Sunday, October 7, 2018

கலைஞர் சமாதிக்கு போகும் திமுகவினருக்கு....

தம்பி கரு.பழனியப்பனின் சமீபத்திய உரை ஒன்றை யூட்யூபில் கேட்கிற வாய்ப்பு கிடைத்தது
கலைஞருக்கான நினைவேந்தல் நிகழ்வு அது
அவரது உரையை இப்படி முடித்திருந்தார்,
கலைஞர் சமாதிக்கு போகும் திமுகவினர் தமக்குப் பிடித்த புத்தகத்தை எடுத்துப்போய் அங்கு வைத்துவிட்டு வந்துவிடுமாறு கூறினார்.
போகும் ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த புத்தகத்தை கலைஞரது சமாதியில் வைத்துவிட்டு அங்கு இருக்கும் புத்தகங்களில் தமக்குத் தேவையான புத்தகம் ஒன்றை எடுத்துக் கொண்டு திரும்புமாறும் கூறினார்
பழநியப்பனின் கோரிக்கை நடைமுறைப்படுத்தப் படுமானால் அது வெறிகொண்ட வாசகராக வாழ்ந்து மறைந்த அந்த மனிதருக்கான உண்மையான அஞ்சலியாக இருக்கும்
இரண்டு விஷயங்கள் இங்கு சொல்லப்படாத நிபந்தனைகள்
1) தாம் படித்ததில் தமக்குப் பிடித்ததை மட்டுமே கலைஞரது சமாதியில் வைக்க வேண்டும்
2) தமக்குப் பிடித்த புத்தகத்தை கலைஞரது சமாதியில் இருந்து எடுத்துவரும் புத்தகத்தை அவசியம் வாசிக்க வேண்டும்
இதை நேர்மையாக நடைமுறைபடுத்தினால் கலைஞர் சமாதிக்கு போய் வந்த ஒருவர் அதன்பொருட்டு இரண்டு நூல்களை வாசித்திருப்பார்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட அலுவலகங்களில் நூலகங்கள் ஏற்படுத்தப்படும் என்று அந்தக் கட்சியின் தலைவர் திரு ஸ்டாலின் அவர்கள் கூறியிருந்த நிலையில் கரு.பழனியப்பனின் இந்த கோரிக்கை அவசியமாக நடைமுறைப்படுத்தப் படுவது நல்ல விளைவுகளைத் தரும்
இதை கலைஞர் சமாதி என்பதைக் கடந்து பொது மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்கள், ரயிலடிகள், சந்தைகள் போன்ற இடங்களிலும் விரிவுபடுத்தலாம்
இதன்மூலம் ஒரு மனிதன் தான் வாசித்து முடித்த புத்தகத்தோடு சென்று நூல்களுக்கென்று ஒடுக்கப்பட்டுள்ள இடத்தில் அதை வைத்துவிட்டு தனக்குத் தேவையானதை எடுத்துக் கொண்டு போவதன் மூலம் ஒரு நூலை வாங்கியதன்மூலம் இரண்டாவது நூலையும் வாசித்து விடுவார், அடுத்தடுத்து இந்த இடங்களுக்கு போகும்போது அவர் ஒரே புத்தகத்தை வாங்கியதன் மூலம் ஒரு கட்டத்தில் நூற்றுக் கணக்கான புத்தகங்களை வாசித்துவிடக்கூடிய வாய்ப்பை பெற்றுவிடுவார்
ஒருவர் திருச்சியில் இருந்து மதுரை போகிறார் என்று வைத்துக் கொள்வோம். வீட்டில் இருந்து தான் வாசித்து முடித்த புத்தகம் ஒன்றை கையோடு எடுத்து வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். பேருந்து நிலையத்தில் புத்தகப் பரிமாற்றத்திற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் வைத்துக் கொள்வோம்.
அவர் வீட்டில் இருந்து கொண்டு வந்திருந்த புத்தகத்தை வைத்துவிட்டு 48 அல்லது 64 பக்க அளவிலான ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு மதுரை பேருந்தில் அமர்ந்து வாசிக்கத் தொடங்கினால் மதுரைக்கான இரண்டரைமணிநேரப் பயணத்தில் அதை வாசித்து விடுவார்.
அதேபோல மதுரையிலிருந்து திருச்சி வருவதற்குள் இன்னொமொரு புத்தகத்தை வாசித்துவிட முடியும் அவரால்
ஆக, ஒருவர் மதுரை சென்று திரும்புகிற பயணநேரத்தில் இரண்டு புத்தகங்களை வாசித்துவிட முடியும்
இது நினைக்கிற மாதிரி அப்படி ஒன்றும் எளிதான காரியம் இல்லை. நிறைய நடைமுறைச் சிக்கல்கள் இதி உள்ளன என்பது பழனியப்பனுக்கும் தெரியும், எனக்கும் தெரியும்.
ஆனால் இது தீர்க்கவே முடியாத சிக்கல் இல்லை
1) வைக்கப்படும் நூல்களின் பாதுகாப்பு
2) தாறுமாறாக நூல்களை யாரும் எடுத்துக் கொண்டு சென்றுவிடாமல் மேலாண்மை செய்வது
3) தரக்குறைவான, ஆபாசமான நூல்கள் அந்த இடங்களுக்கு வரவிடாமல் கண்கானிப்பது
போன்ற காரியங்கள் சிரமமானவைதான். ஆனால் இயலாதவை அல்ல. தொடங்கி ஒரு வடிவம் பெறுகிறவரையில் இது சிரமம்தான். ஆனால் ஒரு கட்டம்வரை நகர்த்திவிட்டோம் என்றால் பிறகு இது ஒரு ஜீவநதிபோல தானாய் நகர ஆரம்பித்துவிடும்.
எந்தஒரு சமூகநலத் திட்டத்தைவிடவும் அதிக பலனைத் தருகிற திட்டமாகவும் இது இருக்கும்.
இடதுசாரி கட்சி அலுவலகங்களில் இதை நடைமுறைப் படுத்தவேண்டும் என்பது என் கோரிக்கை.
இதற்கான திட்டமிடுதலிலோ செயலாக்குவதிலோ நமது பங்களிப்பு தேவைப்படும் பட்சத்தில் தயாராகவே உள்ளோம்
#சாமங்கவிந்து 2 நிமிடங்கள்
07.10.2018

Saturday, October 6, 2018

தர்மயுத்தத்தின் உள்வெளி மற்றும் புறவெளிக் கூறுகள்

எடப்பாடி அவர்களை நீக்குங்கள் என்னை ஆதரியுங்கள் என்பதாக அங்கு
தினகரன் மற்றும் சசிகலா அவர்களின் குடும்பத்தையும் வெளியேற்றிவிட்டு என்னை முதல்வராக்குங்கள் என்று இங்கு
என்னை நோக்கி சட்டமன்ற உறுப்பினர்கள் வருவார்கள் நான்தான் அதிமுக என்று பொதுவெளியில்
இது தர்மயுத்தத்தின் உள்வெளி மற்றும் புறவெளிக் கூறுகள்
துணைமுதல்வர் என்பது தர்மயுத்தத்தின் விளைவு

”நான் நல்ல குடும்பத்தில் பிறந்தவன்” என்று...

