொடுக்கும். நம் மீதான பயம் நமக்கு பாதுகாப்பைத் தரும்.
இதை எல்லாம் நான் சொல்லவில்லை மாண்புமிகு பிரதமர் அவர்களே, மாண்புமிகு பாதுகாப்புத் துறை அமைச்சர் அவர்களே. நீங்கள் பெரிதும் போற்றித் துதிக்கிற, இன்னும் சொல்லப்போனால் யாருடைய பெயரால் ராஜியத்தைக் கட்டமைக்க விரும்புகிறீர்களோ அந்த ராமபிரானுக்கு வசிஸ்டர் கூறியது.
எங்களுக்கு அது புராணம். ஆனால் உங்களுக்கு அது ஆன்மீக ஆவணம் என்று நீங்கள் கூறுகிறீர்கள்
ஆனால் நீங்களே போர் விமானக்களை வாங்கிக் குவிக்க முனைகிறீர்கள். இதில் என்ன தவறு இருக்கிறது. போர் விமானங்கள்தானே வாங்குகிறோம். போர் செய்வதற்காக நாங்கள் ஒன்றும் அலையவில்லையே என்று நீங்கள் கேட்கக் கூடும். போர் விமானங்களை வாங்குவதன் மூலம் நமது பலம் பெருகும். நமது பலம் பெருகினால் நம் மீது யாரும் போர் தொடுக்க அஞ்சுவார்கள். எனில், போர் தடுக்கப்படும்.
ஆக, இதுகூட கம்பனின் கனவுதானே என்றும் நீங்கள் கேட்கக் கூடும்.
ஊழலுக்கு போர் விமானம் வாங்கினால் ஒருநாடும் நம்மைக் கண்டு பயப்படப் போவதில்லை.
ஆனால் இதை ஏதோ நீங்கள் மட்டுமே செய்யவில்லை என்பதும், முந்தைய காங்கிரஸ் அரசாங்கம் போட்ட ஒப்பந்தத்தின் நீட்சிதான் இது என்றும் எங்களுக்குத் தெரியும்
ஆனால் 526 கோடிக்கும் 1670 கோடிக்கும் இடையே மலை அளவு இடைவெளி இருக்கிறது.
போர் விமானக்களுக்கு உதிரி பாகங்களைத் தயாரிப்பதில் 75 ஆண்டுகால அனுபவம் உள்ள பொதுத் துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாடிகல் நிறுவனத்தை விடுத்து 13 நாட்களே வயது கொண்ட அம்பானியின் நிறுவனத்திற்கு உதிரிப்பாகங்களைத் தயாரிக்கும் வாய்ப்பை நீங்கள் வாங்கிக் கொடுத்திருப்பதில் சந்தேகம் இருப்பதாக ஃப்ரான்ஸ் நாட்டின் அரசு தொலைக்காட்சியான ஃப்ரான்ஸ் 24 அய்யம் வெளியிடுகிறது
நீங்கள் ஊழலற்றவர்கள் என்றால் அதை நிறுவுங்கள். இந்த ரபேலில் காங்கிரஸ்தான் ஊழல் செய்த்து என்றால் அதை நிறுவி தண்டனை வாங்கிக் கொடுங்கள். எங்களுக்கு அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
அப்போதும் சொன்னோம். இப்போதும் அதையே சொல்கிறோம். எப்போதும் இதையேதான் சொல்வோம்,
யாரொடும்
பகை கொள்ளலன்
என்றபின்
போரொடுங்கும்
புகழொடுங்காது
அதைவிட முக்கியம்,
போர்த்தொழிலில் ஊழல் ஒருபோதும் ஆகாது
#சாமங்கவிந்து 50 நிமிடங்கள்
08.09.2018

LIC நமது சொத்து. நாமென்ன செய்யலாம்?

ஆரவாரமே இல்லாமல் ஒரு பொதுத்துறை நிறுவனம் 60 ஆண்டுகள் தொடர்ந்து லாபமீட்டியபடியே இருக்கிறது. ஏறத்தாழ பதினாறு லட்சம் கோடி அளவில் சொத்துக்களை மட்டும் குவித்து வைத்திருக்கிறது.
பதினாறு லட்சம் அளவிற்கு சொத்து மட்டுமெனில் லாபம் எவ்வளவு என்பது பாமரத்தனமாய் விரியும் கேள்வி.
ஆக இத்தனைச் சொத்தும் லாபமும் பொதுத்துறைக்கு. பொதுத்துறை என்பது மக்களுடையது. எனில் இந்தச் சொத்தும் லாபமும் மக்களுடையது.
ஏற்கனவே 246 தனியார் ஆயுள் காப்பீட்டுக் கழகங்களை ஒன்றிணைத்து இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் உருவாக்கப் பட்டிருக்கிறது என்பதையறியும்போது இரண்டு விஷயங்கள் நம்மை வியப்பிலாழ்த்துகின்றன.
1) 246 பெருமுதலாளிகளின் கொள்ளை
லாபத்திலிருந்து நிறுவனங்களை
மீட்பதோ அதைப் பொதுவில்
நிறுவனப் படுத்துவதோ எவ்வளவு
சிரமமானது
பெயரைக்கூட வெளிப்படுத்தாமல்
அந்தக் கடினமான காரியம். இந்த
நேரத்தில் சமஸ்தானங்களை
ஒன்றிணைத்த மோசடிக்காக
ஆயிரக்கணக்கான டன் அளவில் ஒரு
துருப் பிடித்த மனிதனுக்கு இரும்புச்
சிலை வைக்கப்படும் அநியாயத்தையும்
சேர்த்தே பார்க்க வேண்டும் என்பது
2) 56 ஆம் ஆண்டிற்கு முன்னமே
காப்பீட்டின் அவசியத்தை மக்கள்
உணர்ந்திருந்திருக்கிறார்கள் என்பது
இவ்வளவு சொத்தையும் லாபத்தையும் மக்களுக்கு மடை மாற்றிய ஸ்தாபனம் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம்
லாபமும் சொத்தும் மக்களுக்கு மட்டுமல்ல, லட்சக் கணக்கானோருக்கு நிறுவனத்திலேயே வேலை வாய்ப்பும் முகவர்கள் என்கிற வகையில் பல லட்சம் ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பும் வழங்குகிற இந்த நிறுவனத்தை, விபத்துக்களால், மரணத்தால் குடும்பங்கள் நொறுங்கிப் போகாமல் மீண்டும் இயல்பாய் இயங்க கரம் நீட்டும் இந்த நிறுவனத்தை மீண்டும் சில பெருமுதலாளிகளுக்குத் தாரைவார்க்க காங்கிரசும் பிஜேபியும் படாத பாடு படுகிறார்கள்.
ஒருபக்கம் நிறுவனத்தைக் காப்பதற்காகப் போராடிக் கொண்டே நிறுவனம் துவங்கி 60 ஆண்டுகள் நிறைவதை ஒட்டி வார விழாவை அதன் ஊழியர்கள் கொண்டாடுகிறார்கள்
LIC நமது சொத்து.
நாமென்ன செய்யலாம்?

