Tuesday, April 2, 2024

அன்பிற்கு எதிரான அமைப்பாக பாஜக இருப்பதால்தான்….

சமீபத்தில் நண்பர் ஒருவரின் மகளது திருமணத்தில் கலந்து கொள்வதற்காக வாடகைக் காரில் கடியாபட்டிக்கு சென்றிருந்தோம்.

காரில் இருந்து இறங்குகிறோம். கண்ணில் படுபவர்கள் எல்லாம் புன்னகைத்தபடியே தலையை அசைத்துவாங்கசொல்கிறார்கள். இன்னும் சிலர் கையெடுத்து வணங்கி வரவேற்கிறார்கள்.

அவர்களில் யாரையும் எங்களுக்குத் தெரியாது. எங்களுக்கும் அவர்களில் யாரையும் தெரியாது. பார்ப்பவர்கள் எல்லோரும்சாப்டீர்களாஎன்று கேட்கிறார்கள்.

கொஞ்ச நேரத்தில் கண்ணில் படுபவர்களை சாப்டீர்களா என்று கேட்கிறோம். யாரென்றே தெரியாத நான்கைந்து பேரை கையைப் பிடித்து அழைத்துப் போய்ய் சாப்பிட வைக்கிறாள் கலைமணி.

சிரித்தபடியே எங்களை நோக்கி வந்த மணாமகளின் அம்மாவைப் பார்த்து ஏம்மா, கல்யாணம் அவளுக்கா? உனக்கும் உங்க வீட்டுக்காரருக்குமா. சும்மா மெதக்கறீங்கஎன்று கேட்கிறேன்

வெட்கப் படுகிறார்,

அது ஒரு எளிய திருமணம். சம்பந்தப்பட்டவர்களிடம் மட்டுமல்ல, கலந்து கொண்ட எல்லோரது கண்களிலும் அன்புதென்படுகிறது. 

எல்லோரிடத்தும் மகிழ்ச்சி. அப்படி ஒரு பேரனந்தம்.

அப்படி ஒரு நிறைவை எல்லோரிடத்தும் காணமுடிந்தது.

இவை அத்தனையும் எங்களையும் அப்பிக் கொள்கிறது.

அப்பிக்கொண்ட அந்த அந்த அன்பும் சமாதானமும் இந்த வார்த்தையை தட்டச்சு செய்கிறவரை இருக்கிறது.

இன்னும் கொஞ்ச காலத்திற்கும் இருக்கும்.

காரோட்டிய பிள்ளைக்கு ஒரு அழைப்பு வருகிறது.

மகிழ்ந்து பேசுகிறான். அப்படி கவனிச்சாங்கப்பா, சந்தோசம்னா சந்தோசம், வந்து சொல்கிறேன் என்கிறான்

அது ஒரு எளிய திருமணம். போதாமை இருக்கும். கடன் இருக்கும். எல்லாம் கடந்து அந்த அன்பு, புன்னகை, மகிழ்ச்சி,

எல்லாம் எத்தனை நிறைவானவை.

அன்பிற்குரிய என் நண்பர்களே,

நமக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால் ராமர் என்பது பல கோடி மக்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையை ஒருபோதும் நாம் பரிகசிப்பது கிடையாது.

அந்த ராமனுக்கு எவ்வளவு பெரிய ஆலயத்தை இவர்கள் கட்டினார்கள்.

அந்த ஆலயத்தின் அமைவிடம் குறித்துதான் நமக்கு பிரச்சினையே தவிர அந்த ஆலயத்தின்மீது நமக்கு எந்தப் புகாரும் இல்லை. 

அவ்வளவு பெரிய ஆலயத் திறப்பு.

எவ்வளவு அதிகமான அன்பை மக்களுக்குத் தந்திருக்க வேண்டும். எவ்வளவு மகிழ்ச்சியைத் தந்திருக்க வேண்டும்.

எவ்வளவு ஆழமான சமாதானத்தைத் தந்திருக்க வேண்டும்

அது ஆண்டவன் வீடு என்கிறார்களே

எனில்,

அந்தப் பேராலயத்தின் திறப்பு எத்தனை நிறைவைத் தந்திருக்க வேண்டும்

ஏன் இவை எல்லாம் விளையவில்லை?