ஒரே கேள்வி திரு பன்னீர் சார்
”நான் நல்ல குடும்பத்தில் பிறந்தவன்”
என்று நீங்களே உங்களைப் பற்றிக் கூறிக்கொள்ள வேண்டிய அவசியம் ஏன் வந்தது?

ஒன்றிணையுங்கள்

இந்த வரிசையில் இந்த செய்திகளை முந்தாநாள் (04.10.2018) நான் வாசித்தது தற்செயலாகத்தான்
1) ராஜஸ்தானிலும் மத்தியப் பிரதேசத்திலும் நடக்க இருக்கிற சட்டமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ்வாதிக் கட்சி தனித்துப் போட்டியிடும் என்பதாக இன்றைய THE HINDU வில் வந்திருக்கக் கூடிய அந்தக் கட்சியின் தலைவர் மாயாவதியின் அறிக்கை
2) ”கூட்டணி என்பதே காங்கிரஸ் கட்சியின் ரத்தத்திலே கிடையாது. காங்கிரசைப் பொறுத்தவரை நேரு குடும்பம்தான்” என்பதாக இந்திய சட்ட அமைச்சர் மாண்புமிகு ரவி ஷங்கர் பிரசாத் இன்றைய THE HIIDU வில் தந்திருக்கும் அறிக்கை
3) பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஓரணியாக திரட்டுவது உறுதி என்பதாக இன்றைய தினமணியில் வந்திருக்கக் கூடிய காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு சசி தரூர் அவர்களின் அறிக்கை
இந்தியாவிற்கான மிகப் பெரிய அச்சுறுத்தலாக, உலகமே பொறாமைப்படும் இந்தியாவின் பன்முகத் தன்மையை சிதைத்துப்போடும் செயலில் தனது அதிகாரம் செல்வாக்கு அனைத்தையும் கையெடுத்து அதிதீவிரமாய் வெறிகொண்டு இயங்கும் பாஜகவை, எந்தக் கேள்விக்கும் பதில்தரத் தேவையில்லை என்று மக்களை அவமதிக்கும் பாஜகவை, எதிர்கொள்வதற்கு எதிர்க்கட்சிகள் எதுகடந்தும் ஒன்றிணைவது அவசியமாகப்படும் இந்த நேரத்தில் மாயாவதி அவர்கள் இப்படி பேசியிருப்பது கவலையளிப்பதாக இருக்கிறது.
“they (congress) are getting arrogant and are under the misconception that they can defeat the BJP on their own, but the ground reality is that people haven’t forgiven the congress for mistakes and corruption. They don’t seem to be ready to rectify themselves”
என்று மாயாவதி அவர்கள் கூறியிருப்பதை காங்கிரஸ் எப்படி எடுத்துக் கொள்கிறது என்று தெரியவில்லை. ஆனால் மிகுந்த அக்கறையோடும் கவனத்தோடும் இதை காங்கிரஸ் அணுகவேண்டும் என்று இந்த மண்ணின்மீது நேசம் வைத்திருக்கிற ஒவ்வொருவரும் விரும்புகிறோம்.
காங்கிரஸ் ஆட்சியில் ஒப்பந்தம் செய்யப்பட்டபோது இருந்த விலையைவிட ஒன்பது சதவீதம் குறைவான விலையில் ரஃபேலிடம் இருந்து தாங்கள் விமானங்களை வாங்குவதாக பாஜக கூறுகிறது. எனில் விலை குறையும்போது வாங்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை கூடுவதற்கு பதில் குறைந்திருப்பது ஏன்? இதுவே சந்தேகத்தைத் தருகிறது. கேட்டால் பதில் சொல்ல மறுக்கிறார்கள். மாற்று அரசாங்கம் வந்தால்தான் என்ன நடந்திருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும் என்று செய்தியாளார்கள் சந்திப்பில் திரு ப.சிதம்பரம் அவர்கள் கூறியுள்ளதை காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் உணர வேண்டும்.
1) ரஃபேலில் என்னதான் நடந்திருக்கிறது
2) பணமதிப்பிழப்பு ஏன் கொண்டுவரப்பட்டது?
3) இதனால் பலனடைந்தவர்கள் யார்?
4) வங்கிகளை ஏமாற்றிவிட்டு பெருமுதலாளிகள் பாதுகாப்பாக வெளிநாடுகளுக்கு தப்பித்துச் செல்வதின் பின்னனியில் உள்ள அரசியல் என்ன?
5) பெட்ரோல் டீசல் விலை ஏறிக்கொண்டே இருக்கிறது. இதனால் பலனடைந்தவர்கள் யார்?
போன்ற விவரங்கள் எல்லாம் மக்களுக்கு தெரிய வேண்டும். இது சாத்தியப்பட வேண்டுமானால் மத்தியில் பாஜக அல்லாத மாற்று அரசு வரவேண்டும்.
குறைந்தபட்சம் இதற்காகவேனும் மத்தியில் ஒரு மாற்று ஆட்சி வரவேண்டும் கனவான்களே. இன்னொருமுறை பாஜக வந்துவிட்டால் அகிலேஷ் சொன்னதுமாதிரி நாமெல்லாம் பக்கோடா விற்க போவதைத் தவிர வேறு வழியில்லை தலைவர்களே.
செல்வி மாயாவதி அவர்களுக்கும் இதில் பொறுப்பு உண்டு. காங்கிரஸ் தவறு செய்யவில்லை என்று சொல்லவில்லை. காங்கிரஸ் ஊழலே செய்யவில்லை என்றும் சொல்லவில்லை. ஆனால் அவை எதைவிடவும் பாஜக என்பது கொடிதானது என்பதை இந்த நான்கரை ஆண்டுகால அவர்களது ஆட்சி எழுத்துக்கூட்டி நமக்கு பாடம் நடத்துகிறது என்பதை நீங்கள் உணரவேண்டும் மாயாவதி. நீங்களேகூட சோனியா காந்தியும் ராகுலும் நேர்மையான அணுகுமுறையோடு இருப்பதாகக் கூறியுள்ளீர்கள் என்று ”இந்து” சொல்கிறது.
இதை திரு ராகுலுக்கும் திருமதி சோனியா அவர்களுக்கும் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளோம்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் கட்சி நிச்சயம் எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைக்கும் திரு சசி தரூர் கூறியுள்ளதாக “04.10.2018 தினமணி” கூறுகிறது.
மாநிலத் தேர்தல்களில் கூட்டணிக் கட்சிகளை உதாசீனம் செய்துவிட்டு பாராளுமன்றத்தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம் என்பது அயோக்கியத் தனமானது மட்டுமல்ல நடைமுறை சாத்தியமில்லாததும் ஆகும்.
மாயாவதி அவர்களின் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து திரு திக் விஜயசிங் பதில் அளித்துள்ளார்.
எல்லோருக்கும் ஒன்றை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
திரு O.பன்னீர்செல்வம் அவர்கள் தன்னை சந்தித்ததாக திரு டிடிவி தினகரன் கூறியதும் சிலர் பதறினார்கள். சிலர் சிரித்தார்கள். சிலர் கடந்து போனோம். அது நல்லது என்றும், டிடிவி தினகரனும் O.பன்னீரும் எடப்பாடி அவர்களும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அப்போதுதான் திமுகவை வெற்றிகொள்ள முடியும் என்றும் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு கனகராஜ் கூறுகிறார்.
சுருட்டுவதைத் தவிர எந்தவிதமான கோட்பாடுகளுக்குள்ளும் சிக்கிக் கொள்ளாத அதிமுக அணியினர் தங்களது எதிரியான திமுகவை வீழ்த்த ஒன்றிணைய வேண்டும் என்று கனகராஜ் போன்ற மனிதர்களே யோசிக்கும் போது,
தலைவர்களே எதுகடந்தும் ஒன்றிணைய முயற்சி செய்யுங்கள்.

