Saturday, December 6, 2014

குட்டிப் பதிவு 14

இந்த மலைய ஒடச்சா இந்த உலகத்துக்கே ரோடு போடலாம்ல என்று பேருந்து கடந்து கொண்டிருந்த பெருங்குன்றொன்றினைக் காட்டி முன்னிருக்கை பொடிசு சொன்னான்.

இயற்கையை அழிப்பது தப்பென்றும் ஆபத்தென்றும் பதறியவாறு சொன்னான் பக்கத்து பெரும்பொடிசு.

மலைய ஒடச்சாதானே ரோடு போடலாம், வீடு கட்டலாம். மலைய வச்சு என்ன பன்றது என்ற சின்ன பொடிசுக்கு பதில் சொல்ல முடியாது தவித்தான் பெரிசு.

அழிப்பதற்கான காரணங்கள் எல்லோரிமும் இருக்கிறது.

இயற்கையை காக்க நினைப்பவர்கள் அதற்கான காரணங்களையும் கற்றுக்கொள்ள வேண்டும்.

கற்றுத் தரவும் வேண்டும்.

வேலை இருக்கிறது ஆமாம்.

Wednesday, December 3, 2014

அனல் உலைகளின் அடிநிழலில் எரியும் அரிக்கேன் விளக்குகள்


சிலியில் உள்ள செம்புச்சுரங்களுல் மரிய எலேனாவும் ஒன்று. அங்குள்ள சுரங்கத் தொழிலாளிகளை சந்திப்பதற்காக பாப்லோ நெரூடா ஒருமுறை அங்கு செல்கிறார். காலப் போக்கில் பலமுறை அங்கு அவர் சென்றிருந்தாலும் அதுதான் அந்த ஊருக்கான அவரது முதல் பயணம்.

தொழிலாளிகளின் அன்புப் பெருவெள்ளத்தில் திக்கு முக்காடித்தான் போனார் அவர். அவரை நன்கு அறிந்து வைத்திருந்தனர் அவர்கள். ஒரு சந்திலிருந்து வெளிப்பட்ட ஒரு தொழிலாளி எண்ணெயும், அமிலமும், சேறும் கலந்திருந்த தனது கையை நீட்டியவாறே “உங்களை எனக்கு ஏற்கனவே தெரியும் சகோதரா. உங்களை வாசித்திருக்கிறேன்” என்கிறார். எந்தவித அசூசையும் இன்றி வாஞ்சையோடு அந்த மனிதனோடு கைகுலுக்கியவாறே மறு கையால் அவனை அணைத்துக் கொள்கிறார். அந்த அணைப்பின் கதகதப்பில் இருவரும் மட்டுமல்ல கூட இருந்த அனைவருமே நெகிழ்ந்து போகிறார்கள்.

.“நான் ஏராளமாக இலக்கியப் பரிசுகள் வாங்கியிருக்கிறேன். வண்ணத்துப் பூச்சியைப் போல் அற்ப ஆயுளைக் கொண்டவை அவை. ஆனால் நான் சம்பாத்யம் செதிருக்கிற பரிசு மகத்தானது.

எனக்குரிய பரிசு என்னுடைய வாழ்க்கையின் சில அரிய நிமிடங்கள்தான். அதாவது லோட்பாவின் பாதாளத்திலிருந்து, நைட்ரேட் சுரங்கத்திலிருந்து அல்லது ஏதோ ஒரு செம்புச் சுரங்கத்திலிருந்து முழங்காலில் ஊர்ந்தவாறே மேலே வந்து விகாரமான முகமும், பம்பாசின் வாடையுமாக ஒவ்வொருவராக தங்களது உலோகத் தண்டு போன்ற கரங்களை நீட்டி உங்களை எங்களுக்கு முன்னரே தெரியும் சகோதரா என்று கூறும் அரிய நிமிடங்கள்”

என்று பிறகொரு சமயத்தில் இதுகுறித்து நெரூடா நெக்குருகி எழுதியிருக்கிறார்.

சுரங்கத் தொழிலாளிகளுடனான நெரூடாவின் உறவு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போனது. அவர்களை தனது மக்களாக நெரூடாவும், அவரைத் தங்களது கவியாக அவர்களும் அங்கீகரித்து கொண்டாடினார்கள்.
பேசிக்கொண்டே நகர்ந்த தொழிலாளிகள் ஒரு வீட்டினுள்ளே நெரூடாவை அழைத்துப் போனார்கள். மக்கள் அதில் குடியிருந்தார்கள் என்கிற ஒரே காரணத்தைத் தாண்டி அதை வீடென சொல்வதற்கு எதுவுமில்லை. அழுக்கும் இருளும் அப்பிக் கிடந்த அந்த அறையினுள் மக்கள் வாழ்ந்தார்கள் என்பதே உலக அதிசயங்களில் முதலாவது அதிசயமாகும்.

