1919 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் தேதி ரௌலட் சட்டம் இயற்றப்படுகிறது
மூன்று நாட்கள் கழித்து 21.03.1919 முதல் அது அமலுக்கு வருகிறது
அதை எதிர்த்து மக்கள் இயக்கங்களை முன்னெடுக்கிறார்கள்
அதன் ஒரு பகுதியாக 13.04.1919 அன்று அமிர்தசரசில் உள்ள ஜாலியன்வாலாபாக் என்ற இடத்திலும் ரௌலட் சட்டத்தை எதிர்த்து ஒரு கூட்டம் நடக்கிறது
உள்ளே புகுந்த டயர் என்பவன் பைத்தியக்காரன் காக்காவை சுடுவதுபோல மக்களை சுட்டுக் கொள்கிறான்
அதன் நீட்சியாக காங்கிரஸ் கட்சியின் ஒரு மாநாடு 1920 செப்டம்பர் மாதத்தில் கல்கத்தாவில் நடைபெறுகிறது
அன்னியப் பொருட்களை நிராகரிப்பது உள்ளிட்ட ஏராளமான தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன
அந்தத் தீர்மானங்களை விளக்குவதற்காக நாடெங்கிலும் கூட்டங்களை காங்கிரஸ் கட்சி நடத்தியது
அதிலொரு கூட்டம் சென்னை திருவல்லிக்கேணி கடற்கரையில்
காந்தி
அப்போது
பள்ளி மாணவனாக இருந்த தோழர் பி.ராமமூர்த்தி அவர்களும் காந்தியின் உரையைக் கேட்கப் போகிறார்
”காந்தி என்னமா பேசினார், காந்தி என்னமா பேசினார்”
என்று புலம்பிக்கொண்டிருந்தவரை அவரது அண்ணான் மகாலிங்கம் ஆவலோடு
காந்தி என்னடா பேசினார்? என்று கேட்கிறார்
யாருக்குத் தெரியும்? காலையில் ”இந்து” பார்த்துதான் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிறார்
என்ன பேசினார்னே தெரியாம இவ்வளவு பில்டப்பா என்பது மாதிரி மகாலிங்கம் நக்கல் செய்கிறார்
சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் இதை வாசித்தபோது நமக்கும் நக்கலாகத்தான் இருந்தது
என்ன பேசினார்னு புரியாமல் கொண்டாடுவது என்ன வகை மனோபாவம் என்றுதான் தோன்றியது
31.03.2024 அன்று தில்லி ராமலீலா மைதானத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சிபுசோரன் ஆகியோரது சட்டத்திற்கு புறம்பான கைதினைக் கண்டித்து இந்தியா கூட்டணி நடத்திய கூட்டம் நடந்தது
கல்பனா சிபுசோரன் பேசுகிறார்
இறுதியாக “ஜெய் ஹிந்த்” என்று மூன்றுமுறை சொன்னது தவிர எதுவும் புரியவில்லை
என்ன மொழி என்றும் புரியவில்லை
எட்டு நிமிடமும் வைத்த விழி திருப்பாமல் கவனம் பிசகாமல் கேட்கிறேன்
சுனிதா கெஜ்ரிவால் பேசியபோதும் அப்படியே
மொழி புரியவில்லை
அவர்கள் கேட்ட நியாயம் புரிகிறது
அவர்களது ஆதங்கம் புரிகிறது
அவர்களது கோவம் புரிகிறது
அடுத்த நாள் சோஷியல் மீடியாக்களிலும் செய்தித் தாள்களிலும் அவர்கள் என்ன பேசினார்கள் என்று தேடுகிறேன்
என்ன ஆச்சரியம்
எதுவும் புதிதாக இல்லை
நேற்று அவர்கள் பேசும்போது என்ன புரிந்து கொண்டேனோ நூல் அளவு கூடவோ குறைவாகவோ இல்லை
அநியாயத்திற்கு எதிரான நியாயத்தின் குரலை,
ஆதங்கத்தை
கோவத்தைப் புரிந்துகொள்ள மொழி அவசியம் இல்லை என்பது புரிந்தது
என்ன எனக்கு அறுபதில் புரிகிற இந்த உண்மை தோழர் P.R அவர்களுக்கு அவரது பள்ளிக் காலத்திலேயே புரிந்திருக்கிறது
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்