கடந்த ஒரு மாதமாக மொழி குறித்து “மிக ஆரோக்கியமானவை” என்று கொள்ளத்தக்க அளவிலான சில நடவடிக்கைகள் ஒன்றிய அரசிடமிருந்து வருவது போன்ற ஒரு பிம்பத்தை பல ஊடகங்கள் உருவாக்க முயற்சித்து வருகின்றன
உலக மொழிகளோடு, அதிலும் குறிப்பாக அண்டை நாடுகளின் மொழிகளோடு நமது மொழிகளுக்கான தோழமையின் அவசியம் குறித்தெல்லாம் ஒன்றிய அரசு அறைபோட்டு கவலைப்படுவது மாதிரியான ஒரு தோற்றத்தை அவை கட்டமைக்க முயற்சித்து வருகின்றன
அந்த செய்திகளின் மெய்த்தன்மை குறித்து நமக்கு அய்யங்கள் இருந்தபோதிலும் அப்படி ஒரு தோற்றத்தையேனும் உருவாக்க வேண்டிய அவசியத்திற்கு ஒன்றிய அரசு வந்திருக்கிறது என்பதே நமக்கு கொஞ்சம் மகிழ்ச்சியைத் தந்தது
இதே காலத்தில் நமது ஆளுநரும் பிரதமரும் கூட தமிழின் தொன்மை குறித்து உரையாடியது குறித்தும் செய்திகள் வந்தன. அவர்கள் இப்படி பேசுவதற்கான தேவை குறித்தும் நமக்கு மகிழ்ச்சி ஏற்படவே செய்தது
ஆனால் இதே கால கட்டத்தில் பீஹார், மேற்குவங்கம், ஒடிசா, மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் வசிக்கும் “குர்மி” இன மக்கள் தங்களது தாய்மொழியான“ குர்மலி”யை அட்டவனைக்குள் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையோடு உயிரைக் கொடுத்து நடத்திக் கொண்டிருக்கும் வீரியமிக்க போராட்டத்தை அதே ஊடகங்கள் ஆனமட்டும் இருட்டடிப்பு செய்து வருவது கவலையைத் தருவதாகவும் உள்ளது
இவற்றின் பின்னுள்ள மெய்த்தன்மை குறித்தும், அரசியல் குறித்தும் நாம் உரையாடத் தேவை இருக்கிறது
“இந்தியைவிட தமிழ் மிகப் பழமையானது என்றும் இது விஷயத்தில் தமிழின் அருகில்கூட இந்தியால் நிற்க இயலாது என்றும் நமது ஆளுநர் ரவி அவர்கள் கூறியதாக 14.04.2023 நாளிட்ட செய்தித் தாள்கள் தெரிவிக்கின்றன
அவரது இந்தக் கூற்று அவரது நண்பர்களுக்கு மாரடைப்பைக்கூட கொண்டு வந்திருக்கும்
“அய்யோ, மனிதன் மனசறிந்து இப்படி ஒரு பொய் சொல்கிறாரே” என்று அவர்கள் கொதிநிலைக்கே போயிருக்கக் கூடும்
தமிழை நீசமொழி என்று சொல்லும் மடங்களைத் தனது குலசாமி கோவில்களாகப் பாவித்து பூசிக்கும் தமது சகா இப்படி சொல்வது என்பது அவர்களுக்கு ஆச்சரியமகத்தான் இருக்கும்
ஆனால் ரவி அவர்கள் அவரது நண்பர்களை வெகுநேரம் மயக்கத்தில் வைத்திருக்கவில்லை
அவர்களது முகத்தில் சடுதியில் நீர்த்தெளித்து அவர்களது மயக்கத்தைத் தெளிவித்து விடுகிறார்
‘பழமை’ என்று வரும்போது தமிழின் அருகில்கூட இந்தி நெருங்க முடியாது என்று கூறியவர்
அண்ணாமலையின் முதல் ’பொய்’க்கும் இரண்டாவது ‘பொய்’க்கும் ஆன இடைவெளியைக்கூட கொடுக்காமல் சட்டென
“தமிழின் பழமைக்கு நிகரானது சமஸ்கிருதத்தின் பழமை” என்று கூறுகிறார்
இது விஷம்,
இதை எதிர்கொள்ள வேண்டும்
ஆனால் அவரது சகாக்களைப்போல அவர் பேசியதில் நமக்கு வியப்படைவதற்கு ஏதும் இருக்கவில்லை.