அந்த அறையில் அமிலமும், எண்ணெயும், தண்ணீருமாக ஒரு சேற்றுக் கலவையாக இருந்தது. அந்தச் சேற்றுக் கலவையில் பலகைகள் போடப் பட்டிருந்தன. கீழே விழாமல் நடப்பதற்கே மிகுந்த கவனம் தேவைப் பட்ட அந்த இடம் நெரூடாவிற்கு அதிர்ச்சியைத் தரவே, “ ஏன் இந்த வீடு இப்படி இருக்கிறது?” என்று கேட்டிருக்கிறார். அந்த வீடு மட்டுமல்ல அங்குள்ள எல்லா வீடுகளுமே அப்படித்தான் என்று வந்த பதில் அதிர்ச்சியின் உச்சத்திற்கே நெரூடாவை கொண்டு போனது.

“ ஏன் உலர்தளம் அமைத்துக்கொள்ளக் கூடாது? “ என்ற நெருடாவின் அப்பாவித் தனமான கேள்விக்கு உலர்தரை அமைப்பதற்கான உரிமை தங்களுக்கு இல்லை என்று சொன்னார்கள். மட்டுமல்ல, இப்படி பலகை போடுகிற உரிமைக்காகக்கூட எட்டு ஆண்டுகள் தாங்கள் போராட வேண்டியிருந்தது என்றும், ஏழு தலைவர்களை பலிகொடுத்துதான் இந்த ஈர சேற்றுத் தரைகளில் பலகை போட்டு வாழ்வதற்கான உரிமை தங்களுக்கு கிடைத்தது என்றும் அவர்கள் சொன்னபோது நெரூடா அழுதானோ என்னமோ எனக்குத் தெரியாது. ஆனால் இதை வாசிக்க நேர்ந்தபோது நான் அழுதேன்.

ஈரத் தரையில்தான் குடும்பம் நடத்த வேண்டும் என்ற நடைமுறையை மாற்றவே சுரங்கத் தொழிலாளிகள் எட்டு ஆண்டுகாலம் போராடி ஏழு தலைவர்களை இழக்கவேண்டிய நிலை இருந்தது என்பதை ஜீரணிக்கவே நான் படாதபாடு பட வேண்டியிருந்தது. இத்தனைக்குப் பிறகும்கூட உலர்தரை அமைத்துக் கொள்ளும் அனுமதியைத் தராத அந்த சமூகத்தை எந்த மொழியில் எப்படி சபிப்பது என்று கொதித்து குழம்பிப் போயிருந்தேன்.

எந்த வேலையினும் சுரங்கத் தொழில் ஆபத்தானது என்பது என் கணிப்பு. எந்த நிமிடமும் மண் சரிந்தோ, பேய்மழை நீரில் மூழ்கியோ மரணிக்கும் ஆபத்து இங்கு அதிகம். தோல் வியாதி உள்ளிட்ட நோய்களின் தாக்குதலுக்கு அடிக்கடி இரையாகும் மனிதர்கள். இத்தகைய தொழிலாளர்களை சுரண்டுவது என்பது ஈனத்தனமான கொடுமை என்றால் இப்படி உலர்ந்த தரையில்கூட வசிப்பதற்கு அனுமதி மறுப்பது என்பது கொடுமையின் உச்சம்.

இதை AITUC அமைப்பின் மாநிலப் பொறுப்பாளர்களில் ஒருவரும், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவருமான தோழர் மூர்த்தி அவர்களிடம் நெய்வேலிப் பிரச்சினை பற்றி பேசிக் கொண்டிருந்தபோது சொன்னேன். அப்போது அவர் சொன்னது என்னை அதிர்ச்சியின் எல்லை தாண்டி தூக்கிக் கிடாசியது.

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் ஒப்பந்தத் தொழிலாளர்களது துயரமும் இதற்கு கொஞ்சமும் குறையாதது என்றார்.

நெய்வேலி ஒப்பந்தத் தொழிலாளர்கள் தினமும் 370 ரூபாய் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள். அந்தக் கூலியை உயர்த்த வேண்டும் என்பதற்காகவும், ஊழியர்களை கொஞ்சம் கொஞ்சமாக நிரந்தரப் படுத்த வேண்டும் என்பதற்காகவும் போராடி வருகிறார்கள். பேச்சு வார்த்தையில் 370 ரூபாய் என்பதிலிருந்து 480 ரூபாய் என்கிற அளவிற்கு கூலி உயர்த்தப் பட்டிருக்கிறது.
   
இப்படியான பொதுப் புரிதலுக்கு அப்பால் நமக்கு அவர்களது வேறெந்த வலியும் நமக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஏதோ 110 ரூபாய் அளவிற்கு உயர்வு ஏற்பட்டதாக பாய்ச்சப் பட்ட ஊடக வெளிச்சத்தில் அந்த 110 ரூபாய் உயர்வு என்பது இப்போது 55 ரூபாயும் அடுத்த ஆண்டு 55 ரூபாயும்தான் என்கிற உண்மையின் வெளிச்சம் மங்கிப் போனது.