Friday, September 7, 2018

இந்த வீதியிலே புகுந்திருக்கிற சிவப்பு சமுத்திரமும் ...




ஒன்று தெற்கிலும் ஒன்று வடக்கிலுமாக நேற்று இரண்டு பேரணிகள்
இரண்டின் நோக்கங்களுக்கும் இடையில் அம்பானியின் அசையா சொத்துக்கள் முழுவதையும் அடுக்கி வைத்துவிட முடியும்
ஒன்று ஒரு கட்சியில் ஒரு மனிதரை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அந்தக் கட்சியின் தலைமையை நிர்ப்பந்திப்பதற்காக காசு கொடுத்துத் திரட்டப்பட்ட சிறு கூட்டம்
மற்றொன்று தேசத்தின் எல்லாத் திக்குகளிலும் இருந்து உழைக்கும் மற்றும் உழவுத்தொழில் செய்யும் திரளின் உரிமைக்காக செங்கொடியோடு திரண்ட எளிய ஜனங்களின் மாபெரும் பேரணி
மாண்புமிகு பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் நேற்று சென்னையில் நடந்த பேரணி அனைத்து மக்களையும் திரும்பிப் பார்க்கச் செய்ததாக்க் கூறியுள்ளார்
தில்லியில் நடந்த பேரணியில் கலந்து கொண்ட லட்சக்கணக்கான CPI(M) கட்சியைச் சார்ந்த CITU மற்றும் AIKS கையிலே தங்களது அமைப்புகளின் பதாகைகளை ஏந்தியபடி சத்தியமும் ஆவேசமும் கலந்த கோஷங்களோடு நாடாளுமன்ற வீதியைக் குலுக்கினர்.


அவர்கள் கோரிக்கை யாரோ ஒரு தனிப்பட்ட மனிதன் சார்ந்தது அல்ல.
சேற்றிலும் ஆலைகளிலும் காடுகளிலும் வெய்யில் சாலைகளிலும் உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்ந்துபோன கோடானு கோடி உழைக்கும் திரளின் குறைந்தபட்ச வாழ்வுரிமைக்கான கோரிக்கைகளை காற்றைக் கிழித்து முழக்கங்களாக்கி வெற்றுக் கால்களோடு வீதியை அளந்தக் கூட்டம்.
கீழ்வரும் அவர்களது கோரிக்கைகள் அநியாயமானவை என்று யார் கூறினாலும் அவர்களை அடுத்தமுறை சந்திக்காமலே செத்துவிட வேண்டும் என்று நினைப்பவன்
1) கவுரவமான வேலை
2) நியாயமான கூலி
3) தரிசுநிலப் பகிர்வு
4) விலைபொருட்களுக்கான நியாயமான விலை
5) விவசாயக் கடன் தள்ளுபடி
6) கட்டுப்படுத்தப்பட்ட விலைவாசி
7) சமூகப் பாதுகாப்பு
8) எல்லோருக்கும் கல்வி
9) சீரான சுகாதார வசதி
10) தரகை, தனியார் மயத்தை ஒழிப்பது
11) தொழிலாளார் நலச் சட்டங்களைப் பாதுகாப்பது