Thursday, October 4, 2018

அதனால்தான் ராஜாஜி பள்ளிகளை மூடினார் அதனால்தான் பெருந்தலைவர் பள்ளிகளைத் திறந்தார்.

சர்க்கார் படத்தின் பாடல்கள் மத்திய அரசை விமர்சிப்பதாக உள்ளன. எனவே அந்தப் படத்தை வெளியிட விடமாட்டோம் என்கிறார் பாரதிய ஜனதாக் கட்சியின் தேசியச் செயலாளர் H.ராஜா.
என்ன செய்யப் போகிறார் H.ராஜா என்று நமக்குத் தெரியவில்லை. நீதிமன்றத்திற்குப் போகப் போகிறாரா அல்லது படம் வெளியாகிற தியேட்டர்களின்மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிடப் போகிறாரா?
அவர் எதையோ செய்துவிட்டுப் போகட்டும். அது அவர் கவலை. அவர் திறமை.
ராஜா விடமாட்டேன் என்று சொன்னால் படம் செமையா போயிடும் என்கிறார்கள் திரு விஜயின் ரசிகர்கள். அது அவர்கள் நம்பிக்கை.
இது ஒருபுறம் இருக்க சர்க்கார் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவினை மிகப் பிரமாண்டமாக வெளியிட்டு இருக்கிறார்கள்.
அதற்கான செலவுத் தொகையை என் மகன் வ. கீரா விடம் கொடுத்தால் ஒரு அழகான படத்தையே எடுத்து விடுவான்.
அவ்வளவு பிரமாண்டம், அவ்வளவு செலவு.
இது திரு H.ராஜாவிற்கான எதிர்வினையா அல்லது வேறு எதுவோவா அது குறித்தும் நமக்கு கவலை இல்லை.
அந்த விழாவில் உரையாற்றிய திரு விஜய் தனக்கும் முதல்வராவதற்கு ஆசை உண்டு என்பதை வெளிப்படையாகவே சொல்லிவிட்டார்.
அதிலும் நமக்கு இப்போதைக்கு கருத்து எதுவும் இல்லை.
முதல்வர் பதவிக்கான வேட்பாளர்கள் பட்டியல் ஒரு கோடு நீண்டிருக்கிறது. அவ்வளவுதான்.
திரு பார்த்தசாரதி லண்டன் ஓடியதன் மூலம் குஜராத் மாநிலத்தைச் சாராத ஒருவரும் வங்கிக் கடனைக் கட்டாமல் கம்பி நீட்டிய வரலாறு பதியப் பட்டிருக்கிறது.
ஆனால் இவை அனைத்தையும் தூசியைப் போல் கருதச் செய்துவிடும்படியான ஒரு செய்தியை இந்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது.
நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சகம் மாநிலங்களில் கல்வித்தரம் எப்படி இருக்கிறது என்று ஒரு ஆய்வினை நிகழ்த்தியது. அந்த ஆய்வின் முடிவில் தேசத்தில் 13,511 கிராமங்களில் பள்ளிக்கூடமே இல்லை என்கிற உண்மை கண்டறியப்பட்டுள்ளது.
29.09.2018 அன்று வெளிவந்த விடுதலை ஞாயிறு மலரில் இந்தச் செய்தியைப் படித்ததில் இருந்து நிலைகுலைந்து போயிருக்கிறேன். இதைவிடவும் மேலே பார்த்த எது ஒன்றும் என்னை ஏதும் செய்துவிடவில்லை.
கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பார்கள். என்னைக் கேட்டால் பள்ளி இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பேன்.
பள்ளிக்கூடம் இல்லாத ஊர் ஒரு மயானத்திற்கு சமம்.
ஆங்கரை பைரவியா அல்லது சித்திரபாரதியா என்று தெரியவில்லை. எழுதியிருப்பான்,
“கோவில் கண்களை
மூடச் சொல்லும்
பள்ளி
கண்களைத் திறந்து விடும்”
குழந்தையே இல்லாத ஒரு கிராமத்தைக் கற்பனை செய்து பாருங்கள். அப்படி ஒரு சபிக்கப் பட்ட கிராமம் இல்லவே இல்லை. குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு பள்ளிகள் வேண்டும்.