அவர்களது திட்டம் சனாதன மொழியான சமஸ்கிருதத்தை என்ன விலை கொடுத்தேனும் ஒற்றை ஆட்சி மொழியாக்கி விடுவது என்பதும்
அதற்கான இடை ஏற்பாடாகத்தான் அவர்கள் இந்தியைக் கை எடுக்கிறார்கள் என்பதும் நாம் அறிந்ததுதான்
இப்படி அவர்கள் அம்பலப் பட்டதும் ஏதோ அவர்கள் உளறி மாட்டிக் கொண்டது போலவும், அவர்களை அறியாமல் அவர்களது கொண்டை வெளியே தெரிந்து விட்டது போலவும் நம்மில் பலர் பகடி செய்ய ஆரம்பித்து விடுகிறோம்
ஆனால் உண்மை அது அல்ல
அவர்கள் அவ்வப்போது தங்களது கொண்டையை வெளியே தெரியவிட்டு நாம் எப்படி எதிர்வினையாற்றுகிறோம் என்று நம்மை நாடிபிடித்துப் பார்க்கிறார்கள்
இந்தியைக் குறித்து நாம் அறியாத உண்மைகளை அவர்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள்
இந்திக்காரர்கள் என்று அவர்கள் அட்டவணைப்படுத்தும் பல மக்கள் இந்திக்காரர்களே அல்ல என்பதும் அவர்களுக்கு இந்தியை எழுதவோ படிக்கவோத் தெரியாது என்பதும் நமக்கு வியப்பாக இருக்கலாம்
ஆனால் அதை அவர்கள் அறிந்தேதான் அப்படி செய்கிறார்கள். இதை தோழர் ஆழி செந்தில்நாதன் தனது, “மொழி எங்கள் உயிருக்கு நேர்” என்ற நூலில் மிகச் சரியாக அம்பலப்படுத்துகிறார்
வாரணாசியில் பனாரஸ் என்ற ஒரு மிகவும் புகழ்பெற்ற பல்கலைக் கழகம் இருக்கிறது.
பீஹார் மற்றும் கிழக்கு உத்தரப்பிரதேசம் ஆகியப் பகுதிகளில் இருந்து குழந்தைகள் இந்தப் பல்கலைக்கழகத்தில் படிக்கிறார்கள்
இந்திவழி படிக்கிறார்கள்
அவர்களையும் இந்திக்காரர்கள் என்றே ஒன்றிய அரசும் சொல்கிறது. அந்தக் குழந்தைகளில் பலரும் அப்படியே நம்பவைக்கப்பட்டிருக்கிறார்கள்
இந்த விஷயத்தையும், இந்திக்காரர்கள் என்று அழைக்கப்படுகிற அந்தக் குழந்தைகளுக்கு இந்தியும் தெரியாது, ஆங்கிலமும் தெரியாது என்பதையும் அந்த நூலில் தருகிறார் ஆழி செந்தில்நாதன்
இதனால் பொறியியல் மற்றும் மருத்துவம் படிக்கும் அந்தக் குழந்தைகள் ஏதும் புரியாமல் தவிப்பதைப் புரிந்துகொண்ட ராஜீவ் சங்லா என்ற பேராசிரியர் மருத்துவம் மற்றும் பொறியியல் போன்ற பாடங்களை பேஜ்பூரி ,மைதிலி மற்றும் மாகஹி மொழிகளில் மொழிபெயர்த்து இணையதளங்களில் வைத்து குழந்தைகளுக்கு உதவுகிறார் (மேற்சொன்ன நூல், பக்கம் 46)
இந்தியையோ சமஸ்கிருதத்தையோ வளர்த்தெடுக்க யார் முயன்றாலும் நமக்கு அதில் எந்தவிதமான வருத்தமும் இல்லை
சரியாக சொல்வதெனில், அந்த மொழிகளில் நவீன இலக்கியங்கள் வருமாயின் அவற்றை மகிழ்வோடு இரு கரமேந்தி தமிழ்ப்படுத்திக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்
இந்தியை அவர்கள் வளர்த்தெடுக்கும் விதங்களை நாம் அறிந்தவர்களாக இருப்பதாலும், தமிழ் அளவிற்கு இந்தி பழமையானது இல்லை என்பதை ஆளுநரே ஏற்பதாலும் அதுகுறித்து அவரோடு மல்லுக் கட்டிகொண்டு நிற்க நமக்கு அவசியம் இல்லாது போகிறது
ஆனால் தமிழ் அளவிற்கு சமஸ்கிருதம் பழமையானதா?
