Tuesday, April 16, 2024

பள்ளியில இன்னுமொருதரம் படிக்கணுமா?

வழக்கமாக படு சீரியசாக எழுதும் தோழர் அ.மார்க்ஸ் அவர்கள் ஒருமுறை பள்ளிக் கல்வி எப்படிப் பிள்ளைகளுக்கு தண்டனையாக அமைகிறது என்பதை விளக்குவதற்காக மேற்காணும் சந்திரபாபுவின் பாலாக பொதுவாக அறியப்படும் பட்டுக்கோட்டையாரின் பாடல் வரியினை மேற்கோள் காட்டியிருப்பார்

 அந்தப் பாடல் குறித்து கொஞ்சம் பார்க்கலாம்

 ஒரு காதலன் தனது காதலியிடம் அவளது காதலுக்காக என்ன தண்டனைகளை வேண்டுமானாலும் அனுபவிக்கத் தயாராக இருப்பதாகக் கூறுவதுபோல நகர்கிறது அந்தப் பாடல்

 சொல்கிறான்

 பள்ளியில இன்னுமொருதரம் படிக்கணுமா                                                                                   இல்லே பைத்தியம்போல் பாடி ஆடி நடிக்கணுமா                                                                    துள்ளிவரும் காவேரியில் குதிக்கணுமா                                                                                 சொல்லு, சோறு தண்ணி வேறு ஏதுமில்லாம கெடக்கணுமா”

 பைத்தியம் கணக்காக தெருவில் பாடி ஆடித் திரிவது,

வெள்ளக் காவேரியில் குதித்து தற்கொலை செய்து கொள்வது,

ஏதும் உண்ணாமல் பட்டினியாகக் கிடப்பது என்ற

இவை அனைத்தையும் ஒத்தது ‘பள்ளியில் படிப்பது’ என்கிறார் பட்டுக்கோட்டையார்

இவை ஒத்து இருக்க வேண்டும் என்று சிலர் ஆசைப்படுகிறார்கள். இப்படி ஆசைப்படுபவர்கள் இன்று அதிகாரத்தில் இருக்கிறார்கள்.அதிகாரத்தில் இருப்பதனால் இப்படியான கல்விக்கான திட்டங்களை வடிவமைத்து அவற்றை சட்டத்தின் மூலம் நம் மீது திணிக்கப் பார்க்கிறார்கள்

குறிப்பாக, தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் நமக்குத் தந்த வெளிச்சத்தில் இவர்களின் சூதை நம்மால் உணர முடிகிறது. உணர முடிந்த காரணத்தினால் அதன் ஆபத்தை உணர்கிறோம்.

நம் சந்ததியை அழித்துவிடும் இந்தக் கல்வி  என்று புரிந்து கொண்டதால் இது வேண்டாம் என்கிறோம்.

நாம் அழிய வேண்டும் என்று கருதுபவர்கள் அனைவரும் இந்தக் கல்விக்கான தூதுவர்களாக மாறுகிறார்கள்

இந்தத் தூதுவர்கள் ஒன்றிய அமைச்சர்களாக இருக்கிறார்கள், ஆளுநர்களாக இருக்கிறார்கள், ஊடக வியாபாரிகளாக இருக்கிறார்கள், எழுத்தாளர்களாக, கல்விமான்களாக, கலைஞர்களாக  இருக்கிறார்கள்

இவர்களில் பெரும்பாலோர் நம்மவர்களாகவும் இருப்பதுதான் துயரம்

இவர்களை இயக்குகிற சக்திமிக்கவர்கள் பார்ப்பனர்களாக, குறிப்பாக சித்பவனப் பார்ப்பனர்களாக இருப்பார்கள். அல்லது, பார்ப்பனர்கள் சொல்வதைக் கேட்பவர்களாக, அண்டிப் பிழைப்பவர்களாக இருப்பார்கள்

இந்தப் பார்ப்பனர்கள் எப்படிப் பட்டவர்கள் என்று அன்றைய இந்தியத் தலைமை ஆளுநராக இருந்த திரு ரிச்சர்ட் டெம்பிள் அவர்கள் 1879 ஆம் ஆண்டு எழுதிய, 08.07.1962 இல் இந்துஸ்தான் டைம்சில் வெளிவந்த கடிதத்தின் கீழ்க்கண்ட பகுதியை தனது “மகாத்மா ஜோதிராவ் புலே – இந்தியப் புரட்சியின் தந்தை” என்ற நூலின் 31வது பக்கத்தில் தனஞ்செய் கீர் தருகிறார்