13,511 கிராமங்களில் பள்ளியே இல்லை எனில் அந்தக் கிராமத்துக் குழந்தைகள் அனைவரும் எழுத்தறிவு இல்லாமலே இருப்பார்களா?
நிச்சயமாக இல்லை.
எனில், பள்ளிக்கூடங்களே இல்லாவிட்டாலும் அந்தக் கிராமங்களில் வசிக்கும் பிள்ளைகள் கல்விறிவு பெற்றவர்களா?
நிச்சயமாக இல்லை.
எது கேட்டாலும் நிச்சயமாக இல்லை என்றால் எப்படிக் கொள்வது.
13,511 கிராமங்களிலும் கல்வியறிவு பெற்றவர்களும் இருப்பார்கள், எழுத்தறிவே இல்லாதவர்களும் இருப்பார்கள்.
நான்கு கேள்விகள் இப்போது இயல்பானவை
1) யாரெல்லாம் கல்வி அறிவு பெற்றிருப்பார்கள்?
2) எப்படி அது சாத்தியப் பட்டிருக்கும்?
3) யாரெல்லாம் எழுத்தறிவு இல்லாமல் இருப்பார்கள்?
4) ஏன் இது சாத்தியப் படவில்லை?
உள்ளூரில் பள்ளி இல்லை. அதனால் வெளியூர் சென்று படிக்க வேண்டும். அப்படி வெளியூர் சென்று கல்வி அறிவு பெற்றவர்களும் இருப்பார்கள். அப்படி வெளியூர் சென்று படிக்காதவர்கள் எழுத்தறிவு இல்லாதவர்களாக இருப்பார்கள்.
இவை இரண்டிற்கும் காரணம் ஒன்றுதான்.
பணம்.
ஆமாம், வசதி படைத்தவன் அசலூர் பள்ளிக்கு சென்று படிக்கிறான். வசதி இல்லாதவன் எழுத்தறிவை இழக்கிறான்.
ஒருவன் கல்வி பெறுவதையும் எழுத்தறிவை இழப்பதையும் பணம்தான் தீர்மானிக்கும் என்றால் அது அந்த மண்ணின் அசிங்கம்
பள்ளியே இல்லாத அதிக ஊர்களைக் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் உத்திரப்பிரதேசம், பீஹார், மேற்கு வங்கம் ஆகியவை உள்ளன. நல்ல வேளையாக அந்தப் பட்டியலின் மேல் வரிசையில் தமிழ்நாடு இல்லை.
ஆனால் மாணவர் சேர்க்கை குறைவதால் பள்ளிகளை மூட எத்தனிக்கும் அரசின் முடிவு நடைமுறைப் படுத்தப் படுமானால் தமிழ்நாட்டிலும் பள்ளிகளே இல்லாத கிராமங்கள் உருவாகக் கூடும்.
ஒருமுறை பெருந்தலைவர் காமராஜரிடம் கேட்டார்களாம்
ராஜாஜி பள்ளிகளை மூடினார். நீங்கள் அவர் மூடிய பள்ளிகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிக எண்ணிக்கையில் பள்ளிகளைத் திறக்கிறீர்களே. காரணம் என்ன?
அவர் எந்தக் காரணத்திற்காக பள்ளிகளை மூடினாரோ அதே காரணத்திற்காகத்தான் நான் பள்ளிகளைத் திறக்கிறேன் என்று சொன்னாராம்.
யோசித்துப் பாருங்கள்,
பள்ளிகள் இருந்தால் ஏழை, எளிய ஒடுக்கப்பட்ட மக்கள் படித்துவிடுவார்கள். அதனால்தான் ராஜாஜி பள்ளிகளை மூடினார்.
பள்ளிகள் இருந்தால் ஏழை, எளிய ஒடுக்கப்பட்ட மக்கள் படித்துவிடுவார்கள். அதனால்தான் பெருந்தலைவர் பள்ளிகளைத் திறந்தார்.
இப்போது ஆள்பவர்களும் பள்ளிகளை மூட எத்தனிக்கிறார்கள்.
நாமாவது ஊர்தோறும் பள்ளிகள் வேண்டும் என்கிறோம். பாரதியோ,
“தெருதோறும் தமிழ்ப் பள்ளிகள் பெருக வேண்டும்” என்றான்.
ஏதாவது செய்ய வேண்டும்.
என்ன செய்யலாம்?
தெரியவில்லை. ஆனால் ஒன்று சொல்லலாம்,
இப்படி ஒத்து சிந்திக்கிறவர்கள் வலைதளங்களில் பகிரலாம். இப்படிப் பகிர்பவர்கள் ஊர்களில், தாலுக்காக்களில், மாவட்டங்களில், மண்டலங்களில், மாநிலத்தில் கூடிப் பேசி, விவாதித்து ஏதேனும் ஒரு முடிவினை எடுத்து செயல் படலாம்.
இதை செய்யாவிட்டால்…
ஒரு புள்ளியில் நாசமாய்ப் போவோம்.
#சாமங்கவிய 20 நிமிடங்கள்
03.10.2018