என்ன கேட்கிறார்கள்?
விவசாயக் கூலித் தொழிலாளிகளும் உழைக்கும் திரளும் பணிபுரியும் இடங்களில் அவர்களை சக மனிதனாக மதிக்கிற சூழலைக் கேட்கிறார்கள். இப்படிக் கேட்கிற சூழலை அவர்களுக்கு இன்னமும் வைத்திருப்பதற்காகவே இந்தச் சமூகம் சன்னமான அளவிற்கேனும் நாசமாகப் போக வேண்டும்.
பதினேழு வயதுக் குழந்தை தன் வீட்டில், ஆலையில் அல்லது ஏதோ ஒரு இடத்தில் வேலை பார்க்கும் ஒரு 50 வயது மனிதனை ஒருமையில் அழைக்கும் நிலை இன்றைக்கும் இருக்கிறதே.
பத்தாவது பதினைந்தாவது மாடிக்கு சாரத்தில் நின்றபடி கீழிருந்து தம்மை நோக்கி எறியப்படும் ஜல்லித் தட்டை கலவைத் தட்டை பிடித்து தமக்கும் மேலே சாரத்தில் நிற்பவருக்கு எறிந்து பணிபுரிவது எத்தனைப் பாதுகாப்பற்றது
அந்த ஊழியர்களுக்கு பணிப் பாதுகாப்பு, உயிர்ப் பாதுகாப்பு என் ஊதியப் பாதுகாப்பேனும் உண்டா?
அவர்களது ஒவ்வொரு கோரிக்கையும் நியாயமானது மட்டுமல்ல நீண்டகாலக் கோரிக்கைகளும் ஆகும்.
இந்தக் கோரிக்கைகளை அவர்கள் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வருவதற்குத்தான் லட்சம் பேர் நேற்று தில்லியிலே திரண்டார்கள்.
மாண்புமிகு பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் அந்த மய்ய அரசின் ஒரு முக்கியமான பிரதிநிதி.
ஆகவே அது அவரது கவனத்திற்காகவும் நடந்த பேரணிதான்.
ஆனால் அவரோ ஒரு தனி மனிதனை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று ஒரு மனிதனுக்காக நடந்த மிகச் சிறிய ஊர்வலத்தில் கரைந்துபோய் சிலாகித்த நிலையில் இருக்கிறார்
இவர்கள் இப்படி இருப்பார்கள் என்று தெரிந்ததால்தான், இவர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகளை உதாசீனப் படுத்துவார்கள் என்று உணர்ந்ததால்தான் அவர்கள் மிகுந்த பொறுப்புணர்வோடு முழங்கினார்கள்,
“சூழ்கிற கருப்பு மேகங்களும் இந்த வீதியிலே புகுந்திருக்கிற சிவப்பு சமுத்திரமும் மோடி அரசை அதிகாரத்திலிருந்து தூக்கி எறியும்”
இது நிச்சயம் நடக்கும் மாண்புமிகு பொன் ராதாகிருஷ்ணன் அவர்களே.
#சாமங்கவிய 56 நிமிடங்கள்
06.09.2018

Thursday, September 6, 2018

பேசவேண்டியவர் எங்கள் முதல்வர்.

எழுவர் விடுதலை குறித்து மாநில அரசே முடிவெடுக்கலாம் என்று உச்சநீதி மன்றம் கூறியிருக்கிறது.
அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க முடியாது என்று இதற்கு மாண்பமை பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகிறார்.
இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு கொடுத்திருக்கிறது.
பேசவேண்டியவர் எங்கள் முதல்வர்.
கொஞ்சம் ஒதுங்குங்க சார்

05.09.2018

இன்று காலை கூட்டு பிரார்த்தனைக் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது.
அந்தக் குழந்தை திருக்குறளைக் கூற வரும்வரை எல்லாமே வழமையாகத்தான் சென்றுகொண்டிருந்தன.
“தோன்றிற் புகழொடு தோன்றுக” என்ற குறளை அவள் கூறத் தொடங்கியதும் நிமிர்கிறேன்.
இரண்டு வாரங்களுக்கு முன்னால் ஒரு குழந்தை இதே குறளைக் கூறினாள். நான் பேசும்போது தோன்றும்போது புகழோடு யாரும் புகழோடு தோன்றிவிட முடியாது. ஒருவனது புகழுக்கும் உழைப்புக்கும் தொடர்பிருக்க வேண்டும் என்று கூறியிருந்தேன்.
இன்று மீண்டும் அதே குறளை ஒரு குழந்தை எடுத்து வந்திருக்கிறாள். ஏன் இப்படி செய்கிறாள்? கவனிக்கத் தோன்றியது
கவனிக்கிறேன்.
குறளை தெளிவாகக் கூறினாள்
குறளை முடித்ததும் அவள் பொருள் சொல்ல ஆரம்பித்ததும் உற்சாகத்தில் மிதக்க ஆரம்பித்து விட்டேன்
“இப்ப ஒருத்தர் ஒரு வேலைக்கு போகறதுன்னு முடிவெடுத்துட்டார்னு வச்சுக்கங்க. அவர் அந்த வேலைக்கு வரும் முன்னரே அந்த்த் தொழிலை முழுவதுமாக கற்றுத் தேற வேண்டும்.
அப்படி அந்த்த் தொழிலைக் கற்ரு அந்த வேலையில் எக்ஸ்பர்ட்டா ஆயிட்டார்னா தேர்ந்து எடுத்த அந்தத் தொழிலுக்குள் தோன்றும் பொழுதே அதாவது நுழையும் பொழுதே புகழ் கிடைக்கும்.
அது மட்டும் அல்ல ஒரு தொழிலில் நுழையும்போதே புகழடைய வேண்டுமானால் அந்தத் தொழில்மீது அவனுக்கு ஒரு வெறியே இருக்க வேண்டும். இதைத்தான் வள்ளுவர் ‘தோன்றிற் புகழொடு தோன்றுக’ என்கிறார்” என்றாள்.
அது சரியா தப்பா என்பதெல்லாம் அப்புறம். முதலில் இந்த முயற்சியைக் கொண்டாட வேண்டாமா?
அனுபவத்தில் சொல்கிறேன்,
குழந்தைகளை சுயமாக சிந்திக்க அனுமதித்தால் கங்குகள் கிடைக்கும்
#சாமங்கவிய முப்பத்தி ஐந்து நிமிடங்கள்
05.09.2018