இந்நாட்டில் மீண்டும் அரியணை ஏறும்வரை அவர்கள் மனநிறைவே அடைய மாட்டார்கள். மேற்கிந்தியப் பகுதி பார்ப்பனர்களின் தேசிய அரசியல் லட்சியங்களைப் போலத் தொடர்ச்சியான,  நீடித்த தொலைநோக்கு கொண்ட ஒன்றை நான் இதுவரை அறியவே இல்லை”

எவ்வளவு அப்பட்டமான, சரியான படப்பிடிப்பு

இதெல்லாம் சரி, இதற்கும் அவர்கள் இப்படியான ஒரு கல்வித் திட்டத்தை நம் மீது திணிக்க முயற்சிப்பதற்கும் என்ன தேவை இருக்கிறது என்ற கேள்வி இந்தப் புள்ளியில் எழுவது இயற்கை

அவர்கள் அரியணை ஏறிவிட்டார்களே,  அதிகாரம் அவர்கள் கைகளுக்குள் அடைக்கலமாகி விட்டதே. பிறகெதெற்கு அவர்கள் இது விஷயத்தில் இத்தனை மெனக்கெட வேண்டும்?

அவர்கள் பெற்றுள்ள இந்த அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள ஆசைப் படுகிறார்கள்,

அவ்வளவுதான்

இந்த அரியணையும் அதிகாரமும் அவர்களிடமே இருக்க வேண்டுமெனில் வெகு மக்கள் இன்னும் பேரதிகமாய் பின்னோக்கி நகர வேண்டும் என்பதை அவர்கள் மிகச் சரியாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள்

ஆங்கிலேயர்கள் கொடுத்துள்ள இப்போதுள்ள இந்த அளவிற்கான கல்வியே அவர்களது அரியணைக்கு ஆபத்தானது என்பதையும் அவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்

ஆகவே அவர்கள் நம்மைப் பின்னோக்கித் தள்ளக் கூடிய ஒரு கல்வித் திட்டத்தை நம் மீது திணிக்க எத்தனிக்கிறார்கள்

இப்போது இன்னொரு அய்யமும் இயல்பாகவே நம்முள் எழும்

கல்வி மனிதனை முன்னோக்கித் தள்ளும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அது மனிதனைப் பின்னிழுக்கும் என்பதை எப்படி ஏற்பது?

இரண்டு வகையான கல்வியா?

ஆமாம்,

இரண்டு வகைக் கல்விதான்

மனிதனை சிந்திக்க வைத்து, கிடைத்த சிந்தனையின் மூலம் கேள்வி கேட்கச் செய்து தனது சமூகத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துப் போகும் பலத்தை அவனுக்குக் கொடுப்பது ஒரு வகைக் கல்வி

மனிதனை சிந்திக்க விடாமல் செய்து,

அப்படிச் செய்வதன் மூலம் அவனை கேள்வி கேட்க விடாமல் தடுத்து,

எல்லாம் அதன்படிதான் நடந்தது, ”அதன்படிதான் நடந்து கொண்டிருக்கிறது, இனியும் அதன்படிதான் நடக்கும் என்று அவனை நம்பச் செய்து,

அவனைத் தேங்கச் செய்து, பையப் பைய பின்னோக்கி இழுத்துப் போகிற கல்வித் திட்டம் இன்னொன்று 

தன் ஆளுகைக்குட்பட்ட மனிதன் முன்னேறினால் இவர்களுக்கென்ன?

ரொம்பப் பெரிதான தரவுகள் எல்லாம் இதற்குத் தேவை இல்லை. இதை விளக்க இரண்டே இரண்டு வரலாற்று சம்பவங்கள் போதும்

ஒன்று இந்தியாவில்,

மற்றொன்று பிரேசிலில்

தனஞ்செய் கீரின் ”மகாத்மா ஜோதிராவ் புலே” என்ற நூலில் 32 மற்றும் 33 ஆம் பக்கங்களில் உள்ள ஒரு சம்பவத்தைப் பார்ப்போம்

சிறுவனுக்கும் இளையவனுக்கும் இடைப்பட்ட பருவத்தில் அப்போது புலே

பார்ப்பன நண்பர்களிடத்து வெறுப்பற்றவராகவும் அன்பு கொண்டவராகவும் இருக்கிறார். சில பார்ப்பன நண்பர்களும் இவருக்கு உண்டு. அப்படியான ஒரு நண்பருக்கு திருமணம். இவருக்கும் அழைப்பு வருகிறது.