ஒப்பந்தத் தொலிலாளி என்பவர் யார்?

இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல நாம் சிரமப் படத் தேவையே இல்லை. வங்கியில், தோல் பிளாசாக்களில், ஆலைகளில், நிறுவனக்களில், தொழிற்சாலைகளில் என்று எல்லா இடங்களிலும் இன்று ஒப்பந்தத் தொலிலாளிகள் நிறைந்து கிடக்கிறார்கள். இவர்கள் இவர்கள் வேலை பார்க்கும் தளத்தின் நிரந்தரத் தொலிலாளிகள் என்ன வேலை செய்கிறார்களோ அதே வேலையைத்தான் செய்வார்கள். இன்னும் சொல்லப் போனால் பல இடங்களில் நிரந்தர ஊழியர்களை விட அதிக நேரம் உழைப்பார்கள். ஆனால் நிரந்தரத் தொழிலாளி வாங்கும் ஊதியத்தில் கால் பங்கிற்கும் குறைவான சம்பளத்தையே வாங்குவார்கள். பணிப் பாதுகாப்பென்பது இவர்களுக்கு அறவே கிடையாது. ஒரே தொழிற்சாலை, ஒரே வேலை. ஆனால் இரு ஊழியர்களுக்கு இருவிதமான ஊதியம்.

இது எப்படி?

இப்போதுதான் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். வேலை ஒன்றுதான். நிறுவனமோ, வங்கியோ, தொழிற்சாலையோ இடமும் ஒன்றுதான். இது கடந்து ஒரு நுணுக்கமான அமைப்பு ஒரே இடத்தில் ஒரே வேலையைப் பார்க்கும் தொழிலாளிடையே மலைக்கும் துகளுக்குமான வேறுபாட்டைக் கொண்டு வருகிறது.

இருவர் செய்யும் வேலையும் ஒரே முதலாளியினுடையதுதான். ஆனால் இருவருக்கும் அவரே முதலாளியல்ல. நிரந்ததரத் தொழிலாளி அவரது ஊழியர். ஒப்பந்தத் தொழிலாளி அவரது வேலையை செய்து தரும் இன்னொரு முதலாளியின் ஊழியர். தலையே சுற்றும்தான். ஆனாலும் அதுதான் உண்மை.

உதாரணமாக ஒரு நிறுவனம் சுரங்கம் அமைத்து நிலக்கரி எடுக்கிறது என்று வைத்துக் கொள்வோம். 10000 தொழிலாளிகள் தேவைப் படுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். 1000 தொழிலாளிகளை அந்த நிறுவனம் நேரடியாக வேலைக்கு அமர்த்தும். மீதமிருக்கும் 9000 ஊழியர்களை தரகர்கள் மூலம் நியமிக்கும்.

நிரந்தரத் தொலிலாளிக்கு 25000 ரூபாய் சம்பளம் தருகிறது என்று வைத்துக் கொள்வோம். மிச்சம் உள்ள ஊழியர்களை நியமித்து பணியினை செய்து தருவதற்காக அது தரகர்களை நியமிக்கும். அந்தத் தரகர்களிடம் ஒரு ஊழியருக்கு 10000 ரூபாய் என்கிற அளவில் ஊதியத்தைக் கணக்கிட்டு கொடுத்துவிடும். இந்த ரூபாய்க் கணக்கு தோராயமானதுதான். 25000 ரூபாய் அவர்களுக்கு என்றால் இவர்களுக்கு இவ்வளவு குறைவாகப் போகும் என்பதை சொல்லவே இது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இப்போது அந்தத் தரகர்கள் வாங்கிய 10000 ரூபாயில் 5000 ரூபாயை தாங்கள் வைத்துக் கொண்டு மீதமிருக்கிற 5000 ரூபாயை தொழிலாளிக்கு வழங்குவார்கள். இங்கும் இது கொஞ்சம் குறைவதற்கும் சில நேரம் கூடுவதற்கும் வாய்ப்பு உண்டு. இந்தத் தொழிலாளிகளை கொத்தடிமைகள் என்று சொல்லிவிட முடியாது என்றாலும் அப்படி சொல்லாமல் இருக்கவும் முடியாது. நிரந்தரத் தொழிலாளர்களுக்கு இருக்கும் எந்த உரிமையும் சலுகைகளும் இவர்களுக்கு இருக்காது.

இதே வித்தையைத்தான் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனும் செய்தது. போனஸ் இல்லை என்றது. ஊழியர்களின் பணிக்கு உத்திரவாதம் இல்லை என்றது. மருத்துவ சிகிச்சைக்கான நிரந்தரத் தொழிலாளுக்குண்டான சலுகை இவர்களுக்கு இல்லை என்றது.

இவ்வளவு ஏன்? நிரந்தரதொழிலாளிக்கு ஒரு சாப்பாடு ஒப்பந்தத் தொழிலாளிக்கு ஒரு சாப்பாடு என்று கேண்டீனில் போட்டது.