Wednesday, October 3, 2018

நட்புறவையும் மனித மாண்புகளையும் விரும்பும் க்யூபா

பதவி இருக்கிறது
மேடை கிடைக்கிறது
அதற்காக எதை வேண்டுமானாலும் எந்த அளவிற்கும் மலினமாக பேசிவிட எத்தனிக்கிறார்கள் அமைச்சர் பெருமக்கள்
அவர்கள் அப்படித்தான் என்பதாக ஒரு புன்னகையோடு கடந்துவிட முடிகிறது என்னால்
ஆனால் படிக்கிறபோது நீங்கள் இந்திய மாணவர் சங்கத்தில் (SFI) இருந்ததாக எங்கோ படித்து தொலைத்ததால் உங்களை அப்படி எளிதாகக் கடந்துவிட முடியவில்லை மாண்பிற்குரிய ஜெய்குமார் அவர்களே
SFI யில் இருந்தீர்கள் என்றால் உங்களுக்கு சே குறித்தும் காஸ்ட்ரோ குறித்தும் நிச்சயம் தெரிந்திருக்கும்.
தெரிந்திருந்தும் இவ்வளவு மலினமாக எப்படி உங்களால் அவர்கள் இருவரையும் மாண்புமிகு எடப்பாடி பழநிச்சாமி மற்றும் மாண்பமை பன்னீர்செல்வம் ஆகியோரோடு ஒப்பிட முடிகிறது. உண்மையை சொல்லுங்கள்,
அன்று இரவு உங்களால் நிம்மதியாக உறங்க முடிந்ததா?
1966 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் நாள் அமெரிக்க உளவுத்துறையின் உதவியோடு சே பிடிபடுகிறார். அவரை ஜூலியா கோர்ட்ஸ் என்ற இளம் ஆசிரியை பணிபுரியக்கூடிய ஒரு பள்ளியிலே இருத்துகிறார்கள். எந்த நேரத்திலும் அவர் சுட்டுக் கொல்லப் படலாம். வானொலியில் அவர் இறந்துவிட்டதாக அறிவித்து விட்டார்கள். ஆகவே அவரது மரணம் எந்த நிமிடமும் நிகழலாம்.
அந்த நேரத்தில் அங்கு அவருக்கு உணவு எடுத்து வந்த ஜூலியாவிடம் அது என்ன இடம் என்று கேட்டிருக்கிறார் சே.
அது ஒரு பள்ளி என்றும் தான் அங்கு ஆசிரியையாகப் பணிபுரிவதாகவும் கூறியிருக்கிறார் ஜூலியா.
இவ்வளவு மோசமான, ஏறத்தாழ மாட்டுக் கொட்டகை போல உள்ள இடமா பள்ளிக்கூடம்? இந்த மோசமான இடத்திலா குழந்தைகளை அமர்த்தி பாடம் சொல்லித் தருகிறீர்கள் என்று கேட்டுவிட்டு, ”பரவாயில்லை ஒருக்கால் நான் உயிரோடு இருந்து புரட்சியும் வென்றுவிட்டால் உங்களுக்கு நல்ல பள்ளிக்கூடத்தைக் கட்டித் தருவேன்” என்று கூறியதாக வாசித்திருக்கிறேன்.
பிடிபட்டுவிட்டார்
இறந்துவிட்டார் என்று வானொலியில் அறிவித்து விட்டார்கள்
சுடுகிற நேரம் வரைக்குமான சன்னமான இடைவெளியில் ஒரு பள்ளியில் இருத்தவைக்கப் பட்டிருக்கிறார்
எந்த நிமிடமும் அவர் கதை முடிந்துவிடக் கூடியது என்பதை அவர் உணார்ந்திருக்கிறார்
மரணத்தின் நெருக்கத்திலும் எந்தவிதமான பயமோ சொர்க்கத்திற்கான வேண்டுதலோ அவரிடம் இல்லை. மாறாக அந்த நேரத்திலும் குழந்தைகள் படிப்பதற்கு நல்ல வசதியான பள்ளிகளின் அவசியம் குறித்து பேசுகிறார்.
மண்டேலாவின் நினைவேந்தல் நடந்து கொண்டிருக்கிறது. அன்றைய அமரிக்க அதிபர் திரு ஒபாமா மேடையேறுகிறார். அவர் இருக்கைநோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார். வழியில் இருப்பவர்கள் எழுந்து அவரோடு கைகுலுக்குகிறார்கள்.
அடுத்த மனிதர் எழுகிறார்
அந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களும் எதோ ஒரு காரணத்தினால் செத்துப்போக மாட்டார்களா என்றுகூட அமெரிக்க அதிபர்கள் எண்ணக்கூடிய மண்ணின் பிரதிநிதி
எத்தனைமுறை என்று என்று எண்ணிச் சொல்லமுடியாத அளவு எண்ணிக்கையில் அமெரிக்க அதிபர்கள் கொல்வதற்கு முயற்சி செய்து தோற்றுப்போன ஒரு தலைவனின் தம்பி
அவரும் ஒபாமாவிடம் புன்னகையோடும் அன்போடும் கைநீட்டுகிறார்
“My president, I am castro”
ஒபாமாவும் ரால் காஸ்ட்ரோவின் கைகளைக் குலுக்கியபடி நகர்கிறார்
அடுத்தநாள்
“பகை முடிந்துவிட்டது என்று பொருள் அல்ல” என்று அந்த இரண்டு தலைவர்களின் கைகுலுக்கலுக்கு விளக்கம் தருகிறது வெள்ளை மாளிகை
”மனித நாகரீகத்தை பறை சாற்றுகிற நிகழ்வு அது. நட்புறவையும் மனித மாண்புகளையும் க்யூபா விரும்புகிறது” என்கிறார் கேஸ்ட்ரோ
தம் மீது அவ்வளவு பகை பாராட்டும் அமெரிக்காவிலிருந்து தினந்தோறும் ஏழை மக்களை ஹெலிகாப்டரில் க்யூபா அழைத்து வந்து இலவசமாக கண்புரை அறுவை செய்து திரும்ப அழைத்துப் போய் அமெரிக்காவில் விட்டு வருவார்கள் என்று படித்திருக்கிறேன்.
அப்படியொரு மனிதமாண்பினை பேணும் கேஸ்ட்ரோ.
இவர்கள் இருவரையுமா எடப்பாடி அவர்களோடும் OPS அவர்களோடும் ஒப்பிட்டீர்கள்?
ஒன்று நிச்சயம் ஜெயகுமார் சார்,
காலம் உங்களை நிச்சயம் இதற்காக கேள்வி கேட்கும்.
#சாமங்கவிய ஒரு மணி 16 நிமிடங்கள்
02.10.2018

Tuesday, October 2, 2018

வாருங்கள் திருமுருகன் காந்தி






வாருங்கள் திருமுருகன் காந்தி
உரையாடலாம்
இயலும் இடங்களில் கரமிணைக்கலாம்
தேவைப்படும்போது சண்டை போடலாம்
இப்போதைக்கான உங்களது உடனடித் தேவை
குடிக்கிற இளஞ்சூட்டில் ஒரு கோப்பை தேநீரும்
கொஞ்சம் ஓய்வும்
குழந்தையின் பிஞ்சு கரங்களும் ஸ்பரிசமும் உங்களுக்கு தெம்பூட்டட்டும்
என் அன்பும் அணைப்பும் திருமுருகன் காந்தி

(இன்று மதியம் 3 மணி அளவில் திருமுருகன் காந்தி சிறையில் இருந்து வெளிவந்ததை ஒட்டி எழுதியது)