Wednesday, September 5, 2018

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு,
வணக்கம்.
தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டிருந்த உங்களது தலைவரை இழந்து தவிக்கும் உங்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழர்கள் ஒவ்வொருவருக்கும் என் சார்பிலும், “காக்கைச் சிறகினிலே” சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.
”காக்கை” வந்த அடுத்தநாளே அதை வாசித்துவிட்டு எங்களோடு உரையாடும் திமுக மாநில நிர்வாகிகள் இருக்கிறார்கள். எனவே இந்த மடல் உங்களை வந்தடைவர்தற்கான வாய்ப்புகள் உண்டு என்பதையும் நானறிவேன்.
திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற ஒரு பெரிய வெகுஜன அரசியல் இயக்கத்தில் அந்த இயக்கத்தின் செயல் தலைவரான உங்களுக்கு இந்த நேரம் எவ்வளவு அழுத்தத்தைத் தரும் என்பது புரிந்துகொள்ளக் கூடியதே. அத்தகைய சூழலிலும் திமுகவின் சார்பில் ஒருகோடி ரூபாயை கேரளப் பேரிடருக்கு நிவாரணமாக அளித்ததோடு திமுகவின் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தஙகளது ஒருமாத ஊதியத்தை இதற்காக வழங்குவார்கள் என்று அறிவித்திருக்கிறீர்கள். அதற்காகவும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த தலைவர் யார் என்பது குறித்து பேரதிகமாய் ஏதேதோ அமைப்புகளின் அபிமானிகளும் ஆதரவாளர்களும் ஊடகங்களில் ஊனுருக உயிர் கசிய விவாதங்களைத் தொடங்கி விட்டார்கள். அவரவர் வேலைகளை அவரவர் பார்க்கட்டும்.
இந்த இதழ் அச்சாகி வாசிப்புக்கு வரும்வேளையில் நீங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகி இருப்பீர்கள். அதற்கான நெஞ்சார்ந்த வாழ்த்தினை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் விரும்புகிறேனோ இல்லையோ, நான் உங்களுக்கு வாக்களிக்கிறேனோ இல்லையோ தமிழ்நாடு ஒருநாள் உங்கள் ஆளுகைக்குள் வரும் என்பதை உணர்ந்தே இருக்கிறேன்.
அதனடிப்படையில்தான் தங்களோடு கொஞ்சம் உரையாட ஆசைப்படுகிறேன்.
”நெஞ்சுக்கு நீதி” ஏறத்தாழ 4750 பக்கங்கள் வரும் என்கிறார்கள். தொடர்ந்து எழுதுபவன் என்கிற முறையில் எனக்கு இது பெரும் வியப்பாக இருக்கிறது.
4750 பக்க சுயசரிதை வேறெதுவும் உண்டா என்பது குறித்து என்னிடம் தகவல்கள் ஏதும் இல்லை. 4750 பக்கங்களுக்குப் பிறகும் தீவிர செயல்பாட்டோடு கூடிய ஒரு நீண்ட வாழ்க்கை அவருக்கு மிச்சம் இருந்திருக்கிறது. அதையும் அவர் எழுதியிருந்தால் அது இன்னும் ஒரு 3000 பக்கங்களுக்கு நகர்ந்திருக்கக் கூடும்.
இரண்டு விஷயங்கள் என்னை வியப்பின் உச்சிக்கு கொண்டு போகின்றன
1) ஒரு எழுத்தாளர் தன் வாழ்நாளில் 5000 பக்கங்கள் எழுதினாலே பெரிது. தன் வாழ்க்கையைப் பற்றி மட்டுமே ஒரு மனிதர் 5000 பக்கங்கள் எழுதியிருக்கிறார்.
2) தனது 75 விழுக்காடு வாழ்க்கையைப் பற்றி மட்டுமே 5000 பக்கங்கள் வருமளவிற்கு அந்த மனிதருக்கு வாழ்க்கையில் செய்திகள் இருந்திருக்கின்றன.
இதுபோக அவர் நாடகங்கள் எழுதியிருக்கிறார், திரை வசனம் எழுதியிருக்கிறார், கவிதைகள் எழுதியிருக்கிறார், புதினங்கள் எழுதியிருக்கிறார், கட்டுரைகள் எழுதியிருக்கிறார், சங்கத் தமிழ், குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா என்று ஏராளாம் எழுதியிருக்கிறார்.
தனது கட்சித் தோழர்களுக்கென்று அவர் எழுதிய கடிதங்கள் கடித இலக்கிய வகையிலே வரும்.
கலைஞரது எழுத்திலே உங்களுக்கும் விமர்சனம் இருக்கவே செய்யும். எனக்கும் அவரது பல செயல்பாடுகளின்மீதும் முடிவுகளின்மீதும் இருப்பதைப் போலவே அவரது எழுத்துக்களின்மீதும் விமர்சனம் உண்டு. உண்மையைச் சொல்லப்போனால் அவரது எழுத்தின்மீதான விமர்சனம் அவருக்கும் இருந்திருக்கவே செய்யும். அவற்றை அவரது நெருங்கிய நண்பர்களிடம் அவர் பகிர்ந்து கொண்டிருக்கவும் கூடும். கொஞ்சம் சிரமப்பட்டு அவற்றை திரட்டி நூலாக்குங்கள். அது நீங்கள் அவருக்கு செய்யும் பெரும் பங்களிப்பாக அமையும்.