நெய்வேலி சுரங்கத் தொழிலாள்களின் வலியை இந்த அளவிற்கு மட்டுமே உணர்ந்திருதேன். இவையே என்னைத் தூங்க விடாமல் குத்திக் குடைவதற்கு போதுமானதாக இருந்தது.

ஆனால் தோழர் மூர்த்தியோடான அந்த அலைபேசி உரையாடல் இவர்களுக்கிழைக்கப் பட்டுள்ள கொடூரமான அநீதி ஒன்றினை எனக்கு சொன்னது.

மரிய எலேனா சுரங்கத் தொழிலாளிகளுக்கு நேர்ந்த கொடுமையைவிட இது கொடூரமானதாய் இருக்கிறது.

நெய்வேலி சுரங்கத்தில் வேலைபார்க்கும் ஒப்பந்தத் தொழிலாளிகளுக்கு குடிசையோ ஆஸ்பெஸ்டாஸ் கூரையோடோ வீடுமாதிரி ஒன்றை அமத்துக் கொள்ள நிர்வாகம் இடம் கொடுத்திருக்கிறது. தொழிலாளிகளும் வீடுமாதிரி ஏதோ கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

நல்லதுதானே? இதில் என்ன குறை இருக்கிறது? வசிப்பதற்கு கட்டிக்கொள்ள இடம் கொடுத்தது குற்றமா? இப்படி அடுக்கடுக்காய் கேள்விகள் வரக்கூடும்தான்.

இடம் கொடுத்ததெல்லாம் சரிதான். ஆனால் அதற்குள் கிடக்கும் ஒரு நிபந்தனைதான் கொடூரமானது. அந்தத் தொழிலாளிகள் அவர்கள் கட்டியிருக்கும் குடிசைகளுக்கு மின் இணைப்பு உரிமை மறுக்கப் பட்டுள்ளது. அதற்கான காரணம் சிறு பிள்ளைக்கும் புரிகிறமாதிரி எளிதானதுதான். மின் இணைப்பு பெற்றுவிட்டால் ரசீது அவர்கள் பெயரில் வந்துவிடும். பிறகு அந்த ரசீதுகளைப் பயன்படுத்தி தொழிலாளிகள் இடத்தை தங்களுடையது என்று உரிமை கோரிவிடுவார்களோ என்ற கவனம்தான்.

உலகத்திற்கே மின்சாரம் வழங்கக் கூடிய நிறுவனத்தில் பணியாற்றக் கூடிய தொழிலாளிகளின் வீடுகளில் அரிக்கேன் விளக்கென்றால் எங்கு போய் முட்டிக் கொள்வது?

நம் மண்ணில் நிலமை இப்படி இருக்க, ஆஸ்திரேலியாவில் நிலக்கரிச் சுரங்கங்கள் நட்டத்தில் இயங்குவதைப் பார்த்து நமது பிரதமர் சரிவிலிருந்து அவற்றை மீட்டெடுத்து சீராக்க நட்புக் கரம் நீட்டுவதாக செய்திகள் வந்துள்ளன.

ஆஸ்திரேலியாவில் குயின்லேண்ட் என்ற இடத்தில் உள்ள ஒரு நிலக்கரிச் சுரங்கமானது மிக மோசமான அளவு நட்டத்தைச் சந்தித்ததால் ஏறத்தாழ 4000 ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அந்தச் சரிவிலிருந்து தொழிலை மீண்டெழச் செய்வதற்காக குயின்லேண்டில் கௌதம் அதானி அவர்களுக்கு சுரங்கம் அமைக்கும் உரிமையை ஆஸ்திரேலிய அரசு தந்துள்ளது. இது மட்டுமல்ல. நிலக்கரிச் சுரங்கம் அமையும் இடத்திலிருந்து ஏறத்தாழ 400 கிலோமீட்டர் நீளத்திற்கு சாலை அமைக்கும் உரிமையையும் அதானி அவர்களுக்கே ஆஸ்திரேலிய அரசாங்கம் அளித்திருக்கிறது.

இதற்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கான தொகையை பாரத ஸ்டேட் வங்கி அதானி அவர்களுக்கு கடனாக வழங்க முன் வந்துள்ளது. இந்தக் காரியங்கள் அனைத்திலும் பாரதப் பிரதமர் மாண்பமை மோடி அவர்களின் உதவி வெளிப்படையாகவே இருப்பதாக பத்திரிக்கைகள் சொல்கின்றன. இது உண்மை எனும் பட்சத்தில் நமக்கு இயல்பாகவே சில அய்யங்கள் எழுவது இயற்கைதான்.

1) உள்ளூர் சுரங்கங்களில் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும்போது பிரதமர் அவர்கள் ஆஸ்திரேலியா மண்ணின் சுரங்கத் தொழில் சரிவை இவ்வளவு செலவு செய்து சரிகட்ட துடிப்பது ஏன்?


