Saturday, January 28, 2017

65/66, காக்கைச் சிறகினிலே ஜனவரி 2017

கோவிலுக்குப் போய்விட்டார்கள் விக்டோரியாவும் கீர்த்தனாவும் வழக்கம் போலவே.

குடிசை எரிவது தெரிகிறது. குழந்தைகளின் மரண ஓலம் கேட்கிறது. சவமாய் சுவர் சாய்கிறேன்.

கிறிஸ்மஸ் வந்துதுன்னா ஏம்ப்பா இப்படி பேயறஞ்சு பிரம்மை பிடிச்ச மாதிரி உக்காந்துடற?”

கேட்ட மகனிடம்

ராமையா குடிசை எரிந்த கதை சொன்னேன்,

அழுத குழந்தைகளை தூக்கி நெருப்பில் எறிந்த கதை சொன்னேன்...

44 பேர் எரிந்து சாம்பலான கதை சொன்னேன்....

ஏம்பா

அரைப் படி நெல்லுக்கு கிஷோர்

நாசமாப் போவாங்க. இதை ஏம்பா இவ்வளவு நாள் சொல்லல நீ?”

ராமையா குடிசை நெருப்பை விடவும், இவ்வளவு நிலம் வைத்திருப்பவர்கள் இதுமாதிரி குற்றம் செய்ய மாட்டார்கள் என்ற தீர்ப்பை விடவும், பெரிதாய் சுட்டது அவன் கேள்வி.

மன்னித்துக் கொள் மகனே.

எவ்வளவோ பாவம் செய்கிறோம். அவற்றில் தலையாய பாவம் பிள்ளைகளிடம் சொல்ல வேண்டியதை சொல்லத் தவறுவதே ஆகும்.

@@@@@@@@@@@@@@@@@@ 


ஆக சமீபத்தில் ஏறத்தாழ எழுநூறு இடங்களில் பாரதிய ஜனதா கட்சி இடங்களை வாங்கிப் போட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான தோழர் ஜோதிமணி தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இவர் ஏதோ எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கருத்துக்களை பதிகிறவர் அல்ல.

ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்படுவதற்கு முன்னதான சில நாட்களில் அந்தக் கட்சி பல கோடி ரூபாய்களை வங்கிகளில் அதுவும் டெபாசிட் செய்திருப்பதாக தகவல்கள் வந்தபடியிருக்கின்றன. கொல்கத்தாவில் உள்ள ஒரு வங்கியில் அறிவிக்கப்படுவதற்கு முதல்நாள் கோடிரூபாய்க்குமேல் அந்தக் கட்சி டெப்பாசிட் செய்திருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

யாரும்  இது விஷயத்தில் தங்களை கேள்வி கேட்டுவிடக் கூடாது என்பதில் பாரதிய ஜனதாக் கட்சி மிகுந்த அக்கறையோடு காய் நகர்த்துகிறது. அதனால்தான் அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சிகள் தங்களுக்கு வரும் வரத்து பற்றி கணக்கெதுவும் காட்டத் தேவையில்லை என்பதான ஒரு சட்டத்தை அவசர அவசரமாக கொண்டு வந்திருக்கிறது. இதை காங்கிரஸ் கட்சியும் அதன் துணைத் தலைவர் ராகுல் அவர்களும் மிகக் கடுமையாக எதிர்க்கிறார்கள். இது மிகவும் ஆறுதலானதும் மகிழ்ச்சிக்கு உரிய செய்தியும் ஆகும்.

அவர்களுக்கு நினைவுபடுத்த ஒன்று இருக்கிறது நமக்கு.

2013 ஆம் ஆண்டு குளிர்காலக் கூட்டத் தொடரில்லோக்பால்குறித்த விவாதம் நடந்தபோது மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் விவாதத்தில் கலந்துகொண்ட தோழர் சீத்தாராம் யெச்சூரி லஞ்சம் ஒழிப்பு நடவடிக்கை என்பது மேலிருந்து கீழ் நோக்கி நகர வேண்டும் என்றார். இந்த லோக்பாலானது லஞ்ச ஒழிப்பென்பது கீழிருந்து மேல் நோக்கி நகர்த்தப் பார்க்கிறது. அந்த வகையில் இது குறைபாடுள்ளது என்றார். இன்னும் விளக்கமாக இது 500 ரூபாய் லஞ்சம் வாங்குகிற ஒரு அலுவலக எழுத்தரை கைது செய்யும். கோடி கோடியாய் கார்ப்பரேட் கட்சிகளிடமிருந்து நன்கொடை என்ற பெயரில் பணம் பெருகிற அரசியல் வாதியை, அரசியல் கட்சியை கைகட்டி வேடிக்கை பார்க்கும் என்று கூறினார்.