நான் இங்கு குறிப்பிட்டு சொல்ல விரும்பும் ஒரு விஷயம் அவர் எழுத்தின்மீது அவருக்கு இருந்த அசைக்க முடியாத நம்பிக்கை.
நெருக்கடி நிலையைப்பற்றி உங்களுக்கு நான் கூறுவது என்பது திரு மோடியிடமே ஒருவன் நூறு பொய்களைக் கூறுவதற்கு சமமாகும். ஆனாலும் உங்களுக்கான இந்தக் கடித்தத்தின் வாயிலாக நானே ஒருமுறை அதை மீள அசைபோட ஆசைப்படுகிறேன்.
கலைஞரை மிகவும் வெறிகொண்டு எதிர்ப்பவர்களும் இந்தியா முழுமையையும் இந்த மண்ணின் மகத்தான தலைவர்களையும் ஏதோ ஒரு வகையில் கொடூரமாக காவு கொண்ட நெருக்கடி நிலையின் கோரக் கரத்தினின்று தமிழகத்தையும் தமிழகத் தலைவர்களையும் குறிப்பாக பெருந்தலைவர் காமராசர் அவர்களையும் அவர் காப்பாற்றிய பாங்கினை நன்றியோடு நினைவு கூரவே செய்கிறார்கள்.
இதையும் இதனால் அவரது கட்சியும் உங்களது குடும்பமும் எதிர்கொண்ட இன்னல்களையும் இன்றைய காங்கிரஸ் தலைவர்களே மிகுந்த நெகிழ்வோடு மேடைகளில் எடுத்து வைப்பதை காண முடிகிறது.
அன்று அவர் இந்திராவின் பக்கம் சாய்ந்திருந்தால் அந்தப் புள்ளியில் இருந்து வரலாற்றில் அவர் இல்லை. அவர் நெருக்கடி நிலையை அவ்விதமாக எதிர் கொண்டிருக்கவில்லை என்றால் இன்றைக்கு திராவிடக் கட்சிகள் இருந்திருக்க வாய்ப்பில்லை.
இப்பவும் நான் சொல்ல வந்ததுகூட வேறு திரு ஸ்டாலின். நெருக்கடி நிலையின்போது பத்திரிக்கைகளுக்கு ”இரட்டைத் தணிக்கை” இருக்கிறது. முரசொலிக்கு இன்னும் கூடவே நெருக்கடிகள் இருந்த நேரம். நீங்கள் உள்ளிட்ட திமுக தோழர்கள் சிறையில். யாரும் அவரோடு இல்லை. சற்றேறக்குறைய தன்னந்தனி மனிதனாக நிற்கிறார்.
அவரது கருத்துக்களை மக்களிடம் கொண்டுபோக வேண்டும். மேடை போட்டு பேச முடியாது. பத்திரிக்கை மூலமாக கருத்தைக் கொண்டுபோக முடியாது. அவரே முரசொலி அலுவலகம் போகிறார். மக்களுக்கான தனது கருத்துக்களை அவரே அச்சுக் கோர்க்கிறார். அவரே துண்டறிக்கைகளாக அவற்றை அச்சடிக்கிறார் யாரும் இல்லாத சூழலிலும்.எப்படி விநியோகிப்பது?
அவரே களமிறங்குகிறார். திமுக கொடியை ஒரு கழியிலே கட்டி அதைத் தன் தோளிலே சாய்த்துக் கொள்கிறார். அண்ணா சாலையிலே நின்றுகொண்டு போவோர் வருவோருக்கெல்லாம் அந்தத் துண்டறிக்கைகளை விநியோகிக்கிறார்.
நேற்றுவரை இந்த மண்ணின் முதல்வர். இன்று கையிலே கட்சிக் கொடியோடு துண்டறிக்கைகளை அந்த மனிதனால் எப்படி விநியோகிக்க முடிகிறது? காரணம் மிகவும் எளிதானது. அவர் எழுத்தின்மீது அவருக்கிருந்த நம்பிக்கை. தன் எழுத்து மக்களை நெருக்கடிக்கு எதிராக களமிறக்கும் என்பதில் அவருக்கிருந்த நம்பிக்கை.
அவரை அவரே எதிர்பார்க்காத வகையில் குளித்தலையில் அண்ணா காரணம் இல்லாமல் ஒன்றும் களம் இறக்கவில்லை திரு ஸ்டாலின். அதற்குப் பின்னனியில் அவருக்கு வலுவான காரணமும் நம்பிக்கையும் இருந்தது.
குளித்தலைக்குப் பக்கத்தில் இருந்த ஒரு குட்டி ஜமீந்தார் தன்னிடம் இருந்த பலநூறு ஏக்கர் நிலங்களைக் கொண்டு ஏகப்பட்ட குடும்பங்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தார். தனி ஒருவனாக களம் இறங்கி ஆட்களைத் தனது பேச்சாலும் செயலாலும் ஒன்றுதிரட்டி அந்த ஜமீந்தாருக்கு எதிராகப் போராடி அந்த அடிமைகளுக்கு அந்த ஜமீந்தாரின் நிலத்தைப் பிரித்து வாங்கிக் கொடுத்திருந்ததாகக் கூறுகிறார்கள்.
திமுக இவ்வளவு பலமாக இல்லாத சூழ்நிலையில், ஆளுங்கட்சி முதலாளிகளுக்கு ஆதரவாக இருந்த ஒரு சூழ்நிலையில் அதை அவர் சாதித்திருக்கிறார் என்றால் அதற்காக மக்கள் அவரை வெற்றிபெற வைத்திருக்கிறர்கள் என்றால் அதிலிருந்து ஒரு பாடம் உங்களுக்கு இருக்கிறது திரு ஸ்டாலின்.
உழைக்கிற மக்களோடு நின்று அவர்களுக்காக போராடினால் அவர்களது வாழ்க்கை விடியும். அந்த எளிய மக்கள் தம் பக்கம் நின்றவர்களைக் கைவிட மாட்டார்கள் என்பதே அது.