இதை ரவி போன்ற மொழி விஷயங்களில் அவ்வளவாக ஞானம் இல்லாதவர்கள் மட்டுமல்ல மொழிகுறித்து கொஞ்சம் புரிதல் உள்ளவர்களும் குழம்பிக் கிடப்பதும் உண்மைதான்
“ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக இந்தியாவின் தென்கோடிப் பகுதியில் இருக்கும் தமிழ்நாட்டில் மிகச்சிறந்த இலக்கிய மலர்ச்சி உண்டானது .எனினும்,,
ஆச்சரியமளிக்கும் வகையில் இதுவரை எழுதப்பட்டதிலேயே நுட்பமான கவிதைகளை உள்ளடக்கியதாக நான் கருதும் இவ்விலக்கியம் மேற்கிலும், அது தோன்றிய இந்தியாவிலுமே புறக்கணிக்கப்பட்டுள்ளது” என்று
”தமிழ்ச் செவ்விலக்கியங்கள், அவை தோன்றிய சூழலும் சமஸ்கிருதத்தில் அவற்றின் சாயலும் என்ற தனது நூலின் அறிமுகத்தில் பதிவுசெய்கிறார் ஜார்ஜ்.எல்.ஹார்ட்
அதற்கான காரணங்களுள் ஒன்றாக
“இதுவரையிலும் பெரும்பாபாலான பண்டைய இந்திய வரலாற்று ஆசிரியர்கள் தெற்கு என்ற ஒன்று இல்லை என்ற நிலையிலேயே எழுதி உள்ளனர்” என்று
“OXFORD HISTORY OF INDIA” என்ற நூலில் வின்செண்ட் ஸ்மித் கூறுவதைப் பார்க்கிறார் ஹார்ட் (அதேநூல், முன்னுரை)
தமிழில் இருந்து சமஸ்கிருத்ததிற்கு போயினவா, அல்லது அங்கிருந்து இங்கு வந்தனவா என்பதில்கூட ஹார்ட் கொஞ்சம் வித்தியாசபட்டு இரண்டும் வேறு எங்கோவிருந்து பெற்றிருக்க வாய்ப்புண்டு என்றும் கருதுகிறார்
இவை இன்னும் ஆய்விற்கு உட்பட்டவை. இது குறித்து இந்த அளவோடு நிறுத்திக்கொள்வோம்
தெற்கென்ற ஒன்று இல்லை என்ற பார்வையை சரியாகப் புரிந்து கொண்டதால்தான் அண்ணா கொதித்தபடி, “இந்திய வரலாறு காவிரிக் கரையில் இருந்து எழுதப்பட வேண்டும்” என்றார்
ஆனாலும் ஹார்ட் இந்த நூலை வெளியிட்டது 1975 இல். இந்த ஐம்பது ஆண்டுகளில் கொஞ்சம்ஆய்வுகள் நகர்ந்திருக்கவே செய்கின்றன.. திரு ஸ்டாலின் அவர்கள் இது விஷயத்தில் கவனமாக இருக்கிறார்.