ஏன் மண்ணெங்கும் வெறுப்பு?

ஆண்டவன் இல்லை என்பதை எப்போதும் சொல்வோம்.

ஆனால் உண்டு என்று நம்பும் மக்களது நம்பிக்கையை எப்போதும் ஏற்கிறோம்.

ஏன் தமிழ்நாடு மட்டும் எதையும் ஏற்க மறுக்கிறது? என்ற கேள்வி வந்துகொண்டே இருக்கிறது.

அன்பு மட்டுமே இந்தியாவைக் கட்டும் என்று தமிழ்நாடு உறுதியாக நம்புகிறது என்பதுதான் காரணம்.

ராமர் கோவில் திறப்பு விழாவை ஒட்டி அவ்வளவு வெறுப்பை பார்த்த நமக்கு தமிழ்நாடு வேறொரு முகத்தைக் காட்டியது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள நாகமங்கலம் கிராமத்தில் ஒரு குடமுழுக்கு விழா நடக்கிறது.

மகளின் திருமணத்திற்கு தாய்மாமனை அழைப்பதுபோல வெற்றிலைப் பாக்கு பணம் வைத்து இஸ்லாமிய மக்களை அழைத்து மகிழ்கிறார்கள் அந்தக் கிராமத்தின் இந்து மக்கள்.

ஏற்றுக் கொண்ட இஸ்லாமிய மக்கள் ஜமாத்தின் செயலாளர் ஷேக் அப்துல்லா தலைமையில் பள்ளிவாசலில் இருந்து ஊர்வலமாக வருகிறார்கள்.

தங்கை மகளின் திருமணத்திற்கு சீர் சுமந்து வரும் தாய்மாமன், அத்தைக் கணக்காக இஸ்லாமிய ஆண்களும் பெண்களும் தேங்காய், பழங்கள், பட்டு என்பதாக சீர்தட்டு சுமந்து வருகிறார்கள்.

நாதஸ்வரம் தவில் இசையோடும் சீரோடும் வரும் அண்ணன்களையும் அண்ணிகளையும் வரவேற்பதுபோல் இந்துப் பெண்கள் இஸ்லாமியப் பெண்களை மலர்ந்த முகத்தோடு, தங்களது விரிந்த கைகளுக்குள் வாரி அணைத்துக் கொள்கிறார்கள்.

ஆண்களோ தங்களது மைத்துனர்களை, சகோதரிகளை வாரிக் கொள்கிறார்கள்

அந்தக் கிராமத்து வெளி எங்கும் அன்பு, அன்பு, அன்பு

”இனி இந்தக் கிராமத்தில் எந்த விஷேசம் நிகழ்ந்தாலும் இரு பிரிவினரும் ஒன்றாகச் சேர்ந்துதான் நடத்துவோம் என்று இரு பிரிவினரும் ஒன்றாக பேட்டி தருகிறார்கள்.

இது 2024 ஜனவரி இறுதியில் நடந்திருக்கிறது.

அன்பும் ஈரமுமாய் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அதைத்தான் மக்களும் விரும்புகிறார்கள்.

வெறுப்பும் குரூரமும் பதட்டமுமாய் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறது பாஜக. .

அன்பிற்கு எதிரான அமைப்பாக பாஜக இருக்கிறது. ஆகவே பாஜக இந்தத் தேர்தலில் முற்றாகத் துடைத்தெறியப்பட வேண்டும் என்று சொல்கிறோம்.

கடும் மழையால் தமிழ்நாடு பாதிக்கப் படுகிறது. மிகப் பெரியப் பேரிடர். ஆனால் அதைப் பேரிடர் என்று அறிவிக்க இயலாது என்கிறார் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா. அவர் மறுத்ததைக்கூட ஒருவகையில் கொள்ளலாம். ஆனால் அப்போது அவர் வெளிப்படுத்திய உடல்மொழி ஆணவத்தின் உச்சம்.