அருள்கூர்ந்து யோசித்துப் பாருங்கள் திரு ஸ்டாலின். திமுக உழைக்கும் மக்களிடம் இருந்து பையப் பைய முதலாளிகள் பக்கம் நகர்ந்து போய் இருக்கிற உண்மை உங்களுக்குப் புரியும். மேடைகளில், அறிக்கைகளில் மக்களுக்காகப் பேசுவதோடு மட்டும் இல்லாமல் வாழ்க்கைக்கான அவர்களது போராட்டங்களில் அந்த எளிய மக்களோடு திமுகவை கொண்டு நிறுத்துங்கள்.
இன்னொரு விஷயத்தை நான் இங்கே அவசியம் உங்களோடு உரையாட ஆசைப்படுகிறேன்.
கலைஞர் இறந்தவுடன் அல்லது இறந்து விடுவார் என்று உறுதியாக தெரிந்தவுடன் நீங்கள் உங்கள் குடும்பத்தினரோடு சென்று முதல்வரைச் சந்தித்து அவரை அடக்கம் செய்வதற்கு மெரினாவில் இடம் கேட்கிறிறீர்கள். பிறகு முறைப்படி கட்சிமூலமாக கோரிக்கை வைக்கிறீர்கள். அந்தக் கோரிக்கையை அரசு நிராகரிக்கிறது.
இரவோடு இரவாக உயர்நீதிமன்றத்தை அணுகி வெற்றி பெறுகிறீர்கள். எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறீர்கள். அதற்காகவே உங்களுக்கு ஒரு பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கலைஞர் இறந்தபிறகு இட ஒதுக்கீட்டிற்காகப் போராடிக் கொண்டிருக்கிறார் என்றும் நீதிமன்றத் தீர்ப்பு வந்த்தும் மரணத்திற்குப் பிறகும் கலைஞர் வென்றார் என்றும் திமுக தோழர்கள் எழுதுவதை கண்ணீரோடு என்னாலும் ரசிக்கவே முடிந்தது திரு ஸ்டாலின்.
ஆனாலும் அதை கலைஞரது போராட்டம் என்றோ அல்லது மரணத்திற்குப் பிறகான அவரது வெற்றி என்று மட்டுமோ நீங்கள் எடுத்துக் கொள்ளமாட்டீர்கள் என்று நம்புகிறேன். இதில் நமக்கான ஒரு பாடம் இருக்கிறது.
கலைஞரை அடக்கம் செய்துவிட்டு வந்து படுத்து எழுந்திருப்பதற்குள் அக்கிரஹாரத்து பெண் ஒருவர், ”இனி மெரினா சென்று வந்தால் வீடு வந்ததும் குளித்துவிட்டு பூனூலை மாற்ற வேண்டும்” என்று எழுதுகிறார்.
அதாவது கலைஞரை மெரினாவில் புதைத்ததால் மெரினா தீட்டுப் பட்டு விட்டதாம். அதுவும் பூனூலை மாற்றும் அளவிற்கு அந்தத் தீட்டின் வீரியம் இருக்கிறதாம். பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது ஸ்டாலின்.
அவர்கள் அப்பட்டமாக வெளியே வந்து விட்டார்கள் திரு ஸ்டாலின்.
ஆனால் அதை நாம் சரியாக எதிர்கொள்கிறோமா? என்ற அச்சம் என்னுள் இருக்கிறது.
பார்ப்பன ஆதிக்கத்தை கலைஞர் என்ற சூத்திரர் வென்றுவிட்டதாகவே பெரும்பான்மை பதிவுகள் வந்தன. திமுக தலைவர்கள் சிலரும் அதே பாதையில் நகர முயற்சித்தது மிகுந்த மன வருத்தத்தைத் தந்தது.
”பார்ப்பனரல்லாதார் இயக்கம்” என்று முன்னோர்கள் துவக்கியதன் பொருள் நசிந்துவிடக்கூடாது திரு ஸ்டாலின்.
இது ஒரு சுடுகாட்டுப் பிரச்சினை. கலைஞர் என்ற மிகப் பிற்படுத்தப்பட்ட தலைவரை மெரினாவில் வைத்தால் கடற்கரை தீட்டுப்படும் என்று சொல்வது பார்ப்பனத் திமிர் அன்றி வேறெதுவும் இல்லை.
ஆனால் அதிலிருந்து வெற்றி பெறுவது இடைசாதி வெற்றி என்றோ சூத்திர வெற்றி என்றோ மட்டும் குறுகிக் கொள்ளப்படுமானால் சொல்வதற்கு ஒன்று இருக்கிறது திரு ஸ்டாலின்.
இடைசாதியைச் சார்ந்த ஒருவருக்கு அவருக்கு உரிய நினைவிட்த்தை மறுப்பது பார்ப்பனத் திமிர் என்றால் இடைசாதி தெருக்கள் வழியாக தலித் பிணங்கள் கொண்டு செல்வதற்கு ஏற்படும் இடையூறுகளை என்னவென்று சொல்வது?
இன்னமும் ஊர்த் தெருக்களில் தந்தை அம்பேத்கரின் சிலைகள் சேதப் படுகிறதே திரு ஸ்டாலின்.
அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?
நீங்கள் இதை அருள்கூர்ந்து அக்கறையோடு பரிசீலிக்க வேண்டும் என்று அன்போடு வேண்டுகிறேன்.
பார்ப்பனியத்திற்கு எதிரான இடைசாதி விடுதலைக்கு முன் நிபந்தனை தலித் விடுதலை என்பதை நீங்கள் புரிந்து கொண்டு நகர்வீர்கள் எனில் அது தமிழ் நாட்டிற்கு நல்லதுகளையும் அமைதியையும் கொண்டுவந்து சேர்க்கும். அல்லாது போனால் அது மதவெறி (அது எந்த மதமாயினும்) பாசிஸ்டுகளுக்கு வாசலைத் திறந்துவிடுகிற காரியத்தை சத்தமின்றி செய்யும்.
தோழமைகளை அரவணைத்து நீங்கள் வெற்றி காணவும் இந்த மண் அதனால் பயனுறவும் வேண்டுமாய் வாழ்த்துகிறேன்.
நன்றி.
அன்புடன்,
இரா.எட்வின்.
நன்றி: காக்கை செப் 2018