அவரது இந்த ஆழமான விவாதத்தை அன்றைக்கு பாரதிய ஜனதாக் கட்சியும் காங்கிரசும் மிகக் கடுமையாக எதிர்கொண்டன.

குறைபாடுள்ள இந்த லோக்பாலின் நீட்சியாக ஏதோ ஒரு புள்ளியில் கட்சிகள் பெறும் நன்கொடைகளை கணக்கில் காட்டத்தேவை இல்லை என்று இந்த அரசு அறிவித்துவிடக் கூடிய ஆபத்து இருப்பதை சுட்டிக் காட்டினார்.

அந்தக் கூட்டத் தொடரில்கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் நன்கொடைகளை அரசியல் கட்சிகள் கணக்கில் காட்டுவதை கட்டாயமாக்க வேண்டும்என்ற ஒரு தனிநபர் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

அப்படி ஒரு சட்டத்தை இன்றைக்கு மத்திய அரசு மிக வெளிப்படையாக கொண்டு வந்துவிட்டது. அதை காங்கிரஸ் கட்சியும் கடுமையாக எதிர்க்கிறது. வேடிக்கை என்னவென்றால் இப்படி நடக்கும் என்று எடுத்து சொன்னதோடு இதற்கு எதிராக தோழர் யெச்சூரி முன்மொழிந்த அந்த தனிநபர் தீர்மானத்தை காங்கிரஸ் கட்சியும் எதிர்வாக்களித்து தோற்கடித்தது என்பதுதான்.
***************
****************    

மாண்பமை ஜெயலலிதா அவர்களின் மரணம் கொடூரமானது. ஒவ்வொரு அதிமுக தோழனின் கைபிடித்தும் எனது இரங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நிறைய மாயைகளை அவரது மரணம் உடைத்துப் போட்டிருக்கிறது.

எந்தத் திரளுக்கு அவர் ஏதும் செய்யவில்லையோ அந்தத் திரள் வாயிலும் வயிற்றிலுமடித்துக் கொண்டு உழுது புரண்டு கதறியது. அவர் கூடவே இருந்து பொய்யாய் புகழ்ந்து ‘அம்மா, அம்மா’ என்றவர்கள் அடுத்த நாளே கூச்சமே இல்லாமல் அவரை ஜெயா என்றார்கள். அவர் சும்மா எல்லாமே சின்னம்மாதான் என்றார்கள்.

அந்த அப்பாவித் திரளுக்கு உண்மையாய் இருந்து அவர்களோடும் இருந்திருப்பீர்களேயானால் சத்தியமாய் அந்தத் திரள் உங்களை சாக விட்டிருக்காதே தாயே.

@@@@@@@@@@@@@@@@@@  
  

ஜெயலலிதா அவர்களின் மரணத்திற்கு கேரளாவிலிருந்து முதல்வர், ஆளுநர், முன்னால் முதல்வர், எதிர்க் கட்சித் தலைவர், சபாநாயகர் ஆகிய அனைவரும் ஒரே பயணிகள் விமானத்தில் சென்னை வந்து விமான நிலையத்திலிருந்து ஒரே காரில் நெருக்கி அமர்ந்தபடி வந்து அஞ்சலி செலுத்திவிட்டு வந்த மாதிரியே திரும்பிப் போனார்கள்.

இது தற்செயலாய் நிகழ்ந்ததல்ல. மரணச்செய்தி கேள்விபட்டதும் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொண்டு திட்டமிட்டிருக்க வேண்டும். பக்கத்து பள்ளியில் பணியாற்றும் ஒரு ஆசிரியரின் குடும்பத்தில் யாரோ அல்லது ஒரு ஆசிரியரோ இறந்து போனால் அடுத்தவர்கள் கூடிப்பேசி ஒரு வேன் எடுத்துக் கொண்டு போவது மாதிரி வந்து போயிருக்கிறார்கள்.