இத்தோடு இதை நிறுத்திக் கொள்வோம்.
ஆனால் புழக்கத்தில் இல்லாத சமஸ்கிருதத்தை கிட்டத்தட்ட 10 கோடி மக்கள் புழங்குகிற தமிழோடு தேவை இல்லாமல் ரவி அவர்கள் பேசவில்லை.
அதன் பின்னால் மிகக் கூர்மையான அரசியல் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்வோம்
“ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே ‘ஆயுதக் காவல்படை”க்கு தேர்வு எழுதலாம் என்று இருந்ததை தமிழ் உள்ளிட்ட அட்டவணையில் உள்ள 13 மொழிகளிலும் எழுதலாம் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது
மொழிக் கெடுபிடியோடு இந்தி பேசாத மக்களைச் சென்றடைய முடியாது என்பதை ஒன்றிய அரசு புரிந்து கொண்டிருப்பதாகவும் இதைக் கொள்ள முடியும்
அண்டை நாடுகளோடு நல்ல நட்புறவு வேண்டுமானால் அவர்களின் மொழிகளோடு நல்ல நட்புறவு வேண்டும் என்ற புரிதல் ஒன்றிய அரசிற்கு வந்திருப்பது போன்ற ஒரு தோற்றம் நாளிதழ்ச் செய்திகளின்வழி கிடைக்கிறது
“ The language friendship bridge” ஒரு இயக்கத்தை ‘The Indian council for cultural relations” என்ற அமைப்பு கட்டியிருப்பதாக அந்த அமைப்பின் தலைவர் வினய் சகஸ்ரபுத்தே கூறுவதக 10.04.2023 நாளிட்ட “THE HINDU” கூறுகிறது
முதற்கட்டமாக மியான்மர், இலங்கை, இந்தோநேசியா, மற்றும் உஸ்பெஸ்கிஸ்தான் போன்ற நாடுகளில் பேசப்படும் சிங்களம், உஸ்பெக், பர்மீஸ், பாஷா உள்ளிட்ட 10 மொழிகளைக் கையெடுக்க இருப்பதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது
2)
நம் நாட்டில் இருந்து ஆர்வமுள்ளவர்களை அனுப்பி அம்மொழிகளைக்
கற்றுக்கொள்ளச் செய்து அவர்களைக் கொண்டு நமக்குப் பயிற்றுவிப்பது
இவற்றில் இரண்டாவதையே அமைப்பு விரும்புவதாகவும் ஏனெனில்,
அந்த மொழியின் சிறப்பு, சரியான உச்சரிப்பு, ஏற்ற இறக்கங்கள் யாவும் அந்த மக்கள் பேசுவது போலவே இருக்க வேண்டும் என்றும் தாம் விரும்புவதாகவும் அந்த அமைப்பின் தலைவர் வினய் கூறுவதாகவும் அந்த செய்தி கூறுகிறது
ஒரு வகையில் இது நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மொழிகளுக்கிடையே நட்புறவை பேணுவதற்கான முயற்சியைக் கொண்டாடாமல் இருக்கமுடியாது
கொண்டாடுவோம்
ஆனால் அதே ஒன்றிய அரசு நமது நாட்டில் புழங்கும் மொழிகளையெல்லாம் அழித்துவிட்டு ஒற்றை மொழிக்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருப்பதுதான் வருத்தமான விஷயம்
அயல் நாட்டு மொழிகளோடு நட்புறவை வளர்ப்பதற்கான ஒன்றிய அரசின் முயற்சிகளை ஊடகங்கள் ஊதிப் பெருக்கிக் கொண்டிருக்கும் இதே காலத்தில்தான்
கிட்டத்தட்ட நான்கு மாநிலங்களில் புழக்கத்தில் இருக்கும் தமது மொழியை அட்டவணையில் சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையோடு குர்மி இன மக்கள் மக்கள் உயிரைக் கொடுத்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்