போகிறார்

திருமண ஊர்வலத்தில் இவரைத் தவிர அனைவரும் பார்ப்பனர்கள்

ஒரு கட்டத்தில் இவரை ஒரு பார்ப்பனர் அடையாளம் கண்டு கொள்கிறார். அவருக்கு கோவம் வருகிறது.

அவர் முகமெல்லாம் சிவக்க புலேவைப் பார்த்து,

எலேய், சூத்திரனே, இந்த ஊர்வலத்திலே எங்களோடு சமமாய் வருவதற்கு என்ன தைரியம் உனக்கு

சாதி மரபுகளை மீறிவிட்டாய்

எங்களை அவமானப்படுத்தி விட்டாய்

உனக்கெல்லாம் வெட்கமே இல்லையா. ஓடிவிடு என்று விரட்டுகிறார்.

அவமானத்தில் கிழிந்துபோன புலே வீட்டிற்கு வந்து தன் தந்தையிடம் நடந்தவற்றைக் கூறுகிறார்

புலேவை விரட்டிய அந்தப் பார்ப்பனர் மிகவும் இரக்கம் உள்ளவர் என்றும் இல்லை என்றால் இப்படி பார்ப்பனர்களோடு சரிக்கு சரியாய் ஊர்வலத்தில் வந்த குற்றத்திற்கு யானைக் காலில் தள்ளி மிதிக்கச் செய்திருப்பார்கள் என்றும் அவரது தந்தை ஆசுவாசப்பட்டுக் கொள்கிறார்

தனஞ்செய் கீர் எழுதியது இது. ஆகவே புனைவாக இருப்பதற்கு வாய்ப்பில்லை. ஆனால் கொஞ்சம் கூடக் குறைய இருப்பதற்கு உள்ள வாய்ப்பினை மறுப்பதற்கில்லை

புலேவை நோக்கி அந்தப் பார்ப்பனர் கோவமாக வைத்த குற்றச்சாட்டுகளைப்  பார்ப்போம்

ஒரு சூத்திரன் பார்ப்பனர்களோடு சரிக்கு சரியாய் ஒரு ஊர்வலத்தில் நடந்ததன் மூலம்

1)   சாதி மரபுகளை மீறி இருக்கிறான்                                                                                               2)   பார்ப்பனர்களை அவமானப்படுத்தி இருக்கிறான்                                                             3)   வெட்கங்கெட்ட ஒரு காரியத்தை செய்திருக்கிறான்

 ஒரு திருமண ஊர்வலத்தில்,

அதுவும் தான் அழைக்கப் பட்ட ஒரு திருமண ஊர்வலத்தில்

ஒரு சூத்திரன் தங்களோடு இணையாக நடந்து வருவதையே ஏற்க முடியாத ஒரு பெருங் குற்றமாக பார்ப்பனச் சமூகம் கருதியது. அப்படி நடந்து வருபவனை யானைக் காலில் தள்ளியது. அல்லது, யானைக்காலில் தள்ளுமளவிற்கான குற்றமாக அதைக் கருதியது

இந்த அளவிற்கு இப்போது சாத்தியம் இல்லை என்பதை அந்தச் சமூகம் உணர்ந்தே இருக்கிறது. என்றாலும் முடிந்தவரை இதைப் பாதுகாக்க வேண்டும் என்பதிலும் அல்லது குறைந்த பட்சம் இப்போது இருப்பதையே எல்லையாக்க வேண்டும் என்று கருதுகிறது. இதைக் கடந்து மற்றவர்கள் வந்துவிடாமல் கவனமாக இருக்கிறது

மேல், கீழ் எனும் சாதி மரபு அவசியம் என அது கருதியது, கருதுகிறது

தன்னோடு சூத்திரன் ஒருவன் நடந்து வருவது தனக்கு அவமானம் என்று பார்ப்பனச் சமூகம் கருதியது. இப்போதும் அதன் மனநிலை மாறிவிட்டது என்றெல்லாம் கொள்ளக் கூடாது. அதை பொது வெளியில் கட்டயப்படுத்த முடியாத சூழலை உணர்ந்து இருப்பதால் சகித்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் மீண்டும் தமது அந்தக் கார்காலத்தை மீட்டெடுக்க முயற்சித்தபடியேதான் இருக்கிறது