2) பிரதமர் அவர்களது தேர்தல் நேரத்து பயணச் செலவுகளை திரு அதானி அவர்கள்தான் கவனித்துக் கொண்டார் என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக பத்திரிக்கைகளால் சொல்லப்படுகிற நிலையில் இவ்வளவு வெளிப்படையான உதவி பிரதமரிடமிருந்து தேவைதானா?

3) பாரத ஸ்டேட் வங்கிதான் இந்த கடனைத் தருகிறது என்பது உண்மை எனும் பட்சத்தில் அவ்வளவு பெரிய கடனை ஒரே நாளில் அனுமதித்தது?
4) ஆஸ்திரேலியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழில் அவ்வளவு லாபகரமானது அல்ல என்று ஊடகங்கள் சொல்லும் செய்தி உண்மை எனில் மிகப் பெரிய நட்டம் அதானி அவர்களுக்கு வருவதற்கு வாய்ப்புண்டே. அப்படி நிகழும் பட்சத்தில் வங்கி கடனைத் திரும்பப் பெருவதில் ஏராளமாய் சிக்கல் எழுமே.

5) அப்படி நிகழும் பட்சத்தில் வங்கியில் இருந்த மக்களின் சேமிப்பை பாதிக்குமே.

6) அப்படித்தான் எனில் அது மக்களைப் பாதிக்குமே.

அதனால்தான் இவ்வளவு நீட்டிக் கேட்க வேண்டியதாயிற்று.  



Monday, December 1, 2014

”மனிதப் படுத்துதலே கல்வியின் நோக்கம்”


இந்தியாவின் கனவுகளை நனவாக்குவேன் என்பதுமாதிரி பிரதமர் மோடி அவர்கள் சிட்னியில் பேசியதாக செய்திகள் சொல்கின்றன.
கல்வி குறித்தான இந்த மண்ணின் கனவு வண்ணமயமானது. அது கடந்த சில பத்து ஆண்டுகளாக அதிலும் கடந்த இறுதிப் பத்தாண்டுகளில் சிதைவுகளை மட்டுமல்ல, எதிர்திசையில் பயணித்துக் கொண்டிருப்பதையே பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
கல்வி குறித்த இந்த மண்ணின் கனவு என்ன என்பது பற்றியும் மோடி அவர்களின் கடந்தகால கல்விதள செயல்பாடுகளையும் அறிந்தவர்களால் மகிழ்ச்சியுற முடியாது.
முதலில் யாருக்கு கல்வி தர வேண்டும்? கொஞ்சமும் யோசிக்காமல் பாரதி சொல்வான் “ஆங்கோர் ஏழைக்கு” என்று. ஆனால் நடைமுறையில் வசதியுள்ளவனுக்கே கல்வி என்று ஆளும் வர்க்கமும் ஆண்டைவர்க்கமும் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படத் தொடங்கி அதில் பெருமளவு வெற்றியும் பெற்றுவிட்டார்கள். மாடு மேய்ப்பவன் குழந்தைக்கும் செருப்பு தைப்பவன் குழந்தைக்கும் எதற்கு கல்வி என்று உரத்துப் பேசியவர்களும் போராடியவர்களும்தான் இன்று மோடி அவர்களோடு உடனிருந்து அவரை இயக்குபவர்கள் என்ற நிலையில் ஏழைக்கு கல்வி என்பது எப்படி இவரது செயல்திட்டமாகும்?
ஊர்தோறும் தெருதோறும் தமிழ்ப் பள்ளிகளைத் தொடங்க வேண்டும் என்றான் பாரதி. தான்மட்டும் ஒரு சர்வாதிகாரியாக இருந்தால் தாய்மொழி தவிர்த்து பிறமொழியில் கல்வி பயில்பவர்கள் சிறைக்குத்தான் போகவேண்டும் என்கிறார் காந்தியடிகள் .இரண்டு விஷயங்கள் தெளிவாகின்றன.
1) ஊர்தோறும் என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் தெருதோறும் என்று பாரதி சொல்வதை அருகமை பள்ளிகள் என்றுதான் கொள்ள வேண்டும். தூரப் பள்ளிகள் கல்வியை ஒடுக்கப்பட்ட ஏழை மக்களிடமிருந்து அந்நியப் படுத்திவிடும் என்பதே பாரதியின் கவலை. அதனால்தான் தெருதோறும் என்கிறான்.
அவன் கேட்கும் பள்ளிகள் பொதுப் பள்ளிகள். பொழுதிற்கொன்று என்ற கணக்கில் பொதுப்பள்ளிகள் மூடப் படுவது ஆபத்தென்றால் பொழுதிற்கு நூறென்ற கணக்கில் தனியார் பள்ளிகள் தோன்றி செழிப்பது மகா ஆபத்தானது. கல்வித் தளத்தை சந்தைப் படுத்துவதற்கு மோடி உள்ளிட்ட பெரும்பான்மை அரசியல்வாதிகள் எல்லா வகைகளிலும் பாடுபடும்போது கல்வி குறித்த கனவு எப்படி மெய்ப்படும்.
2) தாய்மொழி வழிக் கல்விமட்டுமே ஒருமனிதனை சிறந்த கல்விமானாக மாற்றும். தாய்மொழியில் படிப்பதை கேவலப்படுத்தும் இவர்களால் கல்விபற்றிய கனவு எப்படி மெய்ப்படும்?
நல்ல இந்தியக் கல்வி என்பது வங்கத்தில் ஓடி வரும் மிகை நீரைக் கொண்டு வையத்து நாடுகளில் பயிர் செய்யக் கற்றுத்தர வேண்டும். காவிரியை அரசியலாக்கியதில் இவர்களது பங்கும் அவரது கூற்றோடு சேர்த்தே கவனத்திற்கு வருகிறது.
”இந்திரன் வச்சிரம் ஓர்பால்
அதில் எங்கள் துளுக்கர் இளம்பிறை ஓர்பால்”
என்கிறான் பாரதி. தேசம் கிழியாமல் இருக்க வேண்டுமெனில் இந்திரன் வச்சிரத்தையும் பிறையையும் கொடியில் வைக்க வேண்டும் என்ற மாகவியின் கனவே இந்த மண்ணின் கனவாகவும் இருக்க முடியும். கொஞ்சமும் மதச் சகிப்புத் தன்மையற்ற இவர்களால் இது சாத்தியப் படாது.
மனிதப் படுத்துதலே கல்வியின் நோக்கமாக இருக்க முடியும். அது நிறைவேறினால்தான் இந்த மண்ணின் கனவு நிறைவேறியதாகக் கொள்ளமுடியும்.
மக்கள் எழுச்சியைத் தவிர இவர்களால் இது மெய்ப்படாது.