குருடர்களைப் பார்க்க வைத்த மருத்துவர் வெங்கிடசாமி




"instead the school should go to the students" என்று ஜோசப் மார்த்தி அடிக்கடி சொல்வாரென்று கேள்விப்பட்டிருக்கிறேன். இதை இப்போது சொன்னாலே,
இது என்ன ஞாயம்?
படிப்புக்கென்று ஒரு மரியாதை இல்லையா?
டில்லிக்கு ராஜான்னாலும் பள்ளிக்கு பிள்ளைதானே.
பள்ளிக்குதானே பிள்ளைகள் போக வேண்டும். பள்ளி மாணவர்களைத் தேடிப் போக வேண்டும் என்பது எப்படி சரியாகும். இது கல்வியை சீரழிக்கிற காரியம் என்பதுமாதிரி பொதுப்புத்தி வெளிப்பாடுகள் சகல திசைகளில் இருந்தும் சீறிப் பாயும்.
இந்தப் பொதுப்புத்தி சரியென்றுகூடத் தோன்றும்.
பிள்ளையைத் தேடி ஆசிரியர் அலைந்தால் அவன் எப்படி ஆசிரியரை மதிப்பான்? ஆசிரியரை மதிக்காதபோது எப்படி அவனுக்கு கல்வி ஏறும்?
மார்த்தியின் கருத்தை சரியாய்ப் புரிந்து கொள்வதற்கு இதயம் மட்டும் போதாது. அது ஈரமாகவும் இருக்க வேண்டும்.
நாம் முதல்தலைமுறைக் குழந்தைகள் என்று வகைப்படுத்தி வைத்திருப்பவர்களில் கணிசமானவர்கள் முதல்தலைமுறைக்கும் முந்தைய தலைமுறைக் குழந்தைகள்.
அவர்களது பெற்றோருக்கு கல்வி அறிவு இருக்காது. கல்வியின் அருமை அறியாதவர்களாக அவர்களில் பெரும்பான்மையோர் இருப்பார்கள். அவர்களைப் பொறுத்தவரை பிள்ளை பள்ளிக்குப் போவது தமக்கு கொஞ்சமும் பயனளிக்காத காரியம். மாறாக தனது தொழிலில் கூடமாட அவன் உதவி செய்தால் தனக்கும் வேலை மிச்சமாகும், பிள்ளையும் தொழில் கற்றுக் கொண்டதுமாதிரி இருக்கும்.
போக, ஒரு நாளைக்கு பன்னிரண்டு மணி நேரத்திற்கும் மேலாக உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகும் ஒரு தொழிலாளி வேலை முடிந்த்தும் உடல்வலி மறக்க மது அருந்திவிட்டு போய் சாய்வதும். காலை எழுந்ததும் வேலைக்குப் பாய்வதுமாகத்தான் அவனது வாழ்க்கை சுழன்றது. பிள்ளை பள்ளிக்குப் போகிறானா இல்லையா என்பது குறித்தெல்லாம் அவன் யோசிக்கவே இயலாதவனாய் இருப்பான்.
பிள்ளைக்கும் படிப்பு என்பது புதிதாகவும் சுமையானதாகவும் இருக்கும். எனவே அவன் விளையாடவோ அல்லது தந்தையின் தொழிலுக்கு உதவுவதோ அல்லது சிறுசிறு வேலைகளை செய்து சம்பாதிக்கவோ தலைப்படுவான்.
இவர்களை அணுகுவது என்பது ஈர இதயங்களால் மட்டுமே முடியும்.
பள்ளிக்கு அவர்கள் வராதது குற்றமாகக்கூட இருக்கலாம். ஆனால் அதற்கு அவர்கள் காரணம் அல்ல. அவர்கள் சந்ததியினர் பள்ளிப் பக்கம் திரும்பிவிடக் கூடாது என்கிற மாதிரியான ஒரு சமூகக் கட்டமைப்பை ஆதிக்கச் சமூகம் எல்லா மண்ணிலும் மிக்க் கவனமாக வடிவமைத்து வைத்திருந்தது. அது முற்றாய் இன்னமும் உடைக்கப் படவும் இல்லை.
அதனால்தான் மார்த்தி அவனை நோக்கி கல்வியைக் கொண்டுபோக வேண்டும். வந்தவனுக்கு பள்ளியில் சொல்லிக்கொடு. வராதவனைத் தேடிப்போய் அவனது சூழலோடு கறைந்து அவனுக்கு கல்வி கொடு என்றார்.
அவரது இந்தக் கோட்பாட்டில் நெக்குருகிக் கிடந்திருக்கிறார் காஸ்ட்ரோ.
இதைப் படித்ததில் இருந்து மார்த்தியிடம் இந்த ஒரு கருத்திற்காக சொக்கிப்போய் கிடக்கிறேன்.
தேடி வந்தவனுக்கு சேவை செய்வது இரக்கம். தேடிப்போய் ஒருவனுக்கு சேவை செய்வது என்பது இரக்கத்தின் உச்சம்.
இதுமாதிரியான மனிதர்கள் நம் மண்ணில் கிடைப்பார்களா என்று ஏங்கித் தேடியது உண்டு.
வெங்கடசாமி என்கிற கண்மருத்துவர் மக்கள் போதிய வைத்தியம் இன்றி குருடாவது கண்டு குமைந்து போயிருக்கிறார். அழுதிருக்கிறார். சக நண்பர்களோடு இதுகுறித்து உரையாடியிருக்கிறார்.
வந்தால் சிகிச்சை செய்ய மாட்டோமா? மருத்துவமனைக்கு வராதவர்களை என்ன செய்வது அவர்களில் பெரும்பான்மையோரின் பொதுக்குரலாக இருந்திருக்கிறது.
யோசித்திருக்கிறார்
தாங்கள் ஏன் குருடானோம் என்பது குறித்தோ அதை எப்படி சரி செய்வது என்பது குறித்தோ அந்த எளிய மக்கள் ஒன்றும் அறியாதவர்களாக இருந்திருக்கிறார்கள்.
இன்னும் இன்னுமாய் யோசித்திருக்கிறார் திரு வெங்கிடசாமி. இறுதியாய் ஒரு முடிவுக்கு வருகிறார்.
இந்த அப்பாவி மக்கள் ஒருபோதும் நம்மைத் தேடி வரப்போவதில்லை. போக அறுவைசிகிச்சைக்கு அவர்களுக்கு போதிய பணம் இல்லை. அறுவை குறித்த பயம் வேறு.
ஒரு முடிவுக்கு வருகிறார்
“instead the eye doctors should go to the blinds”
Great people think alike என்று சொல்வார்கள். மார்த்தி கல்வியில் நினைத்ததை மருத்துவர் வெங்கிடசாமி மருத்துவத்தில் செயல்படுத்துகிறார்.
மதுரைக்கு அருகில் உள்ள கல்லுப்பட்டியில் தனது முதல் இலவச கண் மருத்துவ முகாமை நடத்துகிறார்.
குறைந்த செலவு, அதுவும் முடியாதென்றால் இலவச கண் அறுவை சிகிச்சை என்பதை அவர் 1962 இல் ஆரம்பித்திருக்கா விட்டால் இந்த தமிழ் மண்ணில் குருடர்களின் எண்ணிக்கை ஏராளமாக இருந்திருக்கும்.
இன்றைய இலவச கண் அறுவை சிகிச்சை முகாம்களுக்கு முன்னத்தி ஏர் மருத்துவர் வெங்கிடசாமிதான்.
அரவிந்தரோடு நெருங்கிப் பழகியவர் என்பதால் மதுரையில் அவரது நினைவாக ”அரவிந் கண் மருத்துவமனை” யினை கட்டமைக்கிறார்.
குறைந்த செலவில் பார்வை. அதற்கும் இயலாதோருக்கு இலவசமாய் பார்வை என்பதே அவர் அந்த மருத்துவமனையினைத் துவங்குவதற்கு காரணம்.
குருடு என்பதை இரண்டாவது இடத்தில் வைத்தாள் அவ்வை. அய்யோ, அனுபவத்தில் சொல்கிறேன் அது கொடுமையின் உச்சம்.
ஏறத்தாழ குருடனாய் மாறிப்போயிருந்த எனக்கு பார்வையை மீட்டெடுத்து தந்தவர் அந்த அரவிந் கண் மருத்துவமனையில் பயிற்சி பெற்று திருச்சியில் “மகாத்மா கண் மருத்துவமனை” யினை நடத்திக் கொண்டிருக்கும் மருத்துவர் ரமேஷ்
குருடர்களைப் பார்க்க வைத்த மருத்துவர் வெங்கிடசாமிக்கு இன்று 100 வது பிறந்தநாள்.
குருடர்களைப் பார்க்க வைத்த அந்த மாமனிதனை குருடனாய் இருந்து மீண்ட நான் வணங்கிக் கொள்கிறேன்
#சாமங்கவிய ஒருமணி நான்கு நிமிடங்கள்
01.10.2018