Tuesday, September 4, 2018

பொய் என்று மட்டும் உங்களால்.....

அந்தக் குழந்தை உங்களை பாசிஸ்ட் என்று முழங்குகிறாள்
நீங்கள் அவள் பின்னணியைத் தேடுகிறீர்கள்
நக்சல் என்கிறீர்கள்
தீவிரவாதி என்கிறீர்கள்
பார்த்தீர்களா தமிழிசை , அவள் சொல்வது பொய் என்று மட்டும் உங்களால் முனகக்கூட முடியவில்லை
தைரியம் இருந்தால் இல்லை என்று நிறுவுங்கள்
அதன்பிறகு அவள்மீது நீங்கள் மானநஷ்ட வழக்கே போடலாம்
அதுவரை அருள்கூர்ந்து உங்கள் அலப்பறையை நிறுத்துங்கள்

03.09.2018

இன்று காலை பள்ளிக்கு புறப்பட்டுக் கொண்டிருந்த நேரம் தோழர் முத்தையா அழைத்தார். வழக்கமாக அந்த நேரத்தில் அவர் அழைக்கிறவர் இல்லை. ஏதோ முக்கியமான செய்தி போல என்று அலைபேசியை எடுத்தேன்.
“பள்ளிக்கூடத்துக்கு கிளம்பிட்டு இருக்கீங்களா?”
“ஆமாம்”
“வைரமுத்து பேசினார்”
“என்னவாம் தோழர்”
இந்த மாத காக்கையை வாசித்ததும் அதில் இருக்கும் தோழர் முத்தையாவின் எண்ணைத் தொடர்பு கொண்டிருக்கிறார். இவர் அலைபேசியை எடுத்ததும், “எட்வினா?” என்று கேட்டிருக்கிறார்.
தான் எட்வின் இல்லை என்று சொன்னவர் தான் காக்கையின் ஆசிரியர் முத்தையா என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டிருக்கிறார்.
தன்னை வைரமுத்து என்றுஅறிமுகம் செய்து கொண்ட கவிஞர் தான் காக்கையை ( Kaakkai Cirakinile ) தொடர்ந்து வாசித்து வருவதாகவும் இதழ் மிகவும் செறிவோடு இருப்பதாகவும் கூறியவர் தான் அழைத்தது எனது இந்த மாத காக்கையில் திரு ஸ்டாலினுக்கான எனது கடிதம் குறித்து பேசவே என்று சொல்லியிருக்கிறார்.
அந்த மொழியும், நுட்பமும், விஷயமும் என்னை உடனே பேச வைத்தது. எட்வினிடம் சொல்லிவிடுங்கள் என்று சொல்லிவிட்டு வைத்து விட்டார் என்று சொல்லிவிட்டு “சரி பள்ளிக்கு கிளம்புங்க” என்று சொல்லிவிட்டு இவர் வைத்து விட்டார்.
சன்னமாக மகிழ்ச்சி அப்பிக் கொண்டது என்பதை மறைக்க விரும்பவில்லை.
வண்டியை வண்டி ஸ்டாண்டில் நிறுத்திவிட்டு வந்து பேருந்து ஏறும் நேரம் அலைபேசி சிணுங்கியது. புதிய எண்ணாக இருந்தது. ஏதோ ஒரு நண்பர் லீவு சொல்வதற்காக பேசுகிறார் போல என்று நினைத்துக் கொண்டே எடுத்து “வணக்கம் எட்வின்” என்கிறேன். “வைரமுத்து பேசுகிறேன்” என்கிறார்.
“அண்ணே, சொல்லுங்க என்கிறேன்”
அந்தக் கடிதம் குறித்து சிலாகித்து ஆறு நிமிடங்கள் பேசுகிறார்.
மொழி, நுட்பம், பாராக்களைப் பிரித்திருக்கிற பாங்கு, விஷயம் என்று பேசிக் கொண்டே போனவர் “சமீபத்தில் நான் வாசித்த மிகச் சிறந்த படைப்புகளுள் இதுவும் ஒன்று. சமீபத்தில் நான் வாசித்த ஆகச் சிறந்த கட்டுரை இது. கலைஞரைப் பற்றி அவரது மரணத்திற்குப் பிறகு வந்து தான் படித்தவற்றுள் இது சிறந்தது.
இப்படி ஒரு கட்டுரை கலைஞரின் பார்வைக்கு சென்றிருந்தால் மகிழ்ந்து அழைத்துப் பேசியிருப்பார் என்றவர் லேண்ட்லைன் எண்ணைக் கொடுத்துவிட்டு பேசிவிட்டு வந்து சந்திக்குமாறு கூரியவர் காக்கைக்கு கடிதமும் எனது கடிதம் குறித்து ஒரு கட்டுரையிலும் எழுதுவதாகச் சொன்னார்.
சொன்ன மாதிரியே காக்கைக்கு மின்னஞ்சல் அனுப்பி விட்டார்.
வைரமுத்து பாராட்டியதும் கரைந்துபோகாதே என்று நண்பர்கள் சொல்லக்கூடும்.
அப்படி இல்லை. நிச்சயமாய் இல்லை.
போப் குறித்த அவரது கட்டுரையில் விலங்குகளைபோல் திரிந்த என்பதுமாதிரி ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றி கவிஞர் வைரமுத்து எழுதியதைக் கடுமையாக விமர்சிக்கிறோம்தான்.
இவருக்கு எதிர்வினையாக தோழர் அறிவுறுவோன் எழுதியதை ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் காக்கையில் உரிய முக்கியத்துவத்தோடு வைத்தோம்.
அந்தக் கட்டுரைகளை தோழர் க.சி அகமுடைநம்பி உச்சி முகர்ந்து பாராட்டியக் கடிதத்தை இந்த இதழில் வைத்திருக்கிறோம்.
தமது மின்னஞ்சலில் இந்த இதழில் வெளிவந்துள்ள அனைத்துப் படைப்புகள் குறித்தும் வைரமுத்து குறிப்பிடுகிறார். எனில் இதையும் அவர் வாசித்திருப்பார்.
தேவைப்படும்போது அவர்மீதான விமர்சனங்களைப் பதியவே செய்வோம். அதில் எமக்கு எந்தத் தயக்கமும் இல்லை.
ஆனால் அவரது அழைப்புகள் எம்மை உற்சாகப் படுத்தியது என்ற உண்மையை இங்குப் பதிவது அவசியம் என்று பட்டது..
வழக்கமாக எழுத்தை மெச்சிக் கொண்டாடுபவன் என்று சொல்லப்படுகிற எனக்கு அதைத் தொடர வேண்டும் இன்னும் பேரதிகமாகத் தொடரவேண்டும் என்று தோன்றுகிறது
#சாமங்கவிய ஐம்பத்தியெட்டு நிமிடங்கள்