இன்றுவரை ஒன்றிய அரசு உரிய நிவாரணத் தொகையை வழங்கவில்லை. படாதபாடுபட்டு மாநில அரசு தன் மக்களுக்கு நிவாரணம் வழங்கினால் அதை பிச்சை என்று கொச்சைப் படுத்துகிறது ஒன்றிய அரசு.

மாநில அரசின் அன்பை பிச்சை என்றும் மக்களைப் பிச்சைக்கார்ர்கள் என்றும் கொச்சைப் படுத்துகிறது பாஜக.

தான் மட்டுமே ஊழலற்ற கட்சி என்று தனக்குத் தானே சன்றிதழ் வழங்கிக் கொள்கிறது பாஜக.

தேர்தல் பத்திர மோசடியில் சிக்கி நார் நாராய் கிழிந்து தொங்குகிறது பாஜக.

மோசடிப் பேர்வழிகள் மீது அமலாக்கத்துறையை ஏவுவது. அவர்களை மிரட்டி பத்திரங்களை வாங்கி தங்கள் கட்சிக்கு வாங்கிக் கொள்வது என்ற அறமற்ற காரியத்தை செய்து வந்திருக்கிறது பாஜக.

தேர்தல் பத்திரங்கள் யார் மூலமாக யாருக்குப் போயிருக்கின்றன என்று வெளிப்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியும் வழக்குத் தொடுத்திருக்கிறது.

முழுமையான விவரங்கள் இன்னும் வெளிவராத காரணத்தினால் அவை வெளிவர வேண்டும் என்று குரல் கொடுக்கிறோம்.

தேர்தல் பத்திரங்கள் முழுமையாக வெளிவந்து விட்டால் இப்போது அதற்காக குரல் கொடுக்கும் கட்சிகள் ஓடி ஒழிந்து கொள்ளும் என்று அமித்ஷா கூறி இருக்கிறார்.

ஒரு பைசாவிற்கான பத்திரத்தைக்கூட பெற்றுக்கொள்ளாத கட்சியும் உண்டு திரு அமித்ஷா. அந்தத் திமிருக்குப் பாத்தியதைப் பட்டவர்கள் நாங்கள்.

தேர்தல் பத்திரத்தை வாங்குவதில் எமக்கு விருப்பம் இல்லை.ஆனால் அவற்றை எந்த சகாயத்தின் வழியாகவும் இல்லாமல் வாங்குவது தவறில்லை

ஆனால் பாஜக, 

  1)  அமலாக்கத்துறை, CBI, IT உள்ளிட்ட துறைகளை அனுப்பி     மிரட்டி அவற்றைப் பெற்றிருக்கிறது

 2)  பத்திரம் வழங்கியவர்களை தண்டனையில் இருந்து காப்பாற்றி இருக்கிறவழங்கியவர்களுக்குது

3)  பத்திரம்  சலுகைகளை வழங்கி இருக்கிறது 

4)  பத்திரம் வழங்கியவர்களுக்கு ஆதரவாக அரசின் கொள்கைகளை மாற்றி அமைத்திருக்கிறது

ரஃபேல் கடந்து தேர்தல் பத்திரம் வரைக்கும் ஊழலின் முகவரியாக பாஜக இருக்கிறது

 1)  அன்பிற்கு எதிராக பாஜக இருக்கிறது

2)  மதம் உள்ளிட்ட அனைத்தின் வழியாகவும் வெறுப்பையும் பதட்டத்தையும் விதைக்கிறது பாஜக

3)  விஞான வழியில் ஊழலை செய்கிறது

4)  மாநிலங்களுக்கு உரிய உரிமைகளை நிவாரணத்தைத் தர மறுக்கிறது பாஜக

5)  பேரிடருக்கான நிவாரணத்தை பிச்சை என்று கொச்சைப் படுத்துகிறது பஜக

ஆகவேதான் சொல்கிறோம் 2024 தேர்தலில் பாஜக முற்றாகத் துடைத்தெரியப்பட வேண்டும்.

 - புதிய ஆசிரியன், ஏப்ரல் 2024


No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...