நாளை நமக்கு என்பதற்காக அல்ல





இன்று அவருக்கு 
நாளை நமக்கு என்பதற்காக அல்ல
அவரது கைது அநியாயம்
அநியாயத்திற்கு எதிராக
திருமுருகன் காந்தியின் விடுதலைக்காக
குரல் கொடுப்பது அவசியம்
உரக்கச் சொல்வோம்
"திருமுருகன் காந்தியை விடுதலை செய்"

Monday, October 1, 2018

"அவங்களும் மக்குதான்"

கிஷோருடனான அலைபேசி உரையாடலின் ஒரு புள்ளியில் நிவேதிதா அவனை "மக்கு, மக்கு " என்றாள்.
எல்லோரும் சிரித்தோம். நிச்சயமாக அவனும் சிரித்திருப்பான்.
"ஏண்டா அவன மக்குங்கற? "
"கேள்வியா கேக்கறான். அதனாலதான்"
"கேள்வி கேட்டா மக்கா?"
"ஆமா"
"உங்க மிஸ்சும்தான கேள்வி கேட்பாங்க? "
"அவங்களும் மக்குதான்"
செம

H.ராஜவை கோட்சே என்பதன் மூலம்

இன்றும் மூன்றுதான் உரையாட
1) நடந்து முடிந்த மேற்கு வங்க மாநில ”இந்திய ஜனநாயக வாலிபர் சங்க” மாநில மாநாடு
2) தோழர் திருமுருகன் உடல்நிலையும் அவரது விடுதலைக்கான குரல் கோரலும்
3) தந்தை அம்பேதகர் மற்றும் தந்தை பெரியார் சிலைகள் சேதப்படுதலும் திரு ஸ்டாலின் அவர்களுக்கான நமது கோரிக்கையும்