Monday, November 24, 2014

...

22 ஆம் தேதி 11 மணிக்கு ஒரு அழைப்பு,
” எலெக்‌ஷன் கமிஷனிலிருந்து பேசறோம். நீங்க எட்வின் தானே?”
“ஆமாம்”
“ சரி வச்சுடுங்க”
பிறகு 12 மணி வாக்கில் அங்கிருந்து வந்த இன்னொமொரு அழைப்பு அடுத்த நாள் 9 மணிக்கே வந்து அப்பாயின்மெண்ட் ஆர்டெர் வாங்கி கொண்டு பூத்திற்கு செல்ல ஆணையிட்டது.
அன்று இரவு 8 மணிக்கு வந்த அழைப்பு அடுத்த நாள் சரியாக 7 மணிக்கெல்லாம் வந்து உத்தரவை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தவறினால் கடுமையான நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரிடும் என்றும் கனிவாக மிரட்டியது.
வீட்டை விட்டு 4 மணிக்கு கிழம்பி ஏழுக்கெல்லாம் போனால் ஏழரைக்குப் பிறகே அவர்கள் ஒவ்வொருவராய் வந்தார்கள். உத்தரவை 11 மணிக்கு கொடுத்தவர்கள் உடனே வாக்குச் சாவடிக்கு போய் காத்திருக்க வேண்டும் என்றும் வாக்களிக்கும் கருவிகளைக் கொடுக்க உடனே வருவார்கள் என்றும் அப்போது இல்லை எனில் கடுமையான நடவடிக்கைகள் வரும் என்றும் மிரட்டி அனுப்பினார்கள்.
போய் காத்திருந்தால் ஆறு மணி வாக்கில் நிதானமாக வந்தார்கள்.
முதல் நாள் மதியம் சாப்பிட்டது. 24 ஆம் தேதி இரவு 7 மணிக்குத்தான் சாப்பிட முடிந்தது. இடையில் ஒரே ஒரு கப் தேநீர்தான். இதுகூட பல இடங்களில் இல்லை என்பதுதான் செய்தி. ஏற்கனவே சாப்பாட்டிற்கு முன்னர், பின்னர் என்பதெல்லாம் தாண்டி சாப்பிடும் போது ஒரு மாத்திரை சாப்பிடவேண்டிய ஆள் நான்.
இவை போக வாக்கெடுப்பை அமர்ந்து நடத்த நாற்காலிகளைத் தேடிய ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.
ஏற்கனவே தேர்தல் வகுப்புகள் எடுத்து மிக நேர்த்தியாக ஆசிரியர்களை அசிங்கப் படுத்தினார்கள்.
தேர்தல் கமிஷனே இப்படித்தான் வழிகாட்டியதா? இல்லை வருவாய்த்துறை வரம்பு மீறினார்களா தெரியாது.
தேர்தல் கமிஷன் அவ்வப்போது ஆசிரியர்களை கலந்தாலோசித்தாலே தேர்தல்களை இதைவிடச் சிறப்பாக நடத்த முடியும்.

குட்டிப் பதிவு 13

ஏன் சார் உங்க செல் ரிப்பேரா? முகநூலில் பார்த்தேன் என்று கேட்ட பூபதியிடம் ( Jilla Boopathi ) சம்மரி தவிர மத்த எல்லாத்தையும் படி என்றேன்.
எந்த டெட்டால் போட்டு கழுவினாலும் வாத்தியார் புத்தியை சுத்தமாய் கழுவித் துடைத்தெறிய முடியவில்லை.