Monday, September 3, 2018

02.09.2018

காக்கையில் திரு ஸ்டாலின் அவர்களுக்கு நான் எழுதியிருந்த கடிதம் சரியாக சென்று சேர்ந்ததில் கொஞ்சம் மகிழ்ச்சியாயிருக்கிறது.
கலைஞர் நினைவேந்தலின் பொருட்டு செப்டம்பர் மாத காக்கையை ஒரு வாரம் முன்னதாகவே முடித்திருந்தோம். அட்டைப் படம் தோழர் ட்ராட்ஸ்கி மருது வரைந்த கலைஞர் படம். என்னுடைய கடிதம் உட்பட கலைஞர் குறித்த மூன்று கட்டுரைகள். எனவே நினைவேந்தல் அன்று அரங்கத்தில் விநியோகித்தால் நன்றாக இருக்கும் என்பதால் இந்த ஏற்பாடு.
வெள்ளியன்று திருச்சி NCBH மேலாளர் திரு முரளி அழைத்தார். போன வாரம்தான் நான் தரவேண்டிய பாக்கித் தொகையை வாங்கிப் போனார். கணக்கில் விடுபடல் இருந்து கேட்கிறார்போல என்று நினைத்தேன்.
எடுத்ததும், “அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு” என்று ஆரம்பித்தார். கடிதம் நன்றாக இருப்பதாக கூறினார். புதிய தகவல்கள் என்றும் எடுத்துச் சொன்ன விதம் நன்றாக இருந்தது என்றும் கூறினார்.
மாலை ஷார்ஜாவில் இருந்து வந்திருந்த தங்கை தீபாவின் கணவர் சிவா படித்துப் பார்த்துவிட்டு “மாமா, ஒரு கம்யூனிஸ்டாலதான் இப்படி எழுத முடியும்” என்றவர் கடவூர் நூலகத்திற்கு சந்தா கட்டிவிட்டு சென்றார்.
இரவு ‘ஜனசக்தி’ யில் பணியாற்றும் பிரபு தோழர் முத்தையாவிடம் எண் வாங்கி அரைமணி நேரமெனும் பேசியிருப்பார்.
நேற்று ராஜமுருகு பாண்டியன் (அரச முருகு பாண்டியன்) அழைத்து கடிதத்தின் இறுதிப் பகுதியைக் குறித்து நெகிழ்ந்தான்.
சூத்திர விடுதலைக்கு தலித் விடுதலை முன்நிபந்தனை என்பதை நெகிழ்ந்து கொண்டாடினான்
திரு க.திருநாவுக்கரசு அவர்களும் முன்னால் மத்திய அமைச்சர் சுப்பு லட்சுமி ஜெகதீசன் அம்மாவும் கடிதம் குறித்து பேசியதாக தோழர் முத்தையா கூறினார்.
இருவரும் என்னிடமும் பேசினார்கள்.
மருது மற்றும் மோகன்ராஜின் கலைஞர் குறித்த கட்டுரைகளும் வரவேற்பைப் பெற்றிருப்பதாகவும் முத்தையா கூறினார்
அந்தக் கடிதத்தில் நெருக்கடி நிலையின்போது கலைஞர் துண்டறிக்கைகளை முரசொலி அச்சகத்தில் அச்சடித்தார் என்று எழுதியிருப்பேன். அது அப்படி அல்ல என்றும் அதை தனது ‘நக்கீரன்’ அச்சகத்தில் தான் அடித்து சென்று கலைஞரிடம் கொடுத்த்தாகவும் கூறினார்.
சுப்புலட்சுமி அம்மா “பிரமாதம் எட்வின், ஆமா தளபதிக்கு நீ கடிதங்களை இணையத்தில் எழுதுகிறாயாமே, இதுவரை எழுதியவற்றை எனக்கு மின்னஞ்சல் செய். இனி எழுதுவதை முரசொலிக்கு அனுப்பு என்றார்
இரண்டு விஷயங்கள்
1) யாரும் ஏன் இப்படி ஸ்டாலினுக்கெல்லாம் எழுதிக் கொண்டு என்று கேட்கவில்லை
2) எப்படி ஸ்டாலினை ஸ்டாலின் என்று அழைக்கலாம் என்றும் யாரும் கோவப்படவில்லை
இரண்டுமே நல்ல விஷயங்கள்
கலைஞருக்கு ஏன் இவ்வளவு பக்கங்கள் என்று யாரேனும் கேட்டால் காக்கையை நடத்துமளவு நாங்கள் இருக்கிறோம் எனில் அதில் கலைஞரின் பங்கும் உண்டு என்பதே எமது பதில்
அந்தக் கடிதத்தை நாளை வைக்கிறேன்
#சாமங்கவிய இருபத்தியாறு நிமிடங்கள்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...