                                                                         1
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மேற்கு வங்க மாநில மாநாடு நடந்து முடிந்திருக்கிறது.
இந்த மாநாட்டில் கலந்துகொண்டு வாழ்த்துரைத்த திரு பிரகாஷ்ராஜ் அவர்களின் உரை எப்போதும்போல் கவனத்திற்கு உரியதாயிருக்கிறது.
”எல்லோருக்கும் கல்வி, எல்லோருக்கும் வேலை கேட்கிறேன்”
“சாதியால் மதத்தால் மக்களைப் பிரிக்கிறீர்களே, நியாயமா? என்று கேட்கிறேன்”
”நீ என்ன இடதுசாரியா? என்று கேட்கிறீர்கள்”
“ஆமாம், ஆமாம்தான். நான் ஒரு இடதுசாரிதான்” என்று பிரகாஷ்ராஜ் கூறியபோது மாநாடே அதிர்ந்திருக்கிறது.
மக்களின் எதிரிகளுக்கு மிக நன்றாகத் தெரியும் அவர்களது எதிரி யார் என்று.
மக்களின் எதிரிகளுக்கு எதிரி மக்களின் ஊழியன் என்பது மட்டுமல்ல யார் அந்த மக்களின் ஊழியன் என்பதும் பிரகாஷ்ராஜ் அறிந்திருக்கிறார்.
அவருக்கென் வாழ்த்தும் நன்றியும்.
அவர்கள் விரும்புகிறார்களோ இல்லையோ பிரகாஷ்ராஜ் மாதிரி நல்ல மனிதர்களை பாஜக தலைவர்கள் இடதுசாரிகளாக்கி விடுகிறார்கள்
அவர்களுக்கும் என் வாழ்த்தும் நன்றியும்
மற்ற மாநிலங்களைப் போல் அல்ல மேற்கு வங்கம்
உயிரை இயக்கத்துக்காய் உயில் எழுதிக் கொடுப்பவனால்தான் இங்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலப் பொறுப்புக்கு வர முடியும்
சயந்தீப் மித்ரா செயலாளராகவும் மினாக்ஷி முகர்ஜி தலைவராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள்.
வாழ்த்துக்கள் மகனே, வாழ்த்துக்கள் மகளே
நிறைய இழந்திருக்கிறோம்
இரண்டு எதிரிகள்.
எந்தப் பாதகத்தையும் செய்யத் தயங்காத இரண்டு எதிரிகள்.
ஒருவரிடம் மாநிலம் இருக்கிறதென்றால் இன்னொருவரிடம் தேசமே இருக்கிறது
நம்மிடம் மாநிலம் இல்லை. நம்மிடம் தேசம் இல்லை.
அஞ்ச வேண்டாம்
நியாயம் இருக்கிறது. உழைக்கும் மக்கள் இருக்கிறார்கள்
இன்று உயர்ந்த இந்தக் கரங்கள் இரண்டு ஜோடிக் கரங்கள் அல்ல. ஒரு கோடி ஜோடிக் கரங்களின் பிரதிநிதிகள் இவை
இழந்ததை மீட்கும்வரை உயர்ந்தபடியே இருக்கட்டும்
                                                                          2
இன்று மதியம் முதல் எதுவும் செய்ய விடாது “திருமுருகன் காந்தி” என்ற ஒற்றை சொல் என்னைத் தொந்தரவு செய்துகொண்டே இருக்கிறது.
நீதிமன்ற வளாகத்தில் திரு வைகோ அவர்களோடான அவரது படமும் நீதிமன்றமா வேறு ஏதேனும் இடமா என்று தெரியவில்லை ஏதோ தேசத்தையே விலைபேசி முடித்தவனை கையும் களவுமாய் பிடித்ததுபோல ஒரு மூலையில் உட்கார வைக்கப்பட்டிருந்த அவரது படமும் அவர் நலமற்று சோர்வாக இருக்கிறார் என்பதை உணர்த்தின.
எல்லோரும் சொல்வதைப்போல்தான் எனக்கும் திருமுருகன் காந்தியோடு முரண்பாடுகள் உண்டு. அரசியல் பார்வைகள்மீது கடுமையான விமர்சனங்களும்கூட உண்டு. அதனால்தானே இருவரும் வேறு வேறு அமைப்பில் இருக்க வேண்டி உள்ளது.
அனால் அவரது எதிரியால்கூட அவரை மக்கள் விரோதி என்று ஒருபோதும் சுட்டிவிட முடியாது. அவரை “தேசத் துரோகி” என்று கூறுபவர்களை இரண்டாகப் பிரிக்கலாம்
அதன் பொருள் புரியாமல் கத்துபவர்கள்
திருடன் திருடன் என்று இழந்தவனைப் பார்த்து கத்தும் திருடன் போன்றவர்கள்
ஒரு திரள் அறியாமல் கூவுகிறது. இன்னுமொரு திரள் இவர்களது அறியாமையைப் பயன்படுத்திக் கொள்கிறது.
நம்முடைய முதல் வேலை அந்த அறியாதத் திரளை இந்தக் கூட்டத்திடம் இருந்து மீட்பதுதான்.
இன்று ஒருக் கட்டத்தில் கீழ் வருமாறு எழுதிவிட்டேன்
”எத்தனை எத்தனையோ வதந்திகள்
அவற்றோடு இன்னுமொன்றாகட்டும் இது
"தோழர் திருமுருகன் காந்தி தீவிரக் கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு பட்டிருக்கிறார்"
"திருமுருகன் காந்தி கவலைக்கிடம்"
என்று வருகிற தகவல்கள் பொய்யாகட்டும்
உண்மையெனில் விரைவில் அவன் மீளட்டும்
இனியும் நீளுமெனில்
நம் மௌனம்
கள்ளத்தனமானதுதான்”
இதைப் போட முடியவில்லை. எப்படி இருக்கிறார் அந்த மனிதர் என்று கேட்டேன்.
பரவாயில்லை என்பதாக வந்த பதில் கொஞ்சம் ஆறுதலைத் தந்தது.
அலைக்கழித்தல், அடைத்து வைத்தல், உரிய சிகிச்சைக்கு அனுமதி மறுத்தல் ஆகிய காரியங்களில் ஈடுபடும் காவல்துறை நண்பர்களுக்கு
H.ராஜா போன்ற அரசியல்வாதிகளிடம் இருந்து தம் மீட்சிக்காக ஒலிக்கப்போகும் குரல்களில் திருமுருகன் காந்தியின் குரலும் ஒன்று என்பது நன்கு தெரியும்
பாவம் அவர்கள் வெறும் கருவிகள்
எல்லாவற்றையும் பிறகு பேசலாம்.
முதலில் அவனது விடுதலைக்கான குரலை இன்னும் பேரதிகமாய் உயர்த்துவோம்
தெம்பாய் வரட்டும்
அவனோடு அளவளாவவும் விவாதிக்கவும் ஏராளம் இருக்கிறது எனக்கு.

                                                                               3
தந்தை பெரியாரின் சிலைகளும் தந்தை அம்பேத்கரின் சிலைகளும் அவமரியாதை செய்யப்படுவதோடு சிதைக்கப் படவும் காண்கிறோம்.
இன்னொருபுறம் H.ராஜாவை தென்னகத்தின் கோட்சே என்று போஸ்டர் அடிக்கிற அளவிற்கு நம் எதிரிகள் முன் நகர்ந்திருக்கிறார்கள்.
தேசத்தின் தந்தையைக் கொன்றவனை போஸ்டர் ஒட்டிக் கொண்டாடுவது குற்றம்.
ராஜவை கோட்சே என்பதன் மூலம் அவர்கள் களத்திற்கு வந்துவிட்டார்கள்.
இந்தச் சூழலில் தந்தை அம்பேத்கரின் சிலை உடைக்கப்பட்டதற்கு தீக்கதிர், விடுதலை ஆகிய பத்திரிக்கைகளில் ஆழமான கண்டனங்கள் வந்திருக்கின்றன. மற்ற பத்திரிக்கைகளைப் பற்றி தெரியவில்லை.
மரியாதைக்குரிய ஸ்டாலின் அவர்கள் தந்தை பெரியார் சிலை குறித்து ஆதங்கப்பட்டது மாதிரி தந்தை அம்பேத்கர் சிலை குறித்தும் ஆதங்கப்பட வேண்டும் என்பது நமது வேண்டுகோள்
#சாமங்கவிய 41 நிமிடங்கள்
30.09.2018

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...