கவிதை 21

மாதக்கணக்காய் பூட்டிக் கிடக்கும் 
வீட்டின் கூரையிலிருந்து
கரைந்துகொண்டேயிருக்கிறது
காகம்

Friday, November 21, 2014

குட்டிப் பதிவு 12

உன் பெயரென்ன என்றுகேட்டால் வி.லேகாஸ்ரீ UKG C செக்‌ஷன் என்று பள்ளி முகவரியோடு சேர்த்துதான் சொல்வாள்.
வாங்க வி.லேகா LKG என்று ஆரம்பித்தாலே போதும் அழாத குறையாக தான் UKG என்று ஆரம்பித்து விடுவாள். எனக்கு அவளைச் சீண்டிக் கொஞ்சுவதற்கு இதுவே போதுமானதாக இருக்கிறது.
லேகா குட்டி LKG பெரிசா UKG பெரிசா என்றேன் இன்று.
கொஞ்சமும் யோசிக்காமல் UKG தானென்றாள். அப்புறம் ஏன் போன வருஷம் LKG படிச்ச என்றேன்.
போன வருஷம் LKGதான் பெரிசு. அதனாலதான் என்கிறாள்.
குழந்தைனா குழந்தைதான்.

Wednesday, November 19, 2014

நிலைத் தகவல் 64

” என்னங்க சார், மூனு தரம் போன் செஞ்சிட்டோம். வந்து வாங்கிக்க மாட்டீங்கறீங்க. எப்ப வரீங்க. அல்லாட்டி திருப்பி அனுப்பட்டுமா?”
என்னுடனான ஒரு கூரியர் அலுவலரின் உரையாடலே இது.
கூரியர் வந்த புதிதில் எல்லோரும் அதன் விரைவு சேவையை ஆகா ஓகோ என்று கொண்டாடினார்கள். தபால் துறையை விட இதன் சேவையை உச்சிமுகர்ந்து மெச்சினார்கள்.
தபால் துறையில் கோளாறுகளே இல்லை என்று சொல்லவில்லை. ஆனாலும் அவற்றைப் போக்குவதற்குரிய எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் அதற்கு மாற்று இது என்றார்கள்.
தெருக்கள் அதிகரிக்கும் அளவிற்கு தபால் காரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற சன்னமான அக்கறைகூட இல்லாதே இருக்கிறார்கள். இருக்கிற காலிப் பணியிடங்களையே நிரப்ப எண்ணம் இல்லாதவர்களிடம் இதை எதிர்பார்ப்பது தவறுதான்.
இந்த லட்சணத்தில் ரயில்வேயை 100 விழுக்காடு தனியாருக்கு தாரை வார்ப்பதே தனது லட்சியம் என்பதை எந்த வித கூச்ச நாச்சமும் இன்றி சொல்லியிருக்கிறார் பிரதமர்.
விடுங்க சார்,
இனி எங்களுக்கு ரயிலும் இல்லை

Tuesday, November 18, 2014

குட்டிப் பதிவு 11

தங்களது காத்திரமான பதிவுகளால் என் கவனத்தை தொடர்ந்து ஈர்ப்பவர்களுள் முகநூல் தோழர் சியாமளா ஷேக்ஸ்பியர் அவர்களும் ஒருவர்.
கிறிஸ்தவராக இருந்துகொண்டே அந்த மதத்தை விமர்சிக்கும் அவரை கூடுதல் மரியாதையோடுதான் நான் பார்க்கிறேன்.
தனக்கு தனது தந்தை தமிழ்ப் பெயரை வைக்காமல் தனது மருத்துவக் கல்லூரி தோழியான சியாமளாவின் பெயரை வைத்ததில் ஏற்படும் சிக்கல்களை அவர் எழுதி இருந்தார்.
இதில் பிழை எதுவும் இல்லை என்றும் தமிழைப் புழங்குவதே இன்றையத் தேவை என்றும் அவருக்கு பின்னூட்டமிட்டிருந்தேன்.
ஆனால் இந்தப் பதிவு வேறு காரணங்களுக்கானது.
பிடித்த தலைவர்களின், படைப்பாளிகளின், நடிக நடிகைகளின், தெய்வங்களின் பெயர்களை தங்களது குழந்தைகளுக்கு வைப்பது வாடிக்கை. ஆனால் தங்களது தோழர்களின் பெயரை வைப்பது அபூர்வம். எனக்குத் தெரிய எனத நண்பர் செல்வ பாண்டியன் அவர்கள் தனது ஒரு மகனுக்கு தனது வகுப்புத் தோழனின் பெயரான செழியன் என்பதை வைத்துள்ளார். அதற்காகவே அவரை வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில் எல்லாம் பாராட்டுவேன். தோழமையை இவ்வளவு உயர்வாக மதிக்கும் அவரை இன்னும் பாராட்ட வேண்டும் என்று கருதுவேன்.
தோழருக்கு சியாமளா என்று பெயர் வைத்ததற்காகவே அவரது தந்தையை நான் தொடர்ந்து மதித்து பாராட்ட கடமை பட்டிருக்கிறேன். அதிலும் செல்வ பாண்டியனாவது தனது தோழனின் பெயரை வைத்திருக்கிறார். இவரோ தனது கல்லூரித் தோழியின் பெயரை தனது மகளுக்கு வைத்ததோடு அதை தெரியப் படுத்தவும் செய்திருக்கிறார். இது பேரதிக மரியாதைக்குரியது. நான் அறிந்து தோழமையை அழகோடும் நெகிழ்வோடும் கௌரவப் படுத்தியிருக்கிறார் தோழரின் தந்தை அவர்கள்.
சங்கடமே வேண்டாம் சியாமளா தோழர். உங்கள் பெயரை உச்சரிக்கும் ஒவ்வொரு கனமும் எனக்குள் பெருமிதம் சுரக்கும்.