இது கேரள மண்ணின் பண்பாடு.

அப்போது அஞ்சலி செலுத்தப்போன திரு ஸ்டாலின் அவர்கள் மாண்பமை முதல்வரின் கரம் பற்றி ஆறுதல் கூறியதும், கலைஞர் அவர்கள் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருந்தபோது திரு தம்பித்துரை அவர்களும் திரு ஜெயகுமார் அவர்களும் அங்கு சென்று நலம் விசாரித்ததும் நம்பிக்கை அளிக்கின்றன.

என்றைக்கேனும் தமிழகத்திலிருந்து ஒரே காரில் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரும் ஒரே காரில் கேரள முதல்வரின் மகளது திருமணத்திற்கு செல்லக்கூடும்.

பேரப்பிள்ளைகள் காலத்திலாவது நடக்கட்டும்
****************************************

காக்கையைப் பொறுத்தவரை தோழர் இன்குலாப் அவர்களின் இழப்பு சத்தியமாய் ஈடு செய்ய இயலாதது. இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர்கூட காக்கைக்கான தொடரையும் கவிஞர் தமிழன்பன் அவர்களது நூல் குறித்த விமர்சனத்தையும் எழுதிக் கொடுத்திருந்தார்.

தோழர் இன்குலாப் நான்கைந்து கவிதைகளை எழுதியிருப்பதாகவும் மற்றவை எல்லாம் கோஷங்கள் என்றும் ஒருவர் சொல்லியிருக்கிறார். வருத்தமென்னவெனில், இவ்வளாவு சொன்ன அவர் சரியாய் எண்ணி நான்கா அல்லது ஐந்தா என்று சொல்லியிருக்கலாம்.

மற்றபடி அவரது கருத்தில் எங்களுக்கு வருத்தமேதும் இல்லை. ஒடுக்கப்பட்ட, உழைக்கும் மக்களின் வாழ்க்கைக்காக எழுதப்படும் கோஷங்களும் எங்களைப் பொறுத்தவரை இலக்கியம்தான் ஆசானே.

“நாங்க எரியும்போது எவன் மசிறப் புடுங்கப் போனீங்க” என்ற எங்கள் இன்குலாப்பின் வரிகள் கோஷம் என்று நீங்கள் சொல்வதும், அது எங்களது உயிர்மீட்பின் இசையாக இருப்பதும் தற்செயலானது அல்ல.

யூனியன் கார்ஃபைடு விசவாயு கக்கி மக்களைக் கொன்றொழித்த வேளையில் சென்னையில் அதற்கெதிராக ஒரு பேரணி. நிறைய குழந்தைகள். எல்லாக் குழந்தைகளின் கைகளிலும் பதாகைகள். அவற்றிற்கான கோஷங்களை தோழர் இன்குலாப் எழுதியிருந்தார். அதிலொன்று,

“வானம் வேண்டும்
பூமி வேண்டும்
வாழும் உரிமை
வேண்டும் வேண்டும்”

இது எங்கள் மக்கள் கவிஞர் எழுதிய கோஷம். இதை இலக்கியம் என்கிறேன் நான். இல்லை என்று மறுக்கும் யாரோடும் பொதுவெளியில் விவாதிக்க தயாராயிருக்கிறேன்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் அவருக்கான ஒரு பாராட்டு விழாவை காக்கை சார்பில் எடுத்திருந்தோம். அப்போது அவர் சொன்னார்,

”பெரும்பாண்மை சிங்கள இனம் சிறுபாண்மை தமிழினத்திக் கொன்றழிக்கிறது. நான் தமிழர்களுக்காக எழுதுகிறேன். ஒருவேளை தமிழர்கள் பெரும்பாண்மையினராகவும் சிங்களவர்கள் சிறுபாண்மையினராகவும் இருந்து தமிழர்கள் சிங்களவர்களை அழித்தொழித்துக் கொண்டிருந்தால் நான் நிச்சயமாய் சிங்களவர்களுக்காகத்தான் எழுதிக் கொண்டிருப்பேன்.”
  
இதற்காகத்தான் நாங்களவரை கொண்டாடுகிறோம்.

உங்களது நெறியாள்கையில்தான் நீங்கள் இல்லாதபோதும் காக்கை பயணிக்கும்.

போய் வாருங்கள் தந்தையே.

*****************************************************      

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...