இதை எல்லாம்கூட நம்மால் புரிந்துகொள்ள முடியும்

அவர்களுக்கு சமமாக நாம் நடக்க நேர்ந்தால் அதற்காக நாம் வெட்கப்பட வேண்டும் என்பதைத்தான் நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை

பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகம் வெட்கம் மானத்திற்கு பயந்த சமூகம் என்பதை அவர்கள் நம்மைவிட நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால்தான் அவர்களுக்கு சமதையாயக நாம் நிற்பது நமக்கு வெட்கக்கேடான ஒரு விஷயமாக நக்குள் புகுத்தி வைத்திருக்கிறார்கள்

கல்வி அனைவரும் சமம் அல்ல என்பதைத்தான் வெட்கக் கேடான விஷயம் என்று நமக்கு உணர்த்திவிடும் என்பதால்தான் அவர்கள் பதறுகிறார்கள்

இந்தப் புள்ளிக்கு மேல் நமக்கு கல்வி இல்லை என்று அவர்களால் சொல்ல முடியாது என்பதையும் அவர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்

ஆதனால்தான் குறைந்த பட்சம்  புராணம், ஜோதிடம் போன்றவற்றை நமது கல்வித் திட்டத்திற்குள் கொண்டுவர  முயற்சிக்கிறார்கள்

இவை நம்மை அவர்களுக்குள் அடக்கி வைக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள்

இனி பிரேசிலுக்கு வருவோம்

பிரேசில் அரசு பிரெய்ரேவை தேசிய எழுத்தறிவு இயக்கத்தின் தலைவராக நியமிக்கிறது.

ஒரு ஆண்டிற்குள் இருபது லட்சம் மக்களை எழுத்தறிவுபெறச் செய்வது என்று முடிவெடுத்து செயல்படுகிறார்

எல்லோரும் எழுத்தறிவு பெற்றுவிட்டால் எல்லோரும் கேள்வி கேட்பார்கள் என்று ராணுவம் பயப்படுகிறது. அப்படி நடந்தால் அது அமெரிக்காவிற்கு ஆபத்தென்று கருதுகிறது

அமெரிக்காவின் கையசைப்பில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றுகிறது.

கடவுளை நிந்திப்பதாகவும் அமெரிக்காவை நிந்திப்பதாகவும் ப்ரெய்ரேமேல் குற்றம் சுமத்தப்பட்டு அவர் கைது செய்யப்படுகிறார். பிறகு அவர் பொலீவியாவில் தஞ்சம் புகுந்தார் என்பது வரலாறு

ஆக எல்லோருக்குமான கல்வி தமக்கு ஆபத்தானது என்று அமெரிக்காவும் கருதி இருக்கிறது. கருதவும் செய்கிறது.

இந்தியாவில் பார்ப்பனர்களும் அவர்களது வலது கைகளும் கருதுகிறார்கள்

மக்களை அடிமைகளாகவே வைத்திருக்கும் கல்வியைக் கொண்டது தனது காலத்து பள்ளிக்கூடம் என்று பட்டுக்கோட்டையார் கருதியதால்தான்

அடிமையாக மாற்றுகிற கல்வியைக் கொடுக்கிற பள்ளிக்கு வேண்டுமானுலும் மீண்டும் ஒரு முறை படிக்கப் போகிறேன், என்னை காதலித்துவிடு என்று நாயகன் காதலியைப் பார்த்துப் பாடுவதாக வைத்திருக்கிறார்

தண்டனையாகக் கல்வியைத் தருகிற  இடங்களாகத்தான் பள்ளிக்கூடங்கள் இருக்க வேண்டும் என்று அவர்கள் கருதுகிறார்கள்

அவர்களது அரசு அதைத்தான் முயற்சிக்கிறது

கல்வித் தூதுவர்களும் அதற்காகத்தான் வழக்காடுகிறார்கள்

புரிந்தவர்கள் அதற்கெதிராகக் களமாடிக் கொண்டிருக்கிறார்கள்

அவர்களோடு கரம் கோர்ப்போம்

”காக்கைச் சிறகினிலே” ஜனவரி 2024

 

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...