தேர்வல்ல.... மதிப்பீடே தேவை

” புதிய தலைமுறை கல்வி” இதழில் வந்திருக்கும் எட்டாம் வகுப்பு வரைக்கும் கட்டாயத் தேர்வு அவசியமா? என்பது குறித்த எனது கருத்துக்களின் முழுப்பகுதி
**********************************************************************************
”பேரெழுதத் தெரியாதது, அனா ஆவன்னா தெரியாததையெல்லாம் எட்டாம் வகுப்பு வரைக்கும் பாஸ் போட்டுட்டு இப்ப 100 விழுக்காடு ஏன் தரலைனா எங்க போயி முட்டிக்கிறது? எப்படி தருவது?” என்பது மாதிரியான பத்தாம் வகுப்பு ஆசிரியர்களின் புலம்பலில் உள்ள நியாயத்தை ஒரு சக ஆசிரியனான என்னால் உணர முடிகிறது.
நல்ல தேர்வும் முழுமையான வடிகட்டலும் அவசியம்தானா? என்று கேட்டால் நல்ல தேர்வு அவசியம்தான் ஆனால் குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு வரைக்குமேனும் வடிகட்டுதல் கூடாது என்பதே நமது பதில்.
யுனெஸ்கோவின் கல்வி அறிக்கை ஒன்று, “The purpose of education is to include the excluded” என்று சொல்கிறது. மதிப்பெண்களும், தேர்ச்சியும் மட்டுமல்ல, யாரையும் விடுபடாமல் பள்ளியில் அமரவைப்பதே கல்வியின் நோக்கம் என்று இதை தமிழ்ப்படுத்தலாம்.
பொதுவாகவே ஒரு வகுப்பில் தேர்ச்சி பெறாத குழந்தைகளில் 60% பேர் அதற்கு மேல் கல்வியைத் தொடர்வதில்லை. அவர்களில் பெரும்பான்மையோர் தெருக்களில் சுற்றித் திரிவதும், சன்னம் சன்னமாக தீயப் பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொண்டு சமூகவிரோதிகளாகவும் மாறிப் போகிறார்கள்.
பள்ளி என்பது மொழிகளையும், சில பாடங்களையும் மட்டும் கற்றுத்தரும் இடம் அல்ல. தன்னம்பிக்கையை, நல்ல ஒழுக்கத்தை, அடுத்தவன் துயர் கண்டு துயருறும் மனிதத்தை, சாதி மிதித்தலை, மண்ணின், தாய்மொழியின் தொண்மத்தை போற்றிக் காக்கவேண்டிய கடப்பாட்டினை, பெண்மையைப் போற்றச் செய்வதில், வயதான காலத்தில் பெற்றோரை காப்பாற்றுவதில் அந்தக் குழந்தையை செதுக்கித் தரவேண்டிய பட்டறைதான் பள்ளி.
குறிப்பிட்ட அளவு மதிப்பெண்கள் பெறாத ஒரு குழந்தையை தேர்ச்சி பெறாதவனாக அறிவிப்பது என்பது அவனுக்கு வழங்க வேண்டிய மற்றவற்றைத் தர மறுக்கிற, அவனை மனிதப்படுத்துகிற கடமையிலிருந்து நழுவிப் போகிற வன்முறையே ஆகும்.
இந்த மாணவர்களை வைத்துக் கொண்டு எப்படி தேர்ச்சி விழுக்காட்டைத் தருவது? இங்குதான் ஆசிரியப் பணி அறப்பணி என்பது பொருந்துகிறது. இந்தக் குழந்தையும் தேர்ச்சிபெறப் போராடுவோம்.
இன்னொருபுறம் வறட்டுத் தனமான தேர்ச்சிவிழுக்காடு உதவாதென்பதை கல்வித்துறைக்கும் அரசுக்கும் எடுத்துச் சொல்வோம். தேவைப் படுமெனில் இதற்கான ஒரு போராட்டத்தையே கையெடுக்கலாம்.

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...