பீஹார் , ஒடிசா, ஜார்கண்ட், மேற்குவங்கம் ஆகிய நான்கு மாநிலங்களில் குர்மி இன மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
இவர்களது மதம் “சர்னா”
இந்த மக்கள் 05.04.2023 அன்று தொடங்கி மூன்று நாட்களாகக் கடுமையாகப் போராடி வருகிறார்கள் என்றத் தகவலை 09.04.2023 தீக்கதிரும் தமிழ் இந்துவும் தருகின்றன
தென்கிழக்கு ரயில்வேயின்,
காரக்பூருக்கும் பாடாநகருக்கும் இடையிலான ரயில்தடமும்
ஆத்ரா மற்றும் சண்டில் இடையிலான ரயில் வழித்தடமும் 07.04.2023 வரை முடங்கிக் கிடந்ததாகவும் ,
இந்த வகையில் 225 ரயில்கள் முடங்கியதாகவும் தெரிகிறது
எதற்கிந்த போராட்டம்,
2) குர்மி இனத்தை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க வேண்டும்
3) தங்களது மொழியான குர்மலியை அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் இணைக்க வேண்டும்
மேற்சொன்ன ஒன்றிய அரசின் உலக மொழிகளோடான நட்பிற்கான முயற்சியையும், ஆளுநர் ரவி அவர்களின் அர்த்தமற்ற பேச்சுகளையும் பரபரப்பான முக்கியத்துவத்தோடு வெளியிட்ட ஊடகங்கள் இந்தச் செய்தியை அவ்வளவாகக் கண்டுகொள்ளவில்லை
மொழிகளுக்கிடையேயான நட்பைக் குறித்து உலக அளவில் பேசி ஏதோ தாங்கள் வித்தியாசங்களின் பிள்ளைகள்போல காட்டிக்கொள்ள முயற்சிக்கும் ஒன்றிய அரசு
தன் சொந்த மண்ணின் மக்கள் தங்களது மொழிக்கான போராட்டத்தை இரக்கமற்று நசுக்குவதோடு இருட்டடிப்பும் செய்கிறது
இப்படி முடிக்கலாம்,
1) ஆயுதக் காவல் படையில் தமிழ் உள்ளிட்டு 13 அட்டவணை மொழிகளில் தேர்வெழுதலாம் என்ற உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை வரவேற்போம
2) அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் ஒன்றிய அரசின் அனைத்துத் தேர்வுகளையும் எழுத வழிவகை செய்ய வேண்டும
3) குர்மலி உள்ளிட்ட புழங்கும் அனைத்து மொழிகளையும் அட்டவணைக்குள் கொண்டுவர வேண்டும
4) இந்திக்கும் சமஸ்கிருத்த்திற்கும் வழங்குவது போல் அனைத்து மொழிகளின் மொழிகளின் வளர்ச்சிக்கும் போதிய நிதி ஒதுக்க வேண்டும
5) அயல் மொழிகளுக்கிடையில் நட்புறவை உருவாக்க எடுக்கும் முயற்சியைப் போலவே இந்திய மொழிகளுக்கிடையேயும் இணக்கமான தோழமைமையைக் கட்டமைக்க வேண்டும்
1) “மொழி எங்கள் உயிருக்கு இந்திக்கும் சமஸ்கிருதத்திற்கும் வழங்குவதுபோல் அனைத்து நேர்” ஆசிரியர் : ஆழி செந்தில்நாதன், ஆழி பதிப்பகம
2) “தமிழ்ச் செவ்விலக்கியங்கள் – அவை தோன்றிய சூழலும் சமஸ்கிருதத்தில் அவற்றின் சாயலும், ஆசிரியர்: ஜார்ஜ்எல். ஹார்ட், தமிழில் பு.கமலக்கண்ணன், NCBH
காக்கை மே 2023
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்